Saturday, October 01, 2005

ரமளான் சிந்தனைகள்!

ரமளானை வரவேற்போம்!

ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதத்தை சந்திக்கும் முஸ்லிம்களுக்கு, அந்த ஒவ்வொரு ரமளான் மாதத்தையும் புதிதாக எதிர்கொள்வது போலவே உவகையுடன் - களிப்புடனும் வரவேற்பார்கள். வருடத்தில் பதினோரு மாதங்கள் பகல் பொழுதில் உண்ணுவதையும், பருகுவதையும் வழக்கத்தில் கொண்டிருந்தவர்கள், இதற்கு நேர் எதிர்மறையாக பகல் பொழுது முழுவதும் - உண்ணுவதையும், பருகுவதையும் கைவிட்டு - ஏக இறைவனின் திருப்திக்காக மட்டுமே உண்ணா நோன்பைப் பூர்த்தி செய்வார்கள்.

வணக்க வழிபாடுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குரியது. அனைத்து வழிபாடுகளிலும் ''நோன்பு'' என்ற வணக்கத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. ஒருவர் மற்ற வணக்கங்களை தாம் தனித்தே செய்தாலும் அதைப் பிறர் காணும் வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் உண்ணா நோன்பிருக்கும் வணக்கத்தில் அவர் உண்ணவில்லை, பருகவில்லை என்பதை மற்றெவரும் காண வாய்ப்பில்லை. தனிமையில், எவரும் அறியாமல் உண்ணவும், பருகவும் செய்துவிட்டு நான் உண்ணா நோன்பிருக்கிறேன் என்று பிறரிடம் சொல்லிக்கொள்ள முடியும்.

தனிமையில் இருந்தாலும் உண்ணாமல், பருகாமல் இருப்பது இறைவனுக்காக மட்டுமே என்பதால், அடியான் நோன்பென்ற வணக்கத்தைத் தனக்காகவேச் செய்கிறான் என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகிறான். ரமளான் மாதத்ததை வரவேற்று உண்ணா நோன்பை எதிர்கொள்ளவிருக்கும் முஸ்லிம்களுக்கு ரமளான் மாதத்திற்கான சில சட்டங்கள் இங்கே..

புனித மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு

அல்லாஹ் கூறுகிறான்..

விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும், எனினும் (கடுமையான நோய் முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக் கொடுக்கிறாறோ அது அவருக்கு நல்லது, ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும், (என்பதை உணர்வீர்கள்- அல்குர்ஆன் 2:184)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது, ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும், எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ, (அவர் அக்குறிப்பிட்ட நாடகளின் நோன்பைப்) பின் வரும் நாட்களில் நோற்க வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை, குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே. (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்- அல்குர்ஆன் 2:185)

நோன்பு கால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியுடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது, அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள், நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொணடிருந்ததை அல்லாஹ் நன்கறிவான், அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக்கொள்ளுங்கள், இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள், இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள், இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும், அந்த வரம்புகளை (த் தாண்ட) முற்படாதீர்கள், இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 2:187)

பிறை பார்த்து நோன்பு..

நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.

தகவலறிந்து நோன்பு..

மக்கள் எல்லாம் பிறை பார்க்க முயன்றார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம் 'நான் பிறையைப் பார்த்தேன்' என்று கூறினேன், நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றுதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அபூதாவூத், தாரமி, இப்னுஹிப்பான், ஹாகீம், பைஹகீ, தாரகுத்னீ.

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்கக் குழம்பினார்கள், (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராம வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறைப் பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள், உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள், பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ரிப்யீ இப்னு கிராஷ் நூல்கள்- அபூதாவூத், அஹ்மத்.

நோன்பு வைக்கும் எண்ணம் வேண்டும்..


ஃபஜ்ருக்கு முன்பே நோன்பு வைக்க எவர் எண்ணவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா.

ஸஹ்ர் செய்வதில் பரகத் உண்டு..

நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹ்ரில் பரகத் உண்டு, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா.

வேண்டுமென்றே நோன்பு திறப்பதைத் தாமதித்தல் கூடாது..

என் அடியார்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் (சூரியன் மறைந்தவுடன்) விரைந்து நோன்பு துறப்பவர்களாவர், என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- திர்மிதீ, அஹ்மத்.

இரவு முன்னோக்கி பகல் பின் சென்று சூரியன் மறைந்தால் நோன்பாளி நோன்பு துறப்பார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும் வரை மக்கள் நன்மையைச் செய்தவர்களாகிறார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் இப்னு ஸஹ்து (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பிரயாணத்தில், மற்றும் கர்ப்பிணி, தாய்மார்களின் நோன்பு..

அல்லாஹ்வின் தூதரே! பிரயாணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது, அப்போது நோன்பு நோற்பது குற்றமாகுமா? என்று நான் கேட்ட போது ''இது அல்லாஹ் வழங்கிய சலுகை இதை யார் பயன் படுத்திக் கொள்கிறாரோ அது நல்லது, யார் நோற்க விரும்புகிறாரோ, அவர் மீது குற்றமில்லை'' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஹம்ஸா இப்னு அம்ரு அல் அஸ்லமீ (ரலி) நூல்கள்- முஸ்லிம், நஸயீ.

(நான்கு ரக்ஆத் தொழுகைகளில்) பாதியைக் குறைத்துக் கொள்ளவும், நோன்பை தள்ளி வைக்கவும் அல்லாஹ் பிரயாணிகளுக்கு சலுகை வழங்கியுள்ளான், கர்ப்பிணி, பால் கொடுக்கும் தாய், ஆகியோரும் நோன்பிலிருந்து விலக்களித்துள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்கள்- அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

சக்தி பெற்றவருக்கே நோன்பு..

யார் சக்தி பெறுகிறார்களோ அவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடும் போது இந்த வசனம் மாற்றப் படவில்லை, நோன்பு நோற்க சக்தியற்ற முதியவர்கள் விஷயத்தில் இந்தச் சட்டம் இன்னும் உள்ளது, என்றார்கள் அதாவது அவர்கள் ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிப்பார்கள், என்றார்கள். அறிவிப்பாளர், அதாவு, நூல்- புகாரி.

நோன்பாளி மறந்து விட்டால்..

நோன்பாளி மறந்து விட்டு உண்ணவோ, பருகவோ செய்தால் (நினைவு வந்ததும்) தன் நோன்பை தொடரட்டும், அவரை அல்லாஹ்தான் உண்ணவும், பருகவும் செய்திருக்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.

நோன்பாளி என்று கூறி விட வேண்டும்..

உங்களில் ஒருவர் நோன்பு வைத்திருக்கும் போது தீய பேச்சுக்கள் பேசலாகாது, வீண் சண்டைகளில் ஈடுபடலாகாது, எவரேனும் அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு அழைத்தால், நான் நோன்பாளி என்று கூறிவிட வேண்டும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பொய் சொல்லலாகாது..

(நோன்பு வைத்திருக்கும் போது) பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.

தண்ணீர் தூய்மைப் படுத்தும்..

உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும், அது கிடைக்கா விட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும், ஏனெனில் தண்ணீர் தூய்மைப் படுத்தக் கூடியதாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸல்மான் இப்னு ஆமிர் (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்.

உணவிற்கே முதலிடம்..

இரவு உணவு வைக்கப்பட்டால், மஃக்ரிப் தொழுவதற்கு முன் சாப்பாட்டிற்கு முதலிடம் கொடுங்கள், உணவு உட்கொள்வதைத் தாமதிக்க வேண்டாம், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்- புகாரி.

இமாம் தொழுகையைத் துவங்கி குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பதை செவியுற்றாலும் இப்னு உமர் (ரலி) சாப்பாட்டை முடித்து விட்டே தொழுகையில் கலந்து கொள்வார்கள். நூல்- புகாரி.

விடுபட்ட நோன்புகள்..

ரமளானில் சில நோன்புகள் (மாதவிடாய் போன்ற காரணங்களால்) எனக்கு விடுபட்டு (களாவாகி) விடும், (11 மாதங்கள் கழித்து) ஷாஃபானில் தவிர அதை என்னால் நோற்க இயலாது, நபி (ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளே இதன் காரணம். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத். திர்மிதீ, இப்னுமாஜா.

நோன்பாளி தன் மனைவியிடத்தில்..

நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுபவர்களாகவும், கட்டி அணைப்பவர்களாகவும் இருந்தனர், எனினும் நபி (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் விட தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நோன்பாளி மனைவிகளைக் கட்டி அணைப்பது பற்றிக் கேட்டார், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள், பின்பு மற்றெருவரும் வந்து கேட்ட போது, அவருக்குத் தடை விதித்தார்கள், நபி (ஸல்) அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்- அபூதாவூத்.

(இளைஞர்- இள மனைவி இருவருமே சுலபத்தில் உணர்ச்சி வசப்பட்டு இறை வரம்பை மீறி விடுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப் படுகிறது)

நோன்பாளி தன் மனைவியுடன் கூடிவிட்டால்..?

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் நாசமாகி விட்டேன்' என்றார்,

''என்ன நாசமாகி விட்டீர்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,

'ரமளானில் (பகல் பொழுதில்) என் மனைவியுடன் சேர்ந்து விட்டேன்' என்றார்,

''ஒரு அடிமையை விடுதலை செய்யும் அளவிற்கு உம்மிடம் செல்வம் இருக்கிறதா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் 'இல்லை' என்றார்,

''தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் 'இல்லை' என்றார்,

அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு இயலுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் 'இயலாது' என்றார்,

பின்பு நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் (அமைதியாக) உடகார்ந்திருந்தார்கள் பதினைந்து ஸாவு கொள்ளவுள்ள பாத்திரத்தில் பேரீத்தம் பழம் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது,

(அதை அவரிடம் வழங்கி) ''இதை தர்மம் செய்வீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அதற்கு அவர் 'என்னை விட ஏழைக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்..? இந்த மதீனா முழுவதும் எங்களை விட ஏழைகள் எவருமில்லை..' என்று அவர் கூறியதும், தனது கடைவாய் பற்கள் தெரியும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள், பின்பு ''இதைக் கொண்டு சென்று உமது குடும்பத்தினருக்கு வழங்குவீராக'' என்று கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகார், முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா.

''அப்படியானால் நீர் முறித்த நோன்பிற்குப் பதிலாக ஒரு நோன்பு நோற்று விடுவீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று மேலதிக விளக்கமாக இப்னுமாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா..?


நபி (ஸல்) அவர்கள் உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்புக் கடமையானவர்களாக ரமளான் நோன்பை நோற்பார்கள். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னைகள், ஆயிஷா (ரலி) உம்மு ஸல்மா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

மேலும் சில ரமளான் சட்டங்கள் அடுத்தப் பகுதியில்..

5 comments:

அப்துல் குத்தூஸ் said...

ரமலான் முபாரக்

அனைத்து சகோதரர்களுக்கும் எனது உளங்கனிந்த ரமலான் வாழ்த்துக்கள்.

சுட்டுவிரல் said...

புலர்ந்த பொழுது முதல் அந்தி வரை இறை ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கும் நோன்பாளிக்கு ஒரு மூமீனை நல்ல உவமையாக கூறலாம்.நோன்பு என்பது வாழ்க்கை என்றால் நோன்பாளி என்பவன் 'இறை ஆணைக்கு' கீழ்ப்படிந்து நடக்கும் மனிதனாவான் (மூமீன்).
நோன்பு 'துறக்கும் பொழுதில்' இருவருக்கும் அளப்பரிய ஆனந்தம் காத்திருக்கிறது
அனைவருக்கும் ரமளான் நல் வாழ்த்துக்கள்

நல்லடியார் said...

அன்பு சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்.

அபூ முஹை said...

வாங்க inomeno, வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

வருகை தந்த ஹாபிழ், அப்துல் குத்தூஸ், சுட்டுவிரல், soft tester, நல்லடியார்,
fathma ஆகியோருக்கும் நன்றிகள்!

Jafar ali said...

அன்பின் அபூமுஹை! ஸலாம்!அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!!!