Sunday, November 05, 2006

இறுதித் தீர்ப்பு நாள் எப்போது?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், மறுமை நாள் - இறுதித் தீர்ப்பு நாள் என்ற அந்த நாள் நிச்சயமாக வரும் என நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்களில் மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருந்தார்கள். மறுமை வாழ்க்கையை அவர்களால் நம்ப முடியாமல் போனது, இந்த மண்ணுலக வாழ்க்கையைத் தவிர வேறு எந்த வாழ்க்கையும் இல்லை என்ற நம்பிக்கையும்தான் நபிமார்களையும் அவர்களின் போதனைகளையும் நிராகரிக்கும்படிச் செய்தது...

''இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்'' என்று அவர்கள் கூறினார்கள். (திருக்குர்ஆன், 006:029)

''மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.'' (திருக்குர்ஆன், 083:004 - 006)

இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் இறுதி நாளை மறுத்து வந்ததையும், அவர்கள் மறுப்புக்கு பதிலடியாக இறுதி நாள் நிச்சயமாக நிகழ இருக்கிறது என்று இறைவன் கூறியதையும் திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில் காணமுடியும். இறுதித் தீர்ப்பு நாள் எப்போது வரும் - எந்த நேரத்தில் சம்பவிக்கும் என்பது இறைத்தூதர்கள் உள்பட - மனிதர்கள் எவருக்கும் தெரியாது. அது பற்றிய ஞானம் இறைவனிடமே உள்ளது...

''நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன்.'' (திருக்குர்ஆன், 020:015)

''அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது..'' (திருக்குர்ஆன், 31:34)

இன்னும், மறுமை நாள் என்று சொல்லப்படும் அந்த இறுதி நாள் எப்போது வரும் என்பது இறைவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்பதை ஆணித்தரமாக மேற்கண்ட இரு வசனங்களும், இன்னும் இது போன்ற பல இறை வசனங்களும் கூறிக் கொண்டிருக்கிறது. இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அந்த நாள் எப்போது வரும் என்று தெரியாது என்பதையும் சேர்த்தே இந்த வசனஙகள் உள்ளடக்கியுள்ளது. ஒரு முறை வானவர் ஜிப்ரீல் மனித உருவத்தில் வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ''மறுமை நாள் எப்போது வரும்''? கேட்கிறார்...

...''மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல், மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்'' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.'' (திருக்குர்ஆன் 31:34) புகாரி, 50 (இது ஒரு நீண்ட நபிமொழியின் சுருக்கம்)

''மறுமை நாள் எப்போது வரும்''? என்றக் கேள்விக்கு அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது என்று 031:034வது வசனத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். மேலும் ''மறுமை நாள் எப்போது சம்பவிக்கும்''? என்பது பற்றி இறைவன் எனக்கும் அறிவித்துத் தரவில்லை என்று பொருள்படும் வகையில் ''அதைப் பற்றிக் கேள்வி கேட்பவரை விட நான் அறிந்தவரல்ல'' என்று தமக்கு மறுமை நாள் எப்போது சம்பவிக்கும் என்பது தெரியாது என்று பதிலளிக்கிறார்கள்!

இறுதி நாள் எப்போது நிகழும் என்பது பற்றிய அறிவு இறைவனிடம் மட்டுமே உள்ளது என்றாலும் அந்த நாள் வருவதற்கு முன் நிகழவிருக்கும் சில சம்பவங்களை, அடையாளமாக, இறைவன் தனது தூதருக்கு அறிவித்திருக்கிறான். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் மனித சமுதாயத்திற்கு அதை அடையாளங்காட்டி முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்...

இறுதி நாள் வருவதற்கு, முன் அடையாளமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல அறிவிப்புகள் செய்துள்ளார்கள். அதில் மிக முக்கியமானதாக 10 அடையாளங்களை அறிவித்திருக்கிறார்கள்.

1. புகை மூட்டம்
2. தஜ்ஜால்
3. (அதிசயமானப்) பிராணி
4. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது.
5. ஈஸா (அலை) இறங்கி வருவது.
6. யாஃஜுஜ் மஃஜுஜ்
7,8,9. அரபு தீபகற்பத்தில் கிழக்கில் ஒன்று, மேற்கே ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது.
10. ஏமனிலிருந்து கிளம்பும் தீப்பிழம்பு மக்களை விரட்டி ஒன்று சேர்ப்பது.


''இந்த பத்து நிகழ்ச்சிகளையும் நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு நிமிட நேரத்தில் உலகெங்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற்கண்ட முன்னறிவிப்பு அடையாளங்களில் ஏதாவது ஒன்று எங்கு நடந்தாலும், நடந்து முடிந்தவுடன் அந்த செய்தி உடனடியாக உலகத்திற்கே செய்திகள் மூலம் தெரிந்துவிடும்.

மேலும், தஜ்ஜாலின் வருகை, நபி ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவது, இவையெல்லாம் நிகழும் நேரத்தில் அந்த அதிசயங்கள் உலகெங்கும் அறிவிக்கப்படும். அதிலும் முக்கியமாக சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதை செய்திகள் இல்லாமலே ஒவ்வொருவரும் நேரில் காண முடியும். அதிசயப் பிராணி பற்றி திருக்குர்ஆன்...

''அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.'' (திருக்குர்ஆன், 027:082)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிரினம், இறுதி நாளுக்கு முன்பு, இறுதி நாளின் அடையாளமாகத் தோன்றும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த அதிசயப் பிராணி தோன்றி மனிதர்களிடம் பேசினால் அதுவும் மிக அதிசயமாக உலகிற்கு அறிவிக்கப்படும்.

இங்கு நாம் அறிந்து கொள்வது:

இறுதி நாள் எப்போது? என்ற ஞானம் அல்லாஹ்வைத் தவிர, இறைத்தூதர்கள் உட்பட வேறு யாருக்கும் தெரியாது.

இறுதி நாள் ஏற்படும் முன் சில நிகழ்வுகள் சம்பவிக்கும். அந்த சம்பவங்கள் நிகழாமல் இறுதி நாள் ஏற்படாது!

''அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ அல்லது, அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று அந்த நாள் வராது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா''? (திருக்குர்ஆன், 012:107)

''வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது, அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.'' (திருக்குர்ஆன், 016:077)

இவை அனைத்தும் இறைவனால் வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது. இறுதி நாள் பற்றிய, அந்த சம்பவம் எப்போது நிகழும்? என்ற ஞானம் தமக்கு இல்லை என்றே சத்திய நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுப் பணியைக் களங்கப்படுத்திட முயற்சிக்கும் நோக்கத்தில், ''இறுதி நாள் பற்றிய இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டது'' என்று சில நபிமொழிகள் வைக்கப்பட்டிருக்கிறது...

//muslim/Book 041, Number 7050:அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து "இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்."

Book 041, Number 7051:
அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், "இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்"//

இது ஒரு சாதரண விஷயும். சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் மேற்கண்ட நபிமொழியின் முன்னறிவிப்பு பொய்ப்பித்து விட்டதாகத் தோன்றுகிறது. மேற்கண்ட நபிமொழிகளை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விளங்குவதற்காக கீழ்காணும் நபிமொழி...

''மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது.

இரண்டு பேர் (விற்பனைக்காத்) துணிகளை விரித்து(ப் பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள், சுருட்டிக்கூட வைத்திருக்க மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும்.

மேலும், ஒரு மனிதர் மடிகனத்த தமது ஒட்டகத்தி(ல் பால் கறந்து அப்போது தா)ன் பாலுடன் (வீடு) திரும்பியிருப்பார், இன்னும் அதைப் பருகி கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.

ஒருவர் தம் நீர் தொட்டியை (அப்போதுதான்) கல்வைத்துப் பூசியிருப்பார், இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.

உங்களில் ஒருவர் தம் உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டு சென்றிருப்பார், அதை உண்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி, 6506

உணவை வாயருகில் கொண்டு சென்றவர், அந்த ஒரு கவள உணவை உண்டிருக்க மாட்டார் அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் என்றால் அப்போ அன்றிலிருந்து இன்றுவரை யாருமே உணவு உண்ணாமல் இருந்தார்களா? அல்லது உங்களில் ஒருவர் உணவை வாயருகில் கொண்டு சென்றால் மறுமை சம்பவித்து விடும் என்று அர்த்தமா? இல்லை! பின் வேறென்ன பொருள் கொள்வது?...

அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது, அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.'' (திருக்குர்ஆன், 016:077)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறி, தம் இரண்டு விரல்களையும் (-சுட்டுவிரல், நடுவிரல் இரண்டையும்) நீட்டியவாறு சைகை செய்தார்கள். புகாரி, 6503
இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்பு, எந்த நபிமார்களுக்குப் பின்னும் மறுமை நாள் ஏற்படாது. இறுதித்தூதர் வருகைக்குப் பிறகுதான் மறுமை சம்பவிக்கும். அதையே ''நானும் மறுமையும் மிக நெருக்கத்தில் இருக்கிறோம்'' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள்.

சிறுவருக்கு முதுமை ஏற்படுமுன்..

''கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'மறுமை நாள் எப்போது?' என்று கேட்பார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி ''இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்களின் மீது மறுமை சம்பவித்து விடும்'' என்று கூறுவார்கள். ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி, 6511 (இதே ஹதீஸ் முஸ்லிம் நூலிலும் இடம் பெற்றுள்ளது)

''மறுமை நாள் எப்போது?'' என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், அங்கே இருந்தவர்களிலேயே வயதில் சிறியவரைக் காட்டி ''இவர் முதுடையடையும் முன்பே உங்கள் மீது மறுமை சம்பவித்துவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது அந்தச் சிறுவர் உயிரோடு இருந்து, வளர்ந்து வாலிபமாகி, முதுமை வயதையடையும்போது, அங்கேயிருந்த அச்சிறுவரை விட வயது கூடியவர்கள் - முதியவர்கள் எவரும் உயிரோடு இருக்க மாட்டார்கள். அவர்கள் மீது மறுமை - இறுதிநாள் - Last Hour சம்பவித்து விடும்.

மனிதன் இறந்தவுடன், இறுதி நாள் என்ற மறுமை வாழ்வு துவங்கி விடுவதால் ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பும் மறுமை நாள்தான். மொத்தமாக உலகம், உலகத்திலுள்ளவைகளும் அழிந்து விடும் நேரத்தையும் மறுமைநாள் - இறுதிநாள் - Last Hour என்று சொன்னாலும் அந்த உலகம் அழியும் நாள் எப்போது என்று ''எனக்குத் தெரியாது'' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது பற்றிய அறிவு அல்லாஹ்வைத் தவிர எவரிடத்திலும் இல்லை!

''அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள். நீர் கூறும், 'அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும். திடுகூறாக அது உங்களிடம் வரும் அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள், அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக.'' (திருக்குர்ஆன், 007:187)

''நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான். இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளைய தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை. தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன் நுட்பம் மிக்கவன்.''(திருக்குர்ஆன், 031:034)

அன்புடன்,
அபூ முஹை

3 comments:

அபூ முஹை said...

பிளாக்கரின் தொந்தரவினாலும், கணினியின் பாப்பப் குறுக்கீட்டாலும் மீண்டும், மீண்டும் பதிவு செய்ய வேண்டியதாகி விட்டது. பொறுத்துக் கொள்ளவும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

இப்னு பஷீர் said...

தெளிவான விளக்கங்களுக்கு நன்றி அபூமுஹை அவர்களே!

சவூதி தமிழன் said...

உங்களின் முந்தைய (பிளாக்கர் விழுங்கிய) பதிவில் நான் இட்ட பின்னூட்டம். மீண்டும் அளிக்கிறேன்.

அன்பின் சகோதரர் அபூமுஹை,

இறுதித் தீர்ப்பு நாள் எப்போது சம்பவிக்கும் என்ற கேள்விகள் தம்மை நோக்கிக் கேட்கப் படும் போதெல்லாம் பெருமானார் (ஸல்) அவர்கள் அது குறித்த ஞானம் தனக்கு வழங்கப்படவில்லை என்றே கூறி வந்தார்கள்.

அதேவேளை ஒருசில பாலைநிலத்திலிருந்து வந்த பதூ எனப்படும் காட்டு அரபி ஒருவர் பெருமானார் (ஸல்) அவர்களின் பதிலில் திருப்தி அடையாமல் இது குறித்து கேட்கும் போதெல்லாம் மறுமை எப்போது வரும் என்ற கேள்விக்கு மறுமைக்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கிறாய் என்று மறைமுகமாகத் தனக்கு அந்த ஞானம் இல்லை என்கிற தொனியில் பதில் அளித்திருப்பதாக புகாரி போன்ற கிரந்தங்களில் ஹதீஸ் காணக்கிடைக்கிறது.

அதே போக்கில் தான் குறிப்பிட்ட இந்த ஹதீஸிலும் நாம் பொருள் கொள்ளவேண்டும்.

இதனை அழகிய உதாரணங்களுடன் விளக்கியமைக்கு நன்றி!

முகைதீன், ஜமால் என்றெல்லாம் போலிப் பெயர்களில் பின்னூட்டம் இட்டு மகிழ்ந்து கொள்பவர்கள் இஸ்லாத்தின் வாடையைக் கூட நுகராதவர்கள்! இவர்களின் போலியான கருத்தைப் படித்தால் சிரிப்புத் தான் வருகிறது. அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் இஸ்லாத்தைப் பற்றி நன்கு படித்து விட்டுப் போலிப் பின்னூட்டம் எழுத முயற்சி செய்யட்டும்.

நன்றி!!