Saturday, January 15, 2005

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை, பகுதி2

பகுதி இரண்டு
மக்கத் திரு நகரில்.
'இறைவனின் விருந்தினர்களை வரவேற்பதில் மக்கத் திரு நகரம் மகிழ்ச்சி அடைகிறது" என்னும் 'உம்முல் குரா" பல்கலைக் கழக அலங்கார வளைவு, ஹாஜிகள் புனித மக்காவில் நுழைந்து விட்டனர் என்பதை உணர்த்துகிறது.

எந்த நகரைச் சிறப்பித்து இறைவன் தன் திரு மறையில் இயம்பினானோ!

இறைவனை வணங்க, உலகின் முதல் இறையாலயம் எழுப்பப்பட்டச் சிறப்பு எந்த நகருக்குக் கிடைத்ததோ!

எந்த நகரில், ஈருலக வேந்தர் இறைத் தூதர் நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்களோ!

இஸ்லாம் என்னும் கதிரவனின் ஒளிக் கதிர்கள், எந்த நகரிலிருந்து ஒளி வீசத் தொடங்கியதோ!

அந்த மக்கத் திருநகருக்குள் ஹாஜிகள் நுழைந்து விட்டனர். மஸ்ஜிதுல் ஹராமுக்கு மிக அருகில் சென்று வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன. கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மஸ்ஜிதுல் ஹராமைக் கண்ட வண்ணம், புனித மண்ணில் அடியெடுத்து வைக்கின்றனர் புண்ணிய ஹாஜிகள். விண்ணோக்கி உயர்ந்த மினாராக்களிலிருந்து கம்பீரமாகக் கேட்கிறது பாங்கொலி.

கணக்கிலடங்கா பள்ளிகளில் காலமெல்லாம் கேட்ட சப்தம் தான். இந்தப் பள்ளியின் ஒலி பெருக்கியில் மட்டும் எப்படி இத்தனை ஒரு கம்பீரம்! ஆர்ப்பரித்து எழும் கடல் அலை படிப்படியாக இறங்குவது போல் செவிகளில் ஓர் உணர்வு. 'பாலைகளில், காடுகளில், பணிபடர்ந்த நாடுகளில், சோலைகளில், தீவுகளில்," இந்தப் பாங்கோசைக் கேட்காத இடமில்லை இப்பாருலகில்.

இறைவனை வணங்க உலகம் முழுவதும் ஒரே மாதிரியான அழைப்பு. இஸ்லாத்திற்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு. மொழி தெரிந்தவர்- தெரியாதவர்- பொருள் புரிந்தவர்- புரியாதவர்- எல்லோருக்கும் தெரியும், இது 'அல்லாஹ்வை வணங்க அனைவரும் வாருங்கள்" என விடுக்கும் அழைப்பு.

நாள் ஒன்றுக்கு ஐவேளைத் தொழுகை. நானிலமெங்கும் உள்ள பள்ளிவாசல்களில், நாள் தவறாமல் நடக்கும் இந்த இறை வணக்கத்திற்காக, நாள் ஒன்றுக்கு ஐந்து முறை அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு தொழுகையின் நேரமும் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு ஊருக்கு ஊர், மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபடும். ஒவ்வொரு தொழுகைக்கும் அழைக்கப்படும் இந்தப் பாங்கோசை உலகம் முழுவதும் ஏதேனும் ஒரு பகுதியில் கேட்டுக் கொண்டே இருக்கும். யுக முடிவு நாள் வரை இந்த சங்க நாதம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
--------------------------------------------
மனங்கவரும் மஸ்ஜிதுல் ஹராம்.
புனித ஹாஜிகள் தாங்கள் வந்த நோக்கத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். மஸ்ஜிதுல் ஹராமின் அனைத்து வாசல் வழியாகவும் அணி அணியாக ஆர்வத்துடன் நுழைகின்றனர். இந்த மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியில் ஒரு ரக்அத் தொழுவது மற்றப் பள்ளிகளில் ஒரு இலட்சம் ரக்அத்கள் தொழுவதற்குச் சமம்.திருக் கஃபாவை உள்ளடக்கிய இப் புனிதப் பள்ளி, பல்வேறு கால கட்டங்களிலும், விரிவு படுத்தப் பட்டு வந்திருக்கிறது.

இறுதியாக, இப்போதைய ஆட்சியாளர்களால், மிகப் பிரம்மாண்டமான அளவில் விரிவு படுத்தப் பட்டுள்ளது. அதி நவீன வசதிகளுடன், அழகான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், ஏக காலத்தில் இருபது இலட்சம் பேர், எந்தச் சிரமமுமின்றித் தொழ முடியும். கட்டிடக் கலையின் சகல விதமானத் தொழில் நுட்பங்களும் இங்கே கையாளப் பட்டுள்ளன.

பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் சீருடை அணிந்து சுழற்சி முறையில் பகலும் இரவும் பணிபுரிகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் - எந்த நேரமும் ஒவ்வொரு பகுதியிலும் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றனர். மஸ்ஜிதுல் ஹராமின் மையப் பகுதியில் இதோ நம் கண்களைப் பறிக்கின்றதே! இது தான் கஃபா!
--------------------------------------------
கஃபா என்னும் முதல் இறையாலயம்.
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதுதான், அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (திருக் குர்ஆன் 3: 96)

கஃபா. சொல்லுக்கடங்காத புகழுக்குரிய இறையில்லம். இறைவனை வணங்க, உலகில் முதன் முதல் உருவாக்கப்பட்ட இறையாலயம். உலகில் இப்போது வாழும் 120 கோடி முஸ்லிம்களின் ஒரே இதயம். ஐயாயிரம் ஆண்டுகளாக அத்தனை புயல்களையும் மழைகளையும் எதிர்த்து நின்று காலத்தால் அழியாமல் அப்படியே நிமிர்ந்து நிற்கும், அல்லாஹ்வின் அருள் இல்லம். அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! (திருக் குர்ஆன் 2:125)

ஆம்! உலக முஸ்லிம்கள் ஒன்று கூடுமிடமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தை பாதுகாப்பு மையமாக இறைவன் அறிவித்து 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும், அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

1400 ஆண்டுகளுக்கு முன் அப்ரஹா என்னும் அரசன் யானைப் படையுடன், இப்புனிதக் கஃபாவை அழிக்க வந்த போது 'அபாபீல்" என்னும் சின்னஞ்சிறு பறவைகளைக் கொண்டு அல்லாஹ் பாதுகாத்தான். திரு மறையின் 105 ஆவது அத்தியாயம் இச்சம்பவத்தை அழகாக எடுத்தியம்புகின்றது.

அது போலவே, எல்லாக் கால கட்டத்திலும், எதிரிகளிடமிருந்தும், இயற்கையின் தாக்குதல்களிலிருந்தும். இதனை இன்று வரை இறைவன் காப்பாற்றி வருகிறான். கண்ணைப் பறிக்கும் வண்ணப் படங்களாகக் காலண்டர் அட்டைகளில் மட்டுமே கண்டு களிப்படைந்தக் கஃபாவை இதோ கண் முன்னே ஹாஜிகள் காண்கின்றனர். களிப் பேருவகைக் கொள்கின்றனர். கற்பனையில் கூடக் கண்டிராதக் காட்சியைக் கண்டு கண்கள் அகல விரிகின்றன.

இதயம் நடுங்குகிறது. மெய் சிலிர்க்கிறது. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஓர் உணர்வு. பன்னூலாசிரியர் ஆசுஆ அப்துற்றஹீம் அவர்கள் பாணியில் சொல்வதானால், 'உச்சியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்குகிறது.

"இந்தக் கஃபா, விலையுயர்ந்த கருப்புத் திரையால் மூடப் பட்டுள்ளது. திரை முழுவதும் தங்க இழைகளால் திருமறை வசனங்கள் தீட்டப் பட்டுள்ளன. இந்தக் கருப்புத் திரையை உருவாக்கு வதற்கென்றே - தனியாக ஒரு தொழிற்கூடம் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்தக் கருப்புத் திரை மாற்றப் பட்டு, புதிய திரை போர்த்தப் படுகின்றது.
--------------------------------------------
தவாபுல் குதூம் என்னும் முதல் தவாப்.
பொதுவாக எந்தப் பள்ளியில் நுழைந்தாலும், முதலில் 2 ரக்அத் நபில் தொழுவது சிறந்தது. ஆனால் மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே நுழைந்ததும் கடமையான ஜமாஅத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் முதலில் தவாப் செய்வதே சிறந்தது. அதுவே முறையும் கூட.

ஹஜ் அல்லது உம்ராச் செய்ய, புனித மக்காவுக்கு வரும்போது முதலில் செய்யும் தவாபுக்கு 'தவாபுல் குதூம்" என்று பெயர். கஃபாவை ஏழு முறை சுற்றி வருவது ஒரு தவாப் ஆகும். மஸ்ஜிதுல் ஹராமுக்கு ஏராளமான நுழைவாயில்கள் உள்ளன. எந்த வழியாகவும் உள்ளே நுழையலாம். அவரவர் வந்து சேரும் வழிகளில் உள்ள நுழைவாயில் வழியே உள்ளே நுழைகின்றனர். அவரவர் தம் தவாபுல் குதூமை அழகாகத் தொடங்குகின்றனர்.

'நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்தார்கள். ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். பின்பு வலப்புறமாக (கஃபாவை) சுற்றலானார்கள். மூன்று சுற்றுக்கள் விரைவாகவும் நான்கு சுற்றுக்கள் சாதாரணமாகவும் நடந்து சுற்றினார்கள். பிறகு மகாமே இப்ராஹீம் எனும் இடத்திற்கு வந்தார்கள். மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் (2:125) என்ற வசனத்தை ஓதிவிட்டு, தமக்கும் கஃபாவுக்கும் இடையே மகாமே இப்ராஹீம் இருக்குமாறு 2 ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் ஹஜருல் அஸ்வதுக்கு வந்து அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு ஸஃபாவுக்குச் சென்றார்கள்.

'நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவையாகும் (திருக் குர்ஆன் 2: 158) என்ற வசனத்தை அவர்கள் ஓதியதாக எண்ணுகிறேன்" அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (784)

ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் இடத்திலிருந்து ஹாஜிகள் தவாபைத் தொடங்குகின்றனர். இயன்றால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிடட்டும், இயலாவிட்டால் தூரத்திலிருந்தே கைகளால் சைகை செய்தும் தவாபைத் தொடங்கலாம். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீதமர்ந்து தவாப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதுக் கருகே வந்த போது அதை நோக்கி சைகை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (793)

'ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கறுப்பாக்கி விட்டன" என்று நபி (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)ஆதாரம்: திர்மிதி (803)

கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும், பேசும் நாவு கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை (அல்லாஹ்) எழுப்புவான். யார் இதை முத்தமிட்டரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: திர்மிதி (884)

தவாபின் ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதை முத்தமிடவோ அல்லது அதை நோக்கி சைகை செய்யவோ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஃபாவை தவாப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1612)

ஹாஜிகள் தவாபைத் தொடங்குகிறார்கள். ஒரே சீராக, ஒழுங்கு முறையுடனும், மிகுந்த கட்டுப்பாட்டுடனும் சுற்றி வருகிறார்கள். இலட்சக் கணக்கான மக்கள் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இரவும் பகலும் இடைவிடாது சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.அரசர்களும், ஆண்டிகளும், ஆட்சி செய்யும் அதிகாரிகளும், முதலாளிகளும், தொழிலாளிகளும், ஏழைகளும், செல்வந்தர்களும், ஏற்றத் தாழ்வின்றி சுற்றுகிறார்கள்.

படித்தவர்களும், பாமரர்களும், பாகுபாடின்றி சுற்றுகிறார்கள். ஆண்களும். பெண்களும், சிறியோரும், பெரியோரும், வாலிபர்களும், வயோதிகரும் அனைத்து வகை மனிதர்களும் அழகாகச் சுற்றுகிறார்கள்.

தள்ளாத வயதில் பெற்றோரைத் தம் முதுகில் சுமந்தபடி- தாம் பெற்றக் குழந்தைகளைத் தம் தோளில் சுமந்தபடி- வளரும் சிசுக்களைத் தம் வயிற்றில் சுமந்தபடி- மறுமை பயத்தைத் தம் மனதில் சுமந்தபடி- இறையச்சத்தைத் தம் இதயத்தில் சுமந்தபடி- திருமறை குர்ஆனைத் தம் கரங்களில் சுமந்தபடி-திக்ருகளைத் தம் நாவுகளில் மொழிந்த படி- பாவ மன்னிப்புக் கேட்டுத் தம் கைகள் ஏந்தியபடி- கவலையுடன் அழுதழுது கண்ணீர் சொரிந்தபடி-சுற்றுகிறார்கள். சுற்றுகிறார்கள். சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

1400 ஆண்டுகளாக, ஆயிரமாயிரம் கோடிப் பேர்கள் சுற்றினார்கள். இந்தக் கணப் பொழுதிலும் இலட்சக் கணக்கானோர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இறுதி நாள் வரை இன்னும் எத்தனை எத்தனை கோடிகளோ! எண்ணிக்கை எந்த எண்ணிலும் அடங்காது. ஏட்டிலும் அடங்காது.

ஏழு முறை கஃபாவைச் சுற்றுவது ஒரு தவாப் ஆகும். ஏழு சற்றுக்களை நிறைவு செய்தவர்கள், எவ்வளவு இதமுடன் வெயியேறுகின்றனர்! தவாபை முடித்தவர்கள், சிறுகச் சிறுக வெளியேற - தவாபைத் தொடங்குபவர்கள் பக்குவமாக நுழைகின்றனர். சங்கிலித் தொடராக இந்தச் சுற்றுக்கள் தொடர்கின்றன.தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. முதல் தவாபில் முதல் மூன்று சுற்றுக்களில் மட்டும் தோள்களைக் குலுக்கியவாறு கொஞ்சம் வேகமாக (ஆண்கள்) ஓட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், ஹஜ்ஜிலும் உம்ராவிலும் முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள். (மீதமுள்ள) நான்கு சுற்றுக்களில் நடந்து செல்வார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம்: புகாரி (1604)

தவாபை முடித்ததும், அடுத்த செயல் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத் தொழவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்த போது கஃபாவை ஏழு முறை வலம் வந்தார்கள். பிறகு மகாமே இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பிறகு ஸஃபாவி(ல் ஓடுவத)ற்காகப் புறப்பட்டார்கள். 'நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது" என இறைவன் கூறுகிறான். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரி(1627)

மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (திருக் குர்ஆன் 2:125)

தவாபை நிறைவு செய்த ஹாஜிகள், மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று இரண்டு ரக்அத் தொழுகின்றனர். மகாமே இப்ராஹீமுக்கு மிக அருகில் தான் நின்று தொழ வேண்டும் என்பதில்லை.

நபி (ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜை முடித்து) மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள். தவாப் செய்யாத நிலையில் நானும் புறப்பட ஆயத்தமானேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'சுப்ஹுத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டவுடன் மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது நீ ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாப் செய்துக் கொள்" எனக் கூறினார்கள். அவ்வாறே நான் செய்தேன். இதனால் (இரண்டு ரக்அத்துகளை) பள்ளிக்கு வெளியே வந்த பிறகே தொழுதேன். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) ஆதாரம்: புகாரி(1626)

மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று தொழுவது, தவாபு சுற்றுபவர்களுக்கு இடையூறாக இருக்கும். நெரிசலில் சிலர் அவசர அவசரமாக, ருகூவு செய்யவும் முடியாமல், ஸஜ்தாச் செய்யவும் முடியாமல், சிரமப்பட்டு தொழுவதைக் காணலாம். தொழுகை என்பது நிறுத்தி நிதானமாகச் செய்ய வேண்டிய ஒரு வணக்கமாகும்.

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப் படுத்த மாட்டோம் (திருக் குர்ஆன் 23:62)

என்று அல்லாஹ்வின் திருமறை கூறுகிறது. எனவே கடுமையான சிரமத்துக்கு மத்தியில் அந்த மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹராமின் எந்தப் பகுதியிலும் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம். விபரம் அறிந்த ஹாஜிகள், தவாபின் இரண்டு ரக்அத் தொழுகையை மஸ்ஜிதுல் ஹராமில் வசதிப் பட்ட இடங்களில் நிறைவேற்றுகின்றனர்.

கஃபாவின் வட பகுதியில் அரை வட்டத்துக்குச் சிறிய சுவர் ஒன்று எழுப்பப் பட்டுள்ளது. இதற்கு ஹிஜ்ர் இஸ்மாயீல் என்று பெயர்.

நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்து, ஆலயத்தின் உள்ளே நுழைய விரும்பினால் இங்கே தொழுவாயாக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டிய போது அதைச் சுருக்கி விட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப் படுத்திவிட்டனர்." என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதி: (802)

ஹாஜிகளில் பலர், இந்த ஹிஜ்ருக்குள் நுழைந்து தொழுதுக் கொள்கின்றனர். இங்கு நின்று பிரார்த்திக்கின்றனர். கஃபாவின் மேற்குப் பகுதியில் மழை நீர் வடிவதற்காகக் குழாய் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதற்கு 'மீஜாபுர் ரஹ்மத்" என்று பெயர். இதுவும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் இடங்களில் ஒன்றாகும். ஹாஜிகள் இந்த இடத்திலும் நின்று பிரார்த்திக்கின்றனர்.

(நேர்முக வர்ணனை தொடரும்)
------------------------------------------------
At 6:14 PM, raj said...
நேரில் காண்பதுபோலவே உள்ளது வர்ணனைகள். நல்ல பதிவு, பாராட்டுக்கள். புத்தகத்தின் விபரங்களை(எந்த பதிப்பகம்) வெளியிட்டால் நல்லது. இஸ்மாயில், சிங்கை.

சகோதரர் இஸ்மாயில் அவர்களுக்கு,
புனித ஹஜ் பயணத்தை வர்ணிக்கும் இப்புத்தகம் எண்பதுகளின் இறுதிப்பகுதியில் இலவசமாக வெளியிடப்பட்டது. இதற்கு பதிப்புரிமை எதுவும் இல்லை. எவர் வேண்டுமானாலும் அச்சிட்டு வெளியிடலாம்.
அன்புடன்
அபூ முஹை

No comments: