Friday, March 17, 2006

வே(ா)ட்டு!

ஓட்டு போட்டோம்
விரலில் கரி பூசப்பட்டது
முகத்தில் பூசுவதற்கு
முன்னோட்டமாக!

ஆதரவு கேட்டு
மனிதரைத் தவிர
மற்ற எல்லோரும்
வந்தார்கள்

விலை மதிப்பற்ற வாக்குகளை
வலையில் விழவைக்க
பணப் பெட்டகம் தேவையில்லை
பிரியாணி பொட்டலமே போதும்!

வாகனத்தில் ஒலியெழுப்பும்
சிவப்பு விளக்கு சொன்னது...
அபாயம் வருகிறதென்று...
நம்பவில்லை...
மனுகொடுக்க
மந்திரியை...
தேடிய போதுதான் தெரிந்தது
அவர் -
சிவப்பு விளக்கில் இருப்பது.

இப்போதெல்லாம்
பிறர்
தலை எடுத்துப் பழகியவர்தான்
தலைவராக
தலையெடுக்க முடிகிறது...

மெழுகு வர்த்தியைப் போல்
இருப்போம் என உருகினார்கள்
தேவையில்லை
எங்கள் மேனியை எரிக்கும்
தீப்பந்தமாய்
மாறாதிருந்தாலே போதும்!


கவிதை: ஆளூர் ஷா நவாஸ்

Monday, March 06, 2006

அணுகுண்டு வீசப்பட்டால்..

சென்னை மாநகர் மீது அணுகுண்டு வீசப்பட்டால்...

ஒருநாள் காலை 8மணி வெயில் லேசாக வரத்தொடங்கியிருக்கிறது. சென்னை சுறுசுறுப்பாக புதிய நாளைத் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை, லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கும், பள்ளி அல்லது கல்லூரிக்கும் கிளம்பிக்கொண்டு இருக்கின்றனர். வழக்கமான வேலை நாள்.

சரியாக 8மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் மீது ஓர் அணுகுண்டு போடப்படுகிறது. 16கிலோ டன் குண்டு - கிட்டத்தட்ட ஹிரோஷிமா மீது போடப்பட்ட குண்டைப் போன்றது. 1998 மே 11ம் தேதி நமது அரசு வெடித்த குண்டுகளில் நடுத்தரமான சக்தி கொண்டது.

கிட்டத்தட்ட மூன்று மைக்ரோ - வினாடிகளுக்குள் குண்டினுள் புளுட்டோனியம் எரிபொருளில் தொடர்வினை தொடங்குகிறது. நான்காவது மைக்ரோ - வினாடியில் குண்டு வெடித்து அதன் ஆற்றல் - நமது சென்னையை நாசமாக்க - வெளிப்படுகிறது. சரி, மைக்ரோ - வினாடி என்றால் என்ன? கண்ணிமைக்கும் நேரம்? இல்லை, ஒரு வினாடியில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு.

அந்த நான்காவது மைக்ரோ வினாடியில் சென்ட்ரலைச் சுற்றி கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர் ஆரத்தில் எல்லாமே ஆவியாகிவிடுகின்றன. சூரியனைப் போன்ற மிக வெப்பமான ஒளி எழும்புகிறது. ரயில் வண்டிகள், இருப்புப் பாதைகள், மின் கம்பிகள், சிக்னல் கம்புகள் - எதுவுமே உருகிக் குழம்பாகக் கூட நேரமில்லாமல் அப்படியே ஆவியாகி விடுகின்றன.

சென்ட்ரல் நிலையத்தில் வழக்கமாக காலை 8மணிக்கு கிட்டத்தட்ட 5000 பேர் இருப்பார்கள். அவர்கள்தான் நகரிலேயே மிக அதிர்ஷ்டசாலிகள். வெடியின் சத்தம் கூட கேட்காமல், அதன் ஒளியைப் பார்க்கும் முன்னேயே அவர்கள் பரலோகம் போய்ச் சேர்ந்து இருப்பார்கள்.

அந்த ஒளிப் பிழம்பின் பின்னர் வருவது ஒரு மிகப் பெரிய வெடிச்சத்தம். இம்மாதிரி ஒன்றை நீங்கள் நிச்சயம் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. இந்த ராட்சத இடிதான் மிகப்பெரிய சர்வ நாசத்தை உண்டாக்குகிறது. இதை அதிர்வலை என்பார்கள். உருகிய உலோகத்தை இதுவே இட்டுச் செல்கிறது வழியெல்லாம் அழிவைப் பரப்பியவாறு!

ஒரு அரை கிலோமீட்டர் ஆரம் கொண்ட வட்டத்தில், ரிப்பன் கட்டடத்திலும், தங்க சாலையிலும் கூட இந்த அதிர்வலை கொலையலை ஆகிறது. இதை கொலை அதியழுத்த பிரதேசம் என்பார்கள். இந்த ஒலியின் அடர்த்தியே மனித உடலை நாராகக் கிழிக்கும் வலிமை பெற்றுள்ளதால், இங்குள்ள கிட்டத்தட்ட 10,000 பேர் வெடிச்சத்தம் கேட்கும் முன்னரே சதையும் பிண்டமுமாக சிதறுகிறார்கள். எங்கும் ஓடவோ ஒளியவோ நேரமில்லை, இடமில்லை.

குண்டு வெடித்து இன்னும் ஒரு வினாடி கூட ஆகவில்லை கிட்டத்தட்ட 20.000 பேர் இறந்து விட்டனர். சென்னை சென்ட்ரல் மேலே ஒரு காளான் மேகம் உருவாகி மேலெழும்பத் தொடங்கியுள்ளது. கதிரியக்க வீச்சு தொடங்கிவிட்டது. முதல் சில மில்லி - வினாடிகளில் (மில்லி - வினாடி = வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு) உருவாகிய மின் காந்த அதிர்ச்சி பரவலாக (கிண்டிவரை) எல்லா எலெக்ட்ரானிக் சாமான்களையும் அப்பளமாகச் சுட்டுவிட்டது. நகரம் சாகத் தொடங்கிவிட்டது.

இன்னும் ஒரு ஒன்றரை - இரண்டு கிலோ மீட்டர் ஆரத்தில் அதிர்வலை ராட்சசத்தனமாய் இயங்குகிறது. பஸ்கள், லாரிகள், கட்டடங்கள், ரயில் வண்டிகள் எல்லாம் வெடித்துச் சிதறுகின்றன. மனிதர்கள் மீது விழுகின்றன. எங்கும் பறக்கும் பாறைகள். தீ பற்றி எரிகிறது. இந்தப் பகுதியிலுள்ள இரண்டு லட்சம் போர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 20,000 பேர் உடனே உயிரிழக்கின்றனர். மீதிப்பேர் படுபாயமுறுகின்றனர்.

இன்னும் ஐந்து வினாடிகள் கூட ஆகவில்லை 40,000 பேர் மரணம் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோர் படுகாயம்.

செக்ரடேரியட் கட்டடமும், திமுக, அதிமுக, காங்கிரஸ் மூன்று கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் தரைமட்டமாகி விட்டன. அங்கு தீ எரிகிறது. ரத்தக் களறியாய் உள்ளது. அணுகுண்டு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, அரசு என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பதில்லை.

பெரம்பூரிலும் ராயப்பேட்டையிலும் நாச அலை கிட்டத்தட்ட சூறாவளி வேகத்திற்கு (வீரியும் குறைந்து) காணப்படுகிறது. செங்கல் கட்டடங்கள் இடிந்து விழுகின்றன. குடிசைகளெல்லாம் அழிவு. இன்னும் பத்து லட்சம் பேருக்கு பாதிப்பு, பத்தாயிரம் பேர் மடிகின்றனர்.

பத்து வினாடி - 40,000 பேர் மரணம். ஆறு லட்சம் பேர் படுகாயம். பெசன்ட் நகரில், ஆவடியில் அதிர்வலை புயல் வேகமாய் குறைந்து தெரிகிறது. இங்கு எல்லோரும் பிழைத்து விடுவார்கள். தாம்பரத்தில் கதிரியக்கக் காற்று மட்டும் வீசுகிறது.

தமிழ் நாட்டின் வர்த்தக உயிர் நாடியான பகுதி முற்றிலும் அழிந்து கிடக்கிறது. எண்ணூரிலிருந்து திருவான்மியூர் வரை எங்கும் அழிவு. சென்னையோடு வெளிவட்டாரங்களும், உலகும் தொலைத் தொடர்பு இழந்துவிட்டன. மின்காந்த அதிர்ச்சி எல்லா தொடர்பு சாதனங்களையும் பொரித்து விட்டது.

அடுத்த சில நாட்களில் கதிரியக்கக் காற்று மெதுவாக வீசி செங்கை, வேலூர் விழுப்புரம், நெல்லூர் ஆகிய மாவட்டங்களிலும் காற்றை விஷமாக்கும். தமிழ்நாட்டு கடலோரத்தில் வங்காள விரிகுடாவில் கடல் தண்ணீரும், கடல் மணலும் விஷமாகும்.

குடும்பங்கள் பிளவுபட்டுவிட்டன. அண்ணா நகரிலிருந்து வேலைக்கு சென்றவர் என்ன ஆனார் என்று குடும்பத்துக்கு தெரியாது. குண்டு பாதிப்புப் பகுதியில் (உயிர் தப்பியும்) சிக்கியுள்ள இருபது லட்சம் பேருக்கு உணவு போய்ச் சேர எந்த வழியும் கிடையாது. வாகனங்கள், தெருக்கள் கூட இல்லை. எங்கும் பீதி, கொலை, கொள்ளை, நாசம், பற்றி எரியும் தீ.

நண்பர்களே! நரகத்தை கற்பனையில் கண்டு விட்டீர்களா? ஆனால் அது மட்டுமா? எதிரி வேண்டுமானால் நம்மவர்களில் பத்து லட்சம் பேரைக் காயப்படுத்தி, அரை லட்சம் பேரைக் கொன்றிருக்கலாம். நம் ஆட்சியர் சும்மா இருப்பார்களா? இதே போல் எதிரியின் நகரம் ஒன்றில் ஒரு மணி நேரத்துக்குள், ஆம் 9மணிக்குள், இதைவிட சக்தி வாய்ந்த ஒரு குண்டை வெடிப்பார்கள். பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்.

ஆனால் இறுதியில் என்ன? இரு நகரங்களிலும், கிட்டத்தட்ட 30லட்சம் மனிதர்கள், குடும்பங்கள் தாம் இதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அழிவு, சாவு, மீதியிருப்பவர்களின் காயம், துயரம், பிளவுபட்ட குடும்பங்கள், பட்டினி, அடுத்து இரண்டு தலைமறைகளுக்கு கான்சர் மற்றும் குறைகளோடு பிறக்கும் குழந்தைகள் - மாநிலம் முழுவதும் விஷமான நீரும், காற்றும், அதன் விளைவுகளும்.

அதோடு அரசின் பல மையமான கேந்திரங்களும் அழிந்து விட்டதால் தேவைப்படும் நிவாரண வேலைகள் மேற்கொள்வதில் ஏராளாமான பிரச்சனைகள் வேறு.

ஆம், எமனின் ஆயுதத்தைக் கையில் பிடித்து விட்டோம் - இதையெல்லாம் நினைத்தே ஆகவேண்டும், மேற்கொண்டே தீர வேண்டும்.

டாக்டர் ஆர்.ராமனுஜம்
த.வி.வெங்கடேஷ்வரன்


நன்றி: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடான புத்தரின் சோகம்.

Friday, March 03, 2006

வேண்டாம் அணுத்திமிர்!

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் புஷ் ஆகிய இருவரும் இரு நாடுகளின் ஒப்பந்தமாக அணுசக்தி பிரச்சனை பற்றிய பேச்சு வார்த்தையில் நல்லதொரு உடன்படிக்கையை எட்டியிருக்கிறார்கள். - அணுசக்தியை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தி, அழிவை நோக்கி அகிலத்தை மிரட்டும் அணு(ஆயுத)த்திமிர் ஏற்படாதவரை - இது மிகவும் வரவேற்கத்தக்க, நாட்டுக்கு நலனைத்தரும் நல்ல விஷயம்தான் - உலக நாடுகள் அனைத்தும் அணுத்திமிரை கைவிட வேண்டும்.

அன்புடன்,
அபூ முஹை


அணு பேரழிவு...
ஆயுதமாக மாறியதின் தொடக்கம்!


அணுவை ஆயுதமாகப் பயன்படுத்தும் போக்கின் தொடக்கம் மிக அப்பாவித்தனமாக 1896ல் தொடங்கியது. அந்த ஆண்டில் தான் அந்தோனி ஹென்றி பெக்குரில் என்பவர் யூரேனியத்தில் கதிர் வீச்சு இருப்பதை கண்டுபிடித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு அணுகுண்டை தயாரிக்க உதவிடும் என்று பெக்குரில் எதிர்பார்க்கவில்லை.

1902ல் மேரி மற்றும் பியரி குரி-ரேடியம் என்னும் கதிர் வீச்சு உலோகத்தைத் தனியாக பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர். இதற்கு மூன்று ஆண்டுகள் கழித்து ஓரு அதிர வைக்கும் சாதனையாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது THEORY OF RELATIVITY என்ற சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார். (அளவைகள் யாவும் ஒன்றையொன்று சார்ந்ததன்றித் தனிநிலை இயல்புகள் உடையவை அல்ல என்பதே சார்பியல் கோட்பாடு) திடப்பொருளும் சக்தியும் ஒரே பொருள் இரண்டு வகையான மாதிரிகள் என்று ஐன்ஸ்டீன் கூறினார். ஏதாவது ஒரு வகையில் திடப்பொருளை சக்தியாக மாற்றினால், மிகப்பெரும் அளவிலான ஆற்றலை வெளிப்படுத்த இயலும் என்றும் ஐன்ஸ்டீன் வாதிட்டார்.

வெறும் சித்தாந்தமாக ஐன்ஸ்டீன் தெரிவித்த கருத்துகளுக்கு செயல் வடிவம் அளிக்கும் பணி 1920களில் நடைபெற்றது. எர்னஸ்ட் ருத்தர் போல்ட் மற்றும் நீல்ஸ் போஹர் என்ற இரு விஞ்ஞானிகள் அணுவின் உள்ளடக்கத்தை மேலும் துல்லியமாக விவரித்தனர்.
அணுவின் பாகங்களாக மையக் கருவும் (NUCLEUS) அதனைச் சுற்றி எதிர்மின் ஆற்றலுடைய உள்ளணுத் துகள்களும் உள்ளன என்று அவர்கள் அறிவித்தனர். அணு சக்தியை வெளிப்படுத்த வேண்டுமெனில் மையக் கருவை உடைத்து, சிதைத்து வெடிக்க வைக்க வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

1934ல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த என்ரிகோ பெர்மி நியூட்ரான்களை (மின் இயக்கமில்லாத சிற்றணுக்களை) பயன்படுத்தி வலுவான அணுக்களைப் பிளக்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டினார்.

யூரேனியத்தை பயன்படுத்தி டிசம்பர் 1938ல் இதே முறையில் அணுவைப் பிளந்து பெர்லினில் ஒட்டோ ஹான் மற்றும் பிரிட்ஜ் ஸ்ராஸ்மேன் ஆகியோர் சாதனை புரிந்தனர். அணுவின் கருவுள் அவர்கள் வெற்றிகரமாக பிளவை ஏற்படுத்தினர். அணுவைப் பிளந்ததால் சக்தியை வெளியேற்றலாம் என்ற ஐன்ஸ்டீனின் கூற்றை 38 அண்டுகளுக்கு பிறகு வெற்றிகரமாக சாதித்துக் காட்டனர்.

1939 ஆகஸ்ட் 2ம் தேதியன்று அமெரிக்க குடியரசுத் தலைவர் பிாங்க்ளின் ரூஸ்வோல்டிற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு கடிதம் எழுதினார். அக்கடித்தில் ''கடந்த 4மாதங்களாக பிரான்ஸைச் சேர்ந்த ஜோலியோட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெர்மி மற்றும் ஸ்ஜிலார்ட் ஆகியோர் மிகப் பெரும் அளவிலான யூரேனியத் திடப் பொருளை பயன்படுத்தி சங்கிலித் தொடரான அணு அதிர்வுகளை ஏற்படுத்த முடியும் என்பதை செயல் ரீதியாக காட்டியுள்ளனர்.

இதன் விளைவாக குண்டுகளையும் தயாரிக்க இயலும். இதுபோன்ற ஒரேயொரு குண்டு துறைமுகம் ஒன்றில் வெடிக்குமேயானால் ஒரு முழு துறைமுகத்தை மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் முற்றிலும் அழிக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. எனவே தாமதமின்றி அணு ஆயதத் திட்டத்தை நீங்கள் தொடங்க வேண்டும்'' என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தமது வாழ்வின் அந்திமக் காலத்தில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதத்தைத் தயாரிக்கத் தான் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் பெரிதும் வருந்தினார். இது குறித்து லினஸ் பாலிங் என்ற மற்றொரு முக்கிய விஞ்ஞானிக்கு எழுதிய கடிதத்தில் ''அணுகுண்டுகளை தயாரிக்குமாறு அதிபர் ரூஸ்வோல்டிற்கு பரிந்துரை செய்து நான் எழுதிய கடிதம் என் வாழ்வில் நான் செய்த மாபெரும் தவறாகும்'' என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார்.

ஐன்ஸ்டீன் தனக்கு எழுதிய கடிதத்தை அமெரிக்க அதிபர் ரூஸ்வோல்ட் தனது உதவியாளருடன் ''இது செயல்படுத்தப்பட வேண்டும்'' என்ற குறிப்புடன் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து ''மேன்ஹாட்டன்'' திட்டம் என்ற பெயரில் அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்க நிர்வாகம் இறங்கியது. விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தளபதிகள், அரசு அதிகாரிகள் என ஒரு பெரும் வல்லுனர்கள் குழுவாக இணைந்து ஆறு ஆண்டு காலம் ஆய்வில் இறங்கினார்கள். முதலில் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்த ஆய்வுகள், பிறகு அசுர வேகத்தில் வளர்ந்தன.

அணுகுண்டு தயாரிக்கும் இந்த ஆய்விற்காக அமெரிக்கா 200 கோடி டாலர்களை செலவு செய்தது. அதிக எண்ணிக்கையில் சிறப்பு ஆய்வுக்கூடங்கள் இதற்காக உருவாக்கப்பட்டன. அமெரிகாவில் 19 மாகாணங்களிலும், கனடாவிலும் 37 ஆய்வு மையங்கள் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் ஒரு சிறிய வட்டத்தைத் தவிர அதற்கு வெளியில் உள்ள எவருக்கும் இது பற்றிய விபரம் தெரியாமல் ரகசியமாக இந்த நாசகரப் பணிகள் நடைபெற்று வந்தன.

இப்படியாக அணுகுண்டு தயாரிப்புப் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. 1945 ஆகஸ்ட் 6ம் நாள் ஈனோலாகே என்றழைக்கப்பட்ட அமெரிக்க விமானம் உலக வரலாற்றில் முதன் முறையாக ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் அணுகுண்டை வீசியது. இதில் 1,40,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1945 ஆகஸ்ட் 9 அன்று மீண்டும் அமெரிக்கா மற்றொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் அணுகுண்டு வீசியது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட்டு விலகி ஒரு மைலுக்கு அப்பால் குண்டு வெடித்தது. இருப்பினும் 75,000 பேர் இதில் கொல்லப்பட்டார்கள்.
அணு சக்தி ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு, மனித இன பேரழிவிற்கு வழிவகுத்த கொடிய வரலாறு இப்படித்தான் தொடங்கியது.

நன்றி: ஒற்றுமை இதழ் ஜுன், 16.2002

(2002ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் மூளும் அபாயம் இருந்தது. அச்சமயத்தில் அணு ஆயுதப்போர் குறித்து சில அடிப்படை தகவல்களை வழங்கியது ஒற்றுமை இதழ்)

Tuesday, February 21, 2006

பணம் பணமறிய அவா!

கவிதை வடித்தவரை அறிய அவ!

பிடிஎஃபில் எழுதி, நண்பர்களிடமிருந்து வந்த இக்கவிதையை எழுதியவர் யார்? என்று தெரியவில்லை. ஏற்கெனவே வலைப்பூவில் பதிந்திருக்கலாம் தெரிந்தவர்கள் இருந்தால் அறியத்தரவும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை


அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!

அடி வயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறித்தெறிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாம்!

கண் தெரியா தேசத்தில் விழுந்து
காயங்கள் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!

மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத்
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!
ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!

நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகி விட்டது!

ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்று விடுகிறது
நம் பெருநாட்கள் ஒவ்வொன்றும்...

உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்க்கை?

கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்தைகள்...

நம்மில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது...

தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது...

மனைவியின்
மூச்சுக்காற்று தந்த சுகம் கூட
இந் ஏசி காற்று தருவதில்லை!

குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்...

வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?..

உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்!

என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி

ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...

காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மைக் கட்டிப் போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக...

வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும் விரகத்தீயிலும்
எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்...

என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரை யார் அறிவார்?

********************************************************

Tuesday, February 14, 2006

இஸ்லாமும் - அடிமைகளும்.

அமெரிக்காவும் மேற்கத்திய தீவுகளும் கைப்பற்றப்பட்ட பின்னர் முன்னூற்று ஐம்பது ஆண்டுகள் அடிமை வியாபாரப் போக்குவரத்துக்கள் நடந்து வந்தது. ஆப்பிரிக்காவின் கடற்கரை ஓரங்களுக்கு அதன் உட்பகுதியிலிருந்து கருப்பர்கள் பிடித்து வரப்பட்டு கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். எனவே அந்தக் கடற்கரைகள் ''அடிமைக் கடற்கரைகள்'' என்றே அழைக்கப்பட்டன.

ஒரே ஒரு நூற்றாண்டிற்குள் (1680லிருந்து 1786வரை) குடியேற்ற நாடுகளுக்காக பிரிட்டானியர் அடிமைப்படுத்திய மனிதர்களின் எண்ணிக்கை, ஆங்கிலேய நூலாசிரியர்களின் கணக்குப்படி இரண்டு கோடி ஆகும். ஓராண்டு காலத்தில் 1790ல் மட்டும் 75,000.

அந்த அடிமைகளை ஏற்றுமதி செய்ய பயன்படுத்தப்பட்ட கப்பல்கள் சிறியதாகவும், அசுத்தமானவையாகவும் இருந்தன. அந்த ஆப்பிரிக்க மக்கள் கப்பலில் சரக்கு வைக்கப்படும் பகுதியில் ஆடு மாடுகளைப் போல் அடைக்கப்பட்டார்கள். அவ்வறைகளின் கூரையைத் தொடுமளவிற்கு ஒருவர் மீது ஒருவராகத் திணிக்கப்பட்டார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் மரத்தாலான சிறு அறைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். அதில் அவர்களால் அசையக்கூட முடியாது. ஏனென்றால் அச்சிற்றறைகளின் அகலம் 18 அங்குலம்தான். இவ்வாறு ஒருவரின் தலைக்கு மேல் இன்னொருவராக அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முறையான உணவோ, நோய் அல்லது காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சைகளோ வழங்கப்படவில்லை.

அடிமைத் தொழிலுக்கும் கட்டாய வேலைக்கும் பிடிக்கப்பட்ட மனிதர்களில் 20 சதவிகிதத்தினர் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க கடற்கரைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே மரணமடைந்ததாக மேலை நாட்டு நூலாசிரியர்கள் சொல்லுகிறார்கள்.

அடிமை வியாபாரம் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளால் பிடிக்கப்பட்ட மனிதர்களின் மொத்த எண்ணிக்கை பத்து கோடியாகும். என்று கணக்கிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அடிமை முறையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று ஓயாது வாய்கிழிய அவதூறு பேசுவோரின் வரலாறுதான் இது.

''உலகில் அடிமை முறையை ஒழித்தவர்கள் நாங்கள் தாம்'' என்று மேலை நாட்டினர் பெருமைபட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இந்த எண்ணம் தோன்றியது சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான். அதற்கு முன்னால் மேற்கத்திய வல்லரசுகள் ஆப்பிரிக்காவில் பெருமளவில் நுழைந்து அங்கு வாழ்ந்த சுதந்நிர மனிதர்களைப் பிடித்து அடிமைப்படுத்தி தங்கள் புதிய குடியேற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள் என்பதை நினைவு கூர்ந்து இனி இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகளைப் பார்ப்போம்.

இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகள்.

//அடிமைகளை வைத்துக் கொள்,அடிமை முறை இருக்கட்டும் ஆனால் அழைக்கும் போது அடிமை என்று அழைக்காதே என்பது அடிமை முறையை அழிக்க உதவுமா. யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுவதுதானே சரியானதாக இருக்கும்.இஸ்லாம் அடிமை முறைக்கு முற்றிலும் எதிரானது அல்ல என்றும் ஒரு வாதம் இருக்கிறது.//

இஸ்லாம்தான் உலகில் அடிமை முறையை உருவாக்கியது என்பது தவறானக் கருத்தாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய காலத்தில் அந்த மக்களிடையே அடிமை வழக்கமிருந்தது. அதற்கும் முன்னும் இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் காலத்திலும் அடிமை முறைகள் இருந்திருக்கிறது என்றும் வரலாற்றில் பார்க்க முடிகிறது.

ஆகவே அடிமை முறையை இஸ்லாம் உருவாக்கவில்லை என்பது தெளிவு. ஏற்கெனவே இருந்த அடிமை வழக்கத்தை இஸ்லாம் அங்கீகரித்து - அடிமைகளை விடுதலை செய்வதை வலியுறுத்தி - அம்முறையைப் படிப்படியாக குறைக்கத் தூண்டியது. எந்த அளவுக்கு தூண்டியது என்றால் - அடிமைகளை விலை கொடுத்து வாங்க வசதிபெற்ற - நபித்தோழர்கள் விலை கொடுத்து வாங்கி பிறகு விடுதலை செய்து, அடிமைகளை சுதந்திர மனிதர்களாக ஆக்கினார்கள். எனவே அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்லாத்தில் கருத்து வேறுபாடு இல்லை.

தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே போர் கைதிகளை மட்டும் அடிமைகளாக்கிக் கொள்வதை இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. போரில் சிறைப் பிடித்தக் கைதிகளை அடிமைகளாக்கிக் கொள்வது அன்றைய சமூகங்களின் வழக்கமாகவும் இருந்தது. போரில் பிடிபட்ட கைதிகள் விஷயத்தில் நான்கு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

1. பிடிபட்டக் கைதிக்குப் பகரமாக பணயத்தொகைப் பெற்றுக்கொண்டு அந்த கைதியை விடுதலை செய்தார்கள்.
2. போர் கைதிக்கு பகரமாக போர்கைதியை மாற்றிக்கொண்டார்.
3. போர் கைதிகளை அடிமைகளாக - அடிமைச் சந்தையில் விற்று விடுவார்கள்.
4. போர் கைதிகளிடம் வேலையை வாங்கிக்கொண்டு அதற்கு பகரமாக அவர்களை பராமறித்துக் கொண்டார்கள்.

இதுதான் அன்றையப் போர்களில் பிடிபட்ட கைதிகளின் நிலையாக இருந்தது. இதில் முஸ்லிம்கள் மட்டும் பிடிபட்ட போர் கைதிளை .//யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்// என்று சொல்லியிருக்க வேண்டும் என்பது கவ்வைக்குதவாத, வாதமட்டுமல்ல, முஸ்லிம்களை கருவறுக்கச் செய்யும் வழியுமாகும்.

எதிரிகள் மட்டும் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்ளலாம், ஆனால் முஸ்லிம்கள் பிடிபட்டப் போர் கைதிகளை ''நீயும் நானும் சமம்'' என்று விடுதலை செய்தால், விடுதலைப் பெற்றவன் மீண்டும் போருக்கு வரத்தான் செய்வான். இப்படி ஒரு படுபாதக நிலை இருப்பதோடு, ''நீயும் நானும் சமம்'' என்று போர் கைதிகளை உட்கார வைத்து விருந்தும் போட முடியாது. இப்படி நியாயமான காரணங்களால் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்வதை மட்டும் இஸ்லாம் அனுமதிக்கிறது.

சுதந்திரமான தனி மனிதனின் உரிமையில் தலையிட்டு, அவனின் உரிமையை நசுக்கி அடிமையாக்கி தொழில் செய்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை மாறாக, அதை வன்மையாகக் கண்டிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
''மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன்,
சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்..
மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்'' (நபிமொழி புகாரி 2227)

அடிமைகள் பற்றி திருக்குர்ஆன் இரு வசனங்கள்:.

4:36.மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

24:32.இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான .உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

//இஸ்லாம் அடிமை முறைக்கு முற்றிலும் எதிரானது அல்ல என்றும் ஒரு வாதம் இருக்கிறது.//

அடிமைகள் பற்றிய வாதம் மட்டுமிருந்தால் இப்பதிவில் பின்னூட்டலாம் நன்றி!