Thursday, January 20, 2005

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை பகுதி 5

பகுதி ஐந்து

துல் ஹஜ் 9 ஆம் நாள்- ஹஜ்ஜின் 2 ஆம் நாள்.

இன்று தான் ஹஜ்.
'ஹஜ் என்பது அரபாவாகும்" என்பது நபி மொழி இது வரை ஹாஜிகள் செய்த செயல்கள் எல்லாம், ஹஜ்ஜுடன் இணைந்த செயல்கள். உண்மையில் ஹஜ் என்பது, துல் ஹஜ் 9 ஆம் நாள் காலையிலிருந்து சூரியன் மறையும் வரை அரபாத் மைதானத்தில் நின்று வணங்குவது தான்.

அந்தப் புனித நாள் இன்று தான். அரபாத் மைதானம் என்பது, பல மைல் சுற்றளவு கொண்ட பரந்து விரிந்த ஒரு பாலைவனத் திடல். ஆனால் இப்போது இந்தப் பாலைவன மைதானம் முழுதும் மரங்கள் வளர்த்து சோலைவனமாக மாற்றப் பட்டுள்ளது. மினா அளவுக்கு முழுக்க முழுக்க கூடாரங்கள் அமைக்கப் படாவிட்டாலும், சில இடங்களில் மட்டும் கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

பெரும் பாலானவர்கள் மரங்களின் நிழல்களில் தங்கி இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.கடும் கோடைக் காலங்களில்- ஹாஜிகளுக்கு வெயிலின் வெப்பத்தைத் தணிப்பதற்காக- அரபாத் மைதானம் முழுவதும் குழாய்களைப் பொருத்தி, குளிர்ந்த தண்ணீரை நீராவி மாதிரி சன்னமாகத் தெளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பரந்து விரிந்த பாலைவனத் திடல் முழுவதையும் இயற்கையாகவும் செயற்கையாகவும் குளிர வைத்திருக்கிறார்கள். ஹாஜிகளின் மனங்களையும் தான்.

புனித ஹஜ்ஜுக்காக, புண்ணிய பூமிக்கு வந்தவர்கள், வந்த நோக்கத்தில் கண்ணுங்கருத்துமாக இருக்கும்போது, கடும் வெப்பம் கூட ஒரு பொருட்டாகத் தெரியாது. என்றாலும் ஹாஜிகளின் உடல் நலனைப் பேண- சகல ஏற்பாடுகளும் சரியான முறையில் செய்யப் பட்டுள்ளன என்றால் அது மிகையில்லை. உணவு ஏற்பாடுகளும், மருத்துவ உதவிகளும், தாராளமான தண்ணீர் வசதியும், மினாவைப் போலவே அரபாத்திலும் அழகான முறையில் மிகுந்த அக்கரையுடன் செய்யப் பட்டுள்ளன.

எண்ணற்ற தனியார் நிறுவனங்கள், போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நிறுவனங்களின் உணவுப் பொருள் தயாரிப்புகளை- பெரும் பெரும் வாகனங்களில் கொண்டு வந்து வைத்துக் கொண்டு 'ஃபீ ஸபீல்" (இறைவனின் பாதையில் இலவசம்) என்று கூவிக் கூவி அழைத்து வாரி வழங்குகின்றனர். பழங்கள், பழச்சாறுகள், ரொட்டிகள், குளிர் பானங்கள், உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், இப்படி இலவச விநியோகப் பொருட்களின் பட்டியல் நீள்கிறது.

தனி நபர்களும் அவரவர் தம்மால் இயன்றதைக் கொண்டு வந்து- வல்ல இறைவனுக்காக அள்ளி வழங்குகின்றனர்.சவூதி மன்னர் பஹத் அவர்கள் சார்பாக- ஒவ்வொரு நாளும் ஒரு கோடிக்கும் அதிகமான குளிர்ந்த குடி நீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப் படுகிறது.

மன்னர் பஹத்- திருக் குர்ஆன் வளாகத்தில் அச்சிடப் பட்ட திருக் குர்ஆன் பிரதிகள், உலகின் பல்வேறு மொழிகளில் திருக் குர்ஆன் மொழி பெயர்ப்புகள், மற்றும் ஒலி- ஒளி நாடாக்கள், ஹஜ் மற்றும் அறநிலையத் துறை சார்பாக, பல்வேறு மொழிகளில் ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல்கள், 'இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையம்" சார்பாக, இஸ்லாமிய கொள்கை விளக்க சிற்றேடுகள், தமிழ், மலையாளம், போன்ற இந்திய மொழிகள் உட்பட பல்வேறு மொழிகளில் மார்க்க விளக்க நூல்கள், இவை அனைத்துமே இலவசமாக வழங்கப் படுகின்றன. இவற்றை ஹாஜிகள் அவரவர் நாடுகளுக்குக் கொண்டு செல்லும்போது, பல கோடி மக்கள் படித்துப் பயன் பெறுகின்றனர்.
---------------------------------
லுஹரையும்அஸரையும் சேர்த்துத் தொழுதல்.
அரபாத் மைதானத்தில் அமைந்துள்ளது, 'மஸ்ஜிதுன்னமிரா" என்னும் மாபெரும் பள்ளிவாசல். ஆர்வத்துடன் அதிகாலையிலேயே வந்தவர்கள், பக்குவமாகப் பள்ளியின் உட்பகுதிக்குச் சென்று விட்டனர். பல இலட்சம் பேர் பள்ளிக்கு வெளியே அணிவகுத்து நின்று விட்டனர்.

இன்றைய தினம், லுஹரையும் அஸரையும் ஒன்றாக சேர்த்து, லுஹருடைய நேரத்தில் இரண்டிரண்டு ரக்அத்கள் மட்டும் தொழவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அப்படித் தான் தொழுதார்கள்.

இப்னு சுபைர் (ரலி) உடன் தாம் போர் தொடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்த ஹஜ்ஜாஜ், இப்னு உமர் (ரலி) இடம், 'அரபாவில் தங்கும் போது நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்கள்?" எனக் கேட்டார். அதற்கு ஸாலிம், நீர் நபி வழியைப் பின்பற்ற நாடினால், அரபா நாளில் நடுப் பகலில் தொழுவீராக! என்றார். அப்போது, இப்னு உமர் (ரலி) 'ஸாலிம் கூறியது உண்மை தான் (நபித் தோழர்கள் அரபாவில்) லுஹரையும், அஸரையும், நபி வழிப்படி சேர்த்தே தொழுபவர்களாக இருந்தனர்" என்றார்.நான் 'நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளர்களா?" என ஸாலிமிடம் கேட்டேன். அதற்கவர், இந்த விஷயத்தில் நபி வழியைத் தவிர வேறு யாருடைய வழிகாட்டுதலை நீங்கள் பின் பற்றுவீர்கள்? எனக் கேட்டார். அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் (ரலி) ஆதாரம்: புகாரி (1662)

மஸ்ஜிதுன்னமிராவிலும்- அதன் வெளிப் பகுதியிலும் இடம் பிடித்துக் கொண்டவர்கள், இமாமுடன் சேர்ந்து, லுஹரையும், அஸரையும், ஒன்றாகச் சேர்த்து இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுதுக் கொள்கின்றனர்.

அரபாவின் பிற பகுதிகளில் தங்கியிருப்போர், அவரவர் தங்கியுள்ள இடங்களில் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து ஜமாஅத்துடன் தொழுகைகளை நிறை வேற்றுகின்றனர். மஸ்ஜிதுன்னமிராவில் இமாம் குத்பா உரை நிகழ்த்துகிறார். ஹஜ்ஜின் நிகழ்ச்சிகள் அனைத்தையும்- தொலைக் காட்சியில் நேரடி ஒளி பரப்பு செய்யப் படுகின்றது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் நேரடி ஒளி பரப்பைக் கண்டு களிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும், இந்த உரையை உலகமே உன்னிப்பாகக் கவனிக்கின்றது. இந்தப் பிரசங்கம் உடனுக்குடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் படுகிறது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள்- அரபாத் பெருவெளியில் நிகழ்த்திய இறுதிப் பேருரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உரையாகும்.அதோ! தூரத்தில் தெரிகிறதே! அது தான் 'ஜபலுர் ரஹ்மத்" என்னும் அருட்கொடை மலை. இம் மலையடிவாரத்தில் தான், அண்ணல் நபி (ஸல்) அவர்கள், புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் போது தங்கியிருந்தார்கள்.

அங்கு சென்று சிறிது நேரமேனும் நிற்க ஆசைப்பட்டு ஹாஜிகள் கூட்டம் அலை மோதுகிறது. ஆர்வத்தின் காரணமாக, சிலர் தட்டுத் தடுமாறி மலையின் மீது ஏறுகின்றனர். மலை முழுதும் மனிதத் தலைகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது மனிதக் குவியல் போல் தெரிகிறது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இந்த மலையின் அடிவாரத்தில் தான் தங்கியிருந்தார்கள். ஆர்வம் என்ற பெயரில் அறியாமையால் மக்கள் மலையின் மீது ஏறுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.

அந்திச் சூரியன் அஸ்தமிக்கும் வரை, இந்த அரபாத் பெருவெளியில் நின்று- இறைவனை வணங்க வேண்டும். மாலைப் பொழுது நெருங்க நெருங்க, தல்பிய்யா முழக்கம் எட்டுத் திக்கும் எதிரொலிக்கிறது. தனித் தனியாக, சிறு சிறு குழுக்களாக, எப்படியெல்லாம் இறை தியானத்தில் ஈடுபட முடியுமோ அப்படியெல்லாம் அமர்ந்து பிரார்த்தித்த வண்ணம், இந்தப் பொன் மாலைப் பொழுதில் ஹாஜிகள்- பெறற்கரியப் பேற்றைப் பெறுகின்றனர். இதயம் திறந்து இறைவனிடம் மன்றாடுகின்றனர். இனியொரு வாய்ப்பு எப்போது கிடைக்கும்? இதுவே இறுதி வாய்ப்பாகி விடுமோ? இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.

அவரவர் மொழிகளில் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறார்கள். இரு கண்களும் கண்ணீர் மல்க இரு கரங்களும் ஏந்தி நின்று இறைஞ்சுகிறார்கள். இந்த அரபாத் பெருவெளியில் அனைத்துப் பேர்களுடன் கூடி நின்று இறைஞ்சும் பெரும் பேற்றைப் பெற்றதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதயங்கள் அழுகின்றன. கண்கள் கண்ணீரை வடிக்கின்றன. கல் நெஞ்சங்கள் கூட இங்கே கரைந்து போகின்றன.

மஹ்ஷர் மைதானத்தில்- நிராயுத பாணிகளாக நிற்கப் போகும் நாளை நினைத்து அழுகிறார்கள். வாய்களுக்கு முத்திரையிடப்பட்டு, கரங்களைப் பேசவும், கால்களை சாட்சி சொல்லவும் வைக்கப்படும்- அந்த ஒரு நாளை நினைத்து அழுகிறார்கள். அறியாமையால் வாழ்க்கையில் செய்து விட்ட தவறுகளை நினைத்து அழுகிறார்கள். மறுமையில் வலக்கரத்தில் பட்டோலை வழங்கப்பட வேண்டுமே என்று வேண்டி அழுகிறார்கள். அறிந்தும் அறியாமலும் செய்து விட்ட பாவங்களை நினைத்து அழுகிறார்கள். அழுதழுது பாவமன்னிப்புக் கேட்கிறார்கள்.

அருகில் உள்ளவர் அழுகின்றார்;. அல்லாஹ்விடம் ஏதோ கேட்கின்றார். ஆப்கானிய மொழி நமக்குப் புரியவில்லை. கதறி ஒருவர் அழுகின்றார். கருப்பு நிறத்து ஹபஷி அவர். பக்கத்தில் ஒருவர் பிரார்த்திக்கிறார். பாகிஸ்தானிய ஹாஜி அவர். உருது மொழியில் கேட்கின்றார். அங்கே ஒருவர் அழுகின்றார். அரபி மொழியில் இறைஞ்சுகிறார். இங்கே ஒருவர் அழுகின்றார். இனிய தமிழில் இறைஞ்சுகிறார்.

எல்லோரும் இறைஞ்சுகிறார்கள். எல்லோருக்காகவும் இறைஞ்சுகிறார்கள். தமக்காக இறைஞ்சுகிறார்கள். தம் பெற்றோருக்காக இறைஞ்சுகிறார்கள். உடன் பிறந்தவர்களுக்காக, உற்றார், உறவினர்களுக்காக, உலக மக்களுக்காக இறைஞ்சுகிறார்கள். பரந்து விரிந்த இந்த அரபாத் பெருவெளி முழுவதும் ஏங்கிய நெஞ்சங்களும், ஏந்திய கரங்களும், அழுத கண்களும், பிரார்த்தித்த வாய்களும் தான்.

இத்தனை மனிதர்களின், இத்தனை மொழிப் பிரார்த்தனைகளையும் ஒரே நேரத்தில், ஒரே ஒருவன் கேட்கின்றான். பாவமன்னிப்புக் கேட்டவர்களின் பாவங்களை மன்னிக்கிறான். அருட் கொடைகளைக் கேட்டவர்களுக்கு அள்ளி வழங்குகிறான். இப்புனித நன்னாளில், இப்புனித இடத்தில், இப்புனித நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என்பதில் எள்ளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.

ஹலாலான உணவுண்டு, ஹலாலான உடையுடுத்தி, ஹலாலான முறையில் ஈட்டிய பொருளில் செலவு செய்து வந்தவர்களின் நேரிய பிரார்த்தனைகளும், நியாயமான கோரிக்கைகளும் அங்கீகரிக்கப்படும் என்பதில் கடுகளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.

ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கமே கூலி என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வாக்கில் நமக்கு அணுவளவும் சந்தேகம் இல்லை.

இன்று முதல்- இந்த நேரம் முதல்- தூய்மையானவர்களாக- பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களாக- கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக- குறைகள் மறைக்கப் பட்டவர்களாக- குற்றங்கள் நீக்கப் பட்டவர்களாக- இவர்களை இறைவன் ஆக்கியருள்வானாக. ஆமீன்.

துல் ஹஜ் 9 ஆம் நாள்- அரபா நாளாகிய இன்றைய தினம், சூரியன் உச்சியை விட்டு சாய்ந்ததிலிருந்து- மறையும் வரை- எவர் சிறிது நேரமேனும், இந்த அரபாத் பெருவெளியில் நிற்க வில்லையோ- அவருக்கு ஹஜ் இல்லை.

ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயலே- இந்த நேரத்தில்- இந்தத் திடலில் நின்று பிரார்த்திப்பது தான். ஏனெனில், 'ஹஜ் என்பது அரபாவாகும்" என்பது நபி மொழி.

திரு மறைக் குர்ஆனின்- சட்டங்கள் பற்றிய இறுதி வசனம் இன்றைய தினத்தில் இந்த அரபாத் பெருவெளியில் தான் அருளப்பட்டது

.....இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல் வறுமையின் காரணமாக நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 5:3)
--------------------------------
அரபாத்தை விட்டுப் புறப்படுதல்.
மஃரிபுடைய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரேபியப் பாலையில், அரபாத் பெருவெளியில்- ஆதவன் தனது அரும் பணியை நிறைவு செய்து விட்டு- அந்திவானத்தில் மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. விலை மதிக்கவொன்னா பொன் மாலைப் பொழுது முடியப் போகிறது. வாழ்வில் கிடைத்தற்கரிய இச்சந்தர்ப்பத்தின் இறுதி நேரம் வரை ஹாஜிகள் பிரார்த்தனையில் ஈடு படுகின்றனர்.

சிலர் அவசரப்பட்டு, அரபாவை விட்டுப் புறப்படத் தயாராகின்றனர். சூரியன் நன்றாக மறைந்த பிறகு தான் அரபாவை விட்டுப் புறப்பட வேண்டும். மஃரிபுடைய நேரம் முடியும் வரை இருந்து விட்டு, மஃரிபைத் தொழாமல் இங்கிருந்து புறப்பட வேண்டும். முஸ்தலிபாவுக்குச் சென்று- மஃரிபையும் இஷாவையும்- இஷாவுடைய நேரத்தில் முஸ்தலிபாவில் தொழவேண்டும். இது தான் நபி வழி.

இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மஃரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) ஆதாரம்: புகாரி (1674)

இப்னு உமர் (ரலி) முஸ்தலிபாவில் (மஃரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளை ஒரு இகாமத் கூறி சேர்த்துத் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன் எனவும் அவர் கூறினார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்: திர்மிதி (813)

இதோ மாலைக் கதிரவன் மறைந்து விட்டான். புனித ஹாஜிகளும் அரபாவை விட்டு விடை பெறுகின்றனர். அழுதழுது கேட்ட பாவமன்னிப்பை அடையப் பெற்றவர்களாக- அல்லாஹ்வின் பேரருள் கிடைக்கப் பெற்றவர்களாக- அல்லாஹ்வின் நேசர்கள் அனைவரும் புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை நோக்கி!

புனித ஹாஜிகளாக- புண்ணிய சீலர்களாக புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை நோக்கி! கூட்டம் கூட்டமாக மக்கள்- குதூகலத்துடன் முஸ்தலிபாவை நோக்கி!

வரிசை வரிசையாக வாகனங்கள்- அனைத்துமே முஸ்தலிபாவை நோக்கி!திக்கெட்டும் கேட்கிறது தல்பிய்யா முழக்கம்.
----------------------------
மஷ்அருல் ஹராம்.
மஷ்அருல் ஹராம் என்பது முஸ்தலிபாவில் இருக்கும் ஒரு மலைக் குன்றின் பெயராகும். புனித ஹாஜிகள் முஸ்தலிபா வரும்போது இந்த இடத்தில் நின்று இறைவனை நினைவு கூறுகிறார்கள். ஏனெனில் இது இறைவனின் கட்டளையாகும்

.....அரபாத் பெரு வெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள். அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் நீங்கள் வழி தவறி இருந்தீர்கள். (திருக் குர்ஆன் 2:198)

மஷ்அருல் ஹராம் என்னும் மகிமை மிக்க இடத்தில் இறைக் கட்டளைப்படி- இறைவனை நினைவு கூர்ந்த ஹாஜிகள், முஸ்தலிபாவுக்கு வந்து- இரவுப் பொழுதை இங்கேயே கழிக்கிறார்கள். இரவின் பிற்பகுதியில், எங்கு நோக்கினும் பாங்கு சப்தம். இது தஹஜ்ஜுத் என்னும் நடுநிசித் தொழுகைக்கான பாங்கு. தனித்தனியாகவும், கூட்டமாகவும் நடுநிசித் தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.

பொழுது புலரப் போகின்றது. அதற்கு முன் மறுபடியும் பாங்கோசை. ஆம் இது வழக்கம் போல் பஜ்ர் என்னும் அதிகாலைத் தொழுகைக்கான பாங்கு சப்தம். களைப்புத் தீர சற்று நேரம் உறங்கி ஓய்வெடுத்தவர்கள் ஆர்வத்துடன் எழுகின்றனர். பஜ்ருத் தொழுகையை நிறைவேற்றத் தயாராகின்றனர்.

இங்கே முஸ்தலிபாவிலும், தண்ணீர் வசதி, கழிவறை வசதிகள் அனைத்தும் சிறப்பாகச் செய்யப் பட்டுள்ளன. பஜ்ருத் தொழுகையை முடித்து விட்டு இனி அடுத்தடுத்தக் கடடைகளை நிறைவேற்ற அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர். முஸ்தலிபாவில், பஜ்ருத் தொழுகையை அதன் முன் நேரத்திலேயே தொழுது விட வேண்டும். இது தான் நபி வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை. இரண்டு தொழுகைகளைத் தவிர. ஒன்று (முஸ்தலிபாவில்) மஃரிபையும், இஷாவையும் சேர்த்துத் தொழுதது. இன்னொன்று பஜ்ரை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிபாவிலேயே) தொழுதது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) ஆதாரம்: புகாரி (1682)

பஜ்ருத் தொழுகையை சீக்கிரமே முடித்து விட்டு சூரியன் உதிப்பதற்கு முன்பே முஸ்தலிபாவை விட்டு புறப்பட வேண்டும் என்பதால் ஹாஜிகள் அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர் மினாவை நோக்கி!

நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிப்பதற்கு முன்பே முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (819)

பெண்கள், குழந்தைகள், இயலாத முதியோர்கள், சற்று முன் கூட்டியே புறப்பட்டுச் செல்வது தவறில்லை. அப்படியே முன் கூட்டியே மினா சென்றடைந்தவர்கள்- சூரியன் உதிக்கும் வரை கல்லெறியக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள், தமது குடும்பத்தினரில் பலவீனர்களை முன் கூட்டியே அனுப்பி வைத்தார்கள். 'சூரியன் உதிக்கும் வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம்" எனவும் கூறியனுப்பினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (817)
--------------------------------------------
துல் ஹஜ் 10 ஆம் நாள்.
ஹஜ்ஜின் 3 ஆம் நாள் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு, இன்று தான் ஹஜ்ஜுப் பெருநாள். ஈதுல் அல்ஹா என்னும் தியாகத் திரு நாள். உலக முஸ்லிம்கள் இன்று பெருநாள் தொழுகைத் தொழுவார்கள். ஆனால் ஹஜ் செய்பவர்களுக்கு இன்று பெருநாள் தொழுகை கிடையாது. இன்று காலை பஜ்ருத் தொழுகையை, முஸ்தலிபாவில் முடித்து விட்டு மினாவுக்குச் செல்கின்றனர்.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தம் அருமந்த மைந்தர், இஸ்மாயீல் அவர்களை- அல்லாஹ்வின் ஆணைப்படி அறுத்துப் பலியிடுவதற்காக அழைத்துச் சென்ற போது, ஷைத்தான் வழி மறித்து தடுக்கப் பார்த்தான். உறுதியான உள்ளத்துடன் சென்ற நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், அவன் மீது கல் வீசி விரட்டினார்கள்.

அதன் நினைவாக- ஹஜ்ஜுக்கு வருபவர்கள், அந்த இடத்தில் இன்றளவும் கல் எறிகின்றனர். இது ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றாகும்.

இன்றைய தினம், ஹாஜிகள் முற் பகல் நேரத்தில் கல் எறிகிறார்கள். இன்று 'ஜம்ரத்துல் அகபா"வில் மட்டும் கல்லெறிய வேண்டும். இந்த ஜம்ரத்துல் அகபாவுக்கு 'ஜம்ரத்துல் ஊலா" என்றும் சொல்லப்படும்.

பத்தாம் நாளில் முற்பகல் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் கல்லெறிந்தார்கள். அதன் பிறகுள்ள நாட்களில் சூரியன் உச்சியிலிருந்து விலகிய பின் கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (818)

ஏழு பொடிக் கற்களை எறிய வேண்டும். அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

அத்தனை இலட்சம் ஹாஜிகளும் கல் எறிகிறார்கள். சிலர் கோபமாக ஷைத்தானை அடிப்பது போல் பெரிய கற்களையும்- செருப்புகளையும் வீசுகிறார்கள். இது தவறு. கல் எறியும் கடமைக்கு இவை முரணானதாகும்.

நபி (ஸல்) அவர்கள், சுண்டி விளையாடும் அளவு சிறிய கற்களையே எறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி ) ஆதாரம்: திர்மிதி (821)

கல் எறியும் இடத்தில் நெரிசல் அதிகம். அரபா, மினா, முஸ்தலிபா ஆகிய இடங்கள் பரந்து விரிந்த மாபெரும் திடல்கள். அத்தனை இலட்சம் ஹாஜிகளும் பரந்தத் திடலில் தங்கியிருப்பதில் சிரமம் இல்லை. ஆனால், ஜம்ரா என்னும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அத்தனை இலட்சம் பேரும் கல் எறிய வேண்டும் என்பதால் இங்கு நெரிசல் அதிகம்.

கல்லெறியும் இடத்துக்கு செல்லும் போது- கையில் பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் செல்லக் கூடாது. கூட்ட நெரிசலில் தவறிவிட வாய்ப்புண்டு. கையில் இருக்கும் பொருள் தவறி கீழே விழுந்து விட்டால்- குனிந்து எடுக்க முயலக் கூடாது. முன்னேறி வரும் கூட்டம் கீழே தள்ளிவிடலாம்.கூட்டத்தை சமாளிக்க- 'கல்லெறியும் இடம்" இப்போது, மக்கள் போவதற்கும், வருவதற்குமாகத் தனித்தனிப் பாதைகள் அமைக்கப் பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர்; பலமானத் தடுப்புகளை ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகின்றனர்.

பல் வேறு வருடங்களில்- கூட்ட நெரிசலில் இந்த ஜம்ராவில் தான் விபத்துக்கள் நடந்துள்ளன. சில சமயங்களில் உயிர்ச் சேதங்களும் கூட ஏற்பட்டதுண்டு. இப்போது நெரிசலின்றி மக்கள் சென்று வர பல் வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கூட்டம் கூட்டமாகச் சென்று- ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து திரும்புகின்றனர் ஹாஜிகள்.கல்லெறி நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுவரை முழங்கிக் கொண்டிருந்த தல்பிய்யாவை நிறுத்தி விடுகின்றனர். இதுவே நபி வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஜம்ராவில் கல்லெறிகின்றவரை தல்பிய்யா கூறிக் கொண்டே இருந்தார்கள்.அறிவிப்பவர்: பள்ல் பின் அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1685)
-------------------------------
குர்பானி கொடுப்பது.
இனி அடுத்த செயல், அறுத்து பலியிடுவதாகும்.

ஹஜ்ஜின் செயல்களில் சிறப்பானது எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'தல்பிய்யாவை உரத்த குரலில் கூறுவதும், ஒட்டகத்தை அறுத்து பலியிடுவதும்," என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ பக்ர் (ரலி) ஆதாரம்: புகாரி (757)

தனியொரு நபர் ஒரு ஆட்டையோ, அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ, ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம்.

ஹுதைபிய்யா வருடத்தில் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையும், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் அறுத்துள்ளோம் அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (828)

ஹாஜிகள் குர்பானி கொடுக்கும் இடத்திற்கு வந்து குர்பானிக்காகப் பிராணிகளை வாங்கி அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர்.அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (திருக் குர்ஆன் 22:37)

ஆண்டு தோறும்- வெளி நாடுகளிலிருந்து இலட்சக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், ஒட்டகங்களும், இறக்கு மதி செய்யப் படுகின்றன.

இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பிராணிகளும், கால் நடை மருத்துவர்களால், முறையாகப் பரிசோதிக்கப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. ஹாஜிகள் நேரடியாகச் சென்று, பிராணியைத் தேர்ந்தெடுத்து, விலை கொடுத்து வாங்கி அவரவர் தம் கரங்களால் அறுக்கின்றனர். இயலாதவர்கள், அடுத்தவர்களை நியமித்து அறுக்கச் செய்கின்றனர். இது போக, ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து- வங்கிகளில் கூப்பன்கள் விற்கப்படுகின்றன. வங்கிகளில் பணம் செலுத்திவிட்டால், துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாளன்று பிராணிகள் அறுக்கப் பட்டு உரிய முறையில் பக்குவப் படுத்தப்பட்டு ஏழை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அரசு கண்காணிப்பில், பல்வேறு இஸ்லாமிய சங்கங்கள் இப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்படுகின்றன.

புனிதத் தலங்கள் அனைத்திலும், சிறப்புக் கிளைகளை அமைத்து அல்ரஜ்ஹி வங்கி குர்பானி கூப்பன்களை விற்க ஏற்பாடு செய்துள்ளது. ஹாஜிகளுக்காக இச்சேவையை அல்ரஜ்ஹி வங்கி இலவசமாகச் செய்கிறது.

ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான டன் இறைச்சி- பதப்படுத்தப்பட்டு- இந்த முறையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எத்தனையோ நாடுகளில் வாழும் ஏழைகள் இதனால் பயன் பெறுகின்றனர்.

அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டு- அளப்பெறும் நன்மையை அடைந்த புனித ஹாஜிகள், தமது அடுத்த செயலாகிய- தலை முடியைக் களையத் தயாராகின்றனர்.

----------------------------
தலை முடி களைதல்.
ஆண்கள் தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொள்ளவோ, கத்தரித்துக் கொள்ளவோ செய்யலாம், தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொள்வதே சிறந்தது.

நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள், 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்" என்றனர். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தபோது தோழர்கள், "முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்" என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது தடவையாகவும், அதைக் கூறிய போது 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)" எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹ{ரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1728)

தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொண்டோ, அல்லது குறைத்துக் கொண்டோ, ஹாஜிகள் இஹ்ராமிலிருந்து விடுபடுகின்றனர். இது வரை அணிந்திருந்த இஹ்ராம் உடைகளைக் களைந்து விட்டு- வழக்கமாக அணியும் ஆடைகளை அணிந்துக் கொள்கின்றனர்.

இனி அடுத்தக் கடமை 'தவாபுஸ் ஸியாரா" செய்வதாகும்.
---------------------------------

(நேர்முக வர்ணனை அடுத்தப் பதிவில் முடியும் )
அனைவருக்கும் இதயம் நிறைந்த ''தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்''
அன்புடன்
அபூ முஹை


No comments: