Monday, August 11, 2008

இஸ்லாத்தை மறைத்தல்

இஸ்லாம் மறைக்கப்படாத, மறைக்கக்கூடாத, மறைக்க முடியாத மார்க்கம். இறுதி வேதம் திருக்குர்ஆன் மற்றும் குர்ஆனுக்கு விளக்கவுரையாக இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைக்கப்படாத வாழ்க்கை குறித்த அறிவிப்புகளும் எவரும் எளிதில் நெருங்கும் அளவுக்குத் திறந்த நூல்களாகவுள்ளது. இணைய வசதி உள்ளவர் விரல் நுனியின் சொடுக்கில் தேவைப்படும் திருக்குர்ஆன் வசனங்களையும், நபிவழி அறிவிப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இறை மார்க்கம் இஸ்லாத்தை முஸ்லிம்கள் மறைத்தார்கள் என்று கூறுவது ஒன்றும் அறியா அப்பாவித்தனமாகும். இவ்வளவு வெளிப்படையான மார்க்கத்தை மறைத்திடவும் முடியாது. ஒன்றை மறைத்தல் என்று சொன்னால் அது யாருக்கும் கிடைக்கவேக்கூடாது. மறைத்து விட்டார்கள் என்று சொல்பவர்கள் மறைத்தது கிடைக்கப் பெற்றதால் தான் மறைத்து விட்டார்கள் என்று சொல்ல முடியும். எனவே மக்களின் பகிரங்கப் பார்வையில் உள்ளதை யாரும் மறைக்க முயலமாட்டார்கள்.

எவரும் எளிதில் அணுகும் வகையில் வெளிப்படையாக இருக்கும் இஸ்லாத்தை, முஸ்லிம்கள் மறைத்து விட்டனர் என்ற பிற மத நண்பர்களின் குற்றச்சாட்டு தவறானது!


(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)

முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.

1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?


(இஸ்லாம் வளால் பரவிய மார்க்கமா? என்பதுப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.)

மார்க்கத்தை மறைத்தல்

இஸ்லாத்தை மறைப்பது குறித்து இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துள்ளது. முஸ்லிம்கள் சத்தியத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை.

''அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.'' (திருக்குர்ஆன், 002:042)

''நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பியுள்ளோம். நரகவாசிகளைப் பற்றி உம்மிடம் கேட்கப்படாது'' (திருக்குர்ஆன், 002:119)

இறைவன் உண்மையுடன் அனுப்பிய இஸ்லாமியத் தூதுத்துவத்தை முஸ்லிம்கள் மற்றவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். (புகாரி)

உண்மையை மறைக்கக்கூடாது!

உண்மையுடன் பொய்களையும் சேர்க்கக்கூடாது!

உண்மையை எடுத்துக்கூறி மக்களை எச்சரிக்க வேண்டும்!

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அறிந்த ஒரேயொரு செய்தியையும் மற்றவருக்கு எடுத்துச் சொல்லிட வேண்டும்!

முக்கிய கவனத்திற்கு: நபியவர்கள் கூறாததை கூறியதாகவும், கூறியதை கூறவில்லை என்றும் நபி (ஸல்) அவர்களின் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவன் நரகத்தில் தன் இருப்பிடத்தைச் சித்தப்படுத்திக்கொள்கிறான்! என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை முன் வைத்துள்ளது இஸ்லாம்.

எதை வேண்டுமென்றே மறைக்கக்கூடாது என்று இஸ்லாம் எச்சரிக்கின்றதோ, அதைக் குறித்து ''இஸ்லாமிய அறிஞர்கள் வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்தார்கள்'' என்ற பிற மத நண்பர்களின் விமர்சனம் மிகவும் பரிதாபத்திற்குரியதாகவுள்ளது.

ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-8

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, அல் ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்துக்கு எழுதுவது. நேர்வழியை பின்பற்றுபவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் உங்களிருவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். நான் மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். உயிருடன் இருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நிச்சயம் வேதனை உண்டு என்பதை அறிவிப்பதற்கும் அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.''

ஓமன் நாட்டு மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதத்தின் மேற்கண்ட தமிழ் மொழிபெயர்ப்பு மூலமொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்த்தது. தமிழில் மொழிபெயர்க்கும் போது இஸ்லாமிய அறிஞர்கள் வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்தார்கள் என்று பிற மத நண்பர்கள் விமர்சிக்கும் நபியவர்களின் கடிதம் இதுதான்.

இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்தார்கள் என்று பிற மத நண்பர்கள் குற்றப்படுத்துவது மூலமொழி அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, பின்னர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தழுவியதாகும். ஆங்கிலமும், தமிழும் வருமாறு

//ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்

"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் - தமிழாக்கம்

நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.//

பிற மத நண்பர்கள் ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயர்த்தது சரியா? என்பது வாதமல்ல. ஏனெனில் நபியவர்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதி அனுப்பவில்லை! ஆங்கிலம் ஒரு மொழிபெயர்ப்புதானே தவிர, ஆங்கிலம் மூலமொழி அல்ல. அரபியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திருந்து தமிழ், இவ்வாறு மொழிபெயர்ப்பிலிருந்து மொழிபெயர்க்கும்போது மூலமொழியில் சொல்லப்பட்ட கருத்தில் சிதைவு ஏற்படும்.

அதற்காக மொழிபெயர்ப்பு கூடாது என்று நாம் சொல்லவில்லை. விவாதம் என்று வந்தால் மொழிபெயர்ப்பில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் ''எது சரி?'' என்பதை மூலமொழியோடு ஒப்பிடுவதே முறையாகும். அண்டை நாட்டு அரசர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய அரபிமொழி கடிதத்தை இஸ்லாமிய அறிஞர்கள் தமிழுக்குத் தழுவிய கடிதமும், இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் மூன்றாம் மொழி தமிழுக்குத் தழுவிய கடிதமும் மேலே இடம் பெற்றுள்ளன.

இங்கு,

''இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது? என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர்.

பிற மத நண்பர்களின் இன்னொரு கேள்வி?

முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?


பிற மத நண்பர்களே!

கேள்வி எழுப்பியதோடு ''மறைத்த உண்மை எது?'' என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே!

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

1 comment:

அபூ முஹை said...

நண்பர் vijidon,

உங்கள் பின்னூட்டத்தை இங்கு பிரசுரிக்க இயலாது. சம்பந்ப்பட்டவர்களுக்கு அனுப்பி வையுங்கள் பதில் கொடுப்பார்கள்.

ரமதான் மாதம் என்பதால் அயர்வு, கூடுதல் வணக்கமும் இருக்கும் என்பதால் அவர்கள் பதில் தர தாமதமாகலாம்.

தாமதம் ஆனாலும் பதில் தருவார்கள்.