Friday, October 06, 2006

திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது?

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவது போல், திருக்குர்ஆனுக்கு முந்தய வேதங்களும் ஏன் பாதுகாக்கப்படவில்லை?



//பல நபிகள் மூலமாய் பல கட்டளைகள் இறைவனால் கொடுக்கப் பட்டும் அவைகள் பல மாற்றங்கள் பெற்றமையால் இறுதி வேதமாக முகம்மது மூலமாய் இப்போதைய குரான் இறக்கப் பட்டதல்லவா; இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை?//- தருமி.

கேள்விக்கான விளக்கம்.
ஒவ்வொரு இறைத்தூதரின் மறைவுக்குப் பின்னும் அவர்கள் கொண்டு வந்த வேதங்கள், அவற்றைப் பின்பற்றுபவர்களாலேயே மறைக்கப்பட்டது. மறைக்கப்பட்டது மட்டுமல்ல, வேதத்தைப் பெற்றிருந்த அறிஞர்களால் அவர்களின் சொந்தக் கருத்தும் வேதமெனத் திணிக்கப்பட்டு அதுவும் வேதத்தில் உள்ளதுதான் என மக்களுக்கு போதிக்கப்பட்டது. இதை சரிசெய்வதற்காக இன்னொரு இறைத்தூதரின் வருகை அவசியமாயிற்று இது ஒரு காரணம். (இது பற்றி இன்னும் விரிவாக ''யூத, கிறிஸ்தவ மதங்களின் தழுவலா இஸ்லாம்? என்ற பகுதியில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்)

இறைத்தூதர்கள் வேதங்களைக் கொண்டு வரும்போதும் பழைய வேதங்களை உள்ளடக்கியும், அதைத் தொடர்ந்து புதிய சட்டங்களை சேர்த்தும் அனுப்பப்பட்டார்கள். உதாரணமாக:

3:50. ''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன், ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என்னைப் பின் பற்றுங்கள்.'' (இறைத்தூதர்களின் மீள் வரவின் காரணத்தை மேலும் பல திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கலாம்)

முந்தய வேதத்தை உண்மைப்படுத்த வந்த இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் முன்பு விலக்கப்பட்ட சிலவற்றை நீக்கி புதிய சட்டங்களை சேர்க்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார். இப்பொழுது - தவ்ராத் வேதத்தையும் உள்ளடக்கி அதோடு புதிய சட்டங்களையும் சேர்த்து இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கொண்டு வந்த - இன்ஜீல் எனும் வேதம் பின்பற்றத்தக்கது. ஏனென்றால் தவ்ராத் எனும் வேதத்தோடு புதிய இறைச் சட்டங்கள் இன்ஜீல் எனும் வேதத்தில் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்களால் சேர்க்கப்பட்டன.

''இன்று (மோசே எனும்) மூஸா (அலை) அவர்கள் உயிரோடு இருந்தாலும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நபி மூஸா (அலை) அவர்களே முஹம்மது நபியைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது முன் சென்ற நபிமார்களைப் பின்பற்றியே புதிய சட்டங்களுடன் பிந்திய நபியின் வருகை இருந்ததால் இந்த இறைத்தூதர் கொண்டு வரும் சட்டங்களே பின்பற்றப்பட வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. விளங்கிக் கொள்ள:

ஏற்கெனவே ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்து, புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தினால், பழைய ஆட்சியை ஆதரித்த குடிமக்களும் அதற்குக் கட்டுப்பட வேண்டும், பழைய ஆட்சியாளர்களும் புதிய அரசின் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.

இறைச் செய்தியை அறிவித்து இறைத்தூதராக வாழ்ந்து, வழிகாட்டிய ஒரு நபியின் மறைவுக்குப்பின் அந்த சமுதாயம், அடுத்த இறைத்தூதர் வரும்வரை மறைந்த இறைத்தூதரையேப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்கள். மீண்டும் இறைத்தூதரின் வருகை அவசியமென இறைவன் தீர்மானித்து அடுத்த இறைத்தூதரை நியமிக்கிறான். அதுவரை மறைந்த இறைத்தூதரைப் பின்பற்றியவர்கள் இப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த இறைத்தூதரைப் பின்பற்ற வேண்டும். இதைத்தான் மறைந்த இறைத்தூதர்களும் தமக்குப்பின் வரவிருக்கும் இறைத்தூதரைப் பின்பற்றும்படியும் அறிவித்தார்கள்! மக்களும் அடுத்த இறைத்தூதரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் என்பதை வரலாற்றில் அறிந்து கொள்கிறோம்.

//இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை?//

முந்தய வேதங்களையும் இறைவனால் பாதுகாக்க முடியாதா? என்றால் இறைவனால் அது முடியாத காரியமில்லை! ஆனால் அதற்கான அவசியமில்லை. அடிப்படைக் கொள்கை நீங்கலாக, வணக்க வழிபாடுகளிலும், வாழ்க்கை நெறிகளிலும் சில மாற்றங்களுடன் ஒவ்வொரு இறைத்தூதர்களும் வேதங்களைக் கொண்டு வந்தார்கள். முழுமையடைந்த வேதம் மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும். முழுமையடையாத முந்தய வேதங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதில்லை.

முந்தய வேதங்களையும் ஏற்றுக் கொண்டு நிறைவு பெற்ற இறுதியான வேதம் திருக்குர்ஆன். ''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்'' (திருக்குர்ஆன், 5:3) என இறைச் செய்தியை பறைசாற்றித் திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

இஸ்லாம் மார்க்கம் முழுமை பெற்று, தூதுப்பணியும் முடிந்து விட்டதால் இறைத்தூதர்களின் வருகையும் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் முற்றுப் பெற்று விட்டது. இனி தூதர்களின் வருகை இல்லை அதனால் வேதங்களின் வருகையும் இல்லை. திருக்குர்ஆனே இறுதி வேதம் எனும்போது இறுதி வேதமாகிய திருக்குர்ஆன்தான் பாதுகாக்கப்பட வேண்டும்.

மனித குலத்துக்கு வழிகாட்டியாக இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்படுகிறது. திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான். (பார்க்க: திருக்குர்ஆன், 15:9) திருக்குர்ஆனில் இடைச் செருகல் ஏற்படாமல் இன்னும் தொடர்ந்து இறைவனால் பாதுகாக்கப்படும் இறுதி நாள்வரை!

எழுதியவற்றில் மேலும் கேள்விகள் இருந்தால் இங்கே பதிவு செய்யலாம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Thursday, October 05, 2006

மரண தண்டனை!

மரண தண்டனை என்பது மனித குலத்துக்கு நல்லதொரு பாடமாக இருந்து வருகிறது. தண்டனை பெறுவோம் என்ற மரண பயத்தால் பெரும்பான்மையினர் தவறிலிருந்து விலகிக் கொள்வார்கள். இதனால் வலியவனிடமிருந்து எளியவன் விடுதலையடைகிறான். அதாவது அகம்பாவம், ஆணவம், பணத்திமிர் கொண்டவனும் குற்றமிழைத்தால் தண்டனை உறுதி என்றாகும் பொழுது, எளியவன் மீது அடக்கு முறையுடன் ஓங்கும் கைகளை வலியவன் தவிர்த்துக் கொள்வான்.

அவனைக் கொன்றால் நானும் சட்டத்தால் கொல்லப்படுவேன் என்று - எவ்வளவு பணபலத்துக்கும் உடன்படாத - எந்த சக்திக்கும் வளைந்து கொடுக்காத - உறுதிமிக்க மரண தண்டனை விதியியிருந்தால் அது மனித வள மேம்பாட்டுக்கு மிகவும் உதவிக் கொண்டிருக்கும்.

ஆனால் துரதிஷ்டம் நமது இந்திய நாட்டில், வெகு சிரமத்துடன் குற்றாவாளிகளை அடையாளம் கண்டு, பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனைகள் விதித்தால், அந்த தண்டனை கூடாது என அரசியல் குறுக்கீடு, மற்றும் தன்னார்வலர்களின் பரிதாப சிபாரிசு என குற்றவாளிகளைக் காப்பாற்ற படையெடுத்து விடுகின்றனர்.

விளைவு, இச்செயல் குற்றவாளிகளை மேலும் தெம்பூட்டுகிறது. இந்த கதிக்கு, குற்றவாளிகளை பிடித்தது, நீதி விசாரணை நடத்தியது இவையனைத்தும் வீணாகி, வெறும் வெட்டி வேலையாகி விடுகின்றது. நியாயமான நீதி கிடைக்கும் என்று நம்பியவர்கள், சட்டம், நீதி விசாரணை என்பதெல்லாம் வெறும் மண்ணாங்கட்டி என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

முஹம்மது அப்ஸல்

ஒரு குற்றவாளியை, குற்றவாளியாத்தான் பார்க்க வேண்டும். அதனால் எந்த நாட்டின் நட்பு போய்விடுமோ என்று கருதினால் தெரிந்து கொண்டே குற்றங்களுக்கு துணை போகிறோம்! பாராளுமன்றம் இந்திய அரசுக்குச் சொந்தமான இடம். பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் இந்திய நாட்டை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள். பாராளும் மன்றத்தை தகர்க்கவும், ஆட்சியாளர்களைக் கொல்லவும் துணிந்தவர்கள் தேசத் துரோகிகள் எனும் போது அதற்கு உடந்தையாக இருந்தவனும் தேசத் துரோகியே!

நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவித்து அரசுக்கு எதிரான பெரும் நாச வேலையில் ஈடுபட்டு பொதுவுடமையை அழிக்கவும், ஆட்சியாளர்களைக் கொல்லவும் துணிந்தவர்கள் சட்டத்தால் கொல்லப்பட வேண்டும். முறையான நீதி விசாரணை நடத்தப்பட்டு அவர் குற்றவாளியென நிரூபிக்கட்டு நீதி மன்றங்கள் வழங்கிய மரண தண்டனை அவர் மீது நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மரண தண்டனை இன்னொரு பயங்கரவாதிக்கு பாடமாக இருக்கும்.

குற்றவாளிகளை தண்டிப்பதில் குறுக்கே நிற்கும் ''கருணை மனு'' மற்றும் ''பொது மன்னிப்பு'' போன்ற சமாச்சாரங்கள் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துமே தவிர குற்றங்களை குறைக்க உதவாது. நீதி தன் கடமையைச் செய்வதற்கு இதெல்லாம் தடைக்கல்லாகத்தான் இருக்கிறது!

பாதிக்கப்பட்டவன் இங்கிருக்க, சம்பவத்துக்கு சம்பந்தமே இல்லாதவர் குற்றவாளி மீது கருணை காட்டுவது சரியாகுமா..? நீதி மன்றங்கள் முறையான விசாரணையில் குற்றவாளிகளுக்கு நியாயமான மரண தண்டனை விதித்தால் அதை நிறைவேற்றும் முயற்சியில் நீதியுடன் கை கோர்ப்போம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, October 04, 2006

நபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை நோக்கி சகோதரர் ஜோ கீழ்கண்ட கேள்விகளை வைத்திருக்கிறார்...

//இஸ்லாமிய சகோதரர்கள் பொதுவாக கருத்து சொல்லும் போது இஸ்லாமில் அனைத்து நபி மார்களும் (ஆதாம் ,ஆபிரகாம் தொடங்கி இயேசு ,அண்ணல் முகமது நபி வரை) சமமாகவே மதிக்கப்படுகிறார்கள் ,அதே நேரத்தில் முகமது நபியவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்பதாலும் அவர் வழியாகவே இறை வார்த்தையான குரான் இறக்கப்பட்டதால் நடைமுறையில் முகமது நபியவர்கள் தனிச்சிறப்புடையவராகவும் இஸ்லாமியர்களின் தனிப்பட்ட பேரன்புக்குரியவராகவும் திகழ்கிறார் என்றும் கருத்துரைக்கிறார்கள் .இது பற்றி எனக்கு மறுப்பேதும் இல்லை.

ஆனால் இயேசு(ஈஸா நபி) குறித்து இஸ்லாம் நம்பிக்கை பற்றி மேலும் தகவல்களை நேரடியாக நம் இஸ்லாமிய அன்பர்களிடமிருந்து பெறலாமே என்ற நோக்கத்தில் இந்த பதிவு.

1. இயேசு அன்னை மரியின் மகனாக பிறந்தார் .ஆனால் அன்னை மரி தன்னுடைய கன்னித் தன்மையை இழக்காமலேயே ஆணின் மூலமாக அன்றி ,இறைவனால் கருத்தரிக்க வைக்கப்பட்டு இயேசு பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல முஸ்லிம்களின் நம்பிக்கையும் கூட .ஆக ஆதாம் என்கிற ஆதிமனிதன் தவிர மற்றெல்லா நபிகளும் இயற்கையான முறையில் பிறந்த போது இயேசு மட்டும் விசேடமான முறையில் அன்னை மரியாளிடம் பரிசுத்தமான முறையில் பிறக்கிறார் .இறுதித் தூதர் முகமதுவுக்கே கிடைக்காத இந்த தனிச்சிறப்பை அல்லா ஈஸா நபிக்கு மட்டும் கொடுக்க வேண்டிய காரணம் என்ன ?இது பற்றி இஸ்லாத்தில் என்ன விளக்கம் சொல்லப்படுகிறது ?

2. இந்த உலகின் இறுதி நாள் வரும் போது வானகத்திலிருந்து இயேசு மறுபடியும் இந்த மண்ணுலகுக்கு வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை .அது போலவே இஸ்லாமியர்களும் இறுதி நாளின் போது இயேசு மறுபடியும் வந்து குரானை ஓதுவார் என்று நம்புகின்றனர் .இங்கும் இறுதித் தூரரான முகமது நபிக்கு கிடைக்காக சிறப்பு இயேசு(ஈஸா நபி) -க்கு கிடைக்கிறது .இதற்கு காரணம் என்ன ? ஏன் இயேசு- வுக்கு இந்த தனிச்சிறப்பு என்பதற்கு இஸ்லாம் என்ன விளக்கம் சொல்கிறது ?//
*******************************************

சகோதரர் ஜோ இந்தக் கேள்விகளில் //''இறுதித் தூதரான முகமது நபிக்கு கிடைக்காத சிறப்பு இயேசு(ஈஸா நபி) -க்கு கிடைக்கிறது .இதற்கு காரணம் என்ன?''// என்பதையே முக்கியமாகக் கேட்டிருக்கிறார். கேள்வியில் விதர்ப்பம் இல்லை என்றே எடுத்துக் கொள்வோம்.

சிறப்பின் காரணம் என்னவென்பதை உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டால் தவறாகாது. நபிமார்களிடையே ஏற்றத் தாழ்வைக் கற்பிக்க இந்த நபிக்கு ஏன் இந்த சிறப்பு? என காரணத்தைத் தேடினால் - ''நபிமார்களிடையே வேற்றுமை இல்லை'' எல்லா நபிமார்களையும் ஒரே படித்தரத்தில் வைத்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற - இஸ்லாத்தின் கொள்கைக்கு முரண்பட்டதாகும்.

நபி இயேசு என்ற ஈஸா (அலை) அவர்களின் இடத்தில், நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் முஹம்மது நபி தந்தையின்றி பிறந்திருப்பார்கள், தொட்டிலில் பேசியிருப்பார்கள், இறைவனால் உயர்த்தப்பட்டிருப்பார்கள், இறுதி நாளின் நெருக்கத்தில் பூமிக்கு இறங்கி வரத்தான் செய்வார்கள்!

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் இடத்தில், இயேசு (அலை) அவர்கள் இருந்திருந்தால் இயேசு (அலை) அவர்களும் இறுதி நபியாகக் குறிப்பிடப்பட்டிருப்பார்கள், உலக மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராக ஆக்கப்பட்டிருப்பார்கள், மறுமை உலகில் - பரலோக ராஜ்யத்தில் பரிந்துரைப்பதையும் பெற்றிருப்பார்கள்.

எந்தெந்த நபிக்கு என்னென்ன சிறப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அந்தந்தக் கால மக்களின் நம்பிக்ககைக்கேற்ப இறைவன் தீர்மானிக்கிறான். அவன் தீர்மானித்தத் தகுதிகளை, அவன் தேர்ந்தெடுக்கும் மனிதரை இறைத்தூதராக நியமித்து, அவருக்கு சிறப்பு தகுதிகளையும் வழங்குகிறான். அதைத்தான் இறைவன் இப்படிக் கூறுகிறான்...

17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம்.இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்.

இறைத்தூதர்களில் சிலரை, சிலரைவிட மேன்மையாக்கியிருக்கிறான் என்பது இறைத்தூதர்கள் சிலருக்கு இறைவன் வழங்கிய சிறப்புத் தகுதி. இறைவன் கூறும் இந்தச் சிறப்புத் தகுதி கண்ணோட்டத்தில் நபிமார்களுக்கு வழங்கிய சிறப்புகளை சொல்லிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அந்த சிறப்புத் தகுதியை வைத்து இயேசு (அலை) அவர்களை விட முஹம்மது (ஸல்) அவர்கள் உயர்ந்த நபி என்றோ, முஹம்மது (ஸல்) அவர்களை விட இயேசு (அலை) அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற ஏற்றத்தாழ்வு அடிப்படையில் பாராபட்சமான பேச்சுக்கள் கூடாது என்பதையே...

''அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்.''

''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை''


திருக்குர்ஆன், 2:136, 285 ஆகிய வசனங்கள் கூறிகிறது.

இயேசு - ஈஸா (அலை) அவர்களின் சிறப்பு பற்றி திருக்குர்ஆன் சொல்லும் காரணங்கள்.

இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் சிலர் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிப்பட்டார்கள், சிலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இந்தக் கொடுமையானப் போக்கிலிருந்து யூதர்களை விலக்கி நல்வழிபடுத்திடவே இயல்புக்கு மாறாக ஒரு அற்புதத்தை அத்தாட்சியாக நபி இயேசு அவர்களின் பிறப்பை இறைவன் சிறப்பாக தேர்ந்தெடுத்தான்.

43:59. அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை. அவர் மீது நாம் அருள் புரிந்து இஸ்ராயீலின் சந்ததியருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.

3:48. இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.

3:49. இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான் இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது'' (என்று கூறினார்).

3:50. ''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன், ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என்னைப் பின் பற்றுங்கள்.''

3:51. ''நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.''


மேற்கண்ட வசனங்களில் இயேசு (அலை) அவர்களின் பிறப்பின் சிறப்பு பற்றிய காரணங்கள் தெளிவுபடுத்துப்படுகிறது. இறைத்தூதர் இயேசு அவர்களின் அற்புதமான பிறப்பின் ஏற்பாடு இம்ரானின் குடும்பத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.

3:33. ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.

3:34. (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

3:35. இம்ரானின் மனைவி, ''என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்'' என்று கூறியதையும்.

66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார், நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.


நபி இயேசுவைப் பெற்றெடுக்க இம்ரானின் மகள் மர்யம் (அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்து அந்தச் செய்தி வானவர்கள் மூலம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது.

3:42. (நபியே! மர்யமிடத்தில்) வானவர்கள், மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான். இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்'' (என்றும்).

இம்ரானின் மகளாகிய மர்யம் (அலை) அவர்கள் மகத்தான அத்தாட்சியாக ஆண் துணையின்றி கருவுற்று இயேசு என்ற ஈஸா (அலை) இறைத்தூதரைப் பெற்றெடுக்கிறார், இந்த அதிசயப் பிறப்பின் சிறப்புக்குக் காரணம், ஏற்கெனவே தவ்ராத் என்ற வேதம் வழங்கப்பட்ட இஸ்ராயீலின் சந்ததிகள், இயேசுவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இயேசுவின் பிறப்பை, முதல் மனிதரும் முதல் நபியுமாகிய ஆதாம், என்ற ஆதம் நபியின் படைப்புக்கொப்பாக சிறப்பித்து அத்தாட்சியாக (பார்க்க:திருக்குர்ஆன், 3:59) சான்றாக்கினான் இறைவன்.

ஆனால் இந்த அற்புதத்தைப் பார்த்த பின்னும், இயேசு பல அதிசயங்களை செய்து காட்டிய பின்னும், யூதர்கள் இயேசுவை இறைத்தூதராக ஏற்கவில்லை (பார்க்க: திருக்குர்ஆன், 3:52) அவரை ஒரு நல்ல மனிதராகக் கூட ஏற்கவில்லை. மோசமாக விமர்சித்தார்கள். யூதர்களின் தவறான விமர்சனங்களில் எள்ளளவும் உண்மையில்லை என்று இயேசுவின் சிறப்பைச் சுட்டிக்காட்டி அவர் மீது சுமத்தப்பட்டக் களங்கத்தைத் திருக்குர்ஆன் துடைத்தெறிகிறது.

இனி...
திருக்குர்ஆன் மர்யம் என்று குறிப்பிடும் மரியாள் பற்றியும், இயேசுவின் பிறப்பு பற்றியும் பைபிள் என்ன கூறுகிறது?

3:46. ''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார், இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' (மேலும் பார்க்க: திருக்குர்ஆன், 5:110, 19:39,40)

இயேசு பிறந்ததும் தொட்டிலில் பேசுவார் என்பதை அவர் பிறப்பதற்கு முன்பே முன்னறிவிப்புச் செய்தும், மரியாளின் கற்பு பற்றி தவறாக விமர்சித்தவர்களின் சந்தேக எண்ணங்களை நீக்கிட, இயேசு தொட்டில் குழந்தையாக இருக்கும் பருவத்தில் பேசி, அந்த அதிசயத்தை நடை முறையில் நடத்திக் காட்டி மரியாளின் கற்பொழுக்கத்தை நிலை நாட்டியதாக வரலாற்றுச் செய்தியை திருக்குர்ஆன் கூறுகிறது.

மரியாளின் கற்பு சம்பந்தமாகவும், இயேசு பிறந்தவுடன் தொட்டிலில் பேசியது தொடர்பாகவும் பைபிள் என்ன கூறுகிறது? என்பதை வசன எண்களுடன் அறியத் தந்தால் நன்றாக இருக்கும். இது நபி இயேசுவைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது? என்பதை அறிந்து கொள்ள கிறிஸ்துவ நண்பர்களிடம் நேரடியாகக் கருத்துக்களைக் கேட்டுப் பெறலாமே என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டது நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Sunday, October 01, 2006

ஆதாம், ஏவாள் எனும் ஜோடி.

இன்னுமா நம்புகிறார்கள்? என்ற தலைப்பில் எழில் என்பவர் ஒரு பதிவிட்டிருக்கிறார். ஆம் ''இன்னுமா நம்புகிறார்கள்...?'' இதே கேள்வியை வந்த வழிக்கே திருப்பினால் என்ன...?

பரிணாமப் பறிமாற்றங்களை அருகிலிருந்து பார்த்து குறிப்புகள் எடுத்துக் கொண்டாரா!? என்னத்தைச் சொல்ல..!

பரிணாமத்தின் உந்து விசையைக் கண்டுபிடிப்பதில் லாமார்க் போன்ற சிறந்த விஞ்ஞானிகளேத் தோற்றுப் போனார்களே! இவரென்ன விஞ்ஞானக் குஞ்சு! குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்பதை நிரூபித்து விட்டாரா..?

''கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்'' அடடா என்ன தத்தவமய்யா இது, சொன்னவர் யாராம்..? அட கலைவாணர்... எப்படி இருக்கிறது பாருங்கள், ''பாரிணாம உந்து விசைக்கு'' நகைச்சுவை நடிகரை ஆதாரம் காட்டுகிறார் பாருங்கள். (தயவு செய்து யாரும் நகைக்க வேணடாம்.)

எவ்வளவோ உயினங்களைக் கண்டு வருகிறோம். அவைகளெல்லாம் தம் இனத்தையே ஈன்றெடுக்கின்றன.

குதிரையிலிருந்து குதிரைக் குட்டியும்,

கழுதையிலிருந்து கழுதைக் குட்டியும்,

ஆட்டிலிருந்து ஆட்டுக் குட்டியும்,

குருவியிலிருந்து குருவிக் குஞ்சும்,

மாமரத்திலிருந்து மாங்கன்றும்,

இன்னும் குரங்கிலிருந்து குரங்குக் குட்டிதான் பிறந்து கொண்டிருக்கிறது,

மனிதனிலிருந்து மனிதக் குழந்தைதான் பிறக்கிறது.


அனைத்தையும் விட மேலாக, மனிதன் அறிவால் உயர்ந்து நிற்கிறான். எந்த உயிரினத்துக்கும் கிட்டாத - வழங்கப்படாத இந்தப் பேறறிவு எனும் மணி மகுடம் எந்த உந்து விசையால் பரிணாமம் பெற்றது என்பதை ''கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவர் விளக்குவாரா..?''

அன்புடன்,
அபூ முஹை

3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.

போர்களை நடத்திச் செல்ல ஆட்சி அவசியமா..? இஸ்லாம் என்ன சொல்கிறது..?


போர் நடத்த வேண்டுமென்றால் அதைக் கட்டுப்படுத்த ராணுவம், ராணுவ அதிகாரிகள் என்று இருக்க வேண்டும். ராணுவம், ராணுவ அதிகாரிகளைக் கட்டுப்படுத்த ஆட்சி, ஆட்சியின் அதிகாரம் இருக்க வேண்டும். ஆட்சி செய்வதற்கு நாடு, அல்லது ஏதேனும் நிலப்பகுதியை கைப்பற்றி அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இப்படி முறையாக அமைக்கப்பட்ட ஆட்சி, ராணுவம், போர் வீரர்கள் என்று இருந்து, அது தனது எதிரி நாட்டுடன் சண்டையிட்டால் அது போர் என்று சொல்லப்படும்.

இப்படி எதுவும் இல்லாமல் ஒரே ஊருக்குள் நான்கு பேர், அல்லது நாற்பது பேர்கள் அடித்துக் கொண்டால் அதற்குப் பெயர் வன்முறை, அல்லது கலவரம் என்றுதான் பொருள்படும். அதைப் போர் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

இஸ்லாமும் இதைத்தான் செய்திருக்கிறது. மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குறைந்த அளவு அப்பாவி மக்களை போர் என்ற பெயரில் சொந்த நாட்டிலேயே கலவரத்தை ஏற்படுத்தி பலி கொடுக்கத் தயாரில்லை. இது சரியான முடிவுதானா? என்று கேட்டால் மடையர்களைத் தவிர யாரும் சரியான முடிவுதான் என்று சொல்வார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையில் ஆட்சி, அதிகாரம் எதுவும் அவர்கள் கையில் இல்லை. அதனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை பொறுமையைக் கடைபிடிக்க கட்டளையிடப்பட்டது. மக்கத்துக் காஃபிர்களின் தொல்லைகள் தாளாமல் பல முஸ்லிம்கள் தமது சொந்த நாட்டைத் துறந்து அகதிகளாக வேறு நாட்டில் அடைக்கலம் புகுந்தார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்களும் சொந்த ஊரைத் துறந்து அகதியாக வெளியேறினார்கள். மதீனா நகர் அவர்களை, இருகரம் நீட்டி வரவேற்று, அந்த நாட்டின் மன்னராக ஏற்றுக் கொண்டது.

மதீனா நகரத்தின் ஆட்சியதிகாரம் நபி (ஸல்) அவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இப்போது நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மன்னர் நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இப்போதுதான் ''உங்களை எதிர்த்து போருக்கு வருபவர்களுடன் நீங்கள் போர் செய்யுங்கள்'' என இறைக் கட்டளை வருகிறது. முறையான ராணுவம் அமைத்து, போர் வீரர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள் போருக்குத் தயாராகின்றனர். (மதீனா வந்த பின்னும் மக்கத்து காஃபிர்களின் தொல்லைகள் தொடர்ந்து கொண்டுதானிருந்தது என்பது பற்றி இதே தொடரில் பிறகு சொல்லயிருப்பதால் இங்கு தவிர்க்கப்படுகிறது)

போர் நடத்துவதற்கு ஆட்சி அவசியமா?

போர் செய்வதற்கு மட்டுமல்ல, நாட்டின் இறையாண்மையைக் காக்கவும் - குடிமக்கள் நலம் பேணவும், குற்றங்கள் நடக்காமல் தவறுகளைத் தடுக்க, தவறு செய்பவர்களை தண்டிக்கவும், ஆட்சியும் ஆட்சியை நடாத்திச் செல்ல அதிகாரம் பெற்ற மன்னர், அரசர், ராஜா அல்லது ஆட்சித் தலைவர் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் மிக அவசியமாகிறது.

//அரசியல் இஸ்லாம்
அரசியல் இஸ்லாம் என்பது முகமதுவால் துவங்கப்பட்டது. முகமது என்பவர் தமக்கு கிட்டிய ஆன்மீக அனுபவங்களை வைத்து உலகை கறுப்பு வெள்ளையாகப் பிரித்தார்(அதாவது தம்மை நம்புவோர்கள் , தம்மை நம்பாதவர்கள் - பிற்காலத்தில் இதுவே முஸ்லிம்கள் காபிர்கள் என்றானது).//
- இது கோணல் புத்தியுடையவரின் உளறல்.

ஆன்மீக இஸ்லாம், அரசியல் இஸ்லாம் என இரண்டு இஸ்லாத்தை இறைவன் ஏற்படுத்தவில்லை. மாறாக ஆன்மீகம், அரசியலையும் உள்ளடக்கிய ஒரே இஸ்லாத்தையே இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான். இறைத்தூதர் என்பவர் ஆசிரமத்தை அமைத்து அமர்ந்து கொண்டு, தன்னை நாடி வருபவர்களிடம் காணிக்கைகளைப் பெற்று ஆசீர்வாதங்களையும், பிரசாதங்களையும் வழங்கும் ஒரு ஆசிரமச் சாமியாராகவே நேசகுமார் என்பவர் கற்பனை செய்திருக்கிறார். பாவம் அவரால் ஆன்மீகம் என்பதை அதைக் கடந்து சிந்திக்க முடியவில்லை. அதனால் இஸ்லாம் கூறும் அரசியலும் ஆன்மீகம் என்பதை அவரின் குறைமதி ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

இறையாட்சியை நிறுவுவதே இறைத்தூதர்களின் வருகையாக இருந்தது. இறைவனின் வழிகாட்டல், இறை வணக்க வழிபாடு என்ற ஆன்மீகம் மட்டும் என்பதை இஸ்லாம் ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. வணக்க வழிபாடு எனும் ஆன்மீகம் மனித வாழ்க்கையில் ஒரு சிறு பகுதிதான். இறைவனை, நின்று, குனிந்து, நெற்றியை தரையில் வைத்து மண்டியிட்டு வணங்கும் வழிபாடுகளோடு இஸ்லாம் நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக தனி மனிதனிலிருந்து, ஆட்சியாளர்கள் வரை அரசியலிலும் ஒவ்வொரு துறையிலும் வழிகாட்டலை வழங்கி, அவ்வழியைக் கடைபிடித்து செயல்படுவதும் ஆன்மீகம் என்றே இஸ்லாம் கூறுகிறது.
போர் செய்வதற்கு முன் போர் படையை வழி நடத்த ஓர் அரசனைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான திருக்குர்ஆன் வசனங்கள்...

2:246. (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம், ''நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்'' என்று கூறிய பொழுது அவர், ''போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?'' என்று கேட்டார்; அதற்கவர்கள்; ''எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?'' எனக் கூறினார்கள். எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.

2:247. அவர்களுடைய நபி அவர்களிடம் ''நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்'' என்று கூறினார். (அதற்கு) அவர்கள், ''எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள். மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே!'' என்று கூறினார்கள். அதற்கவர், ''நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், (யாவற்றையும்) நன்கறிபவன்'' என்று கூறினார்.

(நபிமார்கள் அரசர்களாகவும் இருந்திருக்கிறார்கள். நபி இறைவனின் பாதையில் வழிகாட்டியாக இருந்து, வேறொருவர் ஆட்சியின் மன்னராகவும் இருந்திருக்கிறார் என்பதை, 2:246, 247 ஆகிய வசனங்களிலிருந்து விளங்கலாம்)

அநீதிக்கு எதிரான போர்.

இஸ்லாமியப் போர்கள் முதல் தொடரில் குறிப்பிட்டது போல் மக்காவை விட்டு, வெளியேற இயலாத - வழி தெரியாத பலவீனமான முஸ்லிம்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். இவர்களின் மீதும் குரைஷிகளின் அடக்கு முறை மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது. மக்கத்துக் காஃபிர்களின் அடக்கு முறைக்கு ஆளான முஸ்லிம்களின் பிரார்த்தனை இவ்வாறாக இருந்தது.

4:75. பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) ''எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக'' என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம் என்று விமர்சிக்கும் இஸ்லாத்தின் எதிரிகள் படிப்பினைப் பெற வேண்டிய வசனங்களில் 4வது அத்தியாயத்தின் 75வது வசனமும் ஒன்றாகும். இஸ்லாத்தைத் தவறாக விளங்கி பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்தும் மிகச் சில அரைகுறை முஸ்லிம்களும் இந்த வசனத்தை சரியாக விளங்கிக் கொண்டால் பயங்கரவாதச் செயலை இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்பதை புரிந்து கொள்வார்கள்.

மக்கத்துக் காஃபிர்களின் அடக்கு முறைக்கு ஆளாகித் துன்பத்திற்கு தள்ளப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களை போராடச் சொல்லவில்லை. தனி மனிதன் அல்லது ஒரு குழுவின் மீது அநீதி இழைக்கப்பட்டு அவர்கள் போராடலாம் என்பதை மேற்கண்ட (4:75வது) வசனம் நியாயப்படுத்தவில்லை. மாறாக அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ''அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் ஏன் போர் செய்யக்கூடாது?'' என்று மதீனாவில் இருக்கும் இஸ்லாமிய ஆட்சியை நோக்கி இந்தக் கேள்வியை முன் வைக்கிறான் இறைவன்.

முன்பு ஆட்சியதிகாரம் இல்லாத நிலையிலிருந்து போர் செய்வதைத் தடுத்த இறைவன், மதீனாவில் ஆட்சியதிகாரம் அமைக்கப்பட்ட பின் போர் செய்யக் கட்டளையிடுகிறான்...

4:77. ''உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக!'' என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு ''எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக, ''இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது. நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.''

மக்காவில் துன்பங்களை அனுபவித்த போதும், நாடு துறந்து அபிஸீனிய நாட்டிற்கு சென்ற போதும் முஸ்லிம்களுக்கு படை திரட்டும்படி கட்டளையிடப்படவில்லை. மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி அமைந்ததும் நாட்டை பாதுகாக்கவும், எதிரிகளைப் போரில் சந்திக்கவும் படை பலத்தைத் தயார் செய்து கொள்ள - ராணுவத்தை பலப்படுத்திக் கொள்ளச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் தனி மனிதனுக்கோ, ஒரு குழுவைச் சேர்ந்தவர்களுக்கோ பிறப்பிக்கப்பட்டக் கட்டளையில்லை. மாறக ஆட்சியிருப்பவர்களுக்கு ராணுவத்தை திறமையாக நிர்வாகிக்கும்படி சொல்லும் அறிவுரைகள்.

8:60. அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்) அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும். (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.

இஸ்லாமிய ஆட்சியிலும் பலமில்லாத ராணுவத்தை வைத்துக் கொண்டு, போர் என்ற பெயரில், போர் செய்யும் வீரர்களை பலி கொடுக்கச் சொல்லவில்லை இஸ்லாம். எதிரி நாட்டின் போர்ப் படையில் பாதி பலத்தையேனும் பெற்றிருந்தால் மட்டுமே போருக்கு தயாராகும்படிச் சொல்கிறது. கீழ்காணும் வசனங்கள்...

8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள். உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க முனையும் போது குறைந்த பட்சப் படைபலம் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கிலிருந்தால் மட்டுமே இஸ்லாமிய ஆட்சியாளர்கள் போருக்கு தயாராக வேண்டும். அதை விடக் குறைவாக இருந்தால் ஆட்சியாளருக்கும் போர் செய்வது கடமை இல்லை. சதவிகிதத்தில் குறைவான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தைப் பெற்ற ஒரு நாடு போர் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனும் போது, தனி நபர், அல்லது ஒரு குழுவாகச் சேர்ந்து ''ஜிஹாத்'' என்ற பெயரில் செய்யும் பயங்கரவாதத்தை ஒரு போதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

தனி மனிதர்களின் செயல்பாடுகளை வைத்து இஸ்லாம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மார்க்கம் என்று இஸ்லாத்தை விமர்சிக்கும் எதிரிகளின் கருத்தில் நேர்மை இல்லை!

விளக்கங்கள் தொடரும்)

அன்புடன்,
அபூ முஹை