Sunday, April 20, 2008

நபி ஈஸா (அலை) அவர்களின் மரணம்.

இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் மீது யூதர்களுக்கு கடுமையான - அளவு கடந்த வெறுப்பு இருந்தது. பழமையில் ஊறி, மக்கிப் போனவர்களுக்கு சத்தியத்தை எடுத்துக் கூறுபவர்கள் மீது ஏற்படும் ஆத்திரமும், வெறுப்பும் வழக்கமாக ஈஸா நபியின் மீது யூதர்களுக்கு ஏற்பட்டது. ஈஸாவின் அன்னை மரியமின் மீது அவதூறு சுமத்தி, நபி ஈஸா (அலை) அவர்களை வேசியின் மகன் என்று யூதர்கள் இழிவுபடுத்தினார்கள். ஈஸா இறைத்தூதர் அல்ல என்றும் நிராகரித்தனர்.

சத்தியத்தை ஓதும் ஈஸாவின் மீது ஆத்திரம் கொண்ட யூதர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈஸா நபியைக் கொன்றுவிட திட்டம் வகுத்தார்கள். அத்திட்டம் அவர்கள் அறியாமலேயே இறைவனால் முறியடிக்கப்பட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கதைப் பிரச்சாரம் செய்த காலத்தில் - திருக்குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் - யூதர்கள் மர்யமின் மகன் ஈஸாவை நாங்கள் தான் கொன்றோம் என்று செல்லிக்கொண்டிருந்தார்கள். மர்யமின் மகன், இறைத்தூதர் ஈஸா கொல்லப்பட்டு விட்டார் என்றே யூதர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். இதை மறுத்து இறைவசனம் அருளப்பட்டது

அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஹீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவரை அவர்கள் உறுதியாகக் கொல்லவே இல்லை. (திருக்குர்ஆன், 004:156,157)

இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களை யூதர்கள் கொன்றார்கள் என்ற சம்பவத்தை திட்டவட்டமாக திருக்குர்ஆன் மறுத்துப் பேசுகின்றது. நபி ஈஸா (அலை) அவர்களை யூதர்கள் உறுதியாகக் கொல்லவில்லை என்று மறுப்பதுடன் சிலுவையிலும் அவரை அறையவில்லை என்றும் உரைக்கின்றது. யூதர்கள் நபி ஈஸாவைக் கொன்றதாகச் சொல்வது வெறும் ஊகத்தைத் தவிர அதில் உண்மை இல்லை எனவும் இறைவசனம் கூறுகின்றன.

ஏன் மறுக்கின்றது?

நபி ஈஸா (அலை) அவர்களின் மரணத்தை இஸ்லாம் ஏன் மறுக்க வேண்டும்? மறுப்பதால் இஸ்லாத்திற்கு என்ன? இந்தக் கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலாது!

''அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்தும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம்'' (திருக்குர்ஆன், 002:061,0091. இன்னும் பார்க்க:. 003:021,112,181. 004:155. 005:070)

நபி ஈஸாவைக் கொன்றதாகச் சொல்லும் யூதர்கள், ஈஸாவுக்கு முன்பும் நபிமார்களைக் கொன்றிருக்கிறார்கள் என இறைவசனம் கூறுகின்றது. எத்தனையோ நபிமார்களை நியாயமின்றி கொலை செய்த யூதர்கள், ஈஸாவையும் கொன்றார்கள் என்று எடுத்துக்கொள்ளாமல், யூதர்கள் ஈஸாவைக் கொன்றார்கள் என்பதை மட்டும் இறைமறை மறுக்கிறதென்றால் ஈஸா (அலை) கொல்லப்படாமல் இன்றும் உயிரோடு இருக்கிறார் என்று அடுத்த வசனம் விளக்குகின்றது.

''மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்'' (திருக்குர்ஆன், 004:158)

நபி ஈஸாவை உயிருடன், தூல உடலோடு இறைவன் தன்னளவில் உயர்த்திக்கொண்டான். இன்றளவும் அவர் உயிருடன் இருக்கிறார். அதாவது பூமியில் மனிதர்கள் உண்டு, உறங்கி மலஜலம் கழித்து, வாழ்க்கையை சுகித்து வாழ்வது போல் அல்லாமல் ஈஸாவுக்கென இறைவன் அமைத்த தனி உலகில் அவர் உயிருடனிருக்கிறார். அதை இறைவனைத் தவிர எவரும் அறிந்துகொள்ள இயலாது, இறைவன் அறிவித்ததைத் தவிர.

மீள் வருகை

''அவர் (ஈஸா) இறுதி நாளின் அடையாளமாவார்'' (திருக்குர்ஆன், 043:061)

''என் உயிர் எவன் கையில் உள்ளது அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈஸா-அலை) உங்களிடையே இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார், பன்றிகளைக் கொல்வார், ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார். அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக்கொள்ள எவரும் இருக்கமாட்டார்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தமிழ் புகாரி, 2222, 2476, 3446. தமிழ் முஸ்லிம், 0242-0246. திர்மிதீ, இப்னுமாஜா)

இன்னும், தன்னை இறைவன் என்று வாதிட்டு, மக்களை வழிகெடுக்கும் மஸுஹு தஜ்ஜால் (Anti Christ) என்ற மகாப் பொய்யன். இவன் உலக அழிவு நாளின் நெருக்கத்திற்கு முன்னர் வெளிப்படுவான். இறுதி நாளின் அத்தாட்சியாக, விண்ணிலிருந்து இறங்கவிருக்கும் நபி ஈஸா (அலை) அவர்கள் இவனைக் கொல்வார்கள் என்றும் நபி முஹம்மது (ஸல்) அவர்களால் பல முன்னறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

மதீனாவில் இப்னு ஸய்யாத் என்றச் சிறுவனை தஜ்ஜால் என்று சந்தேகிக்கும் சூழ்நிலையில் நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! இவனைக்கொல்ல எனக்கு அனுமதி வழங்குங்கள்'' என்று கேட்கிறார். அதற்கு, இவன் அவனாக (தஜ்ஜலாக) இருந்தால் இவனைக் கொல்லும் அதிகாரம் உமக்கு வழங்கப்படவில்லை. இவ் அவனாக (தஜ்ஜலாக) இல்லையென்றால் இவனைக் கொல்வதில் உமக்கு எவ்விதப் பயனுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழியின் சுருக்கம். புகாரி, முஸ்லிம். தஜ்ஜாலைத் தீர்த்துக்கட்டும் பணியை ஈஸா நபியிடம் இறைவன் ஒப்படைத்திருக்கிறான் என்ற கருத்தில் அமைந்துள்ள நபிமொழி)

ஈஸா நபி மரணிக்கவில்லை!

ஈஸா நபியை இறைவன் தன்னளவில் உயர்த்திக்கொண்டான்!

ஈஸா நபி இன்றும் தமது இறைவனிடத்தில் உயிருடன் இருக்கிறார்!

எதிர்காலத்தில் மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்கள் விண்ணிலிருந்து இப்புவிக்கு இறங்கிவருவார்!

மக்களிடையே நேர்மையுடன் தீர்ப்பளிக்கும் நீதிபதியாகத் திகழ்வார்.

சிலுவையை உடைப்பார், பன்றிகளைக் கொல்வார், ஜிஸ்யா வரியை வாங்க மறுப்பார்.
இத்தருணத்தில் தஜ்ஜால் - (Anti Christ) - வெளிப்படுவான்.

இஸ்ரேலின் தலைநகருக்கு அருகேயுள்ள லுத்து எனும் இடத்தில் வைத்து மர்யமின் மகன் ஈஸா தஜ்ஜாலைக் கொல்வார்.

இவையெல்லாம் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சம்பவங்ளைக் குறித்து இஸ்லாத்தின் முன்னறிவிப்புகள். ஈஸா நபி மீண்டும் இப்புவிக்கு இறங்கி வரும்போது அவர் கொல்லப்பட்டார் என்ற யூதர்களின் கூற்று உண்மையல்ல என்றாகிவிடும். எனவே, ஈஸா நபியை யூதர்கள் கொல்லவில்லை, அவரைச் சிலுவையில் அறையவுமில்லை, இறைவன் அவரை தன்னளவில் உயர்ததிக்கொண்டான் என ஈஸாவின் மரணத்தை ஆணித்தரமாக இஸ்லாம் மறுக்கிறது.

மறுப்பதால் இஸ்லாத்திற்கு என்ன?

நபிமார்களிடையே வேற்றுமை இல்லை. அதே நேரத்தில் இறைவன் நபிமார்களில் சிலரைவிடச் சிலரை மேன்மையாக்கியிருக்கிறான். நபி ஈஸா (அலை) அவர்களின் சிறப்பு, ஆண் மகனின் மரபணு இன்றி இறைவனின் கட்டளைப்படி, கன்னி மர்யமின் மைந்தராகப் பிறந்தார். தொட்டில் குழந்தையாக இருக்கும்போது பேசினார். அவர் இறைத்தூதர் என்பதற்கான பல அற்புதங்களை இறைவனின் அனுமதியோடு நிகழ்த்திக்காட்டினார். இன்றுவரை மரணிக்காமல் உயிருடன் இருக்கிறார். இவையெல்லாம் ஈஸா நபியைக் குறித்து உயர்வாகச் சொல்லப்பட்டவை. மாறாக களங்கப்படுத்தும் நோக்கமல்ல!

இதுவரை மரணிக்காமல் இருக்கும் மனிதரைப் பற்றி அவர் மரணிக்கவில்லை என்று எவ்வாறு அறிந்துகொள்வது? என்ற சந்தேகம் நீங்க அவர் மறுபடியும் இவ்வுலகிற்கு வரவிருக்கும் சம்பவமே நிரூபணமாகும்! எதிர்காலத்தில் ஈஸா நபி இவ்வுலகிற்கு வரும்போது அவர் கொல்லப்படவில்லை என்ற இஸ்லாத்தின் மறுப்பு உண்மையாகும் - அதை உண்மைப்படுத்த எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பலச் செய்திகளை இஸ்லாம் முன்னறிவிப்புச் செய்துள்ளது.

ஆனால், ஈஸா நபி இவ்வுலகிற்கு மீண்டும் வரும்போது, ஈஸா நபி கொல்லப்பட்டார் - நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என்ற யூதர்களின் கூற்று உண்மையல்ல வெறும் ஊகம்தான் என்றாகிவிடும்.

குறிப்பு: திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற கருத்துடையவர்கள், நபி ஈஸாவின் மரணம் குறித்து இரண்டும் எவ்வளவு எதிரும் புதிருமாகக் கூறுகின்றன என்பதைப் படித்தாவது உணர வேண்டும் எனக் கோருகிறேன் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

No comments: