Monday, May 12, 2008

மதம் மாறினால் மரண தண்டனை-3

முஸ்லிம்கள் இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்களைக் கூறும் போது, அது இஸ்லாத்தின் சட்டமில்லை காஃபிர்களின் சட்டம் என்று சில பிற மத நண்பர்கள் கூறுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை அரசியல், ஆட்சி, இராணும் இன்னும் இவை போன்ற நாட்டைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான சட்டங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. காஃபிர்களே இச்சட்டங்களை வகுத்திருக்கின்றனர், இவையெல்லாம் காஃபிர் சட்டங்கள் என்பதால் இவற்றிலிருந்து முஸ்லிம்கள் உதாரணம் சொல்லக்கூடாது என்பது இஸ்லாத்தை விமர்சிக்கும் சிலரின் கூற்று.

இவர்கள் எங்கிருந்து இவ்வாறு புரிந்து கொண்டார்கள்! அதனால் கீழ்கண்டவாறு விமர்சனத்தை எழுப்புகிறார்கள்.

11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி?

பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.

ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் --- அவர்கள் செய்துள்ளார்கள்.


தேசத் துரோகம்

அதாவது, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவதும், இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்கு விற்பதும் தேசத் துரோகம். என்ற சட்டம் காஃபிர்களால் இயற்றப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் இதை உதாரணம் காட்டிப் பேசுவது சந்தர்ப்பவாதம் என்று இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் சொல்கின்றனர். இவர்களின் வாதம் தவறானது. இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்தக்கூடாது, இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவிக்கக்கூடாது என மறைமுகமாக அல்ல, நேரடியாகவே இஸ்லாமும் கண்டிக்கிறது. இதைப் பார்ப்பதற்கு முன்,

உலகில் எல்லா நாடுகளும் தன் நாட்டின் தகுதிக்கேற்றவாறு இராணுவம் வைத்திருக்கும். இதற்கு முஸ்லிம் நாடுகள், காஃபிர் நாடுகள் என்ற விதிவிலக்கு எதுவுமில்லை. எதிரி நாட்டுடன் சண்டையிட நேர்ந்தால் நட்பு நாட்டின் இராணுவ உதவியை நாடுவதுண்டு. இதற்கும் காஃபிர் நாடுகள், முஸ்லிம் நாடுகள் என்ற வேற்றுமை இல்லை!

இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சாதாரண போராளியும், வெளிப்படுத்தக்கூடாத இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தினால் அது தேசத்துக்கே ஊறு விளைவிக்கும் தேசத் துரோகம் என்பதில் எந்த நாட்டின் இராணுவச் சட்டத்திலும் மாற்றுக் கருத்து இல்லை. அது காஃபிர் நாடாகவோ, முஸ்லிம் நாடாகவோ இருந்தாலும் சரியே, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவது தேசத் துரோகம் என்றே இஸ்லாமும் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சியை அமைத்தார்கள். அந்த ஆட்சியில் இராணுவம் இருந்தது. முஸ்லிம், காஃபிர், என இரு எதிரி இராணுவத்திலும் உளவு பார்க்கும் ஒற்றர்கள் இருந்தார்கள். முஸ்லிம் ஒற்றர் காஃபிர்களிடம் சிக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார். காஃபிர் ஒற்றர் முஸ்லிம்களிடம் சிக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8ம் ஆண்டு மக்காவைக் கைப்பற்றுவதற்காக இராணுவப் படையுடன் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்தப் போருக்கான ஏற்பாடுகளை இரகசிமாக மேற்கொண்டு வந்தார்கள். இந்தப் படையெடுப்பு மக்கத்துக் குரைஷியற்கு தெரிந்து விடக்கூடாது என்பது நபியவர்களின் எண்ணமாக இருந்தது.
ஆனால், நபித்தோழர் ஹாத்திப் (ரலி) அவர்கள் இந்தப் படையெடுப்பு இரகசியத்தை குரைஷியற்குத் தெரிவிப்பதற்காக கடிதம் எழுதி ஒரு பெண்மணி மூலமாக மக்காவுக்கு அனுப்பி வைக்கிறார். இறைவன் வஹீ மூலமாக இச்சம்பவங்களை நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்தான். உடனடி நடவடிக்கையாக கடிதம் கொண்டு செல்லும் பெண்மணி வழியில் மடக்கப்பட்டுக் கடிதம் கைப்பற்றப்படுகிறது.

கடிதத்தில் உள்ள விபரங்கள் அறிந்து ''ஹாத்திபே என்ன இது'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு ''அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குரைஷியரில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் (இணைவைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து அதற்கு பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (இணைவைப்பவர்கள் கேட்டுக்கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்) நான் என் மார்க்கத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை'' என்று ஹாத்திப் (ரலி) கூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் ''இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' என்று கூறினார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள் இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்'' என்றார்.

(நபிமொழியின் சுருக்கம். முழு விபரங்கள் அறிய பார்க்க தமிழ் புகாரி, ஹதீஸ் எண்கள்: 3007, 3081, 3983, 4274)

நபித்தோழர் ஹாத்திப் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்து கொண்டவராவார். இஸ்லாமிய ஆட்சியின் போர் நடவடிக்கையை எதிரி நாட்டுக்கு தெரிவித்தது பெரும் குற்றம் என்றாலும் அவருடைய உள்ளத்தில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. மக்காவிலிருக்கும் தனது உறவினர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதால், மதீனாவிலிருந்து புறப்படவிருக்கும் முஸ்லிம்களின் போர்ப்படையைப் பற்றியத் தகவலை மக்காவிலிருக்கும் முஸ்லிம்களின் எதிரிகளுக்குத் தெரியப்படுத்துகிறார்.

ஹாத்திப் (ரலி) அவர்கள் சொன்னது உண்மை - ''இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' - என்று நபி (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.

''எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாயிருப்பவர்களை நீங்கள் அன்பு செலுத்தும் உற்ற நண்பர்களாக்கிக்கொள்ளாதீர்கள்'' (திருக்குர்ஆன், 060:001)

மேற்கண்ட இறைவசனம் ஹாத்திப் (ரலி) அவர்களின் தொடர்பாக அருளப்பட்டது. (பார்க்க: புகாரி ஹதீஸ் எண் 4890) இஸ்லாமிய ஆட்சி மேற்கொள்ளும் போர் நடவடிக்கைப் பற்றிய இராணுவ இரகசியங்களைச் சொல்லுமளவுக்கு எதிரிகளை உற்ற நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டாம் என இறைவசனம் கட்டளையிடுகிறது.

மேலும், இராணுவச் சட்டங்கள் காஃபிர்கள் இயற்றியது என்று தவறாக வாதமெழுப்பும் பிற மத நண்பர்களின் கவனத்திற்கு, இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவது தேசத் துரோகம் மட்டுமல்ல, இஸ்லாமிய ஆட்சியின் இராணுவப் போர் நடவடிக்கைகளை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துபவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி வேறு மதத்தைத் தழுவி விட்டாரோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதை ஹாத்திப் (ரலி) அவர்களின் வாக்கு மூலத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

''நான் என் மார்க்கத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை'' என்று ஹாத்திப் (ரலி) கூறினார்.

எனவே, இஸ்லாமிய ஆட்சி என்று அறிவித்துக்கொண்ட முஸ்லிம் நாடுகளிலும் இராணுவம் உண்டு. அந்த இராணுவத்திற்கும் இஸ்லாமிய சட்டத் திட்டங்களைக் கடைபிடிக்கும் விதிகள் உண்டு. அதனால் காஃபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் கலந்ததாகச் சொல்வது வெறும் கற்பனை.

(தேசத் துரோகம் என்பதற்கு வேறு சில அளவுகோலையும் வைத்துள்ளனர் அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்)

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

மதம் மாறினால் மரண தண்டனை-1

மதம் மாறினால் மரண தண்டனை-2

Labels: , , , , , , ,

Sunday, May 04, 2008

மதம் மாறினால் மரண தண்டனை-2

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று, இஸ்லாத்தில் இணைந்து கொள்ள விரும்பும் பிற மதத்தினர் எவரும் - ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்''  என்ற - உறுதி மொழியைக்கூறி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக்கொள்கிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய அவ்வினாடியிலிருந்து இறைவணக்கம், திருமணம், விவாகரத்து, பாகப்பிரிவினை, கடன் கொடுக்கல், வாங்கல் போன்ற இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படும் முஸ்லிம்களில் ஒருவராகி, முஸ்லிம்களுக்குள்ள கடமைகளும், உரிமைகளும் இவருக்கும் ஏற்பட்டுவிடும். அதனால் இஸ்லாத்துக்கு மதம் மாறுபவர் இஸ்லாத்தின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்ற உறுதி மொழியை வழங்கிய பின்னரே இஸ்லாத்தைத் தழுவுகிறார். இதுவே உறுதியான உடன்படிக்கையாக இருப்பதால், பிற மத நண்பர்கள் விமர்சிப்பது போல் ஸ்டாம்ப் பேப்பரில் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பார்க்க: மதம் மாறினால் மரண தண்டனை-1

முனியாண்டியும், ஜான் ஜோசப் மகன் மத்தேயுவும்.

மத்தேயுவும், முனியாண்டியும் தங்கள் தாய் மதத்திலிருந்து வெளியேறி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் இருவர் மனைவியரின் நிலை என்னவோ, அதுவே இருவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் போதும் ஏற்படும் நிலையாகும். அதாவது, முனியாண்டி தனது மனைவியுடன் இஸ்லாத்தை ஏற்றால் இருவரும் முஸ்லிமாகி இல்லற வாழ்க்கையைத் தொடரலாம். மத்தேயு இஸ்லாத்திலும், மத்தேயுவின் மனைவி தாய் மதத்திலும் இருந்தால் இருவரும் இல்லறத்தில் தொடர முடியாது.
ஏனெனில், மதக் கொள்கையால் வேறுபட்டவர்கள் மணமுடித்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள், அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன். (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (திருக்குர்ஆன், 002:221)

நம்பிக்கைக் கொண்டவரும், நிராகரித்தவரும் மணமுடித்துக் கொள்ளக்கூடாது என்பதால், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய முனியாண்டியின் மனைவி, இஸ்லாத்திலிருந்து வெளியேறாத முஸ்லிமாகவே இருப்பார் - வெளியேறிய முனியாண்டியின் மனைவியாக இருக்க மாட்டார். இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முனியாண்டி உயிருடன் இருந்தாலும், மரணித்தாலும் இரண்டும் ஒன்றுதான். அதனால் முனியாண்டியின் மனைவியாக இருந்த முஸ்லிம் பெண்மணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இஸ்லாமிய அரசு அவரை நிர்கதியாக விட்டுவிடாது. அவர் மறுமணம் செய்து கொள்ளும் வரை அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்.

(மரணித்த) ஒருவர் செல்வத்தை விட்டுச்சென்றால், அது அவருடைய வாரிவுகளுக்குரியதாகும். ஒருவர் (திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்சொன்றால் அவர்களைப் பராமறிப்பது (ஆட்சித் தலைவரான) எமது பொறுப்பாகும். (புகாரி, முஸ்லிம்)

மூஃமின்களில் யாரேனும் கடனை விட்டு மரணித்தால் அதை நிறைவேற்றவது என்னைச் சேர்ந்ததாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசுகளுக்கு உரியதாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)

ஒரு முஸ்லிம் மரணித்து விட்டால், திக்கற்ற அவரது குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பை இஸ்லாமிய அரசு ஏற்றுக்கொள்ளும். ஒரு முஸ்லிம் இஸ்லாத்திலிருந்து வெளியேறியதால் திக்கற்ற அவன் குடும்பத்துக்கும் இஸ்லாமிய அரசு ஆதரவு அளிக்கும். எனவே இஸ்லாத்திருந்து வெளியேறிய முஸ்லிம் தண்டிக்கப்படடால் அவரின் முஸ்லிம் மனைவி மறுமணம் செய்து கொள்ளும்வரை அக்குடும்பத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அரசின் ஆதரவு இருக்கும். என்பதை இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் உணர்ந்து, தேவையெனில் ஸ்டாம்ப் பேப்பர் தயாரித்துக் கொள்ளுங்கள் உங்கள் மதத்தைத் தழுவ வருபவர்களுக்காக!

அடுத்து, காஃபிர்களின் சட்டங்களை முஸ்லிம்கள் உதாராணமாக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எது இஸ்லாத்தின் சட்டம்? எது காஃபிர்களின் சட்டம்? என்பது பற்றி அடுத்த பகுதியில், நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Labels: , , , , , ,

Monday, April 28, 2008

போர் ஆயுதங்கள் தயாரித்தல், சேகரித்தல்.

உலக நாடுகளில் வல்லரசு தரத்தில் உள்ள நாடுகள் ஆயுதங்களைத் தயாரித்து வியாபாரம் செய்கின்றன. எல்லா நாடுகளும் எந்நேரத்திலும் எதிரிகளைச் சந்திக்க நேரலாம் என நாட்டின் நலன் கருதி போர் ஆயுதங்களைத் தயாரிக்கின்றன, வேறு நாடுகளிலிருந்தும் ஆயுதங்களை வாங்குகின்றன.

மாட்டுத் தீவனம் ஊழல், நிலக்கரி ஊழல் என போர் ஆயுதங்கள் வாங்குவதிலும் போபர்ஸ் ஊழல், ஆயுதப்பேர ஊழல் எனவும் நடந்தேறியுள்ளது. சரி,

தனி மனிதக்கும் தன்னுயிர் தற்காப்புக்காக ஆயுதங்கள் தேவைப்படுகிறது. முக்கியப் புள்ளிகளாக இருந்தால் ஆயுதம் தாங்கிய வீரர்களை அவருக்குப் பாதுகாப்பாக வழங்கப்படுகிறது. முக்கியப் புள்ளிகளின் குடும்பத்தினக்கும் ஆயுதம் தாங்கியவர்கள் பாதுகாப்புக்காக நிற்கின்றனர். நீதியை நிலைநாட்டும் நீதிபதி, மக்கள் தொண்டாற்றும் அதிகாரி, என நாட்டுக்கு பாதுகாப்பு வழங்கும் ராணுவ அதிகாரிக்கும் பாதுகாப்புத் தேவையாக உள்ளது என்றால், எதிரிகளை அச்சமடைய செய்வவும், எதிரிகள் திடீர் தாக்குதல் நடத்தினால் எதிர் தாக்குதல் தொடுப்பதற்கும் அல்லாமல், அது வன்முறை - பயங்கரவாத செயலோ அல்ல.

போர்க் கருவிகளில் அபாயம் நிறைந்த நவீனங்கள் வரவில், அணுவை ஆயுதமாக்கும் தொடக்கம் அப்பாவித்தனமாகத் தொடங்கி, அணுகுண்டு தயாரிக்கும் ஆய்வுக்காக 200 கோடி டாலர்கள் செலவு செய்து அதைச் சோதிக்க ஹிரோஷிமாவும், நாகசாகியும் தேவைப்படுகிறதென்றால் ''இதோ பார், என்னிடம் பலம் வாய்ந்த ஆயுதங்கள் உள்ளன'' என்று எல்ரோரையும் அச்சமடைய செய்வதற்கல்லாமல் வேறு எதற்கு!

ஈனோலாகே என்று சொல்லப்பட்ட வல்லரசு விமானம் உலக வரலாற்றில் முதன் முறையாக 1945,ஆகஸ்ட் 6ம் நாளில் ஹிரோஷிமா நகரில் தன் சோதனையை வீசியதில் 1,40000 மக்கள் பலியானார்கள். மீண்டும் 1945, ஆகஸ்ட் 9ம் நாளில் நாகாசாகியில் அணுகுண்டு வீசியதில் 75,000 மக்கள் பலியானார்கள்.

உலக நாடுகள் அதிர்ந்தன, அச்சமடைந்தன. இன்றும் வீராப்புப் பேசினாலும் வல்லரசின் போர் ஆயுதங்களுக்கு அச்சம் விலகிடவில்லை.

விஷயத்துக்கு வருவோம்,

மேலைநாட்டு குறும்படத் தயாரிப்பளார் கீட் வைல்டெர்ஸ் என்பவர் தயாரித்து வெளியிட்ட பிட்னா எனும் குறும்படத்தை குறித்து ஒரு கீழை நாட்டவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்,


//டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கீட் வைல்டெர்ஷ் என்பவர் த்யாரித்த குறும்படமே இன்று உலகில் பிட்னா என்ற வார்த்தையை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. கிட்டதட்ட பதினைந்து நிமிடங்களே ஓடும் இந்தப் படத்தில் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் குரான் வசனங்களும் உலகளாவிய இஸ்லாம் பயங்கரவாதம் குறித்த காட்சிகளையும் காண்பிக்கின்றனர். அந்த படத்தில் வரும் குரான் வசனங்களை தமிழில் கீழே கொடுத்துள்ளேன். இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை அல்லா அல்ல வன்முறையே என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. இந்த பிட்னா படத்தின் விடீயோ லின்க்கையும் கீழே கொடுத்துள்ளேன்://


பதினைந்து நிமிடங்கள் காட்சித்தரும் குறும்படம் தாயாரித்து இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்பதை ஒரு மேலை நாட்டவர் உணர்த்தி விட்டார். பதினைந்து நிமிடங்கள் காட்சியளிக்கும் ஒரு குறும்படத்தைப்பார்த்து இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்பதை ஒரு கீழை நாட்டவர் உணர்ந்து கொண்டார்.

இஸ்லாம் வன்முறை, பயங்கரவாத மார்க்கம் என்பதற்கு இவர்கள் எடுத்து வைக்கும் திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்று:

அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்) அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்க பூரணமாகவே வழங்கப்படும் (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (திருக்குர்ஆன், 008:060)

இஸ்லாம் - முஸ்லிம்களின் எதிரிகள் மக்காவில் இருந்தனர். மதீனாவில் முஸ்லிம்கள் இருந்தனர். மக்காவுக்கும், மதீனாவுக்கும் இடையே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவு உள்ளன. இன்று ஆகாய மார்க்கமாக ஒரு மணி நேரம். தரை மார்க்கமாக பேரூந்தில் சுமார் ஐந்து மணி நேரம். ஆனால், அன்று மக்காவுக்கும் மதீனாவுக்கு இடையே சுமார் பத்து நாட்கள் பயணமாக இருந்தது.

இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற வெறியோடு படைகளைத் திரட்டிக்கொண்டு மதீனாவை நோக்கிப் புறப்பட்டனர். இதை அறிந்த முஸ்லிம்கள், எதிரிகளை ஊருக்குள் நுழைவதைத் தவிர்க்க, மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்று, மக்கா நோக்கிச் செல்லும் பாதையில் சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த பத்ர் எனுமிடத்தில் எதிரிகளைச் சந்தித்தனர். இஸ்லாத்தின் எதிரிகள் இந்தப் போரில் தோல்வியைத்தழுவினர். முஸ்லிம்கள் வெற்றிப்பெற்றனர். (நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த காலத்தில் நடந்த முதல் போர்)

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறோம் என்றால் முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் அவர்களை உண்டு, இல்லை என ஆக்கிவிட வேண்டும் என்பதில் இஸ்லாத்தின் எதிரிகள் குறியாக இருந்தனர். ஆள் பலம், ஆயுதபலம், போர் வாகனங்கள், பொருள் பலமும் எதிரிகளிடம் வலுவாக இருந்தன. முஸ்லிம்கள் பலவீனமாக இருந்தார்கள்.

எதிரிகள் அச்சமடையவும், அவர்களை யுத்தத்தில் சந்திப்பதற்காகவும், முஸ்லிம்கள் தங்களைப் பலபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து திருக்குர்ஆன், 008:060ம் வசனம் பேசுகிறது. இது தனி மனிதனுக்கோ அல்லது குழுவிற்கோ சொல்லப்பட்டதல்ல.

இரண்டாவது அகபா உடன்படிக்கை வரலாறு அறிந்தவர்களுக்கு விளங்கும், மதீனாவில் இஸ்லாத்தை ஏற்ற அன்ஸாரிகள், நபி (ஸல்) அவர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையே அகபா ஒப்பந்தம்.

அகபா உடன்படிக்கையின் மூலம் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு அழைப்பு விடுத்து, அங்கு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யலாம், இதனால் எதிரிகளின் தாக்குதலில் இருந்து எங்கள் உயிரைக் கொடுத்தாவது நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றுவோம். என அன்ஸாரிகள் உடன்படிக்கை செய்து, நபியவர்களை மதீனாவுக்கு அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வழைப்பை ஏற்று மதீனா சென்றார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் துவங்கியது.

நபி (ஸல்) அவர்களும், அன்ஸாரிகளும் செய்துகொண்ட இரண்டாவது அகபா உடன்படிக்கையை குறைஷித் தலைவர்கள் அறிந்து ஆத்திரமடைந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு உதவியதன் மூலம் குறைஷியற்கு அன்ஸாரிகள் எதிரியானார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்த போது, மதீனாவாசிகள் நபியவர்களைத் தலைமையாக ஏற்றுக்கொண்டனர். தனது தலைமை பறிபோனதே என அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் என்பவன் உறவாடிக் கெடுக்க, வஞ்சனையுடன் இஸ்லாத்திற்குள்ளிருந்தே இஸ்லாத்தின் எதிரியாகச் செயல்பட்டான். இவனுக்கு ஆதரவு அளிக்கவும் வேறு சில எதிரிகள் இருந்தனர். இவ்வாறு பல வழிகளிலும் அறிந்தும், அறியாமலும் எதிரிகள் இருந்தனர். அவர்களை அச்சமடையச் செய்யவும், அவர்கள் போரிட்டால் எதிர்த்துப் போர் செய்யவும் ஆயுதங்களையும், போர் வாகனங்களையும் தயார்படுத்திக் கொள்ளுங்கள். என ஆட்சியாளருக்குச் சொல்லப்படுகிறது.

''அல்லாஹ்வின் எதிரிகளையும்.

உங்கள் எதிரிகளையும்.

அவர்கள் அல்லாத மற்றவர்களையும்.

நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ்வே அறிவான்'' என்று இந்த 008:060 வசனம் கூறுகிறது.

மக்காவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது மட்டுமல்லாமல், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் தீர்த்துக்கட்டும் வெறியுடன் போர்த் திட்டங்களை வகுத்த எதிரிகளின் அபாயத்திலிருந்து, இஸ்லாமிய அரசு நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக போர் ஆயுதங்களைத் தயாரிப்பது - சேமிப்பது வன்முறை - பயங்கரவாதம் என்றால், நாட்டின் பாதுகாப்பிற்காக போர் ஆயுதங்களை வைத்திருக்கும் அத்தனை நாடுகளும், வன்முறை - பயங்கரவாத நாடுகள் என்று முத்திரைக் குத்திவிடலாம்.

போர், வன்முறை இவ்விரண்டுக்கும் வித்தியாசத்தை உணர முடியாத அளவுக்கு இவர்களிடம் இஸ்லாமிய வெறுப்பு மிஞ்சியுள்ளது.

ஃபித்னா என்றால் வன்முறை - பயங்கரவாதம் என்பதற்கு குறும்படத்தில் சொல்லிய இன்னும் மற்ற திருக்குர்ஆன் வசனங்களையும் அடுத்துப் பார்ப்போம் நன்றி!

முந்தைய விளக்கம்: ஃபித்னா என்றால் என்ன?

அன்புடன்,
அபூ முஹை

Labels: , , , , , , ,

Wednesday, April 23, 2008

மதம் மாறினால் மரண தண்டனை-1

ஒரு முஸ்லிம் மதம் மாறினால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற கருத்தில் பிறமத நண்பர்கள் சமீபமாக தங்களின் விமர்சனத்தை எழுதி வருகிறார்கள். உலகளவில் 80ஆயிரம் முஸ்லிம்கள் மதம் மாறியுள்ள தகவலையும் முன்பு எழுதியுள்ளனர். எங்கு முஸ்லிம்கள் மதம் மாறினாலும் அதைப்பதிவு செய்ய தாமதப்பதில்லை. அந்த அளவுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மீது பற்றுள்ளவர்கள்.

மதம் மாறிய 80ஆயிரம் முஸ்லிம்களுக்கும் மரண தண்டைனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதா? என்று நாம் கேட்க மாட்டோம். சமீபத்தில் பழனியில் மதம் மாறிய ராசிமுஹம்மது, நாசர்ஹஸன் இரு முஸ்லிம்கள் மதம் மாறியும், அவர்கள் தண்டனை பெறவில்லை என்பதை அனைவரும் அறிவோம்.

கொலைக்குக் கொலை எனவும் விபச்சாரத்துக்கும் இஸ்லாம் மரண தண்டனை விதிக்கிறது. இம்மரண தண்டனை அவ்வளவாக விமர்சிக்கப்படுவதில்லை. ஆனால், மதம் மாறினால் மரண தண்டனை என்பதை ஆஹா, ஓஹோவென அபாரமாக விமர்சிக்கின்றனர். ஒருவேளை, மதம் மாறினால் மரண தண்டனை விதியைக் குறித்து அறிந்திராத முஸ்லிம்களை எச்சரிக்கும் நல்லெண்ணமாக இருக்கலாம், இருக்கட்டும்.
இதில் இஸ்லாத்தின் கருத்து என்ன? என்பதை தொடர்ந்து எழுதுமுன், தர்க்க ரீதியாக இவர்கள் சொல்லும் கருத்து சரியா? என்பதைப் பார்ப்போம்.

கணினியில் மென் பொருள், கெட்டிப் பொருள் தரவிறக்கம் செய்யுமுன், அதை உருவாக்கியவர்கள் Agree - ஒப்புக்கொள், இணங்கு என நிபந்தனை விதிப்பார்கள். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே பொருளை பதிவிறக்கம் செய்ய முடியும். பெரும்பான்மையினர் நிபந்தனையை வாசிக்காமலேயே ஒப்புக்கொள்கிறேன் - Agree என்று சொடுக்கிவிடுவர். இதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்றாலும் நாளை பிரச்சனை என்று வந்தால் சிக்கலை ஏற்படுத்தும்.

வலைப்பூ திரட்டிகள், மன்றங்கள், இணையங்கள் இவைகளில் சேரும் போது அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை படிக்காமல் சம்மதம் தெரிவித்து, சேர்ந்தபின் நிபந்தனை என்னவென்று தெரியாமலேயே அதை மீற நேர்ந்தால் அங்கு வல்லு வழக்கு ஏற்படுவதை அனுபவமாக தெரிந்து கொள்கிறோம்.

இந்த அனுபவம் கணினித் துறையில் மட்டுமில்லை, எல்லாத் துறைகளிலும் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் Agree - ஒப்புக்கொண்டு சேர்ந்தபின் விதிகளை மீறுவதால் அங்கு பணியாற்றுபவர்கள் தற்காலிக நீக்கம், நிரந்தர நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது ராணுவம், நீதி, காவல், அரசு, அரசியல், தொழில் மற்றும் தனியார் துறைகளிலும் உள்ள அனுபவம்.

இனி விஷயத்துக்கு வருவோம், ஒரு பிறமத நண்பர் இவ்வாறு எழுதுகிறார்...

இனி யாராவது முஸ்லீமாக மாறினால், ... நீங்கள் ஒரு ஸ்டாம்ப் காகிதத்தில்(Stamp Paper):

"ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய‌ மத்தேயு என்னும் பெயர் கொண்ட‌ நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக‌, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக‌ நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக‌ அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே"

இப்படிக்கு,

முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு

சாட்சி 1:

சாட்சி 2:

என்று எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டு இஸ்லாமில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வீர்களானால், இனி யாராவது "ஏன் இஸ்லாம் அவரை கொன்றது?" என்று கேள்வி கேட்டால், அந்த நபர் கையெழுத்து போட்ட காகிகத்தை காட்டலாம், உங்களுக்கு இஸ்லாமின் சட்டத்தின் தண்டனையை நியாயப்படுத்த‌ காபிர்களின் சட்டத்தில் உள்ள தண்டனையை எடுத்துக்காட்டாக காட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.


பிறமத நண்பரின் மேற்கண்ட விமர்சனம் புத்திசாலித்தனமாகத் தோன்றினாலும், ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்க அறிவுரை சொல்வது கவ்வைக்குதவாத வாதம். ஒருவன் எந்த மதத்தைத் தழுவினாலும், மதத்தில் இணையும் போதே அம்மதத்தின் விதிகளை Agree - மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட பின்பே அம்மதத்தைத் தழுவுகிறான்.

முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவும் போது ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்'' என்று உறுதிமொழி எடுத்த பின்பே இஸ்லாத்தில் இணைகின்றனர். இங்கு இஸ்லாத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்படுகிறேன் என Agree - ஒப்புதல் தெரிவித்து, இஸ்லாத்தின் இணைந்தபின் மதம் மாறினால் மரண தண்டனை என்ற விதியையும் ஏற்றுக்கொண்டே இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். பிறகு எதற்கு ஸ்டாம்ப் பேப்பர்?

ஸ்டாம்ப் பேப்பர் பிற மதத்தைத் தழுவும் பிற மத நண்பர்களுக்கு வேண்டுமானால் தேவைப்படலாம். இஸ்லாத்துக்கு அவசியமில்லை. முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தில் நுழையும்போதே மதம் மாறினால் மரண தண்டனை என்ற பிரமாணத்தையும் ஏற்று மதம் மாறுகின்றனர். என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்.

அடுத்து, மதம் மாறி மரண தண்டனை விதிக்கப்பட்டவனின் மனைவியின் நிலை என்ன? என்று மிகவும் அக்கறையோடு ஆலோசனை எழுதியுள்ளனர். முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவுமுன்பு இருவர் மனைவியின் நிலை என்ன? என்பதற்கான தீர்வையும் இவர்கள் எழுதியிருக்கலாம். எழுதியிருந்தால் சார்பற்றதாக இருந்திருக்கும்.

பரவாயில்லை, அடுத்த பதிவில் அது குறித்து நாம் விளக்குவோம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Labels: , , , , , ,

Tuesday, April 22, 2008

Fithna - Fiத்னா என்றால் என்ன?

இஸ்லாம் மார்க்க வழிகாட்டி, திருக்குர்ஆனில் ஃபித்னா என்ற வாசகம் அல்ஃபித்னா, வல்ஃபித்னா ஃபித்னா இன்னும் பல உச்சரிப்பில் சுமார் 60 வசனங்களில் இடம்பெற்றுள்ளது. இன்னும் ஹதீஸ் நூற்களில் ஃபித்னா என்ற வாசகம் அதிகமாக இடம்பெற்றுள்ளன. ஃபித்னா என்றால் என்ன பொருள்? என்று தெரிந்து கொள்வதற்கு முன்,..

மேலைநாட்டு குறும்படத் தயாரிப்பளார் கீட் வைல்டெர்ஸ் என்பவர் தயாரித்து வெளியிட்ட பிட்னா எனும் குறும்படத்தை குறித்து ஒரு கீழை நாட்டவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்,

//சமீபத்திய நாட்களில் பரபரப்பான செய்திகளில் ஒன்று பிட்னாவுக்கு எதிரான முஸ்லீம்களின் உலகளாவிய போராட்டம் ஆகும். இந்த பிட்னா என்றால் என்ன? முஸ்லீம்கள் அல்லாதவர்கள் மேல் தொடரப்படும் தாக்குதல் போர்,யுத்தம் அல்லது பயங்கரவாதமே பிட்னா ஆகும்.For further details http://en.wikipedia.org/wiki/Fitna_(word)
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கீட் வைல்டெர்ஷ் என்பவர் த்யாரித்த குறும்படமே இன்று உலகில் பிட்னா என்ற வார்த்தையை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. கிட்டதட்ட பதினைந்து நிமிடங்களே ஓடும் இந்தப் படத்தில் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் குரான் வசனங்களும் உலகளாவிய இஸ்லாம் பயங்கரவாதம் குறித்த காட்சிகளையும் காண்பிக்கின்றனர். அந்த படத்தில் வரும் குரான் வசனங்களை தமிழில் கீழே கொடுத்துள்ளேன். இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை அல்லா அல்ல வன்முறையே என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. இந்த பிட்னா படத்தின் விடீயோ லின்க்கையும் கீழே கொடுத்துள்ளேன்://


இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்ற ஆதாரமற்றக் கட்டுக் கதைகள் புளித்துவிட்டது. ஆனால் ஃபித்னாவுக்கு கொடுத்த விளக்கம் அறியாமையால் விளைந்த புதுக்கதை. மேலை நாட்டாரானாலும், கீழை நாட்டாரானாலும் விமர்சனம் தெளிவாக, அறிவுப்பூர்வமாக இருந்தால் வரவேற்கத்தக்கது. இந்த இரு நாட்டாரும் ஃபித்னா என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்திருப்பதை கவனித்தால், திருக்குர்ஆனிலிருந்து அந்த வாசகத்தையே அறிந்திருக்கவில்லை என்பது தெளிவு.

ஃபித்னா என்றால் என்ன?

ஃபித்னா (குழப்பமும் - கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். (திருக்குர்ஆன், 002:191)

ஃபித்னா (குழப்பம் - கலகம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. (திருக்குர்ஆன், 002:217)

ஃபித்னா என்றால்: கலகம், குழப்பம், சோதனை, துன்புறுத்தல், திசை திருப்பல் என திருக்குர்ஆனில் பல பொருளில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

'உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும்..'' (திருக்குர்ஆன், 003:007)

''கலகம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்படும்போதெல்லாம் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். (திருக்குர்ஆன், 004:91)

(நபியே) உம்மைக் குழப்புவார்கள் (திருக்குர்ஆன், 005:049)

''எந்த சோதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணி விட்டனர்'' (திருக்குர்ஆன், 005:71)

''அவர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இவ்வாறு சோதித்தோம்'' (திருக்குர்ஆன், 006:053)

ஒரு சோதனையை அஞ்சிக்கொள்ளுங்கள் (திருக்குர்ஆன், 008:025)

என் சமுதாயமே இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்'' (திருக்குர்ஆன், 020:90)

சோதனைக்குள்ளாக்கப்பட்ட பின்.. (திருக்குர்ஆன், 016:110)

(நபியே) உம்மைத் திசை திருப்ப முயன்றனர் (திருக்குர்ஆன், 017:073)

நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள்'' (திருக்குர்ஆன், 027:047)

''உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் சோதனையே'' (திருக்குர்ஆன், 064:015)

(இன்னும் பார்க்க திருக்குர்ஆன் வசனங்கள்: 002:102,193. 008:028,039,073. 010:085. 017:060. 021:035,111. 022:011,053. 024:063. 025:020. 029:010. 037:063. 039:049. 054:027. 060:005. 074:031)

ஹதீகளிலும் ஃபித்னா என்ற வாசகம் சோதனை, குழப்பம் என்ற கருத்தில் சொல்லப்பட்டுள்ளது. அன்றாடம் இறைவணக்கத்தில் ஈடுபடும் முஸ்லிம்கள், தொழுகையின் இருப்பில் கேட்கப்படும் பிராத்தனையில்...

''அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மின் அதாபி ஜஹன்னம், வ அவூதுபிக்க மின் அதாபி கப்ர், வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹுத் தஜ்ஜால், வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்,'' என்ற துஆவாவை குர்ஆனில் உள்ள சூராவை கற்றுத் தருவது போன்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)

பொருள்: இறைவா! நரக வேதனையை விட்டும் உன்னிடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறேன். கப்ர் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனையை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

மேற்கூறப்பட்டவை ஃபித்னா என்பதற்கான விளக்கமாகும். ஃபித்னா என்றால் முஸ்லிம்களல்லாத பிற மக்கள் மீது தொடுக்கும் போர் என அகராதியிலேயே இல்லாத புது அர்த்தத்தை இவர்கள் கற்பிப்பதிலிருந்து காழ்ப்புணர்வு எந்த அளவுக்கு இவர்களின் உச்சந்தலைக்கு ஏறியுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இதற்கு wikipedia எனும் தளத்தை ஆதாரம் காட்டுவது இன்னும் வேடிக்கை. wikipedia என்பது எவர், எதை வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம் என்ற அளவுக்கு பொதுவான இடம். அதில் 2+2=4 என்றும் எழுதிவைக்கலாம், 2+2=3 என்றும் எழுதிவைக்கலாம். அதாவது தப்பும், தவறுமாக எதை வேண்டுமானாலும் அதில் பதிவு செய்து, அதையே மற்ற இடங்களில் ஆதாரமாக குறிப்பிட முடியும்.

உண்மைக்கும் உளறலுக்கும் வெகுதூரம். எவ்வளவு உளறல்களை எழுதினாலும், படம் எடுத்து காட்டினாலும் அவை ஒரு உண்மைக்கு ஈடாகாது. ஃபித்னா என்றால் பிற மதமக்கள் மீது தொடுக்கும் போர், பயங்கரவாதம் என ஒரு மேலை நாட்டவரின் உளறலை அப்படியே தமிழில் வாசிக்காமல் அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை சொந்தமாக பரிசீலனை செய்து சுயமாக விமர்சிக்க வேண்டும். இல்லையேல் சாய்கிற பக்கமே சாயும் செம்மறி ஆடுகளின் நிலையாகும்.

அவர்களைக் கொல்லுங்கள், நிராகரிப்பவர்களின் கழுத்தில் வெட்டுங்கள் என்ற வசனங்களுக்கான விளக்கம் இங்கு படிக்கவும். உணர்ந்து, குறும்படத் தயாரிப்பாளருக்கும் உணர்த்தவும். அறிவற்ற எதையும் அறிந்து கொள்ளாமல் வதந்திகளை பரவச்செய்து, ''பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்'' (002:011)

மற்ற வசனங்களுக்கு விளக்கம் வரும் பதிவுகளில்.

அன்புடன்,
அபூ முஹை

Labels: , , , , , , , ,