Wednesday, January 05, 2005

இஸ்லாத்தின் வரலாறும், மாற்றாரின் உளறலும், 3

இஸ்லாத்தைக் களங்கப்படுத்திட வேண்டும் என்ற வெறியோடு ஒரு உண்மையுடன் பல பொய்களைக் கலந்து அந்தப் பொய்களையும் இஸ்லாம் அங்கீகரித்திருக்கிறது என்ற பொய்யைத்தான், தமது (இஸ்லாத்தில் பர்தா - வரலாறும், நிகழ்வுகளும்.) கட்டுரை முழுக்க விதைத்திருக்கிறார்.

// மேலே கண்ட திருக்குரான் வசனங்கள் அருளப் பட்ட பின்னும், மற்ற முஸ்லீம் பெண்கள் சுதந்திரமாக முகமது நபியவர்களின் கூட மசூதியில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார்கள் என்றும், பர்தா அணியாமல் அவர் முன்வந்து பேசினார்கள் என்றும், சில பெண்களின் அழகில் மயங்கி அவர்களின் முகத்தையே (முகமது நபி அருகில் இருக்கும்போதே) மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டும் பல ஹதீதுகள் காணப் படுகின்றன.//

நபி(ஸல்) அவர்களின் காலத்தில், தொழும் பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகையில் ஆண்களும், பெண்களும் தனித்தனி அணிவகுப்புடன் கலந்து கொண்டார்கள். பெருநாள்களின் தொழுகையிலும், பிரார்த்தனையிலும் ஆண்களும், பெண்களுக்கென உள்ள தனி இடத்தில் பெண்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள். இதை இஸ்லாம் அங்கீகரித்துள்ளது. ஆனால் இஸ்லாத்தின் எதிரிகள் எழுதியுள்ளது போல் ''நபி(ஸல்) அவர்கள் இருக்கும்போதே சில பெண்களின் அழகில் மயங்கி அவர்களின் முகத்தையே மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று பல ஹதீஸ்கள் காணப்படுகின்றன'' என்பவர்கள். இதை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்ததாக ஒரு ஹதீஸை முன் வைக்கட்டும். கட்டுக்கதையின் உண்மை நிலை என்னவென்று பார்ப்போம்.

('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் இப்னு அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தம் வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி(ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தம் கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்க விடாமல் அவரின் முகத்தைத் திருப்பிவிட்டார்கள்.

அப்போது அப்பெண், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் அடியார்களின் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. எனவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (நிறைவேறும்)'' என்று பதிலளித்தார்கள். (அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)

ஒரு உண்மை சம்பவத்தை பல பொய்கள் கலந்து எப்படியெல்லாம் இஸ்லாத்தை களங்கப்படுத்துகிறார். ஃபள்ல் (ரலி) என்ற தனிநபர், மற்றொரு தனிநபராகிய அழகானப் பெண்ணைக் கூர்ந்து நோக்கியதால் அந்த சமூகத்தின் ஆண்கள், அந்த சமூகத்தின் பெண்களைக் கூர்ந்து நோக்கியதாகவும், அதுவும் நபி(ஸல்) அவர்களின் அனுமதியுடன் உற்று நோக்கியதாக கதை அமைக்கிறார்.

நபி(ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தைப் பிடித்து அப்பெண்ணைப் பார்க்க விடாமல் திருப்பியதிலிருந்து அன்னியப் பெண்களைப் பார்ப்பதிலிருந்தும் முஸ்லிம் ஆண்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற சட்டமே நிலைநாட்டப்படுகிறது.

//ஆண்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளச் சொல்லும் வசனத்தை எந்த இஸ்லாமியரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை// உலக முஸ்லிம்களை எல்லாம் ''பார்வையைத் தாழ்த்துகிறார்களா''? என்பதை முழுமையாக கண்காணித்து விட்டது போல் இப்படியும் ஒரு உளறலை வைத்திருக்கிறார். (வேறு வேலையே இல்லையா?)

இன்னும் பாருங்கள்!
//இதில் ஆடை விலகிய நிலையில் முகமது நபிகள் ஜைனப்பை பார்த்தார் என்ற குற்றச் சாட்டுக்கு பதிலளிக்கு முகமாகவே, இனிமேல் முகமது நபிகளின் மனைவிகளையும், அங்கிருந்த கூட்டத்தாரின் ஏனைய பெண்களையும் தமது 'தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு' இறைவன் கேட்டுக் கொண்டதைக்[10] கவனிக்க வேண்டும். இந்த வசனத்துக்கு முந்தய, பிந்தய வசனங்களைக் கவனித்தோமானால், இதன் பின்னனி விளங்கும். திருக்குரான் வசனம் 33:59 க்கு முந்தய வசங்கள்://

நபி(ஸல்) அவர்கள், ஸைனப் (ரலி) அவர்களை ஆடை விலகிய நிலையில் பார்த்தார்கள் என்ற அவதூறை மறுத்து நாம் முன்பு விளக்கியுள்ளோம். நபி(ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணமுடித்த போது அத்திருமணம் அன்றைய இஸ்லாத்தின் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டது. இன்றைய எதிரிகள் அவதூறு சொல்வது போல் ஸைனப்(ரலி) யை ஆடை விலகிய நிலையில் நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். என்பதல்ல. அன்றைய எதிரிகளின் விமர்சனத்தைப் பார்ப்போம்.

(இங்கே சென்ற பதிவில் அறியாமை காலத்துத் திருமண நாகரீகம் பற்றிய வரலாற்றைச் சுருக்கமாக எழுதியிருந்தோம். அதை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டு மேலே தொடர்வோம்)

அறியாமை காலத்தில் ஒருவர் பத்து மனைவிவரை மணந்து கொள்ளலாம் என்று இருந்தது. அந்த மக்களிடையே இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் முதலில் கதீஜா(ரலி)யை மணமுடித்தார்கள். கதீஜா(ரலி)அவர்களின் மரணத்திற்குப்பின், ஸம்ஆ என்பவரின் மகள் ஸவ்தா(ரலி) அவர்களை மணமுடித்தார்கள். இதன் பிறகு அபூபக்ரின் மகள் ஆயிஷா(ரலி) அவர்களை மணமுடித்தார்கள். இதன் பின் உமரின் மகள் ஹஃப்ஸா(ரலி) அவர்களை மணமுடித்தார்கள். இதன் பிறகு குஸைமாவின் மகள் ஸைனப்(ரலி) அவர்களை மணமுடித்தார்கள். (இவர் வேறு ஸைனப் ஆவார்) நபி(ஸல்) அவர்கள் இதுவரை ஐந்து திருமணம் செய்திருந்தார்கள். அதில் கதீஜா(ரலி) மரணித்து விட்டதால் நான்கு மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப்(ரலி) அவர்களை ஆறாவது மனைவியாக மணமுடித்த போது ஒரே நேரத்தில் நான்கு மனைவிகள் என்ற வரம்பு மீறப்பட்டு, ஒரே நேரத்தில் ஐந்து மனைவிகள் என்ற நிலை வருவதால், அன்றைய இஸ்லாத்தின் எதிரிகள் (மதீனா வாழ் யூதர்கள்) ''முஹம்மது ஒரே நேரத்தில் நான்கு மனைவிக்கு மேல் வைத்திருப்பது தடை செய்யப்பட்டிருப்பதாகக் கூறிகின்றார். ஆனால் தாமே ஐந்தாவது மனைவியை எப்படி மணமுடித்துக் கொண்டார்? என்று ஆட்சேபணை செய்தார்கள். முஸ்லிம்களில் சிலர் (அறியாமைக்காலத் திருமணம் போல்) ஒரே நேரத்தில் நான்கு என்ற வரம்பு நீக்கப்படுமோ? என்றும் நினைத்தார்கள். இதற்கு விளக்கமாகவே 33:50 வசனத்தில் இறைவன் பதிலளிக்கிறான்.

33:50நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்) அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.

ஒரே நேரத்தில் நான்குக்கும் அதிகமான மனைவியை வைத்திருப்பது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உள்ள அனுமதி. மற்ற முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் நான்கு மனைவிக்கு மேல் மணமுடிக்க அனுமதி இல்லை என்பதை மேற்காணும் வசனத்திருந்து விளங்கிக் கொள்ளலாம்.

//யாரை வேண்டுமானாலும் முகமது நபி மணந்து கொள்ளலாம், (அவருக்கு அடங்கி நடக்காத) மனைவியரை விவாகரத்து செய்து விடலாம்[8],//

33:51வது வசனத்தை தவறாக விளங்கி இப்படி விமர்சித்திருக்கிறார். இது அறியாமை என்று புறக்கணித்து விடுவோம், அந்த வசனத்தைப் பார்ப்போம்.
33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன். மிக்க பொறுமையாளன்.

இந்த வசனத்தில் ''நீர் விரும்பியவரை ஒதுக்கி வைக்கலாம்'' என்பதன் பொருள் ''விவாகரத்துச் செய்து விடலாம்'' என்பதில்லை.

''(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனம் அருளப்பட்ட பிறகும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் மற்றொரு மனையிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்கும்படி அனுமதி கேட்பார்கள்'' என்று ஆயிஷா(ரலி) கூறினார். நான், 'அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்ததூதர் அவர்களே! (வேறொரு மனைவிக்காக என்னுடைய நாளை விட்டுக்கொடுக்கும்படி,) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களைவிட்டுக் கொடுக்க விரும்பமாட்டேன்' என்று சொல்வேன்'' என்றார்கள். (முஆதா பின்த் அப்துல்லாஹ் அல்அதவிய்யா (ரலி) புகாரி)

ஒரு மனைவியிடம் செல்ல வேண்டிய நாளில் இன்னொரு மனைவியிடம் செல்வதற்காக அந்த மனைவியிடம் அனுமதி பெறுவதையே அன்றைய தினத்தில் அந்த மனைவியை ஒதுக்கி வைத்தல் என்ற பொருளாகும். ''நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்ததூதர் அவர்களே! (வேறொரு மனைவிக்காக என்னுடைய நாளை விட்டுக்கொடுக்கும்படி,) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களைவிட்டுக் கொடுக்க விரும்பமாட்டேன்'' என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதிலிருந்து மனைவியின் சம்மதம் இல்லாமல் அன்றைய தினம் அந்த மனைவியை நபி(ஸல்) அவர்கள் ஒதுக்கவில்லை என்பது தெளிவு. எனவே ''ஒதுக்கி வைக்கலாம்'' என்பதற்கு விவாகரத்தைப் பொருத்தக்கூடாது. விவாகரத்துக்கு மனைவியின் சம்மதம் தேவையில்லை. ''நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம்.'' என்பதால் இது விவாகரத்தைக் குறிக்கவில்லை என்பதை விளங்கலாம். மேலும் நபி(ஸல்) அவர்கள் தமது மனைவி மார்களின் இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதையும் - ஒரு மனைவியை மணவிலக்கு செய்து விட்டு அந்த இடத்தில் வேறொரு மனைவியை மணமுடிப்பதை இறைவன் தடை செய்துவிட்டான் - நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியரில் எவரையும் விவாகரத்துச் செய்வதையும் இறைவன் அனுமதிக்கவில்லை என்பதை 33:32 வசனம் விளக்குகிறது.

33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.

நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களில் எவரையும் முஸ்லிம்கள் எவரும் திருமணம் செய்ய விலக்கப்பட்டு விட்டதால் நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியரில் எவரையும் விவாகரத்துச் செய்வதும் தடுக்கப்பட்டது. இதனால் நபி(ஸல்) அவர்களின் மீது அவர்களின் மனைவிமார்களுக்கு உரிமையும் அதிமாகியது.

(இன்னும் வரும்)

No comments: