'.. அவர் கூறினார்: 'நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன். திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான். 'என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினார்: 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, 'யா இப்ராஹீம்!" என்றழைத்தோம். 'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். ஆயினும், ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்."
மேற்கண்ட இறை வசனங்கள் அருள்மறை குர்ஆனின் 37வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸஃப்ஃபாத் 99ஆம் வசனம் முதல் 108ஆம் வசனங்களாகும். நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் நபி இப்றாஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற தன் மகனை அழைத்துப் பலியிட நெருங்கியபோது அல்லாஹ் அதைத் தடுத்து ஒரு ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். நபி இப்ஹாஹீம்(அலை) அவர்களின் இந்த தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்ற அனைவரும் பிராணியை பலியிட வெண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் எப்படி தன் மகனைக் கூட அல்லாஹ்விற்காக பலியிட முன்வந்தார்களோ அதைப்போன்று நாமும் முன்வருவோம் என்பதை எடுத்துக் காட்டும் வண்ணமே 'குர்பானி" கொடுக்கிறோம். இந்த குர்பானி கொடுப்பதன் நோக்கம் இறையச்சமேத் தவிர, வேறில்லை.'
குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும் உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது" (அத்தியாயம் 22 ஸுரத்துல் ஹஜ்ஜின் 37வது வசனம்).
மேற்கண்ட வசனம் குர்பானியின் உண்மையான நோக்கத்தைத் தெளிவாக விளக்குகிறது. குர்பானி பெருமைக்காகவோ, அல்லது வேறு காரணத்திற்காகவோ செய்யப்படுமானால் குர்பானியின் நன்மையை எள்ளளவும் அல்லாஹ்விடம் பெற முடியாது.
மிக உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த குர்பானியை நபி(ஸல்) அவர்கள் தன் வாழ்நாளில் கொடுத்து வந்ததை நபிமொழி தொகுப்புக்களில் காண முடிகிறது. அருள்மறை குர்ஆனின் 108வது அத்தியாயம் ஸுரத்துல் கவ்ஸரின் 2வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:'
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக!". (அத்தியாயம் 108 ஸுரத்துல் கவ்ஸர் - 2வது வசனம்)
மேற்கண்ட இறைவசனம் குர்பானியின் அவசியத்தையும், நபி(ஸல்) அவர்களை குர்பானி கொடுக்கும்படி கட்டளையிடுவதையும் கூறுகிறது.
யார் மீது கடமை?.'
யார் மீது ஜகாத் கடமையோ அவர்மீது குர்பானி கடமை" என்று சிலர் கூறுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அல்லாஹ்வோ அல்லது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களோ இப்படிக் கூறவில்லை என்பதால் இதனை ஏற்க முடியாது. எவரிடம் அன்றைய செலவு போக, கடன் இல்லாமல் கூடுதலாக பணம் இருக்குமானால், அவர் குர்பானி கொடுக்க வேண்டும். கடன் உள்ளவர்கள் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் (ஷஹீத்) கூட கடன் பெற்றிருந்தால் அல்லாஹ் அதனை மன்னிப்பதில்லை என்ற அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்).
எனவே கடன் வாங்கியோ, அல்லது கடன் இருக்கும்போதோ அதை நிறைவேற்றாமல் குர்பானி கொடுக்கக்கூடாது.
அல்லாஹ்வின் தூதரே! நான் கடன் பெற்று குர்பானி கொடுக்கவா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்" இதுவும் நிறைவேற்றப்பட வேண்டிய கடனாகும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி). நூல்: பைஹகீ (190021).
கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாம் என்று இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது அல்ல! இது தொடர்பு அறுந்த பலவீனமாக செய்தியாகும். இதை இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸின் தொடரில் இறுதியில் குறிப்பிடுகிறார்கள். இந்த செய்தியின் இரண்டாவது அறிவிப்பாளர் ஹுஸைர் இப்னு அப்துர்ரஹ்மான் என்பவர் ஆயிஷா (ரலி) இடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.
குர்பானி கொடுப்பவர் பேண வேண்டியவை:
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எவற்றையும் வெட்டக்கூடாது.
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலாமா (ரலி), ஆதார நூல்கள்: முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா (3149), பைஹகீ (19043).
குர்பானி பிராணிகள்:
ஒட்டகம், மாடு, ஆடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றை குர்பானி கொடுத்ததாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானி பிராணிகளாகும். எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் எருமை மாடு இல்லாத காரணத்தால் குர்ஆன், ஹதீஸில் இதைப்பற்றித் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனவே சிலர் ஹதீஸ்களில் இல்லாததை குர்பானி கொடுக்கக் கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் எருமை மாடு, மாட்டு இனத்தில் உள்ளதால் பசு, காளையை எப்படிக் குர்பானி கொடுக்கலாமோ அதைப்போன்று, எருமை மாட்டையும் குர்பானி கொடுக்கலாம் என்கின்றனர்.
இதில் தெளிவாக முடிவெடுக்கக்கூடிய அளவு ஆதாரங்கள் இல்லாததால் பேணுதலின் அடிப்படையில் எருமை மாட்டை குர்பானி கொடுக்காமல் இருப்பதே சிறந்தது. (அல்லாஹ் மிக அறிந்தவன்).
குர்பானி பிராணிகளின் தன்மைகள்:
குர்பானி பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: பரா (ரலி), நூல்கள்: திர்மிதி (1530), அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா (3144).
பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அலி(ரலி), ஆதார நூற்கள்: திர்மிதீ 1532, அஹ்மத், அபூதாவூத், நஸயீ).
நபி(ஸல்) அவர்கள் 'கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்).
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண்பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும்.
'மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்." (அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: புகாரி, (தஃலீக்).
இந்த ஹதீஸை புகாரி இமாம் அவர்கள் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் பதிவு செய்துள்ளார்கள். ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் இந்தச் செய்தி அபூநுஜம் அவர்களின் 'அல்முஸ்தத்ரக்" என்ற நூலில் அறிவிப்பாளர் வரிசையுடன் இடம் பெறுவதாகக் குறிப்பிடுகிறார்கள்.
எனவே குர்பானி பிராணிகளை முன்கூட்டியே வாங்கி நல்ல தீனி போட்டுக் கொழுக்க வைக்கலாம்.
குர்பானி பிராணிகள் வாங்கும்போது நல்ல தரமான உயர் ரகமானதை வாங்குவது நன்மையை அதிகரித்துத் தரும். அல்லாஹ் கூறியுள்ளான் என்பதற்காக ஏழைகளுக்கு வழங்க வேண்டும். அவர்கள் உயர்தரமான இறைச்சியை சாப்பிட வேண்டும் என்று எண்ணி அதிகவிலை கொடுத்து வாங்கவதற்கு கூடுதலான நன்மைகள் உண்டு என்பதை கீழ்க்காணும் ஹதீஸ்களை கவனித்தால் விளங்கும்.
சிறந்த அமல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன்: 'அல்லாஹ்வை நம்புவதும், அவனுடைய பாதையில் போர்புரிவதுமாகும்" என்று கூறினார்கள். அடிமை விடுதலை செய்வதில் சிறந்தது எது? என்று கேட்டேன். எஜமானனால் விருப்பமள்ள அதிக விலையுள்ள அடிமை என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதார நூல்: புகாரி (2518).
'நீ தூய்மையானதும் 'தன்யீம்" என்ற இடத்திற்குச் சென்று இஹ்ராம் அணிந்து கொள்! பிறகு இந்த இடத்தில் என்னை சந்தி! (இப்படிச் செய்வதினால்) உன்னுடைய செலவுக்கும், உன் கஷ்டத்திற்கும் ஏற்ப கூலி கொடுக்கப்படும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரரி(1787).
பிராணியின் வயது:
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகம் ஐந்து வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆடு, மாடு, இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
'முஸின்னா" வைத் தவிர வேறு எதையும் அறுக்காதீர்கள்! அது கிடைக்கவில்லையானால், ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்: முஸ்லிம். அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா (3141), அஹ்மத்.
இங்கு 'முஸின்னா" என்று கூறப்படும் வார்த்தை ஆடு, மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்குப் பயன்படுத்தப்படும். ஒட்டகத்திற்கு ஐந்து வயது முடிந்தவுடனும் ஆடு, மாடு ஆகிய இரண்டு வகை கால்நடைகளுக்கும் இரண்டு வயது முடிந்தவுடன் இரண்டு பற்கள் வருவதால், ஒட்கத்திற்கு ஐந்து வயதும், ஆடு மற்றும் மாடு ஆகிய கால்நடைகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் 'முஸின்னாவை" விட சிறந்த ஆறுமாத குட்டி ஆடு உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! (அறுப்பீராக!) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: பரா(ரலி) நூல்கள்: புகாரி, (5560), முஸ்லிம்)
இந்த ஹதீஸில் நபித்தோழர் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாத குட்டி உள்ளது என்ற கூற்று நபி(ஸல்) அவர்கள் முஸின்னாவைத்தான் குர்பானி கொடுக்க கட்டளையிட்டுள்ளார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. உமக்குத் தவிர வேறு எவருக்கும் இது அனுமதியில்லை என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்றும் முஸின்னாவைத்தான் கொடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகிறது. எனவே மேற்படி ஹதீஸின் அடிப்படையில் குர்பானி பிராணிகளின் வயது, ஒட்டமாக இருந்தால் ஐந்து வயது பூர்த்தியடைந்ததும், ஆடு மற்றும் மாடாக இருந்தால் இரண்டு வயது பூர்த்தியானதாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
கூட்டுக் குர்பானி:
ஒட்டகம், மாடு, இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு நபர்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு நபர்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாம்.
ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி (1538) இப்னுமாஜா (3132).
ஒட்டகம் மற்றும் மாட்டில் மட்டும்தான் பலர் ஒன்று சேர்ந்து கூட்டுக் குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டும்தான் குர்பானி கொடுக்க முடியும்.
எங்கே கொடுப்பது:
குர்பானி பிராணியை ஈத்கா திடலில் அல்லது வீட்டில் அறுக்கலாம். இரண்டிற்கும் ஹதீஸ்களில் ஆதாரமுள்ளது.முஸல்லா என்னும் ;திடலில் நபி(ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: புகாரி (5552) அபூதாவூத்).
இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம்(இல்லத்திற்குத்) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். (அறிவிப்பவர்: பரா(ரலி), நூல்கள்: புகாரி (5545) முஸ்லிம்).
மேற்படி ஹதீஸில் 'நாம் திரும்பிச் சென்று" குர்பானி கொடுப்போம்" என்ற வாசகம் கவனிக்கத் தக்கது. நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை 'முஸல்லா" என்ற திடலிலேயே தொழுது வந்துள்ளனர். திடலிலேயே கொடுக்க வேண்டுமென இருந்தால் 'திரும்பிச் சென்று" என்ற வாசகத்தை நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். இங்கே கொடுப்போம் என்றே சொல்லியிருப்பார்கள். எனவே திரும்பிச் சென்று என்ற வாசகம் 'முஸல்லா" என்ற திடலல்லாத வேறு இடத்தைக் குறிப்பிடுகிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா! என்றார்கள். பிறகு அதைக் கல்லில் தீட்டு! என்றார்கள். நான் அப்படியேச் செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டைக் கீழேப் படுக்க வைத்து அறுத்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்).
ஆயிஷா (ரலி) அவர்களிடம் கத்தியை எடுத்து வா என்று சொன்னதும், இது வீட்டில்தான் நடந்துள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. திடலில் நடந்திருந்தால் நபி(ஸல்) அவர்கள் தீட்டியக் கத்தியுடனேயே அங்கே சென்றிருப்பார்கள். 'கத்தியை எடுத்து வா" என்ற பேச்சிற்கே இங்கே இடமிருந்திருக்காது.
(வளரும் - அடுத்த பகுதி)
No comments:
Post a Comment