இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை நோக்கி சகோதரர் ஜோ கீழ்கண்ட கேள்விகளை வைத்திருக்கிறார்...
//இஸ்லாமிய சகோதரர்கள் பொதுவாக கருத்து சொல்லும் போது இஸ்லாமில் அனைத்து நபி மார்களும் (ஆதாம் ,ஆபிரகாம் தொடங்கி இயேசு ,அண்ணல் முகமது நபி வரை) சமமாகவே மதிக்கப்படுகிறார்கள் ,அதே நேரத்தில் முகமது நபியவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்பதாலும் அவர் வழியாகவே இறை வார்த்தையான குரான் இறக்கப்பட்டதால் நடைமுறையில் முகமது நபியவர்கள் தனிச்சிறப்புடையவராகவும் இஸ்லாமியர்களின் தனிப்பட்ட பேரன்புக்குரியவராகவும் திகழ்கிறார் என்றும் கருத்துரைக்கிறார்கள் .இது பற்றி எனக்கு மறுப்பேதும் இல்லை.
ஆனால் இயேசு(ஈஸா நபி) குறித்து இஸ்லாம் நம்பிக்கை பற்றி மேலும் தகவல்களை நேரடியாக நம் இஸ்லாமிய அன்பர்களிடமிருந்து பெறலாமே என்ற நோக்கத்தில் இந்த பதிவு.
1. இயேசு அன்னை மரியின் மகனாக பிறந்தார் .ஆனால் அன்னை மரி தன்னுடைய கன்னித் தன்மையை இழக்காமலேயே ஆணின் மூலமாக அன்றி ,இறைவனால் கருத்தரிக்க வைக்கப்பட்டு இயேசு பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல முஸ்லிம்களின் நம்பிக்கையும் கூட .ஆக ஆதாம் என்கிற ஆதிமனிதன் தவிர மற்றெல்லா நபிகளும் இயற்கையான முறையில் பிறந்த போது இயேசு மட்டும் விசேடமான முறையில் அன்னை மரியாளிடம் பரிசுத்தமான முறையில் பிறக்கிறார் .இறுதித் தூதர் முகமதுவுக்கே கிடைக்காத இந்த தனிச்சிறப்பை அல்லா ஈஸா நபிக்கு மட்டும் கொடுக்க வேண்டிய காரணம் என்ன ?இது பற்றி இஸ்லாத்தில் என்ன விளக்கம் சொல்லப்படுகிறது ?
2. இந்த உலகின் இறுதி நாள் வரும் போது வானகத்திலிருந்து இயேசு மறுபடியும் இந்த மண்ணுலகுக்கு வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை .அது போலவே இஸ்லாமியர்களும் இறுதி நாளின் போது இயேசு மறுபடியும் வந்து குரானை ஓதுவார் என்று நம்புகின்றனர் .இங்கும் இறுதித் தூரரான முகமது நபிக்கு கிடைக்காக சிறப்பு இயேசு(ஈஸா நபி) -க்கு கிடைக்கிறது .இதற்கு காரணம் என்ன ? ஏன் இயேசு- வுக்கு இந்த தனிச்சிறப்பு என்பதற்கு இஸ்லாம் என்ன விளக்கம் சொல்கிறது ?//
*******************************************
சகோதரர் ஜோ இந்தக் கேள்விகளில் //''இறுதித் தூதரான முகமது நபிக்கு கிடைக்காத சிறப்பு இயேசு(ஈஸா நபி) -க்கு கிடைக்கிறது .இதற்கு காரணம் என்ன?''// என்பதையே முக்கியமாகக் கேட்டிருக்கிறார். கேள்வியில் விதர்ப்பம் இல்லை என்றே எடுத்துக் கொள்வோம்.
சிறப்பின் காரணம் என்னவென்பதை உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டால் தவறாகாது. நபிமார்களிடையே ஏற்றத் தாழ்வைக் கற்பிக்க இந்த நபிக்கு ஏன் இந்த சிறப்பு? என காரணத்தைத் தேடினால் - ''நபிமார்களிடையே வேற்றுமை இல்லை'' எல்லா நபிமார்களையும் ஒரே படித்தரத்தில் வைத்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற - இஸ்லாத்தின் கொள்கைக்கு முரண்பட்டதாகும்.
நபி இயேசு என்ற ஈஸா (அலை) அவர்களின் இடத்தில், நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் முஹம்மது நபி தந்தையின்றி பிறந்திருப்பார்கள், தொட்டிலில் பேசியிருப்பார்கள், இறைவனால் உயர்த்தப்பட்டிருப்பார்கள், இறுதி நாளின் நெருக்கத்தில் பூமிக்கு இறங்கி வரத்தான் செய்வார்கள்!
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் இடத்தில், இயேசு (அலை) அவர்கள் இருந்திருந்தால் இயேசு (அலை) அவர்களும் இறுதி நபியாகக் குறிப்பிடப்பட்டிருப்பார்கள், உலக மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராக ஆக்கப்பட்டிருப்பார்கள், மறுமை உலகில் - பரலோக ராஜ்யத்தில் பரிந்துரைப்பதையும் பெற்றிருப்பார்கள்.
எந்தெந்த நபிக்கு என்னென்ன சிறப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அந்தந்தக் கால மக்களின் நம்பிக்ககைக்கேற்ப இறைவன் தீர்மானிக்கிறான். அவன் தீர்மானித்தத் தகுதிகளை, அவன் தேர்ந்தெடுக்கும் மனிதரை இறைத்தூதராக நியமித்து, அவருக்கு சிறப்பு தகுதிகளையும் வழங்குகிறான். அதைத்தான் இறைவன் இப்படிக் கூறுகிறான்...
17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம்.இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்.
இறைத்தூதர்களில் சிலரை, சிலரைவிட மேன்மையாக்கியிருக்கிறான் என்பது இறைத்தூதர்கள் சிலருக்கு இறைவன் வழங்கிய சிறப்புத் தகுதி. இறைவன் கூறும் இந்தச் சிறப்புத் தகுதி கண்ணோட்டத்தில் நபிமார்களுக்கு வழங்கிய சிறப்புகளை சொல்லிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அந்த சிறப்புத் தகுதியை வைத்து இயேசு (அலை) அவர்களை விட முஹம்மது (ஸல்) அவர்கள் உயர்ந்த நபி என்றோ, முஹம்மது (ஸல்) அவர்களை விட இயேசு (அலை) அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற ஏற்றத்தாழ்வு அடிப்படையில் பாராபட்சமான பேச்சுக்கள் கூடாது என்பதையே...
''அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்.''
''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை''
திருக்குர்ஆன், 2:136, 285 ஆகிய வசனங்கள் கூறிகிறது.
இயேசு - ஈஸா (அலை) அவர்களின் சிறப்பு பற்றி திருக்குர்ஆன் சொல்லும் காரணங்கள்.
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் சிலர் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிப்பட்டார்கள், சிலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இந்தக் கொடுமையானப் போக்கிலிருந்து யூதர்களை விலக்கி நல்வழிபடுத்திடவே இயல்புக்கு மாறாக ஒரு அற்புதத்தை அத்தாட்சியாக நபி இயேசு அவர்களின் பிறப்பை இறைவன் சிறப்பாக தேர்ந்தெடுத்தான்.
43:59. அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை. அவர் மீது நாம் அருள் புரிந்து இஸ்ராயீலின் சந்ததியருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
3:48. இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
3:49. இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான் இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது'' (என்று கூறினார்).
3:50. ''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன், ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என்னைப் பின் பற்றுங்கள்.''
3:51. ''நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.''
மேற்கண்ட வசனங்களில் இயேசு (அலை) அவர்களின் பிறப்பின் சிறப்பு பற்றிய காரணங்கள் தெளிவுபடுத்துப்படுகிறது. இறைத்தூதர் இயேசு அவர்களின் அற்புதமான பிறப்பின் ஏற்பாடு இம்ரானின் குடும்பத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.
3:33. ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
3:34. (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
3:35. இம்ரானின் மனைவி, ''என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்'' என்று கூறியதையும்.
66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார், நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
நபி இயேசுவைப் பெற்றெடுக்க இம்ரானின் மகள் மர்யம் (அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்து அந்தச் செய்தி வானவர்கள் மூலம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது.
3:42. (நபியே! மர்யமிடத்தில்) வானவர்கள், மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான். இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்'' (என்றும்).
இம்ரானின் மகளாகிய மர்யம் (அலை) அவர்கள் மகத்தான அத்தாட்சியாக ஆண் துணையின்றி கருவுற்று இயேசு என்ற ஈஸா (அலை) இறைத்தூதரைப் பெற்றெடுக்கிறார், இந்த அதிசயப் பிறப்பின் சிறப்புக்குக் காரணம், ஏற்கெனவே தவ்ராத் என்ற வேதம் வழங்கப்பட்ட இஸ்ராயீலின் சந்ததிகள், இயேசுவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இயேசுவின் பிறப்பை, முதல் மனிதரும் முதல் நபியுமாகிய ஆதாம், என்ற ஆதம் நபியின் படைப்புக்கொப்பாக சிறப்பித்து அத்தாட்சியாக (பார்க்க:திருக்குர்ஆன், 3:59) சான்றாக்கினான் இறைவன்.
ஆனால் இந்த அற்புதத்தைப் பார்த்த பின்னும், இயேசு பல அதிசயங்களை செய்து காட்டிய பின்னும், யூதர்கள் இயேசுவை இறைத்தூதராக ஏற்கவில்லை (பார்க்க: திருக்குர்ஆன், 3:52) அவரை ஒரு நல்ல மனிதராகக் கூட ஏற்கவில்லை. மோசமாக விமர்சித்தார்கள். யூதர்களின் தவறான விமர்சனங்களில் எள்ளளவும் உண்மையில்லை என்று இயேசுவின் சிறப்பைச் சுட்டிக்காட்டி அவர் மீது சுமத்தப்பட்டக் களங்கத்தைத் திருக்குர்ஆன் துடைத்தெறிகிறது.
இனி...
திருக்குர்ஆன் மர்யம் என்று குறிப்பிடும் மரியாள் பற்றியும், இயேசுவின் பிறப்பு பற்றியும் பைபிள் என்ன கூறுகிறது?
3:46. ''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார், இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' (மேலும் பார்க்க: திருக்குர்ஆன், 5:110, 19:39,40)
இயேசு பிறந்ததும் தொட்டிலில் பேசுவார் என்பதை அவர் பிறப்பதற்கு முன்பே முன்னறிவிப்புச் செய்தும், மரியாளின் கற்பு பற்றி தவறாக விமர்சித்தவர்களின் சந்தேக எண்ணங்களை நீக்கிட, இயேசு தொட்டில் குழந்தையாக இருக்கும் பருவத்தில் பேசி, அந்த அதிசயத்தை நடை முறையில் நடத்திக் காட்டி மரியாளின் கற்பொழுக்கத்தை நிலை நாட்டியதாக வரலாற்றுச் செய்தியை திருக்குர்ஆன் கூறுகிறது.
மரியாளின் கற்பு சம்பந்தமாகவும், இயேசு பிறந்தவுடன் தொட்டிலில் பேசியது தொடர்பாகவும் பைபிள் என்ன கூறுகிறது? என்பதை வசன எண்களுடன் அறியத் தந்தால் நன்றாக இருக்கும். இது நபி இயேசுவைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது? என்பதை அறிந்து கொள்ள கிறிஸ்துவ நண்பர்களிடம் நேரடியாகக் கருத்துக்களைக் கேட்டுப் பெறலாமே என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டது நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
6 comments:
//எந்தெந்த நபிக்கு என்னென்ன சிறப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அந்தந்தக் கால மக்களின் நம்பிக்ககைக்கேற்ப இறைவன் தீர்மானிக்கிறான். அவன் தீர்மானித்தத் தகுதிகளை, அவன் தேர்ந்தெடுக்கும் மனிதரை இறைத்தூதராக நியமித்து, அவருக்கு சிறப்பு தகுதிகளையும் வழங்குகிறான். //
சகோ. அபூமுஹை,
மேற்சொன்ன உங்களின் கருத்தையே சகோ.ஜோ வின் பதிவிலும் பின்னூட்டியுள்ளேன்.
சகோதரர் அபூமுகை,
உங்கள் பதிவுக்கும் விளக்கத்திற்கும் நன்றி!
//திருக்குர்ஆன் மர்யம் என்று குறிப்பிடும் மரியாள் பற்றியும், இயேசுவின் பிறப்பு பற்றியும் பைபிள் என்ன கூறுகிறது?//
ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.
அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
உரத்தசத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது,
இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும் என்றாள்.
அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.
மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்
(லூக்கா -அதிகாரம் 1 .வசனங்கள் 26-56)
//இயேசு பிறந்தவுடன் தொட்டிலில் பேசியது தொடர்பாகவும் பைபிள் என்ன கூறுகிறது?//
இயேசு பிறந்தவுடன் தொட்டிலில் பேசியதாக பைபிளில் குறிப்பிடப்படவில்லை .ஆனால் தன் 12-வது வயதில் அவர் ஜெருசலேம் தேவாலயத்தில் அறிஞர்களோடு விவாதித்தார் என்று சொல்லுகிறது
------------------------------------
அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய்,
பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின்முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.
தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச்செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.
(லூக்கா -அதிகாரம் 2 .வசனங்கள் 42-49)
சக்காரியா பற்றி கூறபட்டுள்ளது...
---------------------
அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று அவருக்குத் தரிசனமானான்.
சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.
அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
இதோ, தகுந்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால், இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
(லூக்கா -அதிகாரம் 1 .வசனங்கள் 11-20)
அன்பின் ஜோ உங்கள் விளக்கத்துககு மிக்க நன்றி!
மரியாள் இயேசு (அலை) அவர்களை பெற்றெடுத்த சம்பவத்தையும், பிரசவித்தக் குழந்தையுடன் ஊருக்குள் மரியாள் வந்தபோது அவரை ஊர் மக்கள் அணுகிய முறையையும் திருக்குர்ஆன் இப்படிக் கூறுகிறது...
19:16. (நபியே!) இவ்வேதத்தில் மர்மமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,
19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார். அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம். (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
19:18. (அப்படி அவரைக் கண்டதும்,) ''நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன். நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)'' என்றார்.
19:19. ''நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன். பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்'') என்று கூறினார்.
19:20.அதற்கு அவர் (மர்யம்), ''எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?'' என்று கூறினார்.
19:21. ''அவ்வாறேயாகும், 'இது எனக்கு மிகவும் சலபமானதே. மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம், இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்'' எனக் கூறினார்.
19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார், பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
19:23. பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது. ''இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா'' என்று கூறி(அரற்றி)னார்.
19:24. (அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து, ''(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்'' என்று அழைத்து கூறினான்.
19:25. ''இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும் (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
19:26. ''ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன். ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்'' என்று கூறும்.
19:27. பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள், ''மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!''
19:28. ''ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை'' (என்று பழித்துக் கூறினார்கள்).
19:29. (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார். ''நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசவோம்?'' என்று கூறினார்கள்.
19:30. ''நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
19:31. ''இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருந்து தொழுகையையும், ஜகாத்தையும் கொடுக்க எனக்கு கட்டளையிட்டான்.
19:32. ''என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
19:33. ''இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்'' என்று (அக்குழந்தை) கூறியது.
மேற்காணும் திருக்குர்ஆன் வசனங்கள்: இயேசு (அலை) அவர்கள் பிறந்தவுடன் பேசி மரியாளின் கற்பு பற்றி அவதூறுப் பேசிய ஊர்மக்களின் வாயை அடைக்கிறது. இந்த முக்கியமான சம்பவம் பைபிளில் இல்லை! மாறாக இயேசு (அலை) 12வயதில் பேசியதாக பைபிளில் கூறுகிறது.
இயேசு (அலை) அவர்களின் வரலாற்றைக் கூறுவதில், பைபிளும், திருக்குர்ஆனும் எவ்வளவோ வேறுபட்டு நிற்கிறது.
அன்புடன்,
அபூ முஹை
நல்லடியார் உங்கள் வருகைக்கு நன்றி!
Post a Comment