Thursday, June 09, 2005

பனூ முஸ்தலிக் போர்!

பனூ முஸ்தலிக் போரில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்டது நியாயமில்லை என்று இஸ்லாத்தை விமர்சிக்க முன் வருபவர்கள், - நபியின் மக்கா வாழ்க்கையில் நபித்துவம் பெற்ற ஆரம்பக் காலத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தபோது, இணைவைப்பவர்கள், நபியவர்களுக்கு பல இன்னல்களை விளைவித்து நபியைப்பின் பற்றியவர்களை கொடுமைகளுக்கு உட்படுத்தினார்கள், சந்தர்ப்பம் கிடைக்கும்போது கையில் அகப்பட்ட முஸ்லிம்களை வன்கொலையும் செய்தார்கள். இப்படி பதிமூன்று ஆண்டுகாலம் பட்ட தொல்லைகளும் - உயிரிழப்புகளும் உண்டு. இறுதியாக நபி (ஸல்) அவர்களின் உயிருக்கும், நபி (ஸல்) அவர்களைப்பின் பற்றியவர்களின் உயிருக்கும் ஆபத்து என்ற நிலையில்தான் நபி(ஸல்) அவர்களும், அவர்களைப்பின் பற்றுபவர்களும் தமது உடமைகளை இழந்து மக்காவைத் துறந்து அகதிகள்போல் வெளியேறுகிறார்கள். - இந்த ஆரம்ப பதிமூன்று ஆண்டுகால இஸ்லாத்தை கண்டு கொள்வதே இல்லை, வசதியாக மறைத்து விடுகிறார்கள்.

திருமறைக்குர்ஆனில் பல வசனங்கள் இவ்விபரங்களை விளக்குகிறது, இவைகள் இவர்களின் பார்வைக்குத் தெரிவதில்லை. ஹதீஸ் ஆதாரங்களுக்கு இணையதளங்களின் சுட்டியை காட்டும் வேளையில் - அதே ஹதீஸ் நூல்களிலேயே, இஸ்லாத்தின் முந்தைய பதிமூன்று ஆண்டுகால வரலாறும் பதியப்பட்டிருக்கிறது இதுவும் இவர்களின் கண்ணிற்கு(?) வசதியாக மறைந்து விடுகிறது - சாமர்த்தியமாக மறைத்து விடுகிறார்கள். இவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கும்போது மட்டும் தமது விரிவான சிந்தனையையும் சுருக்கிக் கொள்கிறார்கள். என்பதே நிதர்சனமான உண்மை. இனி வியத்துக்கு வருவோம்.

பனூ முஸ்தலிக் போர்.

இப்னு அவ்ன் அறிவிக்கிறார்கள், நான் நாஃபிவு அவர்களிடம் "போர் தொடுப்பதற்கு முன்பு இஸ்லாத்திற்கு அழைப்பு கொடுக்க வேண்டுமா?" என்று எழுதி கேட்டேன்.

அதற்கவர், "இது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அவசியமாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பனூ முஸ்தலிக் கூட்டத்தினரை அவர்கள் தங்களின் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருக்கும்போது அவர்கள் அறியாமலேயே போர் தொடுத்தார்கள். அவர்களில் சண்டையிட்டவர்களை கொன்று மற்றவர்களை கைது செய்தார்கள். அப்பொழுதுதான் ஜுவைரியா பின்த் அல்-ஹாரித் அவர்களை கைப்பற்றினார்கள்" என்பதாக பதில் எழுதினார். அப்போரில் கலந்துக்கொண்ட அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது. ஸஹீஹ் முஸ்லிம், ஹதீஸ் எண் 4292


மேற்கண்ட ஹதீஸையொட்டி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

1. முஹம்மது நபி (ஸல்) அவர்கள், உத்தமரல்ல.

2. முஹம்மது நபி (ஸல்) அவர்கள், சரணடைந்த நிராயுதபாணிகளைக் கொன்றார்.

3. முஹம்மது நபி (ஸல்) அவர்கள், போர் அறிவிப்பைப் பிரகடனப்படுத்தாமல், கொள்ளைக் கூட்டத்துத் தலைவனைப் போல் தாக்கியிருக்கிறார்.


இந்தக் குற்றச்சாட்டில் எள்ளளவும், எள் முனையளவும் உண்மையோ, நேர்மையோ இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு முன்.. தமிழ்நாடு மாநிலத்திற்குட்பட்ட ஏதாவது ஒரு நகரத்தில், அல்லது கிராமத்தில், அரசுக்கெதிராகக் கிளர்ச்சி செய்பவர்கள் ஒரு சிறு கும்பலாக ஓன்று சேர்ந்து, ரகசிய இடத்தில் வன்முறைக்குத் தேவையான ஆயுதங்களை சேகரிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது உளவுத்துறை மூலமாக அரசுக்குத் தெரியவந்தால், ரகசிய இடத்தில் தங்கியிருக்கும் வன்முறையாளர்களைப் பிடிப்பதற்காக அரசும் ரகசியமாகவே திட்டமிட்டு செயல்படும் - செயல்படவேண்டும். இங்கு வன்முறையாளர்களுக்கு, அவர்களைப்பிடிப்பதற்கானத் தகவலை முன்னறிவிப்பாகத் தெரியப்படுத்த வேண்டும் என்பது புத்திசாலித்தனம் இல்லை, மாறாக முட்டாள் தனம் என்பதில் சந்தேகமில்லை.

ஒருநாட்டிற்கும், இன்னொரு நாட்டிற்கும் தொடங்கவிருக்கும் போரையே பிரகடனப்படுத்த வேண்டும். ஒரு நாட்டிற்குள் நடக்கும் உள்நாட்டுக் குழப்பங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்கும். போர் அறிவிப்பு செய்து கொண்டு போர் தொடுப்பதற்கு பனூ முஸ்தலிக் போர் இரு நாட்டிற்கு நடந்த போரல்ல. மதீனாவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சிக்குக் கட்டுப்படுகிறோம் என்று அரசோடு ஒப்பந்தம் செய்து கொண்ட பனூ நளீர், பனூ குறைளா, பனூ முஸ்தலிக் ஆகிய கூட்டத்தினர் ஒப்பந்தத்தை மீறி பல முறை முஹம்மது (ஸல்) அவர்களைக் கொலை செய்யவும் முயற்சித்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக, மக்கா இணைவைப்பாளர்களுடன் கை கோர்த்துக் கொண்டு, மதீனாவின் செய்திகளை ரகசியமாக இணைவைப்பவர்களுக்கு அறிவித்து மதீனா மீது போர் தொடுக்கும் போர் சூழலை எதிர்பார்த்திருந்தார்கள்.

கூடவேயிருந்து குழி பறித்தல் என்பார்களே இத்துரோகச் செயலைத்தான் மதீனா அரசுக்கு பனூ முஸ்தலிக் கூட்டத்தினர் செய்து வந்தனர். அரசுக்கெதிராக போர் செய்வதற்குப் படையைத் திரட்டிக்கொண்டு முஸ்லிம்களை தாக்குவதற்காக ஒரு தண்ணீர் துறையில் இவர்கள் குழுமியிருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தகவல் கிடைத்து, அவர்களைத் தடுப்பதற்காகவே நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் மதீனாவிலிருந்து புறப்பட்டு தண்ணீர் துறைக்கு வந்து சேர்ந்தார்கள் இங்குதான் பனூ முஸ்தலிக் கூட்டத்தினரின் தேசத் துரோகச் செயல் முறியடிக்கப்பட்டது.

பனூ குஸாஆ என்ற அரபுக் குலத்தாரில் ஜுதைமா பின் சஅத் என்றொருவர் இருந்தார். இவரது புனைப் பெயரே 'முஸ்தலிக்' என்பது. இவருடைய வழித்தோன்றல்களே 'பனூ முஸ்தலிக்' கூட்டத்தார். இவர்கள் ஹாரிஸ் பின் அபீ ளிரார் என்பவரின் தலைமையில் (சுமார் 700 பேர்) முஸ்லிம்களைத் தாக்குவதற்காகப் படை திரண்டுள்ளனர் என்ற தகவல் நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது எனவே, அவர்களைத் தடுக்கும் நோக்கில் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு 'முரைய்சீவு' என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். 'முரைய்சீவு' என்பது மதீனாவுக்கருகே கரையோரத்தில் உள்ள தண்ணீர் துறைக்குப் பெயராகும். இவ்விடத்தில் போர் நடந்தது. இதனாலேயே இதற்கு 'முரைய்சீவு' போர் என்ற பெயர் உண்டு. இப்போரில் எதிரிகள் தோற்கடிக்கப் பட்டனர். அவர்களில் சிலர் உயிர் இழந்தனர். பலர் கைது செய்ய பட்டனர். இப்போர் பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களும் வந்து இருந்தனர். இப்போர் முடிந்து திரும்பி வரும் போதுதான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சுமத்தும் சம்பவம் நடந்தது. இந்த போர் எந்த ஆண்டில் நடந்தது என்பது பற்றி பல்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. ஹிஜ்ரி ஆறாமாண்டு ஷஅபான் மாதம் என்கிறது ஒரு தகவல். ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு ஷஅபான் மாதம் என்கிறது மற்றொரு தகவல். ஹிஜ்ரி 4ஆம் ஆண்டு என்றும் சொல்லப் படுகின்றது. (ஃபத்ஹுல் பாரி, உம்ததுல் காரி)

பனூ முஸ்தலிக் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். தோற்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்தக் கூட்டத்தில் கடுமையான எதிரியாக இருந்த முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவர் கொல்லப்பட்டார் அவரின் மனைவியும், அந்தக் கூட்டத்தின் தலைவர் ஹாரிஸ் என்பவரின் மகளுமான ஜுவைரியாவும் அவர்களில் ஒருவர். ஜுவைரிய அவர்கள் ஸாபித் பின் கைஸ்(ரலி) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டார். ஸாபித் பின் கைஸ் (ரலி) ஏழு ஊகியாவை தந்து விட்டு விடுதலைப் பெற்றுக் கொள்ளமாறு ஜுவைரியா அவர்களிடம் கூறினார். நான் இந்தக் கூட்டத்தின் தலைவரின் மகள், எனக்கு ஏழு ஊகியா தந்து நான் விடுதலையாக உதவுங்கள் என்று ஜுவைரியா நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். ஏழு ஊகியாவைத் தந்து ஜுவைரியாவை நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்தார்கள். பின் ஜுவைரியாவின் சம்மதத்துடன் அவரை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இதன் விளைவாக நபி (ஸல்) அவர்கள் சம்பந்தம் செய்து கொண்ட கூட்டத்தாரை அடிமைகளாக வைத்திருப்பது சரியில்லை என்று போரில் கைதிகளாகப் பிடித்து பங்கிடப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

1 comment:

பாபு said...

நீங்கள் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் துவேஷமும் வெறுப்பும் மனதில் ததும்பி வழியும் போது நடுநிலையாக ஆராய இவர்களால் முடியாது என்பதையே இணையத்தளங்களிலிருந்து இஸ்லாம் பற்றி காப்பி அடிப்பவர்கள் நிரூபிக்கிறார்கள்.

ஒரு மருத்துவ ஜர்னல் விஷயத்தில் இணையத்தில் படித்தது எத்தனை தவறாகப்போனது என்று மதுரைமல்லியின் 'மார்பு பார்க்கும் கலாச்சாரம்' பதிவில் ஒருவர் உணர்ந்து எழுதியிருக்கிறார்.
மருத்துவ விஷயத்திலேயெ அநியாயப்பொய்கள் உலவும் இணயத்தில்......
மத விஷயத்தில் - அதுவும் தன்னுடையதல்லாத - தான் எதிர்க்க விரும்பும் மத விஷயத்தில் எப்படிப்பட்ட கருத்துக்கள் உலவவும் உளவவும் செய்யும் என்பதை அனைவரும் ' ஆரோக்கியமாக' சிந்திக்கவேண்டும் என்பதே நடுநிலையில் நான் வைக்கும் கோரிக்கை. (சிந்திக்கத்தெரிந்தவர்களுக்கு மட்டும்).