Wednesday, January 19, 2005

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை பகுதி 4

ஜன்னத்துல் பகீஃ
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியரில் பலரும், அருமைத் தோழர்களில் பல்லாயிரக் கணக்கானோரும், இங்கு தான் அடக்கப் பட்டுள்ளனர்.

திரு மறையின் முழுமையான மூலப் பிரதியை உருவாக்கித் தந்தவரும், மூன்றாவது கலீபாவுமான உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள்,

பெருமானாரின் எண்ணற்ற பொன் மொழிகளை அகிலத்திற்கு அறிவித்த, அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள்,

அண்ணலாருக்கு அமுதூட்டிய அருமை அன்னை, ஹலீமா ஸஃதிய்யா (ரலி) அவர்கள்,

அண்ணலாரின் அருமந்த மைந்தர், இப்ராஹீம் (ரலி) அவர்கள்,

பிக்ஹூச் சட்டங்களை இயற்றிய பெருமேதை, இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்,

திருத்தமுடன் திரு மறையை ஓதுவதில் தனிச் சிறப்புப் பெற்ற காரி, இமாம் நாபிஃ (ரஹ்) அவர்கள், ஆகியோரும், இன்னும் ஏராளமான நபித் தோழர்களும், இறை நேசர்களும், ஆன்றோரும், சான்றோரும், இந்தப் புனித மண்ணில் தான் அடக்கம் செய்யப் பட்டுள்ளனர். திரளாகக் கூடி நின்று, ஹாஜிகள் இந்தப் புனித மண்ணில் அடக்கப் பட்டிருப்பவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றனர். இந்த அடக்கத் தலத்திலும், இன்னும் இங்குள்ள எந்த அடக்கத் தலங்களிலும் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. ஏனெனில்,

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக! என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி

இந்த ஜியாரத்தை முடித்துக் கொண்டு, ஹாஜிகள் மதீனாவைச் சுற்றியுள்ள, சரித்திரப் புகழ் பெற்ற இடங்களைப் பார்த்து வரப் புறப்படுகின்றனர். மதீனாவைச் சுற்றிலும் பார்க்க வேண்டிய இடங்களை - அவரவர் தம் வழிகாட்டிகளின் வழிகாட்டுதலின்படி சென்று பார்த்து வருகின்றனர். மதீனாவின் மகத்துவத்தையும், மாண்பையும் பறை சாற்றிக் கொண்டு- வரலாற்று ஆதாரங்களாக நிலைத்து நிற்கும் இடங்களையும், சரித்திரச் சான்றுகளையும், காணுகின்ற கண்கள் பேறு பெற்றவை.

அண்ணல் நபி (ஸல்) அவர்களை வரவேற்று உபசரித்து, அகிலமெங்கும் இஸ்லாம் பரவ, அடித்தளம் அமைத்துக் கொடுத்த - மதீனத் திரு நகரை மகிழ்ச்சியுடன் தரிசிக்கும் உள்ளங்கள் பேறு பெற்றவை.

அண்ணல் நபி (ஸல்) அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அழகுத் திரு நகரில் தங்கி - ஆத்ம திருப்தி அடையும் இதயங்கள் பேறு பெற்றவை.இந்தப் புனித மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில் இயன்றவரை மஸ்ஜிதுன்னபவிக்கு வந்து, ஜமாஅத்துடன் தொழுது அளப்பெரும் நன்மைகளை அடைகின்றனர் ஹாஜிகள்.

மனம் குளிர மஸ்ஜிதுன்னபவியில் தொழுது, மன நிறைவடைந்த மாண்பாளர்கள், இதோ புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றப் புறப்பட்டு விட்டனர். புறப்பட்டுப் போகின்ற இறுதி நேரத்திலும் கூட மீண்டும் ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத் தலத்தை ஜியாரத் செய்யத் தவறவில்லை. உயிரினும் மேலான உண்மை நபியவர்களுக்கு ஸலாம் உரைத்து, புறப்பட்டு விட்டனர் புனித மக்கா நன்னகர் நோக்கி!
-----------------------------
துல் ஹஜ் எட்டாம் நாள்- ஹஜ்ஜின் முதல் நாள்.
புண்ணிய சீலர்கள், எந்த நோக்கத்திற்காக அவரவர் இல்லங்களிலிருந்து புறப்பட்டு வந்தார்களோ! அந்த ஹஜ் இன்று தான் ஆரம்பம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும்- உள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புனித ஹஜ்ஜை நிறைவேற்று வதற்காக வந்து, மக்காவின் பல்வேறு இடங்களிலும் தங்கியிருந்த ஹாஜிகள்- ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்து இஹ்ராம் அணிந்து இன்று மினா வந்து சேருகின்றனர்.

'இப்ராத்" எனும் வகை ஹஜ் செய்ய, இறுதி நேரத்தில் வருபவர்கள், அவரவர் வரும் வழியில் உள்ள 'மீக்காத்" எல்லையில் குளித்து இஹ்ராம் அணிந்து நேரடியாக மினா வந்து சேருகின்றனர்.

மினாவில் சமீப காலம் வரை அனைத்து ஹாஜிகளும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களில் தான் தங்க வைக்கப்பட்டனர். ஹஜ்ஜின் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மினாவில், மணலையும் மலைகளையும் தவிர வேறு எதுவுமே இருக்காது.
--------------------------------
பாதுகாப்பு ஏற்பாடுகள்.
தற்காலிக கூடாரங்களில் அடிக்கடி தீ விபத்துக்கள் நடந்து கொண்டிருந்தன. தனித்தனியாக கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளை வைத்து அவரவர் சொந்தமாக சமையல் செய்து கொண்டிருந்ததால், இவ்விதம் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுவதையொட்டி, கூடாரங்களில் சமையல் செய்வதை சவூதி அரசு முதலில் தடை செய்தது. அதற்குப் பகரமாக, அத்தனை இலட்சம் ஹாஜிகளுக்கும், பாதுகாப்பான தனி இடங்களில், சுகாதார முறைப்படி உணவைத் தயார் செய்து - விநியோகிக்கும் பொறுப்பைப் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன.

இதன் மூலம் உணவுப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தது.சில ஆண்டுகளுக்கு முன், துணிகளால் அமைக்கப்படும் கூடாரங்களை அறவே தவிர்த்து விட்டு, சவூதி அரசு அத்தனை இலட்சம் ஹாஜிகளுக்கும், நவீன வசதிகளுடன் கூடிய தீப்பிடிக்காத கூடாரங்கள் அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம், அடிக்கடி ஏற்பட்ட தீ விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.

மினாவில் ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப் படுகின்றன. தடையின்றி அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவரவர் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே, பல நூற்றுக் கணக்கான கழிவறை வசதி, ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறையினர், தீ விபத்துக்களிலிருந்து ஹாஜிகளைப் பாதுகாக்க, சகல விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து இரவும் பகலும் கண்காணிக்கின்றனர். கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களில் தீயணைப்புக் கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள் எந்த நேரமும் சுற்றிச் சுற்றி வந்த வண்ணம் உள்ளனர்.
-----------------------------
மருத்துவ வசதி.
மினாவில் ஹாஜிகளுக்கு, சகல விதமான அதி நவீன மருத்துவ வசதிகளுடன், மிகப் பிரம்மாண்டமான, அரசு மருத்துவ மனை நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. பல நூறு படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இம் மருத்துவ மனையில், அவசர சிகிச்சைப் பிரிவும் இயங்குகிறது. உடனுக்குடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எல்லா வகையான மருத்துவ சேவைகளும் இலவசமாகவே செய்யப்படுகின்றன.

பல் வேறு நாடுகளின் தூதரகங்களும், தத்தம் நாட்டினருக்காக மருத்துவ சேவை மையங்கள் அமைத்து சேவை புரிகின்றன.

பல் வேறு தனியார் மருத்துவ மனைகள் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.அரசு மற்றும் தனியார், நடமாடும் மருத்துவ ஊர்திகள், முதலுதவி வசதிகளுடனும், மருத்துவர்கள் மற்றும் ஆண் பெண் செவிலியர்களுடனும், எப்போதும் மினாவைச் சுற்றி வருகின்றன.

ஒவ்வொரு வருடமும், இந்தியா பாகிஸ்தான், உட்பட பல்வேறு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் பல்லாயிரக் கணக்கில் மருத்துவர்களும், உதவியாளர்களும், வரவழைக்கப் பட்டு மருத்துவப் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

சவூதி செம்பிறைச் சங்கத்தின் மருத்துவச் சேவைகள் மறக்க முடியாதவை. பல்வேறு இடங்களில் தற்காலிக சேவை மையங்கள் அமைத்து செம் பிறைச் சங்கம் ஹாஜிகளுக்கு இலவச மருத்துவச் சேவை செய்கின்றது. ஆபத்தான நிலையில் இருப்போரை- அருகில் உள்ள மக்காவின் பெரிய மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல செம்பிறைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்களும், பல நூற்றுக் கணக்கில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் எப்போதும் தயார் நிலயில் நிற்கின்றன.
----------------------------------
சாரணர் படை.
சவூதியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உயர் நிலைப் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளிலிருந்து வந்து குவிந்துள்ள சாரணர் படை மாணவர்களின் பணி மகத்தானது.

பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, ஹாஜிகளுக்கு வழிகாட்டிகளாகவும், உதவியாளர்களாகவும், சீருடை அணிந்து சிறப்புப் பணி செய்கின்றனர். இயலாத மற்றும் வயது முதிர்ந்த ஹாஜிகளை அரவணைத்து அழைத்துச் செல்வதும், தமது இருப்பிடங்களுக்குச் செல்ல வழி தெரியாமல் தவிப்பவர்களை அவர்களிடம் உள்ள அடையாள அட்டைகளைக் கொண்டு - இருப்பிடத்தை அறிந்து - உரிய இடங்களுக்குக் கொண்டு போய் சேர்த்தும் உபகாரம் செய்கின்றனர்.

மினாவில் மட்டுமின்றி - ஹாஜிகள் அடுத்தடுத்தக் கடமைகளை நிறைவேற்றச் செல்லும், முஸ்தலிபா, அரபா, போன்ற புண்ணியத் தலங்கள் அனைத்திலும், சாரணர் படை மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் பணி புரிகின்றனர்.
--------------------------------
தொலைத் தொடர்பு வசதி.
தபால் தந்தித் துறை, மினாவின் பல்வேறு இடங்களில் அஞ்சல் மற்றும் தந்தி வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. தொலை பேசித் துறையினரின் சேவை மிகவும் பாராட்டத் தக்கது. மினாவிலும் மற்றும் புனிதத் தலங்கள் அனைத்திலும், நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன தொலை பேசி மையங்கள்.உலகின் 180க்கும் அதிகமான நாடுகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளத் தக்க இம் மையங்களின் மூலம் நாளொன்றுக்கு பல இலட்சக் கணக்கான தொலை பேசி அழைப்புகள் செய்யப் படுவதாக சவூதி தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

அவரவர் நாடுகளில் உள்ள உறவினர்களுடன் தொடர்பு கொண்டு - புனித ஹஜ்ஜை இனிய முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ள - மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
--------------------------------
காவல் துறையினரின் கண்காணிப்பு.
ஆண்டு தோறும் இலட்சக் கணக்கான ஹாஜிகள் ஒன்று கூடும் புனித ஹஜ்ஜில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, காவல் துறை எல்லா வகையானக் கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பொதுவாகவே முஸ்லிம்கள் ஒன்று கூடும் எந்த ஒரு விழாவிலும் காவல் துறைக்கு எந்த வேலையும் இருக்காது.

நியாய உள்ளம் படைத்த எத்தனையோ காவல் துறை அதிகாரிகள் இதற்கு சாட்சி பகர்வர். கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடமையாகக் கொண்டவர்கள்-அதிலும் புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற வந்த புண்ணிய சீலர்கள்- எவ்வளவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.

காவல் துறையும், ராணுவமும், தீயணைப்புப் படையினரும், சாரணர் படையும், தரையில் தங்கள் கண்காணிப்பைத் தொடர, ஆகாயத்தில் ஹெலிகாப்டர்கள்- அனைத்தையும் கண்காணித்தபடி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல்- அத்தனை இலட்சம் ஹாஜிகளும், இறை வணக்கத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அவரவர் தம் சொந்த ஊர்களில் மாட மாளிகைகளில் வசித்தவர்கள்- சுக போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், இங்கே மினாவில் வந்து கூடாரங்களில் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.மறு உலகின் நிரந்தர வாழ்க்கைப் பயணத்தில்- சற்றுத் தங்கி இளைப்பாறுவது தான் இவ்வுலக வாழ்க்கை. இவ்வுலக வாழக்கைப் பயணத்தில் சற்றுத் தங்கி இளைப்பாறுவது போல் மினாவில் இந்த சின்னஞ்சிறு கூடாரங்களில் தங்கி ஹாஜிகள் இளைப்பாறுகின்றனரோ!

இல்லை. இவர்கள் இங்கு இளைப்பாற வரவில்லை! பொன்னான பொழுதை வீணில் போக்க இங்கு வரவில்லை! காட்சிகளைக் கண்டு களிப்படைய வரவில்லை! இறைவனின் அழைப்பை ஏற்று வந்திருக்கின்றனர். இறைவனுக்காக இங்கு வந்திருக்கின்றனர். இறை வணக்கத்துக்காக இங்கு வந்திருக்கின்றனர்.

குழுக்களாகவும், தனித்தனியாகவும், அமர்ந்து இன்றைய தினத்தை இறை வணக்கத்தில் கழிக்கின்றனர். இறை தியானத்தில் கழிக்கின்றனர். இயன்றவரை திரு மறையை ஓதுவதிலும், நபிலான தொழுகைகளிலும், பிரார்த்தனையிலும் திக்ருகளை மொழிவதிலும் கழிக்கின்றனர்.

துல் ஹஜ் எட்டாம் நாள்- ஹஜ்ஜின் முதல் நாளாகிய இன்றைய தினத்தின் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஆகிய ஐவேளைத் தொழுகைகளையும் இங்கேயே நிறைவேற்றுகின்றனர்.இன்றைய தினத்தின் இரவுப் பொழுதும் இங்கேயே இறை தியானத்தில் கழிகின்றது.

இரவுப் பொழுதிலும் இங்கு உறக்கமா வரும்? உறங்கவா இங்கு வந்தோம்? என்ற எண்ணம் இதயத்தில் எழ- சிறிது நேரமே கண்ணயர்ந்தவர்கள் கூட - நடு நிசித் தொழுகையான தஹஜ்ஜஜுத் தொழுகையை நிறைவேற்றத் தயாராகின்றனர்.

மினாவில் லுஹர், அஸர், இஷா ஆகிய, நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுவது சிறந்ததாகும்.

மக்கள் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு அச்சமற்ற நிலையிலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலும் இருந்த போது நான் நபி (ஸல்) அவர்களுடன் (நான்கு ரக்அத் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். என்று ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதியில் பதிவாகியுள்ளது. (ஹதீஸ் எண் 808)

நான் நபி (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன்.அபூ பக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோருடனும் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின் துவக்க காலத்திலும் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். என்று இப்னு மஸ்வூத் கூறியதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மறு நாள், துல் ஹஜ் 9 ஆம் நாள் அதிகாலை பஜ்ருத் தொழுகையையும்- இங்கு மினாவிலேயே நிறை வேற்றி விட்டு - அடுத்தக் கடமையை நிறைவேற்ற அரபாத்தை நோக்கி ஹாஜிகள் புறப்படுகின்றனர்.
--------------------------
(நேர்முக வர்ணனை வளரும்)

No comments: