Saturday, April 09, 2005

கற்காலம் ஓர் விளக்கம் -1

கற்காலம் கட்டுரை பற்றி, கற்காலம் சொல்லும் கருத்து(!?) என்ற பதிவில் சில முரண்பாடுகளை சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த பதிவில், அக்கட்டுரையில் ''திருக்குர்ஆனின் ஆதாரங்கள்'' என்று குர்ஆன் வசனங்களுக்குத் தவறானக் கருத்தையே விளக்கப்பட்டிருக்கிறது. 24:5 இறைவசனத்தில் ''திருந்தி மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்க வேண்டும்'' என்ற வாசகத்தை ''விபச்சாரம் செய்தவர்கள் திருந்தினால் மன்னிக்க வேண்டும்'' எனப் பொருத்தியிருப்பது தவறான விளக்கம் என்பது பற்றி பார்ப்போம்.

பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்திற்கும் எதிரான வதந்திகளை ''அப்படித்தான் இருக்கும்'' என்றும் ''எனக்கு அப்பவேத் தெரியும்'' என்றும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களை தொடர்புபடுத்தும் செய்திகளை ஆர்வத்துடன் கேட்கவும், அதை நம்பவும், பிறருக்கு பரப்புவதில் இன்னும் கூடுதலான அக்கறையும் எடுத்துக்கொள்வார்கள்.

பெண்கள் பற்றிய கிசுகிசு என்றால் செய்தி ஊடகங்கள், பரப்பாகச் செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் பாதிக்கப்படுவது பெண்களே என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மனிதர்களிடையே, வாய்களால் கூறித்திரியும் அவதூறுச் செய்திகளை சாதாரணமாக நாம் எண்ணினாலும், இறைவனிடத்தில் மிகப்பெரிய பாவமாகும் என்பதை திருக்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

24:15. இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள், இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.

பெண்களின் மீது அவதூறு கூறி, பெண்களின் கற்பொழுக்கத்திற்கு மாசு கற்பிக்கும் எவரும் தங்களின் வாதத்திற்கு வலு சேர்க்க நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும், நான்கு சாட்சிகள் இல்லாமல் பெண்களின் ஒழுக்கத்திற்கெதிராக குற்றம் சுமத்தினால், அது அவர்களைப் பொறுத்தவரை உண்மையாக இருந்தாலும் அவதூறு சுமத்திய குற்றத்திற்காக அவர்களுக்கு எண்பது சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள், பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

24:5. எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

இவ்விரு வசனங்களும் தொடர்ச்சியானக் கருத்துக்களையே முன் வைக்கிறது. ''அவர்களின் சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள், அவர்கள்தான் தீயவர்கள்'' (24:4) என்று சொல்லிவிட்டு, அடுத்த வசனத்தில் ''இதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர'' என 24:5 வசனம் விளக்குகிறது.

அதாவது, ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சுமத்தி, நான்கு சாட்சிகள் கொண்டு வராதவர்களை தண்டியுங்கள். ''அவர்கள் தீயவர்கள்'' (24:4) ''அவர்கள் தாம் அல்லாஹ்விடம் பொய்யர்கள்'' (24:13) எனவே ''அவர்களின் சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்'' (24:4) என்று பொய்யர்களின் சாட்சியத்தை இனி எந்த சந்தர்ப்பத்திலும், எந்த விஷயத்திலும் ஏற்காமல், அவர்களைப் புறக்கணிக்கச் சொல்கிறது. அவதூறு கூறுவதிலிருந்து மீண்டு, ''மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர, அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன்.'' என்ற (24:5) வசனம் அவதூறு கூறுபவர்கள் திருந்தினால் மன்னிப்பதையே குறிக்கின்றது என்பது தெளிவு.

24:9ம் வசனத்திற்கும் தவறான பொருளே!

பெண்கள் மீது அவர்களின் ஓழுக்கம் பற்றி அவதூறு கூறி குற்றம் சுமத்துபவர், அதை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும் என்ற 24:4,13 ஆகிய வசனங்கள் தெளிவுபடுத்துகிறது, இது எல்லோருக்கும் பொதுவான சட்டமாக இருந்தாலும், கணவன், மனைவி மீது அவளின் ஒழுக்கத்தைப் பற்றி குற்றம் சுமத்தினால், குற்றத்தை நிரூபிக்க கணவன் நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும் என்பது பொதுவான சட்டத்திலிருந்து விதிவிலக்குப் பெறுகிறது.

தாகாத முறையில் அன்னிய ஆணுடன் தன் மனைவியை நேரில் பார்த்த கணவன், இதற்காக நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும், நான்கு சாட்சிகள் இல்லையெனில் எண்பது சவுக்கடியைத் தண்டனையாகப் பெற்றுக் கொண்டு மீண்டும் தன் மனைவியுடனேயே வாழ வேண்டும் என்பது அர்த்தமற்றதாகவே இருக்கும் என்பதாலேயே கணவன் தன் மனைவியின் ஒழுக்கம் பற்றி குற்றம் சுமத்தினால் இதற்கு பரிகாரம் என்ன என்பதை 24:6,7,8,9 ஆகிய வசனங்களில் தனி சட்டமாக முன் வைக்கப்படுகிறது.

24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன் நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி,

24:7. ஐந்தாவது முறை ''(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்" என்றும் (அவன் கூற வேண்டும்).

24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க ''நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி,

24:9. ஐந்தாவது முறை, ''அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).

கணவன், மனைவி மீது அவதூறு கூறி சாட்சிகள் இல்லாமலிருந்தால், அவர்கள் இருவரும் ''சாப அழைப்புப் பிரமாணம்'' ('லிஆன்') செய்து பிரிந்து விட வேண்டும் என்று இறைவசனங்களும், (பார்க்க தமிழ் புகாரி, ஹதீஸ் எண், 4747) நபிமொழியும் தெளிவுபடுத்துகிறது. கணவன், மனைவியரிடையே சாப அழைப்புப் பிரமாணம் செய்து பிரியச் சொல்லும் 24:9ம் வசனத்தை, பொதுவான பாலியல் குற்றத்திற்கான சட்டமாகத் தவறாக விளங்கி முரண்பட்டு அதே கண்ணோட்டத்துடன்'

//*ஈரானிய, நைஜீரிய, பாகிஸ்தானிய, சவூதி அரேபிய நீதிமன்றங்களின் கண்ணில் இந்த வசனங்கள் படவில்லையா?*//

இஸ்லாமிய நீதி மன்றங்களைத் தவறாகச் சாடியிருப்பது ''அபாண்டமான அவதூறு'' என்பதை சகோதரர் நாகூர் ரூமி அவர்கள் உணர வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.

No comments: