Sunday, June 08, 2008

இம்மார்க்கத்தில் நிர்பந்தமில்லை!

திருக்குர்ஆன் 9வது அத்தியாயம் ஹிஜ்ரி 9ம் ஆண்டு அருளப்பட்டது. தபூக் போர் நிகழ்வுக்கு முன்னரும், பின்னரும் அருளப்பட்ட வசனங்கள் ''அத்தவ்பா'' அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த அத்தியாயத்தில், ஒப்பந்தங்களை மீறி இஸ்லாத்திற்கு எதிராக மோசடி செய்த இணை வைப்போர் கண்டிக்கப்படுகிறார்கள். இணை வைப்போர் இனிமேல் காபாவின் எல்கைக்குள்ளும் (009:028) வரக்கூடாது எனத் தடுக்கப்படுகிறார்கள். மேலும் போருக்குச் செல்லாமல் தங்கிய சில முஸ்லிம்கள் கண்டிக்கப்படுகிறார்ககள். முக்கியமாக நயவஞ்சகர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

இஸ்லாம் கட்டுக் கோப்பான வாழ்க்கை நெறியாகவும், முழுமையான சுய அதிகாரம் கொண்ட ஓர் அரசாகவும் எழுச்சிப்பெற்று, ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, அழைப்புப் பிரச்சாரத்தால் அரபுலகின் எத்திசையிலும் இஸ்லாத்தின் செல்வாக்கு விரிவடைந்து, இஸ்லாமிய ஆட்சி வலிமைப் பெற்று வந்தது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத இணை வைப்பாளர்களின் பயங்கரவாத சக்திகள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை முறித்துக்கொண்டனர்.

நபி (ஸல்) அவர்களுடன் இணை வைப்போர் செய்து கொண்ட உடன்படிக்கைகளை முறித்து, இஸ்லாத்தின் மீது கடுமையானத் தாக்குதலை நடத்திடத் திட்டமிட்டனர்.

''தமது உடன்படிக்கைகளை முறித்து இத்தூதரை வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாகவே (போரைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?'' (திருக்குர்ஆன், 009:013)

ஒரு சமூகத்தார் மோசடி செய்வார்கள் என்று நீர் அஞ்சினால் அவர்களிடம் (செய்த உடன்படிக்கையை) நீரும் சமமாக முறிப்பீராக. மோசடி செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். (திருக்குர்ஆன், 008:058)

இணை வைப்போர் ஒப்பந்தங்களை - உடன்படிக்கைகளை அலட்சியப்படுத்தி இஸ்லாத்திற்கு எதிராக சதிவேலையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் சதிவேலைகளுக்கு அத்தவ்பா அத்தியாய வசனங்கள் முற்றுப்புள்ளி வைக்கின்றன.

''இணை கற்பிப்போரில் நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்து, அவர்கள் (அவ்வுடன்படிக்கையில்) உங்களுக்கு எந்தக் குறைவும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களிடம் அவர்களின் உடன்படிக்கையை அதற்குரிய காலக்கெடு வரை முழுமைப்படுத்துங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை நேகிக்கிறான்''. (திருக்குர்ஆன், 009:004)

நபி (ஸல்) அவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நேர்மையுடன் நிறைவேற்றி வந்த இணை வைப்போரிடம் உடன்படிக்கைக்குரிய காலக்கெடு வரை முழுமைபடுத்தும்படி 009:004வது வசனம் கூறுகிறது. இதுவும் ஏற்கெனவே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் காலம் வரை தான். இதன் பிறகு இணை வைப்போருடன் உடன்படிக்கை எதுவும் கிடையாது எனவும் திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது.

(இது) ''நீங்கள் உடன்படிக்கை செய்த இணை கற்பித்தோரிடமிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக்கொள்ளும் பிரகடனம்'' (திருக்குர்ஆன், 009:001)

''இணை கற்பிப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனது தூதரும் விலகிக்கொண்டனர்'' (திருக்குர்ஆன், 009:003)

முற்றிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் அதிகாரம் இஸ்லாமிய அரசுக்கு ஏற்பட்டு, செயல் திட்டங்களை வகுக்க வேண்டிய அவசியம் இஸ்லாமிய அரசுக்கு இருந்தது. இதில் முதல் பிரகடனமாக இறைவனுக்கு இணை வைப்போருடன் எந்த ஒப்பந்தமும் இல்லை என அறிவித்தது.

''இணை வைப்போரிடமிருந்து அல்லாஹ்வின் பொறுப்பும், அல்லாஹ்வின் தூதரின் பொறுப்பும் நீங்கி விட்டது. இந்த ஆண்டிற்குப் பிறகு இணை வைப்பவர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது. இறையில்லத்தை நிர்வாணமாக வலம் வரக்கூடாது. மூஃமினைத் தவிர எவரும் சுவனம் செல்லமாட்டார்'' என ஹஜ்ஜின் போது அபூபக்ர் (ரலி) அலீ (ரலி) அறிவிப்புச் செய்தார்கள். (புகாரி, திர்மிதீ)

ஹிஜ்ரி 9ம் ஆண்டு துல்ஹஜ் பத்தாம் நாளில் மேற்கண்ட அறிவிப்பை மக்காவில் பிரகடனப்படுத்தும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

இறையில்லம் காபாவை பராமரிக்கும் பொறுப்பும் இறை நம்பிக்கையாளர்களுக்கேத் தகுதியானது. இணை வைப்போர் இதற்குத் தகுதியற்றவராவர். (திருக்குர்ஆன், 009:017, 018)

காபாவின் எல்கைக்குள் ஏக இறைவனுக்கு இணை வைத்தலையும், இணை வைக்கும் சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதையும் தடுத்து, இறையில்லத்தின் எல்கைக்குள் இணை வைப்போர் வருவதும் கூடாது என இஸ்லாமிய அரசால் கட்டளையிடப்பட்டது. அதாவது, இணை வைப்போர் தங்கள் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி சதி செய்தாவது இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை அழித்திட வேண்டும் எனக் கருதினர். இணை வைப்போரின் சூழ்ச்சிக்கெதிராக எதிர்காலத்தில் இஸ்லாம் தனித்தன்மையாக வலிமைப் பெற்ற போது, நிராகரித்து எதிர்த்தவர்கள், இஸ்லாத்தை அழித்திட முடியும் என்ற நம்பிக்கையிழந்தனர்.

''நிரகாரிப்போர் உங்கள் மார்க்கத்தைப் பற்றி (அழித்து விட முடியும் என்று) இன்று நம்பிக்கை இழந்து விட்டனர்'' (திருக்குர்ஆன், 005:003)

இதன் பின்னர் இணை வைப்போருக்கு இருந்த வழிகள்,

1. இஸ்லாமிய அரசுடன் போரிடுவது.

2. நாட்டைத் துறந்து செல்வது.

3. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது, ஏற்று தொழுகையை நிலைநாட்டி ஸகாத் கொடுப்பது.

4. இஸ்லாமிய அரசுக்குக் கீழ்படிந்து, ஜிஸ்யா எனும் காப்பு வரிச் செலுத்துவது.

இஸ்லாமிய அரசு என அறிவித்த நாட்டில், முஸ்லிமல்லாதவருக்கு இதில் எதையும் தேர்ந்தெடுக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.

*****

நயவஞ்சகர்கள்.

திருக்குர்ஆன் 009வது - அத்தவ்பா அத்தியாயத்தின் பல வசனங்கள் நயவஞ்சகர்கள் குறித்தும் பேசுகிறது. இவர்கள் வெளித் தோற்றத்தில் முஸ்லிமைப் போல் காட்டிக்கொண்டு இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் விரோதமாகச் செயல்பட்டு வந்தனர். இந்நயவஞ்சகர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் இரண்டறக் கலந்திருந்ததால் இவர்களால் இஸ்லாமிய அரசுக்கு இழப்புகள் ஏற்பட்டன.

''தமது உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தும் அத்தியாயம் நம்பிக்கை கொண்டோர் மீது அருளப்படுவதை நயவஞ்சகர்கள் அஞ்சுகின்றனர். 'கேலி செய்யுங்கள்! நீங்கள் அஞ்சுவதை அல்லாஹ் வெளிப்படுத்துவான்'' என்று கூறுவீராக!

''அவர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையும், அவனது வசனங்களையம், அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்'' என்று கேட்பீராக!
(திருக்குர்ஆன், 009:064, 065)

''நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் 'அத்தவ்பா' (9வது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், 'தவ்பா அத்தியாயமா?' அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தையோர் உள்ளனர், அவர்களில் இத்தையோர் உள்ளனர், என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால் தம்மில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் அனைவர் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுவிட்டது என நயவஞ்சகர்கள் எண்ணினார்கள்'' என்று கூறினார். (சயீத் பின் ஜுபைர் (ரஹ்) - நூல்: முஸ்லிம்)

நயவஞ்சகர்கள் இஸ்லாத்தை பரிகாசித்தும், முஸ்லிம்களின் செயல்களைப் பார்த்து நகைத்துக் கேலி செய்தும் வந்தனர்.

''தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டபோது நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அபூஅகீல் அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொருவர் அதைவிட அதிகமாகக் கொண்டு வந்தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள் ''(அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை, (அதிகமாகக் கொண்டு வந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக் கொண்டு வந்திருக்கிறார்'' என்று (குறை) சொன்னார்கள். அப்போதுதான்,

''தாராளமாக (நல்வழியில் செலவிடும்) நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக்கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர்'' எனும் (009:079) வசனம் அருளப்பெற்றது. (புகாரி, முஸ்லிம்)

நபியே! நிராகரிப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! (திருக்குர்ஆன், 009:073)

இங்கு நிராகரிப்போருக்குச் சமமாக நயவஞ்சகர்கள் கருதப்படுகின்றனர். இவர்களுக்குப் பாவமன்னிப்புக் கோருவதும் - ஜனாஸாத் தொழுகையும் கூடாது என இறை வசனம் இறக்கப்பட்டது. (009:080, 084) இதுவரை நயவஞ்சகர்கள் விஷயத்தில் கடைபிடிக்கப்பட்ட மென்மையான போக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இனி இஸ்லாத்திற்கெதிராக மோசடி செய்யும் நயவஞ்சகர்களை எதிர்த்துப் போரிடும்படி இஸ்லாமிய அரசுக்கு இவ்வசனம் கூறுகிறது.

''நம்பிக்கை கொண்டோரே! உங்களை அடுத்திருக்கும் நிராகரிப்போருடன் போரிடுங்கள். உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும்'' (திருக்குர்ஆன், 009:123)

இங்கு நயவஞ்சகர்களைக் குறித்துப் பேசும் வசனத் தொடர்களை சிந்தித்தால், நயவஞ்சகர் இஸ்லாத்தை ஏற்றுப் பின்னர் நிராகரித்துக்கொண்டிருந்தனர் என்பதை விளங்கலாம்.

நயவஞ்சகர் நிராகரிப்போராகவும் இருந்ததால் ''உங்களை அடுத்திருக்கும் நிராகரிப்போருடன் போரிடுங்கள்'' என்ற வசனம் நயவஞ்சகர்களையே குறிப்பிடுகின்றது. இஸ்லாத்தை வெளிப்படையாக நிராகரிக்கும் போக்கு அவர்களிடம் காணப்பட்டது.

''இறை நிராகரிப்புச் சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்தனர்'' (திருக்குர்ஆன், 009:074)

எனவே, சத்தியத்தை ஏற்பது போல் மக்களுக்குக் காட்டிக்கொண்டு உண்மையில் சத்தியத்தை நிராகரித்து, முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய அரசுக்கும் அடுத்திருந்து குழிபறிக்கும் நயவஞ்சகர்கள் மீதும் இஸ்லாமிய அரசு போரிட்டு அவர்களை அடக்கும்படி 009:073, 123 வசனங்கள் கூறுகிறது.

திருக்குர்ஆனில் போர் சம்பந்தமாக அருளப்பட்ட பல வசனங்களில் அத்தவ்பா - 009வது அத்தியாயத்தின், 073, 0123 இறைவசனங்களை எடுத்து வைத்து இதனால் ''இம்மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை'' என்ற 002:256 வது வசனம் இரத்தாகி விட்டது என பிற மத நண்பர்கள் தமது வாதத்தை வைத்திருந்தனர். பார்க்க: முந்தைய பதிவு


002:256வது வசனம் இரத்தாகி விட்டது எனக் கொஞ்சமும் பொருத்தமில்லாத, - 009:073, 123. 048:016 - வசனங்களை எடுத்துக்காட்டியிருந்தனர். ''போர் செய்யுங்கள்'' என்று கூறுவதால் இஸ்லாத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்ற வசனம் இரத்தாகி, இஸ்லாம் நிர்ப்பந்தப்படுத்துகிறது என்றாகிவிடும் என பிற மத நண்பர்கள் கூறுவது சம்பந்தமில்லாத ஆதாரமற்றதாகும். மேலும் அவர்கள் வைத்திருக்கும் மற்றொரு கருத்து,

3) குர்-ஆனில் உள்ள மன்னிப்பு சம்மந்தப்பட்ட எல்லா வசனங்களையும், குர்-ஆன் 9:5 இரத்து செய்துவிடுகிறது.[3]

Suyuti in his book استنباط التنزيل (Istenbat al tanzeel) says: "Every thing in the Qur'an about forgiveness is abrogated by verse 9:5."

Al-Shawkani in his book السيل الجرار (Alsaylu Jarar 4:518-519) says: "Islam is unanimous about fighting the unbelievers and forcing them to Islam or submitting and paying Jiziah (special tax paid only by Christians or Jews) or being killed. [The verses] about forgiving them are abrogated unanimously by the obligation of fighting in any case."

Source: http://www.answering-islam.org/Terrorism/peace-loving.html



''எனவே புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! அவர்கள் திருந்திக்கொண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன்''
(திருக்குர்ஆன், 009:005)

இஸ்லாமிய அரசை எதிர்த்துப் போரிட வரும் இணை வைப்போரை எதிர்த்துப் போர் செய்யுங்கள் என்பதே 009:005 வசனத்தின் கருத்து.

''கண்ட இடத்தில் கொல்லுங்கள், அவர்களைப் பிடியுங்கள், அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்'' என்பதெல்லாம் போரில் கடைபிடிக்க வேண்டிய முறைகள். போரிடாதவர்களிடம் இவை கடைபிடிக்கத்தக்கதல்ல என்பதை அடுத்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

''இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருக்கிறார்கள்'' (திருக்குர்ஆன், 009:006)

இறைவனுக்கு இணை வைப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்பது எல்லா இணை வைப்போரையும் கண்ட இடத்தில் கொல்லப்பட வேண்டும் என்று பொருள் கொண்டால், இணை வைப்போருக்கு அடைக்கலம் அளிக்கும்படியும் அடுத்த வசனம் கூறுகிறதே!

எனவே, இணை வைப்போர் இறைவனுக்கு இணை ஏற்படுத்தியதற்காகவோ, அல்லது இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதற்காகவோ அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்று இங்கு இறைவன் கூறவில்லை! மாறாக இஸ்லாத்தை அழித்து, இணை வைப்போரின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என இஸ்லாமிய அரசுடன் போர் செய்ய வரும் இணை வைப்போரை எதிர்த்துப் போர் செய்யும்படி இறைவன் கூறுகின்றான்.

*****

''அல்லாஹ் மன்னிப்பவன், கருணையுள்ளவன்'' என்று திருக்குர்ஆனின் பல வசனங்கள் கூறுவதால், மன்னிப்பு சம்பந்தப்பட்ட எல்லா வசனங்களையும் 009:005வது வசனம் இரத்து செய்து விடுகிறது என்று பிற மத நண்பர்கள் கூறுவது சரியல்ல!

அடுத்து ஜிஸ்யா வரி பற்றி பிற மத நண்பர்களின் கருத்தைப் பார்ப்போம்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

2 comments:

சவூதி தமிழன் said...

அன்புச் சகோதரர் அபூமுஹை,

அற்புதமான விளக்கங்கள் அளித்துள்ளீர்கள்.

என்றோ எவனோ காழ்ப்புடன் எழுதி வைத்த அழுகிப் போன சரக்கை, சுய அறிவின்றிக் கடை பரப்ப முனையும் சில இணையக் கூலிப் பட்டாளத்திற்குச் சரியான பதிலடி.

உங்கள் விளக்கங்கள் அவர்களைச் சேருமோ இல்லையோ, என்னைப் போன்றோருக்குத் தெளிவு கிடைக்கிறது.

உங்களுக்கு இறைவன் நற்கூலி வழங்கப் பிரார்த்திக்கிறேன்.

அபூ முஹை said...

சவூதி தமிழன் உங்கள் வருகைக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி!