Thursday, February 09, 2006

ஹுஸைன் வரைந்த சரஸ்வதி ஓவியம்.

சரஸ்வதியை ஆபாசமாக வரைந்த ஓவியர் ஹுஸைன் என்பவரை - அவர் முஸ்லிம் இல்லை என்று சொல்லுமளவுக்கு அன்று விமர்சிக்கப்பட்டார். உருவப்பட ஓவியம் வரைவதை இஸ்லாம் தடை செய்திருப்பதால். உருவப்படங்களை ஒரு முஸ்லிம் வரைவதிலிருந்து கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மட்டுமே உருவப்படம் வரைவதைத்தடை செய்து இஸ்லாம் சட்டமியற்றியுள்ளது இந்த சட்டம் முஸ்லிமல்லாத எவருக்கும் நிச்சயமாக பொருந்தாது. மற்றவர்கள் தங்கள் வழிபடும் தெய்வங்கள், அல்லது வழிகாட்டும் தீர்க்கத்தரிசிகளை எப்படி வேண்டுமானாலும், ஒவியமாக வரைந்து கொள்ளலாம். நாமறிந்து அதை அவர்கள் மதங்கள் தடை செய்யவில்லை. இஸ்லாம் இயற்றிய சட்டத்தை மாற்று மதத்தவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் எவரும் சொல்லவில்லை.

எவ்வளவோ உருவப்படங்கள் எப்படியெல்லாமோ வரையப்படுகிறது அதற்காகவெல்லாம் எந்த ஒரு முஸ்லிமும் ஆட்சேபணைத் தெரிவிப்பதில்லை. முஸ்லிம்களையும், முஸ்லிம் தலைவர்களையும் கார்ட்டூனாக வரைந்து சித்தரிக்கப்படுகிறார்கள் அதற்கும் எந்த முஸ்லிமும் கண்டனங்கள் தெரிவிப்பதில்லை. பிரச்சனை எங்கே முளைக்கிறதென்றால், இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை, முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஒப்பற்றத் தலைவரை, எந்த உருவப்படங்களும் வரையக்கூடாது என்று சொல்லிச் சென்ற மாமனிதரையே ஓவியமாகவோ, கேலிச்சித்திரமாக கார்ட்டூன் வரைவதைத்தான் முஸ்லிம்கள் கண்டிக்கிறார்கள், அதற்கு தடையிருப்பதால்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை உருவகமாக - கார்ட்டூனாக வரைந்ததை ஆதரிப்பவர்கள் எடுத்து வைக்கும் வாதம், பிறமத தெய்வங்களையும், தீர்க்கத்தரிசிகளையும் உருவகமாக வரையும்போது, முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் வரைந்தால் என்ன? என்று கேட்பவர்ளுக்கு பதில் இதுதான்..
உங்கள் மதத்திலுள்ள தெய்வங்களை, தீர்க்கத்தரிசிகளை உருவகமாக வரைய உங்களுக்கு அனுமதியிருக்கலாம். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களை உருவகமாக வரைய இஸ்லாம் அனுமதிக்கவில்லை. உங்கள் மார்க்கத்தில் வரையலாம் என்று நம்பிக்கையுள்ளது போல் இஸ்லாம் மார்க்கத்தில் வரையக்கூடாது என்ற நம்பிக்கையுள்ளது - அந்த நம்பிக்கையை புண்படுத்தாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு..

சரஸ்வதி ஓவியத்தை ஹுஸைன்தான் முதலாவதாக ஆபாசமாக வரைந்தார் என்று சொல்வதற்கில்லை. அதற்கு முன்பே சரஸ்வதி நிர்வாணச் சிலையாக செதுக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டிருக்கிறார் என்பதற்கு கீழ் காணும் கட்டுரையில் விபரங்கள் இருக்கிறது. சரஸ்வதியின் நிர்வாணச் சிலை படத்தை உணர்வு பத்திரிகையில் பிரசுரித்திருக்கிறார்கள் அதை வலைப்பதிவில் ஏற்றும் வசதி என்னிடம் இல்லை.

ஓவியர் ஹுஸைனை விமர்சித்து அருண் செளரி என்பவர் தினமணியில் எழுதினார். அதற்கு விளக்கமாக ''தினமணிக்கு இது அழகல்ல'' என்று உணர்வு வார இதழில் ஹுஸைனைக் கண்டித்து வெளிவந்த கட்டுரை.

அன்புடன்,
அபூ முஹை
-----------

தினமணிக்கு இது அழகல்ல


முஸ்லிம்களுக் கெதிராக எழுத்துப்போர் புரிவதைத் தன் தொழிலாகக் கொண்டிருக்கும் அருண் செளரி, வலியோரை வாழ்த்தி, எளியோரைத் தாழ்த்தி" என்று தலைப்பிட்டு தினமணி நாளிதழில் (25.10.1996) விஷம் கக்கியுள்ளார்.

ஆபாச வியாபாரி ஹுஸைன், சரஸ்வதியின் உருவத்தை ஆபாசமாக வரைந்தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையின் அடிப்படையில் அவர் கட்டுரை எழுதியுள்ளார். ஹுஸைனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் மதச்சார்பின்மைவாதிகளுக்கு சூடு கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு அவர் கட்டுரை எழுதியிருப்பது போல் தோன்றலாம். ஆனால் இந்த சர்ச்சையைப் பயன்படுத்திக் கொண்டு தேவையில்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் சாடியுள்ளார்.

ஹுஸைன் வரைந்த நிர்வாண ஓவியங்களை இன்று தான் இந்துத்துவா சக்திகள் எதிர்க்கின்றன. ஆனால் முஸ்லிம்கள் எப்போதுமே அவற்றை எதிர்த்து வந்துள்ளனர்.ஹுஸைனுக்கு எதிராக சங்கப் பரிவாரங்கள் நடத்தும் போராட்டத்தைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளவே இல்லை. ஆபாசங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் முஸ்லிம்களுக்கு இரு வேறு கருத்து கிடையாது. p>

செளரியும் ஆபாச வியாபாரியே.

ஹுஸைனை ஆதரிக்கிறேன், அவரது ஆதரவாளர்களையல்ல என்று அக்கட்டுரையில் செளரி குறிப்பிடுகிறார். இந்துக் கடவுள்களைத் தவிர மற்ற பெண்களை நிர்வாணமாக ரசிப்பதில் ஹுஸைனும் தானும் ஒரே ரகம் தான் என்பதை இதன் மூலம் ஒப்புக்கொள்கிறார். ஆபாசத்திற்கு ஆதரவு கொடுக்கும் ஆபாச வியாபாரியாகவே செளரியும் இருக்கிறார் என்பதற்கு இந்த வாக்கு மூலமே சான்று.

''ஹுஸைனை ஆதரிக்கிறேன், அவரது ஆதரவாளர்களை அல்ல'' என்று ஏதோ ததுவத்தைக் கூறுவதாக எண்ணிக் கொண்டு உளறியிருக்கிறார். ''ஹுஸைனை ஆதரிக்கிறேன்'' என்று கூறுவதன் மூலம் இவரும் ஹுஸைனின் ஆதரவாளராகிறார். அவரது ஆதரவாளர்களை ஆதரிக்கவில்லை என்று கூறுவதன் மூலம் தன்னையே ஆதரிக்கவில்லை என்றும் கூறுகிறார். ஹுஸைனை ஆதரித்துவிட்டு அவ்வாறு தான் ஆதரிப்பதைத் தானே எதிர்க்கும் உளறலைத்தான் தத்துவமாக உதிர்த்துள்ளார்.

''நம் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான ஓவியர்களில் ஒருவர் கூட இறைத்தூதர் முஹம்மதின் உருவத்தை வரைய தனது கலையார்வத்தையும் படைப்பாற்றலையும் பயன்படுத்தாதது ஏன்? முஹம்மதின் உருவத்திற்கு மிக அழகிய வடிவம் கொடுக்கக் கூட ஓவியர்களின் தூரிகைகளும் சிற்பிகளின் உளிகளும் தயங்குவதேன்? அவ்வாறு செய்தால் அது முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் பாதிக்கும் எனச் சொல்வார்கள். ஏனெனில் அனைத்து விதமான உருவ வழிபாட்டிற்கும் இறைத்தூதரே தடை விதித்திருக்கிறார்.

இதை மீறி எந்தக் கலைஞராவது வடிவம் கொடுக்க முற்பட்டால் முஸ்லிம்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் கலவரம் செய்யுமாறு தூண்டுவார்கள். அதன் பின்னர் அந்தக் கலைஞர் நிம்மதியாக வாழ முடியாது. இதுதான் உண்மையான காரணமாகும். ஹுஸைனுக்கு ஆதரவாகக் கூக்குரலிடுவோரின் அகராதியில் மத உணர்வுகளைப் புண்படுத்தாமலிருப்பது ஹிந்துக்கள் விஷயத்தில் மட்டும் பொருந்தாது போலும். என்று 'அர்த்த புஷ்டியான ஒரு கேள்வியை செளரி எழுப்புகிறார். இந்துக்களின் மத உணர்வுகள் புண்படும் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாதவர்கள் இஸ்லாமியர்களின் மத உணர்வுகள் புண்படக் கூடாது என்பதற்காக முஹம்மது நபியை ஓவியமாக வரைவதில்லை என்பது இவரது வாதம்.

இவர் எடுத்து வைக்கும் இந்த வாதத்திற்கு நாம் பதில் கூறத் தேவையில்லை செளரியே பதிலையும் கூறிவிடுகிறார்.

''தனது உருவம் உள்பட எந்த உருவத்தையும் வரையக் கூடாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) தடை விதித்திருப்பதை ஒப்புக்கொள்கிறார். எல்லாவிதமான ஒவியங்களையும் இஸ்லாம் மார்க்கம் தடை செய்துள்ளதால் அதை மீறும்போது முஸ்லிம்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன என்று கூறலாம்.

இந்து மதத்திலும் இவ்வாறு ஓவியங்கள் அல்லது ஆபாசங்கள் தடை செய்யப்பட்டுள்ளதை அவர் எடுத்துக் காட்டியிருந்தால் அதை மீறும் போது இந்துக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இந்து மதத்தில் ஆபாச ஓவியங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதற்கு எந்த ஆதாரத்தையும் செளரி காட்டவில்லை, காட்டவும் முடியாது.

இந்து மதத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் செய்யும்போது இந்துக்களின் மத உணர்வுகள் புண்படும் என்று சுய நினைவுடைய எவரும் கூறமாட்டார்.

ஒரு மதம் எதை எதிர்க்கிறதோ அதைச் செய்தால் தான் மத உணர்வு புண்படும். அந்த மதம் ஆதரிக்கின்ற ஒன்றைச் செய்யும்போது மத உணர்வு புண்படும் எனக் கூறுவது முட்டாள் தனமானது என்பது கூட செளரிக்குத் தெரியவில்லை.

சாதாரண மனிதன் கூட தனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு தானே ரசித்துப் பெருமைப்படும் உலகத்தில் மாபெரும் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) தமது உருவத்தைக் கூட வரையக்கூடாது, அதை வழிபடக்கூடாது என்று கூறியிருப்பதைப் பாராட்டும் பக்குவம் கூட செளரிக்கு இல்லை.

செளரி ஒரு பொய்யர்.

இந்திய மரபில் நிர்வாணச் சித்திரங்கள் புதிதல்ல. கோனார்க் ஜுராஹோவில் இவற்றைக் காண முடிகிறதே என்று சிலர் கூறுகின்றனர். அந்தச் சிற்பங்களும் ஓவியங்களும் சரஸ்வதி அல்லது சீதை அல்லது லட்சுமி போன்ற கடவுளர்களின் உருவங்களல்ல அவற்றை யாரும் வழிபடுவதில்லை... தலைமுறை தலைமுறையாக வெள்ளை ஆடை அணிந்திருக்கும் உருவமாகத் தான் சரஸ்வதியைக் கருதி வருகிறோம். சித்திர மரபுகளும் சரஸ்வதி துதிகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.'' என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் செளரி.

''பில்லாராக் கோவிலில் சரஸ்வதி ஆடையின்றி வீணையுடன் மட்டும் காட்சி தரும் சிற்பம் இன்றும் இருக்கிறது'' என்பதை மூடி மறைக்கின்றார். இதன் மூலம் தான் ஒரு நாலாந்தர எழுத்தாளன் என்பதை நிரூபித்து விட்டார்.

இந்திய மரபில் நிர்வாண ஓவியங்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் செளரி ''சரஸ்வதி அல்லது சீதை அல்லது லட்சுமி போன்ற கடவுளர்களின் உருவங்களல்ல'' என்கிறார் கடவுளாக வழிபாடு செய்யப்படும் எவரும் நிர்வாணமாக வரையப்பட்டதில்லை, செதுக்கப்பட்டதில்லை. என்ற மற்றொரு அண்டப்புளுகை அவிழ்த்து விடுகிறார் செளரி.

அனைத்து இந்துக் கடவுளர்களுக்கும் மூலவர்களாகக் கருதப்பட்டு வணங்கப்படும் சிவன் மற்றும் பார்வதி ஆடையின்றி இன்ப மயக்கத்தில் கைலாய மலையில் அமர்ந்திருக்கும் காட்சி எல்லோரக் குகையில் இருக்கிறது. (முல்க்ராஜ் ஆனந்த், பார்க்க: பிரண்ட்லைன், நவம்பர் 1,1996)

இது போல் கஜுராஹோலில் உள்ள மக்கள் வழிபடச் செல்லும் காந்தாரிய மஹாதேவ கோயிலின் சுவர்களில் இளம் காதலர்களின் புனித புணர்ச்சியில் ஈடுபடும் காட்சிகள் இருப்பதாக பிரபல ஆங்கில எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் குறிப்பிடுகிறார். (பார்க்க: பிரண்ட்லைன், நவம்பர் 1, 1996)

கஜுராஹோ ஓவியங்களுக்கு முன்பாகவே, சிவனின் மடியில் பார்வதி அமர்ந்திருக்க, பார்வதியின் மார்பகத்தில் சிவன் கைவைத்திருக்கும் காட்சியுடன் வெண்கல சிற்பங்கள் இருப்பதாக ஹுஸைனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். (பார்க்க: சண்டே 20-26 அக்டோபர் 96)

ஆக நிர்வாணமாகக் காணப்படும் சிலைகளை (அதாவது சிவனையும் பார்வதியையம்) யாரும் வழிபடுவதில்லை என்ற பச்சை பொய்யை அருண் செளரி சொல்லியுள்ளார். அதனை 'தமிழர்களின் மனசாட்சி' என்று சொல்லுகின்ற தினமணியும் வெளியிட்டு தன்னை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது

ஹுஸைன் முஸ்லிம் இல்லை.
ஹுஸைனைப் பற்றிக் குறிப்பிடுகையில் ''அவர் ஒரு முஸ்லிம், தொடர்ந்து அவ்வாறே இருப்பார்'' என்றும் உருவ வழிபாட்டை இறைத்தூதர் தடுத்த போதும், ''தடையாக நிற்கும் பெருஞ்சுவரில் சிறிய இடைவெளியை ஏற்படுத்தத் தன் வாழ்நாள் முழுவதையும் அவர் (ஹுஸைன்) செலவிட்டுள்ளார். உண்மையில் இது விடுதலைக்கான புரட்சிதான்'' என்று செளரி எழுதியுள்ளார். எனவே இந்த புரட்சியாளனுக்கு எதிராக தன் சகாக்கள் கிளர்ந்தெழுந்திருக்கக் கூடாது என்று கூற வருகிறார் செளரி.

இங்கும் செளரியின் கருத்துக்கள் பொய்மையில் தன் வேர்களை பதித்துக் கொண்டுள்ளன. முதலில் ஹுஸைன் என்ற ஆபாச வியாபாரி பெயரளவில் தனக்கு ஒரு அரபு பதத்தை சூட்டிக் கொண்டுள்ளார்.

அவர் பிறந்த ஊரான பந்தார்பூரில் உள்ள 'வித்தோபா' விக்கிரகத்தை வணங்கி வருபவரே அவர். எனவே கடவுளுக்கு இணைகற்பிக்கும் ஹுஸைன் ஒரு முஸ்லிம் இல்லை. (அதாவது செளரி போன்று இணைவைக்கும் நிராகரிப்பாளர்)

அடுத்து, உருவ வழிபாட்டைத் தடை செய்த இஸ்லாம் எனும் பெருஞ்சுவரில் ஹுஸைன் போன்ற கிறுக்கர்களால் எந்த இடைவெளியும் ஏற்படவில்லை, ஒருக்காலும் ஏற்படாது. உருவ வழிபாட்டை விடுதலைக்கான புரட்சி என்று கூறும் செளரி முதலில் மனநிலை மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக்கொள்ள வேண்டும்.

செளரி பிறர் துன்பத்தில் இன்பம் காண்பதில் வன்மையானவர். எனவேதான் அவர் வழிபடும் கடவுளர் மட்டும் நிர்வாணமாக இருக்கும்போது கிறிஸ்த்தவ, சீக்கிய கடவுளர்களையும், இஸ்லாத்தின் இறைத்தூதரையும் அந்நிலையில் காண முடியவில்லையே என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறார். மேலும் இஸ்லாம் தடை செய்துள்ள ஓவியத்தை ஒரு முஸ்லிம் வரையத் துணிந்துள்ளார். தடையாக நிற்கும் பெருஞ்சுவரில் சிறிய இடைவெளியை ஏற்படுத்தத் தனது வாழ்நாள் முழுவதையும் அவர் செலவிட்டுள்ளார். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.

இஸ்லாத்தில் இல்லாத ஒரு கீழ்த்தரமான ஓவியனை முஸ்லிம் என எண்ணிக்கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார் செளரி. இவரைப் போன்றவர்களால் இந்திய பத்திகையாளர்களுக்கு அவமானமே! அதனை தினமணி பிரசுரித்ததால் தமிழருக்கும் அவமானமே!

நன்றி: உணர்வு வார இதழ், நவம்பர் 1-7, 1996

No comments: