Monday, June 12, 2006

தமிழக முதல்வரின் சிந்தனைக்கு.

தமிழக முதல்வர் கலைஞரின் சிந்தனைக்கு.


ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுள்ள டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது ஆட்சி நல்லாட்சியாகச் சிறந்து விளங்க இணை துணை இல்லாத ஏகன் இறைவனிடம் பிராரத்திக்கிறோம். ஆட்சி நல்லாட்சியாக அமைவதாக இருந்தால் பதவியேற்றுள்ள முதல்வர் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததாக வேண்டும். அப்படிப்பட்ட நடவடிக்கைகளால் உடனடியாக பலன் கிடைக்காவிட்டாலும், எதிர்காலத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து, சிறந்து விளங்க அது வழிவகுக்கும், தமிழகச் சரித்திரத்தில் கலைஞரின் புகழ் மங்காமல் ஒளிரும்.

இன்று மக்களின் மனோ நிலை எப்படி இருக்கிறதென்றால், எப்படிப்பட்ட தவறான அராஜக, அட்டூழிய வழிகளில் துணிந்து இறங்கி பணத்தைத் தேடிக்கொண்டால் போதும் மக்களிடையே மதிப்பையும், கண்ணியத்தையும், அரசியல் செல்வாக்கையும், பதவிகளையும் அடைந்து கொள்ள முடியும் என்ற எண்ணமே மிகைத்துக் காணப்படுகிறது. அரசையும், அதிகாரிகளையும் ஏமாற்ற முடிந்தால் ஏமாற்றுவது, அல்லது லஞ்சம் கொடுத்து சமாளிப்பது இப்படிப்பட்ட அநியாயக்காரர்களின் கொடிய ஆட்சியே, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் சட்டபூர்வ ஆட்சியை விட கொடி கட்டிப்பறக்கிறது. இந்த நிலை மாற்றப்படாத வரை நல்லாட்சி மலர்வது குதிரைக் கொம்பே.

இதற்கு அடிப்படையாக நமது நாட்டின் கல்வி முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். பிஞ்சு உள்ளங்களிலேயே பணத்தாசை வேர்விடும் வகையிலேயே நமது கல்வி அமைப்பு இருக்கிறது. குழுந்தையின் ஐந்து வயது பூர்த்தியாகி 6ம் வயதில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு முன்னர் 3ம் வயதில் பிரிகேஜி, 4ம் வயதில் எல்.கே.ஜி 5ம் வயதில் யு.கே.ஜி என மூன்று நிலைகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இந்த ஆரம்ப பிரிகேஜியில் குழந்தையை 3ம் வயதில் கொண்டு சேர்ப்பதற்கே ஆரம்ப நிலையிலேயே குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் செலவு ஆகின்றது. இதற்கு அதிகமாக வாங்கக்கூடிய ஆரம்பப்பள்ளிகளும் உண்டு. ஆக ஒரு குழந்தை பள்ளியினுள் நுழையும் போதே, அதன் அறியாப்பருவத்திலேயே பணத்தாசை வேர்விட்டு முளைக்க ஆரம்பித்து விடுகிறது. இதில் ஆரம்பித்து இளங்கலையோ அல்லது முதுகலையோ முடிக்கும் வரை பல லட்சக்கணக்கில் செலவிடும் நிலையே காணப்படுகிறது.

இப்படி லட்சக்கணக்கில் செலவழித்து பிள்ளைகளைப் படிக்க வைக்கும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? பெரும் பணம் படைத்த ஒரு சிலருக்கே இது சாத்தியமாகும். சராசரி மனிதர்கள், ஏழைகள் இப்படிப்பட்ட கல்வியை தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள். பெரும் செல்வந்தர்களின் குழந்தைகள் இப்படிப்பட்ட உயர் கல்வியை லட்சக்கணக்கில் செலவிட்டு அடைந்து கொண்டாலும், அவர்களிடையே இயற்கையிலேயே ஆரம்பத்திலிருந்தே ஊட்டப்படுள்ள பணத்தாசை, அவர்களை லட்சக்கணக்கில் ஊதியம் தரும் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் நோக்கி பறக்கச் செய்கிறது. அமெரிக்காவின் பொருளாதார வளத்தை மேலும் மேலும் மேம்படச் செய்யும் பெரும் முக்கியப் பணிகளில் நமது இந்திய நாட்டு பட்டதாரிகளே முன்னிலை வகிக்கிறார்கள் என்றால் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் இன்று கல்வி நிலையங்கள் ஒரு பெருத்த வருமானத்தைத் தரும் கொழுத்த வியாபாரமாகப் போய் விட்டது. பொருளை வாங்கி விற்கும், அல்லது உற்பத்தி செய்து விற்கும் வியாபாரிகள் கூட அந்த அளவு கொழுத்த லாபத்தைப் பெற முடியாது. 50 பைசா அடக்கமாகும் தகவல் தொகுப்பு அறிக்கை (Prospectus) 50 ரூபாக்கும், 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை அடக்கமாகும் தகவல் தொகுப்பு அறிக்கைக்கு ரூபாய் 250/- வரை மாணவர்களிடமிருந்து பிடுங்கும் கொடுமையும் அறங்கேறி வருகிறது. பல்கலைக்கழகங்களும் இதற்கு விதிவிலக்காக இல்லை. இப்படி சின்னஞ்சிறிய விஷயங்களிலிருந்து பெரும் விஷயங்கள் வரை கல்வியின் பெயரால் கொள்ளை அடிக்கப்படுகிறது.

கற்பனைக் கட்டுக்கதைகள், ஜோக்குகள், கிளர்ச்சியூட்டும் ஆபாசச் செய்திகள், ஆபாசப்படங்கள், இன்னும் இவைபோல் மனித உணர்வுகளை மழுங்கச் செய்து அவர்களை ஐயறிவு மிருகங்களைப் போல் செயல்பட வைக்கும் மோசமான செய்திகளைத் தாங்கிவரும் தினசரி, வார, மாத இதழ்கள் மற்றும் குறு, நெடு நாவல்கள், நூல்கள் இவை அனைத்திற்கும் ''Reading Books'' என்ற அடிப்படையில் விற்பனை வரி விதிக்காத தமிழக அரசு, மாணவ, மாணவியரின் படிப்புக்கும் அவர்களின் திறமையை வெளிக்காட்டும் வகையில் அவர்களுக்கு உதவும் அவர்களின் கையேடுகள் (Diary) பரீட்சையில் அவர்கள் எழுத பயன்படுத்தும் விடைத்தாள்கள் (Answer Sheets) போன்ற அனைத்து எழுது உபகரணங்களுக்கும் எழுது பொருள்கள் என்ற அடைப்படையில் விற்பனை வரி விதித்து, ஏழை மாணவ, மாணவியரின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே அரசு வரிவிதிப்பு முறைகள் இருக்கின்றன. இந்தத் தவறான விற்பனை வரி விதிப்பு முறையை மாற்றி அமைக்க புதிதாக பதவியேற்றுள்ள தமிழக (கலைஞர்) அரசு முன் வர வேண்டும். என பணிவன்புடன் வேண்டுகிறோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் படித்துப் பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களிடம் நேர்மை, ஓழுக்கம், பண்பாடு, மனித நேயம், சேவை மனப்பான்மை இவற்றை எதிர்பார்க்க முடியுமா? பிஞ்சு உள்ளத்திலிருந்தே பணத்தாசை ஊட்டப்படுவதால் அது வளர்ந்து பெரும் மரமாகி மனிதர்கள் பணப் பேய்களாக அலைகிறார்கள். அந்தப் பணத்தை ஈட்ட எப்படிப்பட்ட கொடுஞ் செயல்களையும், ஆபாசங்களையும் அரங்கேற்றத் துணிகிறார்கள். அதனால் நாடே ஒழுக்கச் சீரழிவுகளிலும், லஞ்சம், கொள்ளை, கொலை, திருட்டு, விபச்சாரம், மது. மாது. சூது இத்தியாதி இத்தியாதி செயல்களால் அலங்கோலப்பட்டு அல்லோலகல்லோலப்பட்டு வருகிறது.

அன்றாட தினசரிகளைப் புரட்டினால் இப்படிப்பட்ட அட்டூழியங்கள் இடம் பெறாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்குப் பக்கம் பக்கமாகக் காணப்படுகிறது. மக்களின் மனோ நிலைக்கு ஏற்றவாறு இன்றைய திரைப்படங்களும் வெளியிடப்பட்டு, மக்கள் மேலும் மேலும் சீரழியவே வழி வகுக்கின்றன. ஆபாசங்கள், வன்முறைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் இளைஞர், இளைஞிகளை மேலும் ஒழுக்கங்கெட்ட காட்டுமிராண்டி, தீவிரவாத மனித நேயமற்ற செயல்களில் துணிந்து ஈடுபட வைக்குமா? அல்லது அவர்களை மனிதப்புனிதர்களாக உருவாக்குமா? என்பதைப் புதிய அரசு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டுள்ளது.

மக்களின் உயிர் காக்கும் மருத்துவத்துறையும், உயிர் போக்கும் துறையாக மாறி வருகிறது. மக்களைப் பயமுறுத்தி பகற்கொள்ளை அடிக்கும் ஒரு கொலைகாரத் துறையாக மாறிவருகிறது. மனித உயிர்களை அலட்சியப்படுத்தி கிட்னி திருடும் கொடியவர்களாக சில மருத்துவர்கள் மாறி வருகிறார்கள். நோயாளிகளின் உயிர் நலனைவிட தங்களின் சொகுசு வாழ்க்கை நலனைப் பெரிதாக நினைக்கும் மருத்துவர்களே அதிகரித்து வருகிறார்கள்.

மருத்துவத் துறையின் இந்த பரிதாப - ஆபத்தான நிலை மாற்றப்பட வேண்டும். 30லட்சம், 40லட்சம் என பணம் கொடுத்து மருத்துவப் படிப்பில் சேரும் நிர்ப்பந்தம் இருப்பதால் மருத்துவர்கள் இப்படி கல்மனம் கொண்டவர்களாக மாறும் கட்டாயம் ஏற்படுகிறது. அரசு உரிய கவனம் செலுத்தி கண்டிப்புடன் அதிரடி மாற்றங்கள் செய்து, மருத்துவர்களும் சேவை மனப்பான்மையுடன், கருணை மனப்பான்மையுடன் பணியாற்றும் உயர் நிலையை அடைய வேண்டும்.

இந்த நிலையில் நாடு எப்படி முன்னேறும்? தமிழகம் எப்படி முதல் மாநிலமாகத் திகழ முடியும்? சிந்திக்க வேண்டுகிறோம். உண்மையில் நம் தமிழகம் முன்னேறி முதல் மாநிலமாகத் திகழ வேண்டும் என்ற அசைக்க முடியாத ஆவல் அரசுக்கிருந்தால், இன்றைய தமிழகத்தில் கல்வி வியாபாரமாக்கப் பட்டிருப்பது ஒழிக்கப்பட்டே தீரவேண்டும். கல்வியை சேவை மனப்பான்மையோடு போதிக்க முன் வரவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

இலவசங்கள், மானியங்களுக்குப் பதிலாக ஆரம்ப முதல் பட்டப்டிப்பு வரை அனைத்து வகையிலும் இலவசக் கல்வியை ஏற்படுத்தி, கட்டாயக் கல்லியை அமுல் படுத்தினால் எதிர்காலத்தில் தமிழகம் கல்வியில் 100 சதவீதம் வெற்றியடைவதோடு, தமிழகம் இந்தியாவுக்கே ஓர் அழகிய முன்மாதிரியாகத் திகழும். அப்படிப்படித்து பட்டம் பெற்று கல்வியாளர்களாக ஆகிறவர்கள் தொண்டு செய்யும் சேவை மனப்பான்மையுடன் திகழ்வார்கள் என்பதில் ஐயம் இருக்க முடியுமா?

இன்று அரசு, கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பெயரவில் பள்ளிகளை நடத்தி வருகிறதே அல்லாமல், அங்கெல்லாம் தரமான கல்விகள் போதிக்கப்படவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். ஆசிரியர்கள் பற்றாக்குறை, கட்டிடங்கள் பற்றாக்குறை, உபகரணங்கள் பற்றாக்குறை, தரமில்லாத கல்வி என்ற நிலையே அரசு பள்ளிக்கூடங்களில் காணப்படுகிறது.

அரசு பள்ளிக்கூடங்களில் தரமான கல்வி முறையாக அளிக்கப்பட்டால், மக்கள் பெரும் பணம் செலவுடன் கூடிய தனியார் பள்ளிக்கூடங்களை ஏன் நாடிச் செல்ல வேண்டும்? எனவே அரசுப் பள்ளிகளின் குறைபாடுகளை அகற்றி அங்கு தரமான கல்வி அளிக்க முனைப்புடன் ஏற்பாடு செய்வதுடன், தனியார் பள்ளிகளில் கல்வியின் பெயரால் கொள்ளை அடிப்பதைத் தடுக்கவும் ஆவன செய்வது அரசின் நீங்காக் கடமையாகும்.

அரசு பள்ளிகளில் தரமான கல்வி முறையாக அளிக்கப்பட்டாலே, தனியார் பள்ளிகளில் போய்ச் சேரும் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளை நோக்கி வந்து விடுவார்கள். தனியார் பள்ளிகளை நடத்துவோரும் அதை வியாபாரமாகக் கொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் நடத்தும் சூழலும் ஏற்பட்டு விடும். இது அரசுப் பள்ளிகளை தரமிக்கதாக ஆக்குவது கொண்டே சாத்தியப்படும், கலைஞர் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டுகிறேம்.

''அரசு எவ்வழி, மக்கள் அவ்வழி'' என்று சொல்வார்கள். எனவே அரசு தனக்கு தேவையான நிதி ஆதாரத்தை ஆகுமான நியாயமான வழிகளில் ஈட்டவே முற்பட வேண்டும். கோடிக் கணக்கில் நிதி சேர்கிறது என்பதால் தவறான வழிகளில் நிதி திரட்ட அரசு முற்படும் போது, அது போன்ற தவறான வழிகளில் மக்கள் தங்களின் நிதி ஆதாரத்தைத் தேடிக்கொள்ள முற்படுவதைக் குறை சொல்லவோ, தடுக்கவோ அரசுக்குத் தார்மீக உரிமை இல்லாமல் போய் விடுகிறது. தவறான வழிகளில் கோடி கோடியாகப் பொருள் ஈட்டும் வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதால்தான் அரசும், மக்களும் அத்தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்க முற்படுகிறார்கள்.
ஒழுக்கப் பண்பாடுகள் மிக்க அரசும், மக்களும் மட்டுமே அப்படிப்பட்ட ஈனத் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்ப்பார்கள்.

மக்களுக்கு ஒரு முன் மாதிரியான லஞ்ச லாவண்யமற்ற, ஒழுக்க நிறைந்த, பேராசை இல்லாத வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்துவது அரசின் கடமையாகும். கோடிக்கணக்கில் வரும்படி வருகிறது என்பதற்காக நாட்டுக்கும் வீட்டுக்கும், உடலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் மதுபானக் கடைகளை அரசே நடத்துவது போன்ற ஒரு கையாலாகாத, இழிவான, கேவலமான வேறு ஒரு செயல் இருக்க முடியாது. அரசு மட்டுமல்ல மக்களும் இத் தொழிலில் இருந்து தவிர்க்க வேண்டும்.

சுதந்திரம் கிடைத்ததிலிருந்து கலைஞர் முதன் முதலாக தமிழக முதல் மந்திரி ஆகும் வரை ஒரு தலைமுறைக்கு குடி என்பது என்னவென்றே தெரியாத நிலையை மாற்றி, மதுவிலக்கை அகற்றி மதுபானத்தை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை(?) கலைஞரையே சாரும். இது கலைஞரின் பெருமை மிக்க வாழ்க்கைச் சரித்திரத்தில் ஒரு அழிக்க முடியாத கரும்புள்ளியாகும். அதற்கு பிராயச்சித்தமாக மதுபழக்கத்தை தமிழகத்திலிருந்தே ஒழித்துக்கட்டி, மதுவிலக்கை மீண்டும் அமுல்படுத்தி, தமிழக மக்கள், அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் அதிதிலும் குறிப்பாக அவர்களின் குடும்பங்களின் ஏக்கப் பெருமூச்சை அகற்றி, அவர்களின் முகங்களில் மகிழ்ச்சிப் புன்னகை இழைந்தோட வழிவகை செய்வது கலைஞரின் நீங்காக் கடமையாகும்.

இதுபோல் முன்னைய அரசு தடை விதித்த லாட்டரி தொழிலும் சூது நிறைந்த தொழிலேயாகும். ஏழை மக்கள் நெற்றி வேர்வை சிந்தி கடமையாக உழைத்துப் பெறும் பணத்தை அவர்களிடமிருந்து சுரண்டி அவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் ஓட்டாண்டி ஆக்கி வறுமையிலும், பசி பட்டினியிலும் உழலச் செய்வதே சூதான லாட்டரி தொழிலாகும். இத்தொழில் நாட்டு மக்களை உழைக்காத சோம்போறிகளாகவும், அப்படியே உழைத்தாலும் அதன் மூலம் பெறும் பணத்தையும் இந்த லாட்டரி சூதில் இழந்து விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பும் அவலக்காட்சியே நிறைந்து காணப்படுகிறது. மது, மாது, சூது இந்த மூன்றும் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பெருங்கேட்டையே விளைவிக்கும் என்பதை அரசு உணர்ந்து அவற்றை முற்றிலுமாக ஒழித்துக்காட்ட முன்வர வேண்டும்.

சூது என்ற இந்த லாட்டரித் தொழில் மூலமாகவும், மதுபான தொழில் மூலமாகவும் சில லட்சக்கணக்கான மக்களுக்கு தொழில் ஆதாரம் கிடைக்கிறது, அவர்களின் குடும்பங்கள் வாழ வழி ஏற்படுகிறது, ஊனமுற்றோருக்கு ஊன்று கோலாக அமைகிறது என்றெல்லாம் கூறி, இந்த மதுத் தொழிலையும், சூதுத் தொழிலையும் சிலர் நியாயப்படுத்தலாம். இதில் கிடைக்கும் பலனை விட கேடுகளே அதிகம்.

தமிழகத்திலுள்ள ஐந்து லட்சம் மக்களுக்கு அதன் மூலம் வாழ்வாதாரம் கிடைக்கும் நிலையில், ஐந்து கோடி தமிழக மக்களுக்கு பெருங்கேட்டையே விளைவிக்கிறது. எனவே லாட்டரி தொழிலையும், மதுபானக் கடைகளையும் வெறும் ஐந்து லட்சம் மக்களின் நலன் கருதி, அரசே நடத்துவதை விட, தமிழக ஐந்து கோடி மக்களுக்குப் பெரும் துரோகத்தையும், தீங்கையும் செய்யும் வேறு ஒரு தீய செயல் இருக்க முடியாது. எனவே கலைஞர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி ஐந்து கோடி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்.

(படித்த தலையங்கத்தின் ஒரு பகுதி)

6 comments:

G.Ragavan said...

வாங்க அபூமுஹை. உங்க கனவுகள் நம்ம எல்லாருக்கும் உண்டு. ஆனா இதுல எவ்வளவு நிறைவேறுங்கறத காலம்தான் சொல்லனும்.

நல்லடியார் said...

அபூமுஹை,

கண்ணகி சிலை, சிவாஜிக்கு மணிமண்டபம் Etc புதிய அரசின் ஆர்வங்களைப் பார்க்கும் போது கலைஞர் இன்னும் பழைய அரசியலே நடத்திக் கொண்டிருக்க விரும்புவது போல் தெரிகிறது.

எப்படியோ நல்லது நடந்தால் சரி.

Dubukku said...

அருமையான சிந்தனைகள். இதை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.
http://www.desipundit.com/2006/06/12/thoughtsforcm/

பரஞ்சோதி said...

அபூ முஹை அண்ணா,

நல்ல பதிவு. எல்லோருடைய கனவும் இது தானே. பத்திரிக்கையில் வந்த பதிவு என்பதால் கலைஞரும் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு.

நல்லடியார் சொன்னது போல் தான் கலைஞரின் தொடக்க ஆட்சி இருக்கிறது, கட்டாயம் அதிலிருந்து விடுப்பட்டு ஆக்கப்பூர்வமான விசயங்களில் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன்.

- பரஞ்சோதி

அபூ முஹை said...

//வாங்க அபூமுஹை. உங்க கனவுகள் நம்ம எல்லாருக்கும் உண்டு. ஆனா இதுல எவ்வளவு நிறைவேறுங்கறத காலம்தான் சொல்லனும்.- G.Ragavan//

வாங்க ராகவன் வருகைக்கு நன்றி! இதெல்லாம் நிறைவேறும் என்பது சாமானியம் இல்லை, ஏதாவது அதிசயம் நிகழவேண்டும்.

//அபூமுஹை
கண்ணகி சிலை சிவாஜிக்கு மணிமண்டபம் Etc புதிய அரசின் ஆர்வங்களைப் பார்க்கும் போது கலைஞர் இன்னும் பழைய அரசியலே நடத்திக் கொண்டிருக்க விரும்புவது போல் தெரிகிறது.

எப்படியோ நல்லது நடந்தால் சரி.- நல்லடியார்//

வாங்க நல்லடியார், நல்லது நடக்குதோ, இல்லையோ அது நடக்கும்போது தீர்மானித்துக் கொள்ளலாம். நாம நல்லதையே நினைப்போமே!

//அருமையான சிந்தனைகள். இதை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.- Dubukku//

வாங்க Dubukku, உங்கள் வருகைக்கும், இணைப்பிற்கும் நன்றிகள்.

//நல்ல சிந்தனை.
//'தமிழக முதல்வரின் சிந்தனைக்கு.'//

ஆகா இத சொல்ல நி யாரு. ******அடிவருடி அப்படீன்னு இத்தன நேரம் ஒருத்தர் சொல்லிருக்கனமே!!!- koovam//

வாங்க koovam, இதுவரை யாரும் சொல்லல, அப்படியே சொன்னாலும் அதை கேட்க ''நீ யாரு''ன்னு தொடர வேண்டியதுதான். உங்கள் வருகைக்கு நன்றி!

//அபூ முஹை அண்ணா
நல்ல பதிவு. எல்லோருடைய கனவும் இது தானே. பத்திரிக்கையில் வந்த பதிவு என்பதால் கலைஞரும் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு.

நல்லடியார் சொன்னது போல் தான் கலைஞரின் தொடக்க ஆட்சி இருக்கிறது கட்டாயம் அதிலிருந்து விடுப்பட்டு ஆக்கப்பூர்வமான விசயங்களில் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன்.
- பரஞ்சோதி//

வாங்க பரஞ்சோதி, ஒவ்வொரு தடவையும் ஆட்சி கைமாறும்போது இவர்களாவது ஆக்கப் பூர்வமாக ஏதாவது செய்ய மாட்டார்களா? என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. அப்படி நம்பி அரசியல்வாதிகளிடம் நாம் ஏமாறுகிறோம் என்பது தனி விஷயம்.

மேற்கண்ட விபரங்கள் கடிதம் மூலமாகவும் கலைஞருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அன்புடன்,
அபூ முஹை

Yuvraj Sampath said...

ஐயா

அடுத்த தேர்தலை ப‌ற்றி சிந்த்திப்ப‌வன் அர‌சிய‌ல்வாதி
அடுத்த த‌லைமுறை ப‌ற்றி சிந்த்திப்ப‌வன் தேசீய‌வாதி.

கலைஞர் ?????? யார் என்பதை அவரே சொல்ல‌ட்டும்..