Saturday, January 22, 2005

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை பகுதி 6

பகுதி ஆறு

தவாபுஸ் ஸியாரா.
ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயல்களில் இந்தத் தவாபுஸ் ஸியாராவும் ஒன்று. இந்தத் தவாபைச் செய்யாதவரை ஹஜ் நிறைவு பெறாது.

ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து, குர்பானி கொடுத்து, தலை முடி நீக்கி, இஹ்ராமிலிருந்து விடுபட்ட ஹாஜிகள், தவாபுஸ்ஸியாராச் செய்வதற்கு கஃபத்துல்லாஹ்வை நோக்கி புறப்படுகின்றனர்.

இன்றைய தினம் செய்யும் இந்தத் தவாபுஸ்ஸியாரா என்பது மிகவும் சிரமமானது தான். இது நாள் வரை ஹாஜிகள், எத்தனையோ முறை- புனிதக் கஃபாவை தவாப் செய்திருக்கலாம். அப்போதுள்ள கூட்ட நெரிசலே அதிகமாக இருந்திருக்கும். ஆனால் இன்று பெரும்பாலும் அத்தனை இலட்சம் ஹாஜிகளும், தவாபுஸ்ஸியாராவை நிறைவேற்ற மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து விடுகின்றனர்.

இன்றைய தினம், மஸ்ஜிதுல் ஹராமில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. சுப்ஹானல்லாஹ்! இன்று தவாபை முடித்து வெளியில் வருவது என்பது இலேசான காரியமல்ல.

கஃபா என்னும் இறையாலயத்தை- இன்றைய தினம் புனித ஹாஜிகள் சுற்றி வரும் காட்சியை- மஸ்ஜிதுல் ஹராமின் இரண்டாவது- மூன்றாவது தளங்களில் நின்று பார்த்தால்- பார்த்துக் கொண்டே இருக்கலாம். கண்கொள்ளாக் காட்சி!

ஏறக் குறைய இருபது இலட்சம் பேர் சுற்றுகிறார்கள். கடல் அலையைப் போல் - மனித வெள்ளம் சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றது.

ஏழுச் சுற்றுக்களை முடித்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். புதிதாக நுழைபவர்கள் தங்கள் சுற்றுக்களைத் தொடங்குகின்றனர்.

இன்று காலை முதல் தொடங்கிய நெரிசல்- இன்று பகல் முழுவதும் நீடிக்கின்றது. இரவு முழுவதும் தொடர்கின்றது. உணவை மறந்து, உறக்கத்தை மறந்து, எப்படி இவர்கள்- கொஞ்சம் கூடக் களைப்பு இல்லாமல் சுற்றுகிறார்கள்.

இன்றைய தினம் காலையிலிருந்து ஒவ்வொரு செயலாகச் செய்து முடித்து விட்டு- எவ்வளவு சுறுசுறுப்பாக தவாபும் செய்கின்றனர்! இயலாமையும் சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போக - இளமையும் வலிமையும் எங்கிருந்து இவர்களுக்கு வந்தது?

இறைவனின் கட்டளையை சிரமேற் கொண்டு வந்தவர்களுக்கு, உற்சாகமும், உத்வேகமும் தாமாக வந்து விடுமோ! இன்றைய தினத்தின் செயல்களை, தவறுதலாகவோ, அறியாமையாலோ, முன் பின் மாற்றிச் செய்து விட்டாலும் குற்றமில்லை.

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது நான் வந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, 'நான் இதற்கு முன் இது என நினைத்தேன்!" என்றார். இன்னொருவர் எழுந்து 'நான் இதற்கு முன் இது என நினைத்தேன்! பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்! கல்லெறிவதற்கு முன் பலியிட்டு விட்டேன்." என இது போன்றவற்றைக் கூறலானார். அவ்வனைத்திற்குமே, நபி (ஸல்) அவர்கள், 'குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்" என்றே கூறினார்கள். அன்றைய தினம் வினவப்பட்ட எல்லாவற்றிற்குமே அவர்கள் 'குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்" என்றே கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) ஆதாரம்: புகாரி (1737)
----------------------------------
துல் ஹஜ் 11 ஆம் நாள் - ஹஜ்ஜின் 4 ஆம் நாள்.
தவாபுஸ்ஸியாராவை முடித்த ஹாஜிகள். ஏற்கனவே 8 ஆம் நாள் மினாவில் தங்கியிருந்த கூடாரங்களுக்கு- மறுபடியும் வந்து சேருகின்றனர். இன்று முதல், மூன்று தினங்கள், ஒவ்வொரு நாளும், சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு- மூன்று ஜம்ராவுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாளில் (துல் ஹஜ் 10 ஆம் நாள்) முற்பகல் நேரத்தில் கல்லெறிந்தார்கள்.மறு நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: புகாரி (பாடம் 134)

இன்று முதல், மூன்று தினங்களுக்கு தினமும் ஜம்ரத்துஸ் ஸுக்ரா, ஜம்ரத்துல் உஸ்தா, ஜம்ரத்துல் அகபா, ஆகிய மூன்று ஜம்ராக்களிலும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும்.

நபி (ஸல்) மினா பள்ளி வாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும் போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்று கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு இடது பக்கமாகப் பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நின்று கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள் பின்பு அங்கிருந்து திரும்பி விடுவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள். அறிவிப்பவர்: ஸுஹ்ரி (ரலி) ஆதாரம்: புகாரி (1753)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செய்துக் காட்டிய அதே முறையைப் பின்பற்றி ஹாஜிகள் ஜம்ராக்களில் கல் எறிகிறார்கள். முதல் நாள் இருந்த அளவுக்கு மக்கள் நெரிசல் அடுத்தடுத்த நாட்களில் இல்லை. அவரவர் தம் வசதிப்பட்ட நேரங்களில் வருவதால்- கூட்டம் சற்று குறைவாகத் தெரிகிறது.

ஒவ்வொரு நாளும் கல்லெறிந்து விட்டு மினாவில் அவரவர் கூடாரங்களில் சென்று ஹாஜிகள் ஓய்வெடுக்கின்றனர். கிடைக்கின்ற நேரமெல்லாம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழிக்கின்றனர். மினாவில், பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கும் அந்தந்த நாட்டு ஹஜ் கமிட்டியினராலும்- தனியார் ஹஜ் சர்வீஸ்கள் மூலம் வந்தவர்களுக்கு அந்தந்த நிறுவனத்தினராலும், தனித்தனியே கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டினருக்காகவும், அமைக்கப்பட்டுள்ள கூடாரப் பகுதிகளில் அந்தந்த நாட்டு தேசியக் கொடி அடையாளத்துக்காக பறக்கவிடப்பட்டுள்ளது. உள் நாட்டிலிருந்து தனிப்பட்ட முறையில் வந்தவர்கள் கூடாரங்களை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்கின்றனர்.

கூடாரங்கள் கிடைக்கப் பெறாதவர்கள், தங்குவதற்கென- நீண்ட பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கங்களில் இலவசகமாகத் தங்கிக் கொள்ளலாம். எல்லா இடங்களிலும் தாராளமாகத் தண்ணீர் வசதியும் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
--------------------------------
துல் ஹஜ் 12 ஆம் நாள்- ஹஜ்ஜின் 5 ஆம் நாள்
முன் தினத்தைப் போலவே - இன்றும் ஹாஜிகள் சூரியன் உச்சியை விட்டு சாய்ந்த பிறகு தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டு மூன்று ஜம்ராக்களிலும், முறையே ஏழு கற்கள் வீதம் எறிகின்றனர்.

முதியவர்கள் மற்றும், இயலாதவர்களுக்குப் பகரமாக மற்றவர்கள் கல்லெறியலாம். பகரமாக எறிபவர்கள், முதலில் தமக்காக எறிந்துக் கொள்ள வேண்டும். பிறகு தம்மைப் பகரமாக நியமித்தவர்களுக்காக எறிய வேண்டும். வழக்கம் போல் ஹாஜிகள் ஒவ்வொரு கல்லாக எறிகின்றார்கள். ஒவ்வொரு கல் எறியும் போதும் தக்பீர் கூறுகிறார்கள். முதல் இரண்டு ஜம்ராக்களிலும் நின்று துஆச் செய்து விட்டு மூன்றாவது ஜம்ரவாகிய ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்ததும், நின்று துஆச் செய்யாமல் திரும்பி விடுகின்றனர்.
--------------------------
துல் ஹஜ் 13 ஆம் நாள்- ஹஜ்ஜின் 6 ஆம் நாள்
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை. (இது இறைவனை) அஞ்சுவோருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடம் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்! (திருக் குர்ஆன் 2:203) 11 ஆம் நாளும், 12 ஆம் நாளும் ஆகிய இரு தினங்கள் மட்டும் கல்லெறிந்து விட்டு புறப்படுபவர்கள் புறப்படலாம். ஆனால் மஃரிபுக்கு முன் புறப்பட்டு விட வேண்டும். இன்று மினாவில் தங்கினால், 13 ஆம் நாளும் கல்லெறிந்து விட்டுத் தான் புறப்படவேண்டும்.

இரண்டு நாட்கள் மட்டும் கல்லெறிந்து விட்டு புறப்படுபவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள் 13 ஆம் நாளும் கல்லெறிந்து பூரணமாகத் தங்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றி விட்டுத் தான் புறப்படுகின்றனர். இன்றைய தினத்துடன் புனித ஹஜ்ஜின் அனைத்து செயல்களும் நிறைவடைகின்றன. எந்தப் புனிதக் கடமையை நிறைவேற்ற- இப்பூவுலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும்- இப்புனித பூமிக்கு வந்தனரோ! அந்தப் புனிதக் கடமையின் அனைத்து செயல்களும் இன்றோடு முடிவடைந்து விட்டன. அல்ஹம்து லில்லாஹ் .
-----------------------------------
புறப்படத் தயாராகின்றனர்.
புனித ஹாஜிகள் புனித ஹஜ்ஜின் அனைத்துக் கடமைகளையும் பூரணமாக நிறைவேற்றி- புண்ணியம் பெற்ற புனித ஹாஜிகள்- ஒரு சில தினங்கள் புனித மக்காவில் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட விடுதிகளில் வந்து தங்கி இளைப்பாறுகின்றனர்.

புனித மக்காவின் கடை வீதிகள் நிரம்பி வழிகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்- புனித மக்காவின் கடைகள் முழுதும் குவிந்துக் கிடக்கின்றன. புனித ஹாஜிகள்- ஹஜ்ஜை முடித்து தம் இல்லங்களுக்குத் திரும்பும்போது- தம்மை அன்புடன் எதிர் பார்த்து காத்திருக்கும்- உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும், அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர்.

திரு மறை குர்ஆன் பிரதிகள், தொழுகை விரிப்புகள், வாசனைத் திரவியங்கள், சுவையான பேரீத்தம் பழங்கள், புனித ஹஜ்ஜின் நினைவாக- காலமெல்லாம் வைத்துப் பாதுகாக்க- பல்வேறு பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்கின்றனர். உறவினர்களுக்கு வழங்க - ஜம்ஜம் தண்ணீரையும் தேவையான அளவு எடுத்து வைக்கத் தவறவில்லை.

(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. (திருக் குர்ஆன் 2:198)

உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ், ஆகியவை அறியாமைக் காலத்தில் கடை வீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும், அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினார்கள். அப்போது உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை (2:198) என்ற வசனம் இறங்கியது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)ஆதாரம்: புகாரி (2050)

எனவே புனித ஹாஜிகள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதில் தவறில்லை.
-----------------------------
'தவாபுல் விதா"
''தவாபுல் விதா'' எனும் பயணத் தவாபு யாரேனும் ஹஜ் செய்தால், அவரது கடைசிக் காரியம் பைத்துல்லாஹ்வில் (தவாபு செய்வதாக) அமையட்டும். மாதவிடாய் ஏற்பட்டவர்களைத் தவிர, என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களுக்கு விதிவிலக்கு அளித்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (866)

பயணத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டு- பயணத் தவாபு செய்வதற்கு ஹாஜிகள் தயாராகி விட்டனர். மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து- ஹஜருல் அஸ்வத் இருக்கும் இடத்திலிருந்து தவாபைத் தொடங்கி- ஏழு முறை கஃபாவை வலம் வந்து- மகாமே இப்ராஹீமில் தொழுது- ஜம்ஜம் நீரருந்தி- தங்கள் பயணத் தவாபை நிறைவு செய்கின்றனர்.

புனிதக் கஃபாவிடமிருந்து பிரியா விடை பெறுகின்றனர். கஃபாவைக் காணக் காண ஹாஜிகளின் கண்கள் குளமாகின்றன. கண்களிலிருந்து குற்றால அருவியெனக் கொட்டுகிறது கண்ணீர். 'இந்தக் கஃபாவை விட்டுப்பிரியப் போகின்றோமே" என்பதை நினைக்க நினைக்க, இனிய இறை நேசர்களின் இதயங்கள் அழுகின்றன. கண்குளிர- உளம் மகிழ- இந்தக் கஃபாவைக் கண்டுக் கொண்டே- இங்கேயே இருந்துவிட மாட்டோமா? என்று இந்த இனியவர்களின் இதயங்கள் ஏங்குகின்றன. அழிகின்ற இந்த உலகத்தை- இதில் வாழும் மனிதர்களை- அநாச்சாரங்களும், அநியாயங்களும், அட்டூழியங்களும், நிறைந்த சமூகத்தினரையெல்லாம், கண்டு அலுத்துப் போன இதயங்களுக்கு இத்தனை நாட்களும் இங்கே அமைதி கிடைத்தது. ஆறுதல் கிடைத்தது. இதை விட்டுச் செல்லப் போகின்றோம் எனும் போது- கல் நெஞ்சமும் கரையத்தானே செய்யும்.

புனித ஹஜ்ஜை இனிதே நிறைவேற்றும் பெரும் பேற்றைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றனர். ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளாய் இங்கிருந்து செல்கின்றனர். பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களாக- பரிசுத்த மனதோடு- பக்தி நிறைந்த உள்ளத்தோடு- நல்ல இன்பத்தின் பொலிவோடு- இதயத்தின் வலிவோடு- ஈமானின் நிறைவோடு- புனித ஹாஜிகளாய்- புண்ணிய சீலர்களாய்- இந்தப் புண்ணிய பூமியை விட்டுப் புறப்படுகின்றனர். ஹாஜிகள் தாயகம் திரும்ப- தத்தம் வாகனங்களில் ஏறி அமர்ந்து விட்டனர்.

தரை வழியாக வந்த வாகனங்கள், சிங்காரச் சாலைகளில் சீறிப் பாய்ந்த வண்ணம் புறப்படுகின்றன. நீலத் திரைக் கடலில் நீந்தி வந்தக் கப்பல்கள், நீரைக் கிழித்த வண்ணம்- இஸ்லாமியத் துறைமுகத்திலிருந்து மிதக்கத் துவங்கி விட்டன.வான் வெளிப் பாதையில் வந்திறங்கிய விமானங்கள் - ஜித்தாவின், மன்னர் அப்துல் அஜீஸ் பன்னாட்டு விமானத் தளத்திலிருந்து, திரும்பும் பயணத்தைத் தொடங்கி விட்டன.ஹாஜிகள் மனத் திரையில் படக் காட்சிகளைப் போல் ஒவ்வொரு காட்சிகளாக வந்து போகின்றன.

அவரவர் தம் இல்லங்களிலிருந்து ஆர்வத்துடன் புறப்பட்டதும்-
இஹ்ராம் உடை தரித்து- இனிய ஹஜ்ஜுக்காகத் தயாரானதும்-
மக்கத் திரு நகரில் மகிழ்ச்சியுடன் இறங்கியதும்-
மஸ்ஜிதுல் ஹராமில் மனம் குளிர நுழைந்ததும்-
மாண்புடன் கஃபாவைத் தவாபு செய்ததும்-
மகாமே இப்ராஹீமில் தொழுததும்-
ஜம்ஜம் நீரருந்தியதும்-
ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடியதும்-
புனித உம்ராவை இனிதே நிறைவேற்றியதும்-
மக்காவைச் சுற்றி ஒரு மகிழ்ச்சிப் பயணம் செய்ததும்-
மதீனத் திரு நகரில் நுழைந்ததும்-
மஸ்ஜிதுன்னபவியில் தொழுததும்-
மாநபியின் மண்ணறையை மாண்புடன் தரிசித்ததும்-
மதீனாவைச் சுற்றி மனம் குளிரக் கண்டதும்-
மீண்டும் புறப்பட்டு மக்காவை வந்தடைந்ததும்-
புனித ஹஜ்ஜுக்கு ஆயத்தமானதும்-
மினாவின் கூடாரங்களில் தங்கியதும்-
அரபாத் பெருவெளியில் நின்றதும்-
அழுதழுது பாவமன்னிப்புக் கேட்டதும்-
முஸ்தலிபாவில் முழு இரவைக் கழித்ததும்-
ஜம்ராவுக்குச் சென்றதும்-
மூன்று நாட்கள் கல்லெறிந்ததும்-
அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டதும்-
தலை முடிக் களைந்ததும்-
தவாபுஸ்ஸியாராச் செய்ததும்-
இறுதியாக இன்றைய தினம் பிரியா விடை பெற்று பயணத் தவாபுச் செய்ததும்-

பசுமரத்தாணி போல் பதிந்து விட்டநினைவுகளை அசை போடுகிறார்கள் அல்லாஹ்வின் நேசர்கள். ஆண்டாண்டு காலமாக வந்து சென்ற- அத்தனை கோடி ஹாஜிகளின்- அங்கீகரிக்கப் பட்ட ஹஜ்ஜுக்கு சாட்சி கூறும் அரபாத் பெருவெளியும்-உண்மை விசுவாசிகளின் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு மௌன சாட்சி கூறும் முஸ்தலிபா நிலப் பரப்பும்-அடுத்தடுத்த ஆண்டுகளில் வரப் போகின்ற அல்லாஹ்வின் நேசர்களுக்காகக் காத்திருக்கின்றன.

இலட்சோப லட்சம் மக்கள் தங்கிச் சென்ற மினாவின் கூடாரங்கள் வெறிச் சோடிக் கிடக்கின்றன. வரும் ஆண்டுகளில் வரவிருக்கும் புனிதர்களுக்காகக் காத்திருக்கின்றன. இறையில்லம் கஃபாவைச் சுற்றுதல் மட்டும் எப்போதும் எப்போதும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும். சங்கிலித் தொடரான இச்சுற்றுதல் சதா சர்வ காலமும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும். தினந் தோறும் வருகின்ற- ஏராளமான மக்கள்- என்றென்றைக்கும் இந்த இறையில்லத்தை சுற்றிக் கொண்டே இருப்பர்.

அண்டம் அழியும் வரை, மண் மாயும் வரை, யுகம் முடியும் வரை ஓயாது ஒழியாது சுற்றிக் கொண்டே இருப்பர்.
-------------------------
நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்தோ, ஹஜ்ஜிலிருந்தோ, உம்ராவிலிருந்தோ, திரும்பும் போது- பூமியில் உயரமான பகுதியில் ஏறினால், மூன்று தடவை தக்பீர் கூறுவார்கள். பிறகு லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, ஸாயிஹுன, லிரப்பினா ஹாமிதூன, ஸதகல்லாஹு வஃதஹு, வ நஸர அப்தஹுவ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (873)
----------------------------
எளிய முறையில் ஹஜ் செய்ய.
எளிய முறையில் ஹஜ் செய்ய சில அரிய ஆலோசனைகள் பலர் சேர்ந்து தவாப் செய்ய வந்தால், தவாப் சுற்றத் தொடங்கும் போது, தொடங்குவதற்கு முன் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியின் உட் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளம் வைத்துக் கொண்டு, 'தவாபை முடித்து இந்த இடத்தில் வந்து சேர்ந்துவிடவேண்டும்" என்று நிர்ணயம் செய்துக் கொள்ளுங்கள்.

கூட்ட நெரிசலில் உடன் வந்தவர் தவறிவிட்டால், மீதியுள்ள சுற்றுக்களை மன நிம்மதியுடன் சுற்ற முடியாது. இவ்விதம் ஒரு குறிப்பிட்ட இடத்தை நிர்ணயம் செய்துக் கொண்டு தவாப் சுற்றத் தொடங்கினால், இடையில் பிரிய நேர்ந்தாலும், ஏழு சுற்றுக்களை நிறைவு செய்த பின் மீண்டும் மற்றவர்களுடன் இணைந்துக் கொள்ளலாம்.

மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே நுழைய, பல வழிகள் உண்டு. ஒவ்வொரு நுழை வாயிலுக்கும் பெயர்கள் உண்டு. அனைத்து பெரிய, மற்றும் சிறிய நுழைவாயில்களுக்கும் எண்கள் உண்டு. பரந்து விரிந்த பள்ளியின் உட்பகுதி- பார்ப்பதற்கு எல்லா இடங்களும் ஒரே மாதிரியாகத் தோன்றும். எனவே நுழைவாயில் எண்களை நினைவு வைத்துக் கொள்ளலாம். தவாப் சுற்றத் தொடங்கும் போதும், ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடத் தொடங்கும் போதும் இதே முறையைப் பின்பற்றுங்கள்.

கடமைகளை நிம்மதியாக நிறைவேற்றலாம். உங்கள் தங்குமிடங்களிலிருந்து ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரும்போது, ஒரு குறிப்பிட்ட எண்ணுள்ள நுழைவாயில் வழியே வருகின்றீர்கள். மறுபடியும் திரும்பிச் செல்லும் போது அதே நுழைவாயில் வழியே வெளியேறினால் தான் உங்கள் தங்குமிடங்களுக்கு எளிதாகச் சென்றடைய முடியும். பள்ளியின் உள்ளே உங்கள் கடமைகளை முடித்து வெளியே வரும்போது- தவறுதலாக வேறு வழியாக வெளியே வந்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உள்ளே நுழைந்த குறிப்பிட்ட நுழைவாயிலைத் தேடி, பள்ளியின் வெளிப் புறம் சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். மிக நீண்ட தூரம் சுற்ற வேண்டியிருக்கும். வந்த வழியே மறுபடியும் உள்ளே சென்று, பள்ளியின் உட்பகுதியில் நுழைவாயில் எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து- அதன் வழியே வெளியேறுங்கள். இது தான் எளிதாக இருக்கும்.

தவாப் சுற்றும்போது- தொழுகைக்கான பாங்கு சொல்லப் பட்டுவிட்டால், உடனடியாக தவாபை அப்படியே நிறுத்திவிட்டு- தொழுவதற்கு வசதியான இடத்தைத் தேடி நின்று விடுங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் நின்று தொழ இடம் கிடைப்பது சிரமமாகிவிடும். ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு, தவாபின் மீதியுள்ள சுற்றுக்களை பூர்த்தி செய்துக் கொள்ளலாம். மறுபடியும் முதல் தவாபிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்று அவசியமில்லை.

தவாப் சுற்றும் போது நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில், ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுத்தான் ஆக வேண்டும், என்று அவசியமில்லை. ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது சுன்னத் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முதியவர்களையும், பெண்களையும் இடித்துத் தள்ளி இடையூறு செய்வது ஹராம் ஆகும். ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காகப் பல ஹராம்களைச் செய்யக் கூடாது. தூரத்திலிருந்தே ஹஜருல் அஸ்வதை நோக்கி சைகை செய்து தக்பீர் கூறினால் போதுமானது. தவாபின் முதல் சுற்றுக்காக ஹஜருல் அஸ்வத் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடிக்கவும், ஒவ்வொரு சுற்றின் போதும் சுற்றுக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொள்ளவும், சிரமப்படத் தேவையில்லை. ஹஜருல் அஸ்வத் இருக்கும் பகுதிக்கு நேராகத் தரையில் கருப்புக் கோடு அடையாளமிடப்பட்டுள்ளது. தரைப் பகுதியை கவனித்துக் கொண்டே சுற்றினால் எளிதில் அடையாளம் காண முடியும்.

ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடும்போது- ஒரு குறிப்பிட்டப் பகுதியில் ஆண்கள் சற்று வேகமாக ஓட வேண்டும். அந்தக் குறிப்பிட்டப் பகுதியை அடையாளம் காண பச்சை விளக்குகள் எந்த நேரமும் எரிந்துக் கொண்டே இருக்கும். தவாப் சுற்றும் போதும், ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடும் போதும், சிலர் கைகளில் புத்தகங்களை வைத்துக் கொண்டு, அவற்றில் எழுதப்பட்டுள்ள குறிப்பிட்ட துஆக்களைத் தான் ஓத வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்கெல்லாம் ஆதாரம் எதுவுமில்லை. இந்தப் புனிதமான நேரங்களில் நமக்குத் தெரிந்த, அண்ணல் நபி (ஸல்) கற்றுத் தந்த எளிமையான திக்ருகளை ஓதலாம். பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனைகள் அவரவர் தாய் மொழியிலேயே கூட இருக்கலாம்.

தவாப் சுற்றும் போதும், தொங்கோட்டம் ஓடும் போதும், அடுத்தவர் மீது இடிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். நம்மைவிட விரைவாகச் செல்பவர்களுக்கு ஒதுங்கி வழிவிட வேண்டும். மெதுவாகச் செல்பவர்கள் ஓரமாகச் செல்லலாம். தவாப் சுற்றும் போது, ஹிஜ்ர் இஸ்மாயீல் எனப்படும் அரை வட்டச் சுவற்றின் உட்பகுதியில் சுற்றக் கூடாது. ஏனெனில் அதுவும் கஃபாவின் ஒரு பகுதியாகும்.

தவாப் செய்து முடித்த பிறகு, மகாமே இப்ராஹீம் இருக்கும் இடத்திற்கு அருகில் தான் தொழ வேண்டும் என்பதில்லை. அந்த இடத்தில் நின்று தொழுவது- தவாப் சுற்றுபவர்களுக்கு இடையூறாக இருக்கும். தொழுகையையும் முழுமையாக நிறைவேற்ற முடியாது.

மஸ்ஜிதுல் ஹராமின் எந்தப் பகுதியிலும் தொழுதுக் கொள்ளலாம். மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில் சிலர், மேலும் மேலும் உம்ராக்களைச் செய்துக் கொண்டிருக்கின்றனர். ஆர்வத்தின் காரணமாக இவ்வாறு செய்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவ்வாறு செய்வது விரும்பத் தக்கதல்ல. பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இதை அங்கீகரிக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எத்தனை முறை வேண்டுமானாலும் தவாப் செய்யலாம். மார்க்க வல்லுனர்களும் மாமேதைகளும் இதையே வலியுறுத்துகின்றனர்.

தமத்துவ் வகை ஹஜ் செய்பவர்கள், ஹஜ்ஜுடைய நாள் வந்ததும், தன்யீம் அல்லது ஆயிஷாப் பள்ளி என்ற இடத்துக்குச் சென்று தான் இஹ்ராம் அணிய வேண்டும் என்பதில்லை. மக்காவில் அவரவர் தங்கியிருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம். இதற்கான ஆதாரம் பின் வருமாறு:

நபி (ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல் ஹுலைபாவையும், ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும், யமன் வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த் வாசிகளுக்கு கர்ணையும் நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும், ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும், உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள் தாம் வசிக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்;: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1529)

தனிப்பட்ட முறையில் ஹஜ்ஜுக்கு வரும் சிலர்- மினாவிலும், அரபாவிலும், முஸ்தலிபாவிலும், தங்க வேண்டிய சமயங்களில்- கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, இந்தப் புனிதத் தலங்களின் எல்லைகளைத் தாண்டிச் சென்று விட வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு பகுதியிலும் கடைசி எல்லையைக் குறிப்பிட்டு மாபெரும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த எல்லைகளைத் தாண்டிச் சென்று விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, ஹஜ் என்பது அரபாத் எல்லையில் இருப்பது தான். அரபாத் எல்லைக்கு வெளியே சென்று தங்கினால் ஹஜ் கூடாது. எனவே மிகுந்த கவனம் தேவை. அரபா தினத்தில், சூரியன் மறைந்த பிறகு தான் அரபாவை விட்டுப் புறப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் சூரியன் மறைவதற்கு முன் புறப்படக் கூடாது.

அரபாவில் மஃரிபைத் தொழாமல்- முஸ்தலிபா சென்றடைந்த பிறகு தான், இஷாவுடைய நேரத்தில் மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழ வேண்டும்.

ஜம்ராவில் எறிய வேண்டிய கற்களை, முஸ்தலிபாவில் தான் பொறுக்க வேண்டும் என்பதில்லை. எந்தப் பகுதியிலும் பொறுக்கிக் கொள்ளலாம். கற்களைத் தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதில்லை. அப்படியே வைத்துக் கொள்ளலாம்.

கல்லெறியும் போது, சுண்டி விளையாடும் அளவுக்கு சிறிய கற்களையே எறிய வேண்டும். சிலர் கோபமாக ஷைத்தானை அடிப்பது போல் பெரிய கற்களையும், செருப்புகளையும் வீசுகின்றனர். இது தவறாகும். கல்லெறியும் கடமைக்கு முரணானதாகும்.

கல்லெறியும் போது ஏழு கற்களையும் ஒன்றாகச் சேர்த்து எறியக் கூடாது. ஒவ்வொரு கல்லாகத்தான் எறிய வேண்டும். அதுவும் தக்பீர் கூறி எறிய வேண்டும்.

இறையில்லம் கஃபாவைத் தவாபு செய்யும் போது, அதன் உள்ளே அல்லாஹ் இருக்கின்றான் எனக் கருதக் கூடாது. அல்லாஹ்வை வணங்க உலகில் கட்டப்பட்ட முதல் இல்லம் இது. அவ்வளவு தான்.

கஃபாவைப் பிரிந்து வரும்போது, சிலர் பின்னோக்கி வருகின்றனர். கஃபாவை நோக்கி முதுகுப் புறத்தைக் காட்டக் கூடாது எனக் கருதுகின்றனர். இது போன்ற மூட நம்பிக்கைகள் மார்க்கத்தில் இல்லை.

கஃபாவை தவாப் சுற்றுவது போல், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தைச் சுற்றி வருவதோ, தொட்டு முத்தமிடுவதோ கூடாது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தின் முன்னர் நின்று அவர்களுக்கு ஸலாம் கூற வேண்டுமே தவிர, அவர்களிடம் கையேந்திப் பிரார்த்திப்பதோ, தமது தேவைகளை நிறைவேற்றித் தரும்படிக் கேட்பதோ கூடாது. இது ஷிர்க் ஆகும். ஷிர்க்கை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான்.

உஹது மலையடிவாரம், ஹிரா குகை, ஆகிய இடங்களிலும், மற்றும் மக்கா மதீனாவின் பிற இடங்களிலும் உள்ள மண்ணைப் புனிதம் என்றுக் கருதி அள்ளி வைத்துக் கொள்வதோ, எடுத்து வருவதோ கூடாது. மக்கா மதீனா நகரங்கள் புனிதமானவை தான். அதில் சந்தேகமில்லை.அதற்காக அங்குள்ள கல்லும் களிமண்ணும் புனிதமானவை என்று பொருள் அல்ல.
-----------------------------
புனிதஹஜ்ஜுக்குப் புறப்படுவதற்கு முன் புனித ஹஜ்ஜுக்குப் போய் வருவதற்கு- ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். பல்வேறு சிரமங்களுக்குக் கிடையே செய்யும் புனிதப் பயணம், விழலுக்கு இறைத்த நீராக வீணாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், அண்டை அயலார், அனைவரிடமும் விடை பெறும் போது- அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு- பிராயச் சித்தம் தேடியவர்களாப் புறப்படுங்கள். கடன்கள் இருந்தால்- கொடுத்து முடித்து- அல்லது போய் வந்த பிறகு இன்ஷா அல்லாஹ் தருவதாக வாக்களித்து, கடன் கொடுத்தவர் அதை மனமார ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ஹஜ்ஜுக்குப் புறப்பட ஆயத்தமாகுங்கள்.

புகழுக்காகவும், பெருமைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் இல்லாமல் மெய்யாகவே இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் எண்ணத்தை இதயத்தில் வைத்துப் புறப்படுங்கள். வசதிக்காக அதிகமான உடமைகளை உடன் எடுத்துச் செல்லாதீர்கள். சென்று திரும்பும் வரையுள்ள சில தினங்கள், சின்னஞ்சிறு சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள். குறைவான உடமைகள் உங்கள் பயணத்தை எளிதாக்கும்.

அவசரத்திற்கு தேவைப்படும் மருந்து வகைகளையும், முதலுதவி மருந்துகளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பயணத்தின் போது, வகை வகையான உணவுகளுக்கு முக்கியத்துவம் தராமல், எளிமைளான உணவுப் பழக்கத்தைக் கடைப் பிடியுங்கள். வழிப் பயணம் இலகுவாக இருக்கும். குறிப்பாக, ஹஜ்ஜுடைய நாட்களில், மினா அரபாத், முஸ்தலிபா, ஆகிய இடங்களில் எளிமையான உணவுகளை உண்ணுங்கள். அதிக நெரிசல் மிகுந்த இடங்களில் உங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்ற அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரும்.

புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து- திரும்பவும் உங்கள் இல்லம் வந்து சேரும் வரை- வழிப் பயணத்திலும், புனிதத் தலங்களில் தங்கியிருக்கும் போதும், சக ஹாஜிகளுடன் அன்பாகப் பழகி, ஒருவருக் கொருவர் உதவியாக இருங்கள். எந்த வகையிலும் பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.

பல்வேறு குண நலன்கள் கொண்ட பலருடன் சேர்ந்து பயணம் மேற் கொள்ளும் போது, எல்லா வகையிலும் அணுசரித்துப் போகப் பழகிக் கொள்ளுங்கள். பொறுமையைக் கடைப் பிடியுங்கள். உடன் வரும் சக ஹாஜிகள்- முதியவர்களாக இருப்பின், அனைத்து வகையிலும் அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து, அரவணைத்துச் செல்லுங்கள். அப்படி ஒரு முதுமை நமக்கு ஏற்படும்போது- நமக்கு உதவ சிலரை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

புனிதப் பயணம் மேற்கொள்ளும் பொன்னான வாய்ப்பை அடையப் பெற்றிருக்கிறீர்கள். வீண் பேச்சுக்கள், விதண்டாவாதம், சண்டை சச்சரவுகள், ஆகியவற்றைத் தவிர்த்து, அதிகமதிகம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழியுங்கள்.

மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுன்னபவியிலும், ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் கவனம் செலுத்துங்கள். இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
-------------------------------
புறப்படுவோம் வாருங்கள்.
இஸ்லாத்தின் இறுதிக் கடமையாம், புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான பொருள் வளமும், உடல் நலமும், பெற்றவர்களே! இனியும் உங்கள் பொன்னான வாய்ப்பைத் தவற விடாதீர்கள். 'அடுத்தடுத்த ஆண்டுகளில் செய்துக் கொள்ளலாம்" என்று காலம் கடத்தாதீர்கள். அது வரை இருப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது?

இன்றைய தினமே இறந்து போய்விட்டால், வங்கிக் கணக்குகளும், வாங்கிவைத்த சொத்துக்களும் உங்களுடையதல்ல. பங்கு போட்டுக் கொள்ள பங்காளிகள் பத்து பேர் தயாராக நிற்கின்றனர். அரும்பாடுபட்டு சேர்த்த சொத்துக்களை அப்படியே போட்டுவிட்டு போகப் போகின்றீர்கள். அதற்கு முன் அல்லாஹ் உங்களுக்கு விதித்த கடமையைச் செய்து விட்டு, மறுமைப் பயணத்துக்குத் தயாராகுங்கள்.

வயோதிகத்தை அடைந்த பிறகு ஹஜ்ஜுக்குச் செல்வதை விட, நல்ல உடல் வலிமை இருக்கின்ற போதே செல்வதற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் தள்ளாத வயதில், ஹஜ்ஜுடையச் செயல்களை- முறையாக- முழுமையாகச் செய்வது சிரமமாக இருக்கும். இளமையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், இருக்கும் இப்போதே ஹஜ்ஜுக்குச் செல்வது- ஹஜ்ஜின் எல்லாக் கடமைகளையும் சிறப்பாகச் செய்ய வசதியாக இருக்கும்.

புனித ஹஜ்ஜின் நேர் முக வர்ணனையாக நாம் எழுதியிருப்பது மிகவும் குறைவு. நேரடியாக நீங்கள் அனுபவித்துப் பாருங்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதப் பேரின்பம் பெறுவீர்கள்.

அல்லாஹ்வின் பேரருளைப் பெற்றுக் கொள்ள 'புனித ஹஜ்ஜுக்குப் போகவேண்டும்" என்னும் ஆர்வம் இன்னுமா உங்கள் இதயத்தில் எழவில்லை?

''புறப்படுவோம் வாருங்கள் புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்''.

(முற்றும்)

No comments: