Friday, July 04, 2008

யூத, கிறிஸ்தவர்களின் பிளவுகள்.

நபி ஈஸா (அலை) அவர்களின் வருகைக்கு முன்னர் யூதர்கள் தமக்குள் கருத்து வேறுபாடுகள் கொண்டு பல்வேறு கூட்டங்களாகவும், கோஷ்டிகளாகவும் பிளவுண்டு போனதுதான் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட முதல் கருத்து வேறுபாடும் பிளவுமாகும். அவர்களின் திருத்தூதராக நபி மூஸா (அலை) அவர்களும், திருவேதமாக தவ்ராத்தும் இருந்தும் அவர்கள் மாச்சரியங்களுக்கு ஆளாகி ஸதூக்கீ, ஃபார்சீ, ஆஸீ, ஃகாலீ, சாமிரீ என ஐந்து கோஷ்டிகளாகப் பிரிந்து போனார்கள். அவர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனிக் குறிக்கோளும் அடையாளங்களும் இருக்கின்றன.

ஈஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் திருத்தூதர்களில் ஒருவராகவும், அவர்களின் திருத்தூதர்கள் வரிசையில் இறுதியானவராகவும் வந்தும் அவர்கள் மீண்டும் ஒருமுறை யூத, கிறிஸ்தவர்கள் என இரண்டாகப் பிரிந்தார்கள். ஈஸா (அலை) அவர்கள் தவ்ராத் வேதத்தை மெய்ப்பிப்பதற்காகவே வந்திருந்தும் கூட இந்த நிலை! யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்குமிடையில் நிகழ்வுற்ற கருத்து வேறுபாடுகள், பிளவுகள், போட்டி, பொறாமைகள், போராட்டங்கள், உயிர் பலிகள் ஆகியவற்றை வரலாற்றில் படிக்கும் போது நம் நெஞ்சம் பதறுகிறது, உடல் நடுங்குகிறது.

கி.பி அறுநூறுகளின் ஆரம்பத்தில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான பகைமையும் குரோதமும் உச்சகட்டத்தை அடைந்தது. இரு இனத்தாரும் ஒருவரையொருவர் வெறுக்கவும், ஒருவர் நற்பெயருக்கு மற்றவர் களங்கம் கற்பிக்கவும், மானம் மரியாதைகளைக் கடித்துக் குதறிக்கொள்ளவும் ஆரம்பித்தார்கள். மனிதாபிமானமற்ற வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. துருக்கி ரோமானியர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது, கி.பி. 610ல் அதன் நகரங்களின் ஒன்றான அந்தாக்கியாவின் தலைமைத் திருச்சபைத் தலைவர் யூதர்களை கிறிஸ்தவர்களுக்கெதிராகத் தூண்டி விட்டதால் அங்கே பெரும் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை அடக்குவதற்காக ரோமானியப் பேரரசன் தனது தளபதி 'போனோஸஸ்' (Bonosus) என்பவனைப் பெரும் படையுடன் அனுப்பி வைத்தான்! போனோஸஸ் கலவரத்தை அடக்கும் சாக்கில் மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டான்! பல்லாயிரக்கணக்கானோர் வாளுக்கும், நீரில் மூழ்கடிக்கப்பட்டும், உயிருடன் கொளுத்தப்பட்டும், வன விலங்குகளுக்கு இரையாகப் போடப்பட்டும் பலியாயினர். இவ்வாறான கொடூர மதச் சண்டைகள் யூத கிறிஸ்தவர்களிடையே பல முறை நடந்திருக்கின்றன.

எகிப்தின் சிறந்த வரலாற்றுப் பேராசிரியரான 'அல் மக்ரீஜீ' (Al-Makrezy) அவர்கள் தமது அல்குத்தத் என்னும் வரலாற்று நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

ரோமானியப் பேரரசன் ஃபோக்காவின் காலத்தில் பாரசீக மாமன்னன் 'கிஸ்ரா' தனது படைகளை எகிப்து, சிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பினான். அவர்கள் 'கத்ஸ்' (Gadix) பாலஸ்தீனம், சிரியா ஆகியவற்றின் பெரும்பான்மையான நகரங்களிலிருந்த கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். கிறிஸ்தவர்களை முற்றாகக் கொன்றொழித்தார்கள். கிறிஸ்தவர்களைத் தேடிக்கொண்டு எகிப்துக்கும் வந்தார்கள். அங்கு வாழ்ந்த ஏராளாமான கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்துவிட்டு எண்ணிலடங்காதவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டும் சென்றார்கள். இத்தனை கொடுமைகளுக்கும் ஆங்காங்கே வாழ்ந்த யூதர்களே துணை நின்று காட்டிக் கொடுத்தார்கள்.

'தபரிய்யா' (Taberiade) ஜபலுல் ஜலீல், நாஸரேத் (Nazareth), சோர் (sour), கதஸ் (Gadix) போன்ற நகரங்களிலிருந்தெல்லாம் பெருந்திரளான யூதர்கள் முன் வந்து பாரசீகப் படைகளுடன் சேர்ந்து கொண்டு வன்மத்துடனும் குரோதத்துடனும் கிறிஸ்தவர்களை எவ்வளவு பேரிழப்புக்கும் சேதத்துக்கும் உள்ளாக்க முடியுமோ அவ்வளவும் செய்தார்கள். கதஸிலிருந்த இரண்டு மாபெரும் கிறிஸ்தவ தேவாலங்களைத் தகர்த்தெறிந்தார்கள். அவர்களின் வீடு வாசல்களைத் தீக்கிரையாக்கினார்கள். சிலுவைகளை உடைத்தெறிந்தார்கள். கதஸின் கத்தோலிக்கத் திருச்சபைப் பேராயரையும் அவரது நண்பர்களில் பெரும்பாலோரையும் சிறைப்பிடித்தார்கள். இத்தனை கொடுமைகளுக்கும் பின்னர் கதஸை வெற்றி கொண்டார்கள்.

இதற்கிடையில் யூதர்கள் சோர் (sour) என்ற நகரத்தில் கலவரத்தை மூட்டி விட்டார்கள். தமது இனத்தாரை பல நகரங்களுக்கும் அனுப்பி ஆங்காங்கே கலவரங்களை மூட்டி கிறிஸ்தவர்களைக் கொன்று குவிக்குமாறும், தேவாலங்களை இடித்துத் தகர்க்குமாறும் ஏவி விட்டார்கள். உள் நாட்டுக் கலவரங்கள் பெருமளவுக்கு மூண்டன. 'சோரில்' இருபதினாயிரம் யூதர்கள் ஒன்று திரண்டு நகரத்துக்குள்ளும் வெளியிடங்களிலும் கிறிஸ்தவ கோயில்களை இடித்து உடைத்தார்கள். செய்தி காட்டுத் தீ போல் பரவி கிறிஸ்தவர்கள் எண்ணிறந்தோர் திரண்டு கிளர்ந்தெழுந்து யூதர்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு மூர்க்கத்தனமாகத் தாக்கத் தலைப்பட்டார்கள். முடிவில் யூதர்கள் பெரும்பாலோரைக் காவு கொடுத்துவிட்டு படு மோசமான தோல்வியைத் தாங்கிக் கொண்டு ஓடிப் போனார்கள். இதற்கிடையில் ்ஹெர்குலிஸ்' என்கிற மாவீரன் பாரசீக மன்னன் கிஸ்ராவை வென்று கான்ஸ்டண்டி நோபிளில் ரோமாப் பேரரசனாக முடி சூட்டிக்கொண்டு, அங்கிருந்து பாரசீகர்களால் சீரழிக்கப்பட்ட சிரியா, எகிப்து ஆகிய நாடுகளை சீரமைப்பதற்காக திக் விஜயம் புறப்பட்டான்.

அவனது திக் விஜயத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட யூதர்கள் முந்திக் கொண்டு தபரிய்யா மற்றும் ஏனைய நகரங்களிலிருந்து புறப்பட்டுப்போய் அவனைச் சந்தித்தார்கள். மிக விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அவனுக்குக் காணிக்கையாக்கி அவன் தமக்கு அபயம் அளிக்க வேண்டும் என்று அவனிடம் சத்தியப் பிரமாணமும் வாங்கிக் கொண்டார்கள். பின்னர் அவன் அங்கிருந்து புறப்பட்டு கதஸுக்குச் சென்றான். அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள், பைபிள்களையும், சிலுவைகளையும், நறுமணப் புகைக் கிண்ணங்களையும் கைகளில் ஏந்தியவர்களாய் அவனுக்கு முகமன் கூறி வரவேற்றார்கள். அங்கே வெறித் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டும், தேவாலயங்கள் இடிக்கப்பட்டும் அவன் கண்ட காட்சிகள் அவனை உலுக்கி விட்டன. பெரும் துயரத்துக்கும் வேதனைக்கும் ஆளானான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட கிறிஸ்தவர்கள் ஹெர்குலிஸிடம் யூதர்கள் செய்த அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் எடுத்துச் சொன்னார்கள். பாரசீகர்களால் தமக்கு நேர்ந்த துன்பங்களைவிட யூதர்களால்தான் மிகப்பெரும் துன்பங்களும் துயரங்களும் தமக்கு இழைக்கப்பட்டன என்று தமது சோகக் கதைகளை கண்ணீர் மல்க அவனிடம் எடுத்துக் கூறினார்கள்.

இந்தக் கொடுமைகளுக்காக அவன் யூதர்களைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று அவனைத் தூண்டி விட்டார்கள். அவனோ, தான் யூதர்களுக்கு ஏற்கெனவே அபயம் அளிப்பதாக சத்திய வாக்கு அளித்துவிட்டதாய் எவ்வளவோ கூறிப் பார்த்தான். ஆனால் அவர்களின் பாதிரிகளும் பண்டிதர்களும், பேராயர்களும், ''நடந்தது தெரியாமல் அவன் கொடுத்த வாக்கையும் சத்தியத்தையும் அவன் காப்பற்றத் தேவையில்லை'' என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள். மேலும், அவனது சத்தியத்தை அவன் முறிப்பதற்காகத் தாமும் ஏனைய கிறிஸ்தவர்களும் எப்போதும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வெள்ளிக் கிழமையன்று நோன்பு நோற்று அதற்குப் பிராயச் சித்தம் செய்வதாக அவனுக்கு வாக்குறுதியும் அளித்தார்கள். அவனும் முடிவில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி யூதர்களின் மீது மிகக் கொடூரமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டான்! ரோமாபுரிப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட எகிப்து, சிரியா ஆகிய நாடுகளிலிருந்து தலைமறைவாகிவிட்ட அல்லத ஓடி விட்ட யூதர்களைத் தவிர வேறு யூதர்களே அங்கே இல்லை என்னும் அளவுக்கு அவர்களைக் கொன்று குவித்தான்.

இங்கு எடுத்துச் சொல்லப்பட்ட செய்திகளிலிருந்து யூத, கிறஸ்தவர்களான இந்த இருசாராரும் எவ்வளவு மூர்க்கத்தனமாக மனித இரத்தத்துடன் விளையாடும் கொடுமைக் குணம் படைத்தவர்களாயிருந்திருக்கிறார்கள் என்பதும் தத்தமது பகைவர்களைப் பழிவாங்குவதற்குத் தக்க தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள் என்பதும், அதற்காக விதிமுறைகளையம் வரம்புகளையும் மீறுவதற்குத் தயாராக இருந்தார்கள் என்பதும் மிகத் தெளிவாகப் புரிகிறது.

திருக்குர்ஆனின் நிழலில் என்ற நூலிலிருந்து.

*****

திருக்குர்ஆன் 98வது - ''அல்பய்யினா'' - அத்தியாயம், தொடக்க ஐந்து வசனங்கள் யூத, கிறிஸ்தவர்களைக் குறித்துப் பேசுகிறது. தவ்ராத் வேதத்தைப் பெற்றிருந்த யூதர்கள் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் கொண்டு சில கோஷ்டிகளாக பிளவுபட்டனர் என்றும், நபி ஈஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் இறைத்தூதராக இருந்தும் யூத, கிறிஸ்தவர்கள் என மேலும் பிளவுபட்டு வன்முறையில் இறங்கி ஒருவரையெருவர் அழித்துக்கொண்டனர்.

திருக்குர்ஆன், 098:001-005 வரையுள்ள வசனங்களுக்கு விளக்கமாக மேற்கண்ட இந்த வரலாற்றுத் தகவலைக் குறிப்பிடுகிறார்கள்.

வசனங்கள்,

098:001 வேதக்காரர்களிலும், இணை வைப்பவர்களிலும் (ஏக இறைவனை) எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.

098:002 (அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).

098:003 அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் உள்ளன.

098:004 எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.

098:005 'அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும். மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும். மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.'

யூத, கிறிஸ்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிளவுபட்டார்கள் என்பது மேற்கண்ட இறைவசனத்தின் விளக்கம். கிறிஸ்தவர்களும் தம்மில் கருத்து வேறுபாடு கொண்டு பிளவுபட்டு ரோமானியப் பேரரசனின் அடக்குமுறைக்கு ஆளானார்கள் என்பது வரும் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்து.

*****

அடுத்து, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இறைத்தூதரும் இறை வேதமும் ஒன்றுதான் என்றிருந்தும் அவர்கள் தமக்கிடையே எப்படிக் கருத்து வேறுபாடுகளுக்கும் பிளவுகளுக்கும் ஆளானார்கள் என்பதைப் பார்ப்போம். முதலில் அவர்கள் கொள்கையில் தமக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டு பிளவுண்டு போயினர். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் பகைமையும் வெறுப்பும் கொண்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு பல கோஷ்டிகளாகப் பிரிந்து போனார்கள். அந்தக் கருத்து வேறுபாடுகள் அனைத்தும், இயேசு கிறிஸ்துவும் அவரது தாயார் மர்யமும் மனிதர்கள்தாமா? அல்லது தெய்வங்களா? என்பது பற்றியும் அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதைப் போலக் கடவுளும் ஒருவராகச் சேர்ந்த ''மும்மைக் கடவுள் தத்துவம்'' (Trinity) பற்றியுமே இருந்தன. திருக்குர்ஆன் அவர்களின் அந்தக் கருத்து வேறுபாடுகள் குறித்துப் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறது.

005:072. ''நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்'' என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; ''இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்'' என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

005:073. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்;. ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.

5:116. இன்னும், ''மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?'' என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், ''நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்'' என்று அவர் கூறுவார்.



இந்த மதக் கருத்து வேறுபாடுகள் முற்றி உச்சக்கட்டத்தையடைந்து ரோமாபுரி, சிரியா ஆகியவற்றைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் மோனோபிஸிட்ஸ் (Monophysites - இயேசு கிறிஸ்துவின் திருமேனியில் தெய்வீகம் என்ற ஓரியல்பு மட்டுமே இருக்கிறது என்கிற கோட்பாட்டாளர்)களாகவும், எகிப்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 'மால்க்கிட்ஸ்' (Malkites - இயேசு கிறிஸ்துவின் திருமேனியில் மனிதத்துவமும், தெய்வீகமும் கலந்திருக்கின்றன என்கிற கோட்பாட்டாளர்)களாகவும் பிளவுண்டு போனார்கள். மோனோபிஸிட்ஸ்கள் இயேசுவின் மனிதத்துவம் என்னும் ஒரு துளிப் பால் கடவுளின் தெய்வீகம் என்கிற பெருங்கடலில் சங்கமமாகி இரண்டறக் கலந்து இப்போது அவரில் தெய்வீகம் மட்டுமே உள்ளது என்று வாதித்தார்கள்.

கி.பி. அறுநூறு எழுநூறுகளில் இந்த மோதல் முற்றி இரண்டு போட்டி மதங்களிக்கிடையே நடக்கும் மூர்க்கத்தனமான போரைப் போன்றும், யூத, கிறிஸ்தவர்களுக்கிடையில் நடந்து வந்த முரட்டுத்தனமான சண்டையைப் போன்றும் மாறியது. கிறிஸ்தவர்களின் இரு பிரிவினராகிய ஒவ்வொருவரும் மற்றவர்களை அவர்கள் ஒன்றுமேயில்லை என்று கூறிக்கொண்டு தாக்கிக் கொள்ளத் தலைப்பட்டார்கள்.

இந்த மதச் சண்டைகளைக் கண்டுமனம் வெதும்பிய - ரோமாபுரியை கி.பி. 610லிருந்து 641 வரை ஆண்ட - ரோமானியப் பேரரசன் ஹெர்குலிஸ் கி.பி. 638ல் பாரசீகத்தை வெற்றி கொண்டதும், ஒருவருக்கொருவர் அடித்துப் பிடித்துக் கொண்டிருந்த கிறிஸ்தவ மதப் பண்டிதர்களை அழைத்து அவர்களுக்குள் ஒரு சமாதானத்தை ஏற்படுத்தினான். அந்தச் சமாதான உடன்படிக்கையானது, இனிமேல் நம்மில் யாரும் இயேசுகிறிஸ்துவின் இயல்பு பற்றி, அவர் மனிதரா? தெய்வமா? அல்லது இரண்டுமா? என்கிற சர்ச்சைகளில் ஈடுபடுவதில்லை என்றும், எல்லாம் வல்ல கடவுள் ஒருவனுக்கு மட்டுமே ஆக்கவும் அழிக்கவும் தீர்மானிக்கும் அதிகாரம் உண்டு என நம்மில் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும் என்றும் நிறைவேறியது.

ஏற்கெனவே கி.பி. 631ல் ஹெர்குலிஸ் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் மோனோத்திஸம் (Monotheism - ஒரு கடவுட் கோட்பாடு) என்கிற இந்த கோட்பாட்டை அமல்படுத்தியிருந்தான்! தனது ரோமாப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட எல்லா கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அந்தக் கொள்கையே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவும் போட்டிருந்தான்! அந்தப் புதிய மதக் கோட்பாட்டை கருத்து வேறுபாடுகளுக்குள்ளான ஏனைய எல்லாப் பகுதி கிறிஸ்தவர்களையம் பின்பற்றச் செய்து விடவேண்டும் என்கிற உறுதியுடன் அவன் எவ்வளவோ பிரயத்தனப்பட்டான்! எல்லா வழிகளையும் மேற்கொண்டு பார்த்தான்! ஆயினும் எகிப்தைச் செர்ந்த பாதிரிகள் அவனது இந்தப் புதிய மதக் கோட்பாட்டுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். தமக்கும், அவனது அந்தக் கோட்பாட்டுக்கும் எந்த ஒட்டுறவும் இல்லை என்று கூறி விலகிக் கொண்டார்கள். தமது பழைய மதக் கோட்பாட்டில் உறுதியாக நின்றதுடன் அதற்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தார்கள்.

இறைவன் ஒருவனுக்கு மட்டுமே ஒன்றைத் தீர்மானிக்கும் ஆற்றல் உண்டு என்கிற, தனது புதிய மதக் கோட்பாட்டின் கீழ் கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்திடவும், அவர்களுக்கிடையிலுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்திடவும் மீண்டும் ஒரு முறை மன்னன் ஹெர்குலிஸ் பாடுபட்டான்! தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கடவுளுக்குத் தந்த அவனது புதிய மதக் கோட்பாடு அதைச் செயல்படுத்தும் அதிகாரம் யாருக்கு உண்டு என்பதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை! மக்கள் அவனது சித்தாந்தங்களை ஏற்பதற்குத் தயாராயில்லை! அவனும் அதற்காக அவர்களை விட்டுவிடத் தயாராயில்லை! தனது புதிய மதக் கோட்பாட்டையே அரசு அங்கீகாரம் பெற்ற சட்டமாக்கி, மேற்கத்திய நாடுகள் அனைத்தும்க்கும் அதனைக் கொண்டு சென்று பார்த்தான்! யாரும் அதற்கு மசிவதாயில்லை! முரட்டுத்தனமான பிடிவாதத்திலிருந்த எகிப்தியர்களையோ அது எந்த விதத்திலும் திருப்திப்படுத்துவதாக அமையவில்லை!

முடிவில், ஹெர்குலிஸ் பத்து ஆண்டுகள் தொடர்ந்து அடக்குமுறை அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டான்! அந்தப் பத்தாண்டு காலத்தில் எகிப்தில் நடைபெற்ற இனப் படுகொலைகளையும், சித்திரவதைகளையும் படிக்கும்போதே நமது நெஞ்சு பதறுகிறது! மேனி நடுங்குகிறது! அந்தப் பத்தாண்டு காலத்தில் மக்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்! சித்திரவதை முகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டுச் சாகடிக்கப்பட்டார்கள்! தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டு அவை அந்த துரதிஷ்டசாலிகளின் உடல்களை நோக்கிப் பிடிக்கப்பட்டன! அந்தப் பந்தங்கள் கக்கிய தீச்சுவாலையின் வெம்மையில் அவர்களின் உடலிலுள்ள கொழுப்பு உருகி இருபுறங்களிலும் வழிந்தோடியது. சிறைக் கைதிகள் சிலர் மணல் நிரம்பிய சாக்கு மூட்டைகளுக்குள் வைத்துத் தைக்கப்பட்டு கடலில் வீசி எறியப்பட்டார்கள்! இன்னோரன்ன கொடுமைகளும் சித்திரவதைகளும் அங்கே கட்டவிழ்த்து விடப்பட்டன!

இத்தனை கொடுமைகளும் கருத்து வேறுபாடுகளும் அந்த வேதக்காரர்களுக்குத் தெளிவான சான்று வந்திருந்தும் நிகழ்வுற்றன.

நூல்: திருக்குர்ஆனின் நிழலில்

*****
இங்கு, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் கருத்து வேறுபாடுகள் கொண்டு பிளவுபடவில்லையா? வன்முறையில் இறங்கவில்லையா? என்ற கேள்வியெழலாம். அதை மறுக்கவோ அல்லது முந்தைய மதங்களில் தான் கருத்து வேறுபாடுகள் கொண்டு பிளவுபட்டார்கள, வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பதை நிறுவவோ இந்த வரலாற்றுக் குறிப்புகளை இங்கு நாம் எழுதவில்லை.

மாறாக, ஒரு நாட்டை ஆளும் அரசனின் ஆட்சியோடு அந்நாட்டின் இறையான்மையாகிய இறை மார்க்கமும் சம்பந்தப்பட்டிருப்பதால் ஓர் அரசன் நேர்வழி பெற்று, நேர்வழிக்கு வரும்படி குடிமக்களையும் அழைத்திட வேண்டும். (அதில் அடக்கு முறைகள் கூடாது. மார்க்க அழைப்பில் அடக்கு முறையை இஸ்லாம் ஆதரிக்கவில்லை)

''அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழியே'' என தமிழில் ஒரு முதுமொழி உண்டு. மார்க்க விஷயத்தில் குடிமக்களின் குற்றமும் அரசனைச் சாரும் என்று இஸ்லாம் கூறுகிறது. இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அரசர்களுக்குக் கடிதம் மூலம் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள். அதில் அவர்கள் முக்கியமாகக் குறிப்பட்டு எழுதிய வாசகம் இதுதான்,

''நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். ''நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்.''

நபி (ஸல்) அவர்கள் பல அரசர்களுக்கு கடிதம் எழுதி இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள். அதில் ஓமன் நாட்டு அரசருக்கு எழுதிய ஒரு கடிதத்தைச் சுட்டிக் காண்பித்து இதுதான் ''இஸ்லாம் அமைதி மார்க்கமா?'' என இஸ்லாத்தை விமர்சிக்கும் சில பிற மத நண்பர்கள் முஸ்லிம்களை நோக்கி பல கேள்விகள் வைத்துள்ளனர். அவர்கள் பிரமாண்டமாகக் காட்டிக்கொள்ளும் அளவிற்கு அக்கடிதத்தில் ஒன்றுமில்லை எனறாலும், ''எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?'' என்றிருப்பதுதான் இவர்களைப் பொருத்தவரை அமைதி மார்க்கத்தின் அளவுகோலாக இருக்கிறது.

அநீதிகள், அக்கிரமங்கள் இழைக்கப்பட்டு, அமைதி இல்லாத இடத்திலும், அநீதியை ஒடுக்குவதன் மூலமும் இஸ்லாம் அமைதியை ஏற்படுத்தும். இதையும் ''இஸ்லாம் அமைதி மார்க்கம்'' என்றும் சொல்லலாம்.

தொடர்ந்து, அண்டை நாட்டு அரசர்களுக்கு நபியவர்கள் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுத்து எழுதிய கடிதங்களைப் பார்ப்போம். (இறைவன் நாடட்டும்)

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

2 comments:

Unknown said...

பல தகவல்களுடன் சிறப்பான கட்டுரை. நன்றி

அபூ முஹை said...

நன்றி! சுல்தான்