வாடகை, வட்டி இவை இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. வாடகைக்கு குடியிருப்பதும், வாடகைக்கு பொருள் எடுப்பதும் தவறில்லை என்றால் பணத்தைக் கடனாகக் கொடுத்து அதற்கு வட்டி வாங்குவதும் வாடகை போன்றது தான். அதாவது வீடு, பொருட்களை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது போல பணத்தை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது வட்டியில் சேராது என்று வாடகையும், வட்டியும் ஒரு தன்மையைக் கொண்டது என நண்பர் ரியோ கருத்து வைத்திருக்கிறார்.
வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் அடிப்படையில் இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. வீடு வாடகைக்கு எடுத்தவர் அதில் குடியேறியவுடன், வாடகைக்காரரின் பொறுப்புக்கு அந்த வீடு வந்து விடுகிறது. ஆனால் வீடு இடிந்து விழுந்தாலும் எரிந்து போனாலும், கலவரங்கள் போன்ற செயல்களால் நாசப்படுத்தப்பட்டாலும் இதற்கு வாடகைக்குக் குடியிருப்பவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை. வீட்டின் உரிமையாளரே பொறுப்பாளியாவார்.
கடன் வாங்கும் போது, அந்தத் தொகையின் இழப்புக்கும், லாபத்துக்கும் கடன் வாங்கியவரே பொறுப்பாளியாவர். பணம் தொலைந்து போனாலும், எரிந்து போனாலும் கடன் கொடுத்தவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை.
வீட்டை வாடகைக்கு விடுபவர் லாபத்திலும், நஷ்டத்திலும் பங்கேற்பதால் இங்கு வட்டி ஏற்படுவதில்லை.
கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவரின் நஷ்டத்தில் பங்கெடுப்பதில்லை. கடன் கொடுத்த பணத்தை விட கூடுதலாக லாபம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார் என்பதால் இங்கு வட்டி ஏற்படுகிறது.
சைக்கிளை வாடகைக்கு எடுப்பவர் அதை உபயோகித்து, அதிலிருந்து பயன் பெற்று அதற்கான வாடகையைச் செலுத்துகிறார். சைக்கிளை வாடகைக்கு விடுபவர், சைக்கிளை உபயோகிப்பதால் சைக்கிளின் பாகங்களுக்கு ஏற்படும் தேய்மான இழப்பிற்கு வாடகை வாங்குகிறார். வாடகைக்கு விடும் பொருட்கள், வாடகைக்கு எடுப்போர் பயன்படுத்துவதால் அதனால் பொருள் நசிந்து போவதற்கானக் கூலியை வாடகையாகப் பெறுகிறார்.
ஆனால்...
தன்னிடமுள்ள மேலதிகமானப் பணத்தை கடன் கொடுத்துத் திரும்பப் பெறுவதில், பணத்துக்கு எந்தத் தேய்மானமும் ஏற்படுவதில்லை. வட்டியாக லாபம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார்.
அதனால் எவ்விதத்திலும் வாடகையும், வட்டியும் சமமாகாது!
மற்றவை நண்பர் ரியோவின் விளக்கத்திற்குப் பின்...
மேலும்,
மனிதாபிமானத்துடன் தாராளமாகக் கடன் கொடுத்து உதவும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது. கடனை வாங்கி திரும்பத் தராமல் ஏமாற்றுகிறானே அவனை விட்டு விடுவோம், ஏமாற்றுபவன் என்று தெரிந்தால் அவனுக்குக் கடன் கொடுக்க வேண்டியதில்லை. நாணயமுள்ளவர்களாக இருப்பவருக்கு அவசியத் தேவையின் காரணமாக கடன் பெறும் நிலையிலிருந்தால் அவர்களுக்கு கடன் கொடுத்து உதவுங்கள் என்று சொல்லி, கடனைத் திரும்பத் தரும் எண்ணமிருந்தும், இயலாதவர்களுக்கு கடன் தொகையைக் குறைத்துத் தள்ளுபடி செய்யுங்கள் என்றும், நீங்கள் பொருளாதார வசதியில் மேன்மையாக இருந்தால், கொடுத்த கடன் முழுவதும் தள்ளுபடி செய்யுங்கள் என்றும் மனிதர்களிடம் இரக்கம் காட்டும்படி இஸ்லாம் கூறுகிறது.
வட்டி ஒரு பொருளாதாரச் சுரண்டல். வட்டியின் வாடையைக் கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எந்த அளவுக்கென்றால், காசுக்குக் காசை விற்பதை இஸ்லாம் தடை செய்கிறது. ஒருவருக்கு பத்து ரூபாய் கொடுத்து, திரும்பத் தரும் போது பதினோரு ரூபாயாகத் தரவேண்டும் என்பது பத்து ரூபாயை பதினோரு ரூபாய்க்கு விற்பது காசுக்குக் காசை விற்பதாகும். கடன் வாங்கியவர், கடன் கொடுத்தவருக்கு அன்பளிப்பு, மற்றும் உதவிகள் செய்தாலும் அது வட்டியாகும். அவர்களுக்குள் கடன் வாங்குவதற்கு முன் ஏற்கெனவே இவ்வாறு பகிர்ந்து கொண்டிருந்தால், அன்பளிப்பும் உதவிகளும் தவறில்லை.
கடன் வாங்கியவரை ''நீ இந்த இடத்தில் வந்து பணத்தைக் கொடு'' என்று வேறு இடத்துக்கு அலைய விடுவது வட்டியாகும்.
கடன் கொடுத்தவரை இன்று, நாளை என்று பணம் தராமல் இழுத்தடித்தால் அது கடன் வாங்கியவர் பெறும் வட்டியாகும். இப்படி வட்டியைப் பற்றி இன்னும் பல எச்சரிக்கைகளை விடுக்கிறது இஸ்லாம்.
அப்படியானால் முஸ்லிம்களில் பலர் வட்டியைத் தொழிலாக்கித் தங்களை வளர்த்து வாழ்கிறார்களே? என்ற கேள்வியெழுமானால். முஸ்லிம்களின் செயல்களுக்கு இஸ்லாம் பொறுபேற்காது, நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
32 comments:
ரியோ அவர்களின் கேள்விக்கு மிக்க சரியான பதில் அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி அபுமுஹை! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!!
விளக்கங்கள் மிகவும் சிம்பிளாக இருப்பதுபோலத் தோன்றினாலும் ஒரு சொல ஐயங்கள்.
1.வாடகைக்கு விட்ட வீடு குடியிருப்பவரின் கவனக்குறைவால் அல்லது சதியால் பழுதானால், எரிந்து போனால் யாருடைய பொறுப்பு அதேபோல் தான் கடன் கொடுக்கப்பட்ட பணமும்.
2. நீங்கள் வெளிநாட்டில் வாழ்கிறீர்கள். அந்த நாட்டு நாணயத்தில் ஒருவருக்கு கடன் கொடுக்கிறீர்கள். அவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கு இந்தியப் பணத்தில் திரும்பத் தருகிறார்.
பணமதிப்பு கூடவோ குறையவோ செய்திருக்கலாம். கூடியிருந்தால் 'காசுக்குக் காசை' விற்றிருக்கிறீர்கள்
குறைந்திருந்தால், கடன் கொடுத்த ஒரே காரணத்திற்காகப் பண இழப்பு அடைந்திருக்கிறீர்கள்.
இதனை எப்படி விளக்குவீர்கள்?
கவனிக்கவும்: நான் வட்டியை நியாயப்படுத்த இக்கேள்விகள் கேட்கவில்லை... சந்தேகம் நிவர்த்தி செய்யவே.
ஜாஃபர் அலி, உங்கள் வருகைக்கு நன்றி!
நண்பர் ரியோவின் பதிவில் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன்.
இப்பதிவு பற்றி நானும் மறுமொழியில் அவருக்குத் தெரிவித்துள்ளேன்.
அன்புடன்,
அபூ முஹை
//வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் அடிப்படையில் இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. வீடு வாடகைக்கு எடுத்தவர் அதில் குடியேறியவுடன், வாடகைக்காரரின் பொறுப்புக்கு அந்த வீடு வந்து விடுகிறது. ஆனால் வீடு இடிந்து விழுந்தாலும் எரிந்து போனாலும், கலவரங்கள் போன்ற செயல்களால் நாசப்படுத்தப்பட்டாலும் இதற்கு வாடகைக்குக் குடியிருப்பவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை//
வீடு வாடகைக்கு விடும்போது உங்கள் விளக்கம் பொருந்தலாம். ஆனால் மற்ற பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். சைக்கிளோ, கணினியோ மற்ற எந்த பொருட்களோ வாடகைக்கு எடுத்தால் பொருளின் பொறுப்பும் வாடகைக்கு எடுத்தவரையே சாரும். சைக்கிள் தொலைந்து போய்விட்டால் வாடகைக்கு எடுத்தவர்தான் சைக்கிளுக்கு உரிய பணத்தைக் கொடுக்க வேண்டும்.
//சைக்கிளை உபயோகிப்பதால் சைக்கிளின் பாகங்களுக்கு ஏற்படும் தேய்மான இழப்பிற்கு வாடகை வாங்குகிறார். வாடகைக்கு விடும் பொருட்கள், வாடகைக்கு எடுப்போர் பயன்படுத்துவதால் அதனால் பொருள் நசிந்து போவதற்கானக் கூலியை வாடகையாகப் பெறுகிறார். //
இந்த விளக்கம் தவறு. தேய்மான செலவை மட்டுமே யாரும் வாடகையாக வாங்குவதில்லை. தேய்மான செலவுக்கு மட்டுமே வாடகை வாங்கினால் வாடகைக்கு விடுவோருக்கு லாபம் என்பது எப்படி வரும்?
//தன்னிடமுள்ள மேலதிகமானப் பணத்தை கடன் கொடுத்துத் திரும்பப் பெறுவதில், பணத்துக்கு எந்தத் தேய்மானமும் ஏற்படுவதில்லை. வட்டியாக லாபம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார். //
இதுவும் தவறு. பணத்திற்கு தேய்மானம் இல்லையென்று எப்படி சொல்கிறீர்கள்? இன்று 1 லட்சம் கொடுத்து விட்டு 2 வருடம் கொடுத்து அதை திருப்பி வாங்கும்போது பண மதிப்பு குறைந்து இருக்கும். விலைவாசி சீராக உயர்ந்துகொண்டுதான் இருக்கும். பணமதிப்பு குறைந்து கொண்டுதன் இருக்கும். அதுதான் பணத்தின் தேய்மானம்.
மேலும் பொதுவாக நான் வட்டிக்கு பணம் வாங்குவதனால், எனக்கு எந்த இழப்பும் இருக்காது. எனக்கு லாபம் இருப்பதனால்தான் மட்டுமே நான் கடனே வாங்குவேன்.
இன்று நான் 10 லட்சம் கடன் வாங்கி ஒரு வீடு வாங்கி 20வருடத்தில் அந்த கடனை 20 லட்சம் செலுத்தி அடைப்பது எனக்கு நஷ்டமானது அல்ல. இந்த 20 வருடங்களில் எனக்கு வாடகைச் செலவு மிச்சம். 20 வருடங்களுக்குப் பிறகு என் வீட்டின் மதிப்பு குறைந்த பட்சம் 20 லட்சத்துக்கு மேலாக ஆகி இருக்கும். எனவே எனக்கு லாபம்தான்.
எனக்கு கடன் கொடுத்தவருக்கும் லாபம்தான். பரஸ்பரம் இருவருமே பயனடைகிறோம்.
வட்டியில்லாமல் நான் அந்த கடனை வாங்கியிருந்தால் எனக்கு லாபம் அதிகம். கடன் கொடுத்தவருக்கு நஷ்டம். இப்போது 10 லட்சம் கொடுத்து விட்டு 20 வருடங்களுக்குப்பின்னும் 10 லட்சமே திருப்பி வாங்கிக்கொள்வாரேயானால் அவருக்கு அது எவ்வளவு நஷ்டம்!!
இப்போது 10 லட்சத்தால் (பொருள்)வாங்கும் அளவில் கால்வாசி கூட 20 வருடம் கழித்து வாங்க முடியாது.
அவசரமாக ஒருவர் மருத்துவ செலவுக்கு கடன் கேட்கிறார். அப்போது அவரது அவசர சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பது அநியாய வட்டியாகும். அதை தடுக்கத்தான் அரசே கந்து வட்டி தடைச்சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
நியாய வட்டிக்கு கடன் கொடுப்பது அநியாயமாகாது. அதில் பரஸ்பரம் இருவருமே பயன் பெறுகின்றனர்.
ரியோ அவர்களின் கேள்விக்கு மிக்க சரியான பதில் அளித்துள்ளீர்கள்.
மிக்க நன்றி அபுமுஹை!
சவூதி தமிழன், உங்கள் வருகைக்கு நன்றி!
//1.வாடகைக்கு விட்ட வீடு குடியிருப்பவரின் கவனக்குறைவால் அல்லது சதியால் பழுதானால், எரிந்து போனால் யாருடைய பொறுப்பு அதேபோல் தான் கடன் கொடுக்கப்பட்ட பணமும்.//
கவனக் குறைவால் ஏற்படும் இழப்பீடு எல்லாருக்கும் பொதுவான விதி. வாடகை வீடு குடியிருக்கவும், குடியிருப்பவரின் பொருட்கள் பாதுகாக்கப்படுவதற்காகவும் உபயோகப்படுகிறது. குடியிருப்பவர் வீட்டை பழுதுபடுத்துவற்கும், எரிப்பதற்கும் உரிமையற்றவர். ஒருவரின் கவனக் குறைவால் ஏற்படும் விளைவுகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.
இது வாடகை வாகனம், வாடகைப் பொருட்கள் எல்லாத்துக்கும் பொருந்தும். சைக்கிளை வாடகைக்கு எடுத்துச் சென்றவர் விபத்தால் சைக்கிளை இடித்து நெளித்து விட்டால் அதை சரி செய்வதற்கான நஷ்ட ஈட்டை சைக்கிளின் சொந்தக்காரருக்குச் செலுத்த வேண்டும். சைக்கிள் தொலைந்து போனாலும் சைக்கிளின் தொகையை செலுத்தியாக வேண்டும். இங்கு காசுக்குக் காசு விற்கப்படுவதில்லை. பொருளுக்கான காசு செலுத்தப்படுகிறது.
கடன் வாங்கியவர் அந்தப் பணத்தை அழித்தாலும், எரித்தாலும் வாங்கிய பணத்துக்கு அவர் முழு பொறுப்பாளியாவார். கடன் வாங்கியவர் அந்தப் பணத்தால் லாமடைந்தாலும், நஷ்டமடைந்தாலும் வாங்கிய தொகையைக் கண்டிப்பாகத் திரும்ப செலுத்தியாக வேண்டும் அதுதான் நேர்மை. ஆனால் கடன் வாங்கியவர் நஷ்டமடைந்தாலும் வாங்கிய தொகையை விட, வட்டி என்ற பெயரில் அதிகமாகச் செலுத்த வேண்டும். இங்கு தெளிவாகக் காசுக்குக் காசு விற்கப்படுகிறது. (மேலும், இது பற்றி நண்பர் ரியோவுக்கு விளக்கமளிக்கும் போது கூடுதல் விபரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இன்னொரு கேள்விக்கு அடுத்து எழுதுகிறேன்.)
அன்புடன்,
அபூ முஹை
சவூதி தமிழனின் இரண்டாவது கேள்விக்கான விளக்கம்.
//2. நீங்கள் வெளிநாட்டில் வாழ்கிறீர்கள். அந்த நாட்டு நாணயத்தில் ஒருவருக்கு கடன் கொடுக்கிறீர்கள். அவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கு இந்தியப் பணத்தில் திரும்பத் தருகிறார்.
பணமதிப்பு கூடவோ குறையவோ செய்திருக்கலாம். கூடியிருந்தால் 'காசுக்குக் காசை' விற்றிருக்கிறீர்கள்
குறைந்திருந்தால், கடன் கொடுத்த ஒரே காரணத்திற்காகப் பண இழப்பு அடைந்திருக்கிறீர்கள்.
இதனை எப்படி விளக்குவீர்கள்?//
எந்த நாட்டின் பணம் கடனாக வாங்கப்பட்டதோ அதே நாட்டின் பணமாகவேத் திரும்பத் தர வேண்டும், பெற வேண்டும். இது இன்று இயலாத காரியமில்லை. முடியாத நிலை வருமானால், 500 டாலரைக் கடனாகப் பெற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், கடன் தந்நதவர் சம்மதித்தால் அன்றைய தினத்தில் 500 டாலருக்கு இந்திய ரூபாயின் பண மதிப்பு எவ்வளவோ அதைக் கொடுக்கலாம்.
பண மதிப்பு கூடுவதும், குறைவதும் உலக சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடன் கொடுத்தவரும், வாங்கியவரும் எந்த விதத்திலும் இதில் சம்பந்தப்படுவதில்லை. அதாவது கொடுத்தவரும், வாங்கியவரும் பண மதிப்பைக் கூட்டவும், குறைக்கவும் முயற்சி செய்யவில்லை.
கடன் கொடுத்தவர் அந்தப் பணத்தைக் கடன் கொடுக்காமல் வீட்டில் வைத்திருந்தாலும் அந்தப் பணத்திற்கான மதிப்பு கூடுவதும், குறைவதும் நடந்து கொண்டுதானிருக்கும். கடன் கொடுப்பதாலோ, வாங்குவதாலோ பண மதிப்பில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவதில்லை. இந்த அடிப்படையைப் புரிந்த கொண்டால் இங்கு காசுக்குக் காசை விற்கும் நிலை ஏற்படவில்லை என்பது புரியும்.
அரிசிக்கு அரிசியை சம எடையில், சம தரத்தில் விற்றுக் கொள்ள வேண்டும். இதில் கூடுதல், குறைவு ஏற்பட்டால் வட்டியாகும். ஆனால், அரிசியைக் கோதுமைக்கும், கோதுமையை உப்புக்கும், உப்பைத் தவுட்டுக்கும் விற்கும் போது பண்டமாற்று வியாபாரமாகி விடுகிறது. அதனால் கூடக் குறைய லாபம் வைத்து விற்றுக் கொள்ளலாம்.
டாலரை தினாருக்கும், தினாரை ரியாலுக்கும், ரியாலை ரூபாய்க்கும் மாற்றும் போது, பண்டமாற்று போல் நாணய மாற்று வியாபாரம் நிகழ்கிறது. இதையும் புரிந்து கொண்டால் டாலருக்கு டாலர் விற்கப்பட வில்லை என்பது தெளிவு.
எழுதியவற்றில் மேலும் சந்தேகம் இருந்தால் எழுதுங்கள்.
அன்புடன்,
அபூ முஹை
//ரியோ அவர்களின் கேள்விக்கு மிக்க சரியான பதில் அளித்துள்ளீர்கள்.
மிக்க நன்றி அபுமுஹை!//
அன்பின் சுவனப்பிரியன், உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
இணையத்தில் இதுபோன்ற ஒரு விவாத அழகை பார்த்து வெகு நாளாகி விட்டது. கேள்வி கேட்பவர், அவருக்கு பதிலளிப்பவர் இருவருமே பரஸ்பரம் புரிந்துணர்வுடனும், எந்த விதமான காய்தல், உவத்தலின்றி விவாதத்தில் ஈடுபடுவது மிக்க அவசியம் என்பதை நினைவில் கொண்டோமென்றால் விவாதத்தின் பயனை அனைவரும் அடைந்து கொள்ளலாம். இந்த விவாதக்களம் 2004ல் உங்கள் இஸ்லாம் மின்மன்றத்தில் நடந்த "வட்டி வங்கி முஸ்லிம்" விவாதத்தை நினைவுபடுத்துகிறது. அல்லாஹ் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக!
அன்பின் நண்பர் ரியோ, உங்கள் வருகைக்கு நன்றி!
//இந்த விளக்கம் தவறு. தேய்மான செலவை மட்டுமே யாரும் வாடகையாக வாங்குவதில்லை. தேய்மான செலவுக்கு மட்டுமே வாடகை வாங்கினால் வாடகைக்கு விடுவோருக்கு லாபம் என்பது எப்படி வரும்?// - ரியோ
தேய்மான இழப்பு என்று நான் சொன்னது, தேய்மானங்கள் மட்டும் அதில் இல்லை. வாடகை சைக்கிளின் மீது முதலீடு செய்தவர் அதன் பராமரிப்புக்காக உழைக்கிறார். சைக்கிளை பாதுகாப்பதற்காக கட்டிடம் தேவைப்படுகிறது. பராமரிப்பு, பாதுகாப்பிற்கான செலவோடு லாபத்தையும் சேர்த்தே தொழில் செய்வார். என்னதான் கவனமாக பராமரித்து வந்தாலும் சைக்கிள் ஒரு நேரத்தில் ஒன்றுக்கும் உதவாமல் பழைய இரும்பு விலைக்கு போடும் நிலைக்கு வந்து விடும். அதாவது வாடகைப் பொருட்கள் தானாகவே அழிந்து விடும்.
வட்டியில் தானாக அழியும் நிலையில்லை. ஆயிரம் ரூபாயை வட்டிக்கு விட்டால் மாதமாதம் வட்டி வந்து கொண்டேயிருக்கும். ஆயிரம் ரூபாய் பல பேர் கைமாறிக் கடனாகக் கொடுக்கப்பட்டு பல ஆயிரங்கள் வட்டியாக வந்திருந்தாலும் வட்டியில் முதலீடு செய்த ஆயிரம் ரூபாய் தேயாமல், கரையாமல் ஆயிரம் ரூபாயாக இருந்து கொண்டேயிருக்கும். தானாக ஒரு ரூபாய் கூட அழியவில்லை. அதனால் வாடகையும், வட்டியும் ஒன்றல்ல என்பது எமது நிலைப்பாடு.
வாடகையும், வட்டியும் ஒன்றுதான் என்பது பற்றி மேலும் விளக்கம் இருந்தால் எழுதுங்கள்.
சவூதி தமிழனுக்கு எழுதிய விளக்கங்களையும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள் நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருநாமத்தால் எழுதுகிறேன்.
அன்பு சகோதரர் அபூமுஹை அவர்களுக்கு
தங்களுடைய இந்த பதிவு மிகவும் பயன் அளிக்க கூடியதாகவும், நிறைய சந்தேகங்களுக்கு பதில் அளிக்க கூடியவகையிலும் உள்ளது. பல்வேறு சந்தேகங்களை கேட்டு, மற்றவர்களுக்கும் அதிக விளக்கங்கள் கிடைக்க வழியமைத்த சகோதரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். எல்லா புகழும் இறைவனுக்கே. இறைவன் இதற்கான நற்கூலியை சகோதரர்கள் அனைவருக்கும் வழங்கிட பிராத்திக்கிறேன். சகோதரர் ஜாபர் அலி கூறியுள்ளதை போல் மிக நாகரீகமான முறையில் கேள்விகளும், விளக்கங்களும் அமைந்துள்ளதும் இதில் சிறப்பம்சமாகும். எல்லா புகழும் இறைவனுக்கே.
நன்றியும், வாழ்த்துக்களுடன்
நெய்னா முஹம்மது
ரியோ said...
//பணத்திற்கு தேய்மானம் இல்லையென்று எப்படி சொல்கிறீர்கள்? இன்று 1 லட்சம் கொடுத்து விட்டு 2 வருடம் கொடுத்து அதை திருப்பி வாங்கும்போது பண மதிப்பு குறைந்து இருக்கும்.//
அபூ முஹை said...
//பண மதிப்பு கூடுவதும், குறைவதும் உலக சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடன் கொடுத்தவரும், வாங்கியவரும் எந்த விதத்திலும் இதில் சம்பந்தப்படுவதில்லை. அதாவது கொடுத்தவரும், வாங்கியவரும் பண மதிப்பைக் கூட்டவும், குறைக்கவும் முயற்சி செய்யவில்லை.//
ரியோவின் கேள்விக்கு அபூமுஹையின் மேற்கூறிய விளக்கம் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
"உங்களுடன் தர்க்கிப்போருடன் மிக அழகிய முறையில் விவாதம் செய்யுங்கள்" என்ற குர்ஆனின் அறிவுரைக்கேற்ப இந்த விவாதம் சென்று கொண்டுள்ளது. அனைவருக்கும் நன்றி.
ஜாஃபர் அலி அவர்களே, உங்கள் மீள் வருகைக்கு நன்றி!
//இந்த விவாதக்களம் 2004ல் உங்கள் இஸ்லாம் மின்மன்றத்தில் நடந்த "வட்டி வங்கி முஸ்லிம்" விவாதத்தை நினைவுபடுத்துகிறது.// - ஜாஃபர் அலி
ஆம், அது ஒரு அழகிய நிலா காலம்:)
அன்புடன்,
அபூ முஹை
//எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருநாமத்தால் எழுதுகிறேன்.
அன்பு சகோதரர் அபூமுஹை அவர்களுக்கு
தங்களுடைய இந்த பதிவு மிகவும் பயன் அளிக்க கூடியதாகவும், நிறைய சந்தேகங்களுக்கு பதில் அளிக்க கூடியவகையிலும் உள்ளது. பல்வேறு சந்தேகங்களை கேட்டு, மற்றவர்களுக்கும் அதிக விளக்கங்கள் கிடைக்க வழியமைத்த சகோதரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். எல்லா புகழும் இறைவனுக்கே. இறைவன் இதற்கான நற்கூலியை சகோதரர்கள் அனைவருக்கும் வழங்கிட பிராத்திக்கிறேன். சகோதரர் ஜாபர் அலி கூறியுள்ளதை போல் மிக நாகரீகமான முறையில் கேள்விகளும், விளக்கங்களும் அமைந்துள்ளதும் இதில் சிறப்பம்சமாகும். எல்லா புகழும் இறைவனுக்கே.
நன்றியும், வாழ்த்துக்களுடன்
நெய்னா முஹம்மது//
அன்பின் சகோதரர் நெய்னா முஹம்மது அவர்களே, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!
வலைப்பதிவில் உங்கள் பிரவேசம், மற்றும் இஸ்லாம் பற்றிய ஆழமானக் கருத்துக்களைக் கொண்ட உங்கள் எழுத்துக்களும் எம்மை சந்தோஷப்படுத்துகின்றன.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
நீங்கள் இஸ்லாம் பற்றித் தனிப் பதிவில் எழுதலாமே!
அன்புடன்,
அபூ முஹை
அழகப்பன் அவர்களே, உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்!
//ரியோவின் கேள்விக்கு அபூமுஹையின் மேற்கூறிய விளக்கம் பொருந்தும் என்று நினைக்கிறேன்.// - அழகப்பன்
நண்பர் ரியோ அவர்கள் எழுதியது பற்றி எனக்கு மேலும் எழுத வேண்டியிருக்கிறது. அதற்கு முன், வாடகையும், வட்டியும் ஒன்றுதான் என்றே நண்பர் ரியோ அவர்களின் பதிவின் மையக் கருத்தாக இருப்பதால் அது பற்றிய முதலில் பேசிவிட்டு மற்றவை அடுத்த கட்டமாக.
மேலும்,
இஸ்லாம் வட்டியைத் தடுத்திருப்பதை மதம் சார்ந்த நம்பிக்கையாக அவரும். அவருடைய நண்பரும் விவாதித்திருக்கிறார்கள். இஸ்லாம் கூறும் மறைவான விஷயங்களில் நம்பிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
வட்டி இந்த உலக சம்பந்தப்பட்ட செயல். வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் சரிதானா? என்று பரிசீலிக்க முடியும். அதனால் இஸ்லாம் வட்டியைத் தடை செய்திருப்பதை கண்களை மூடிக் கொண்டு முஸ்லிம்கள் ஏற்க வேண்டிய அவசியமில்லை.
அன்புடன்,
அபூ முஹை
வாழ்க்கைக்கு அவசியமான எந்தச் செயலையும் இஸ்லாம் நியாயமான காரணமின்றி தடுப்பதில்லை.அந்தக் காலத்தில் நடைமுறையிலிருந்த வியாபரத்தையும் வட்டியையும் இஸ்லாம் தெளிவாகவே வரையறுத்துள்ளது.வட்டி எந்தப் பெயரில் அல்லது ரூபத்திலிருந்தால் இஸ்லாத்தில் முற்றிலும் தடுத்திருப்பதால் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. எனினும், முஸ்லிம் அல்லாத மாற்றுமத சகோதரர்கள் அல்லது வட்டி தடுக்கப்பட்டிருப்பதை அறிந்து தெளிவுபெறும் பொருட்டு, இதுபோன்ற ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் அவசியம்.
கடந்த பத்தாண்டுகள்வரை வட்டியில்லாத வணிகம் சாத்தியமா? என்று கேட்டுக் கொண்டிருந்த சூழலில், வட்டியில்லாத வர்த்தகமும் வங்கியியல் முறையும் உலகம் முழுவதும் வெற்றிகரமாகச் சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனாலேயே Standard Chartered, ABN-AMRO, HSBC போன்ற உலகலாவிய வங்கிகள்கூட ஷரீஆ பைனான்ஸ் எனும் இஸ்லாமிய/வட்டியில்லா வங்கி வர்த்தக முறையை பெரும்பாலான நாடுகளில் செயல்படுத்தி வருகின்றன.
சகோதரர் ரியோ அவர்களின் சந்தேகம் நியாயமானதே! உண்மையாகச் சொல்வதென்றால் இந்த சந்தேகம் எனக்கும் உண்டு! (அநியாய/நியாய) வட்டி வாங்குவது சிரமத்திற்கு கடன் வாங்கியவரை மேற்கொண்டு சிரமப்படுத்தும் என்பதை மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக் கொள்வோம். மாறாக, குறிப்பிட்ட காலத்திற்குக் கடன் தருவதால், கடன் கொடுப்பவரின் பணம் முடக்கப்படுகிறது.அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட கடன் பெற்றவர் சிறுதொகையை உபரியாகச் செலுத்த ஒப்புக் கொள்கிறார்.பணத்தைக் கொடுப்பதால் அதேபணம்தானே திருப்பிக் கொடுக்கப்படுகிறது, இழப்பு இல்லையே எனலாம். நடைமுறையில் பயன்படுத்தாத பணம் உலகலாவிய வர்த்தகத்தில் இழப்பாகவே கருதப்படுகிறது.
வாங்குபவரும் விற்பவரும் ஒப்புக் கொள்ளும் ஹலாலான ஒப்பந்தங்கள் அனுமதிக்கப் பட்டிருக்கிறது என்ற அடிப்படையில் வட்டி அல்லது எந்த பெயரிலும் கடன் கொடுத்தவருக்கு சிறுதொகையைக் கொடுப்பதும் நியாயம்தானே என்ற சந்தேகம் எழுகிறது. கடன் பெற்றவர் அதனை திருப்பிச் செலுத்தும்போது கடன் கொடுத்தவருக்கு மனமுவந்து மேலதிகத் தொகை அல்லது வேறு பரிசு கொடுப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி...) அவர்களிடம் வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்திய முஹம்மது நபி (ஸல்...) கடனாக வாங்கிய தொகையைவிட உபரியாகக் கொடுத்திருக்கிறார்கள்.இது சம்பந்தப்பட்ட ஹதீஸ் குறிப்பு புகாரியில் உள்ளது.
மேலும், தற்கால வர்த்தகத்தில் பணமும் பொருளும் ஏறக்குறைய ஒரே மதிபீட்டில் கணக்கிடப்படுகின்றன. ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பணமும் பொருட்களும் சொத்துக்கள் வகையிலேயே கணக்கிடப்படுகிறது.கொடுத்த பொருளுக்கு வாடகை வசூலிப்பது அனுமதிக்கப்பட்டிருக்கும்போது,கொடுத்த பணத்திற்கு வாடகை வசூலிப்பதை தவறு என்பது முரணாகப்படுகிறது.பொருளுக்கு தேய்மானம் இருப்பதால் பொருளுக்கான வாடகையை நியாயப்படுத்துகிறோம். தேய்மானம் இல்லாத பொருட்களும் இருக்கின்றன. தங்கம் (பயன்படுத்தும் நகை அல்ல) போன்றவை யாரிடம் இருந்தாலும் அதன் மதிப்பு நிலையாக அல்லது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும்.
உதாரணமாக சென்ற வருடம் ஒருவர் ஒரு பவுண் தங்கக்காசைக் கடனாகப் பெற்று அதனை வர்த்தகத்தில் பயன் படுத்திவிட்டு, இந்த வருடம் திருப்பிக் கொடுக்கும் போது அதே ஒரு பவுண் தங்கக்காசின் சந்தை மதிப்பு சென்ற வருடத்தை விட சற்று கூடுதலாகவே இருக்கிறது.வாங்கிய ஒரு பவுனைக் திருப்பிக் கொடுக்க ஒப்புக்கொண்டிருப்பதால் ஒருபவுன் தங்கக்காசின் தற்போதைய கூடுதல் மதிப்பை கடன் பெற்றவர் தங்கநகைக் கடைக்காரரிடம் கொடுக்கிறார். அவ்வாறு கூடுதல் மதிப்பை கடன் கொடுத்து உதவாத யாரோ ஒரு மூன்றாம்நபர் பயனடைவதை விட பணம் கொடுத்து உதவியவர் பயனடைவது தவறாகப் படவில்லை. இதைத்தான் பணப்புழக்கத்தில் வட்டி என்று வேறுபடுத்தி அறிகிறோம். கடன் கொடுத்தவர்,
கடனை திருப்பிச் செலுத்த போதுமான தவணை கொடுக்க வேண்டும் என்று சொல்வதோடு கடன் பெறுபவர் திருப்பிச் செலுத்தும் நோக்கத்தில் பெறவேண்டும் என்றும் சொல்கிறது. கடன் கொடுத்தவர் கடுமையாக நடந்து கொண்டபோது முஹம்மது நபி (ஸல்) பொறுமைகாத்ததோடு,கோபப்பட்ட தோழர்களின் இது கடன் கொடுத்தவரின் உரிமை என்றார்கள்.
வட்டி வாங்குவதை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்காக கடுமையாக தடுக்கப்பட்டிருக்கலாம்;வட்டி கொடுப்பதும் தடுக்கப்பட்டிருப்பதற்கு தெளிவான குறிப்புகள் இருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள். மேற்கொண்டு தெளிவடையும் பொருட்டே இக்கேள்விகள் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.
அபூ முஹை,
நானும் சில கேள்விகள்/பதிலகளை எழுதியுள்ளேன். உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
http://tryonce.blogspot.com/2007/03/blog-post.html
சகோதரர் ரியோ பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:
சகோதர் ரியோ அவர்களே...
வாடகை என்பது வியாபாரம் சார்ந்த பரிவர்த்தனை. ஆனால், கடன் என்பது மனிதாபிமான செயலுக்குரியதாகும். இந்த மனிதாபிமான செயலை வியாபாரமாக ஆக்காதீர்கள் என இஸ்லாம் கூறி அதை தண்டனைக்குரிய செயலாக கருதுகின்றது.
ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவியை வியாபாரமாக்கியதால் தான் இன்றைய உலகத்தில் ஒருவனின் துன்பத்தை திரைப்படத்தில் கண்டு கண்ணீர்விட்டுக் கொண்டுள்ளோம்.
உதாரணமாக: நமது அண்டை வீட்டார் கடனாக வாங்கும் காபி பொடி, பால் போன்ற அத்தியாவசிய பொருளை திருப்பிக் கொடுக்கும் வரை அதற்காக வட்டி போட்டு ஏதாவது வாங்குவீர்களா? அப்படிப்பட்ட ஒரு செயலை எவ்வாறு எடுத்துக் கொள்வீர்கள்? எது மனிதாபிமானம் என்பது இப்பொழுதாவது விளங்குகின்றதா? நாம் எங்கு சென்றுகொண்டு உள்ளோம்? விளக்குவீர்களா?
நல்லடியார் உங்கள் வருகைக்கும் விரிவான விளக்கங்களுக்கும் நன்றிகள்!
//வட்டி வாங்குவதை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்காக கடுமையாக தடுக்கப்பட்டிருக்கலாம்;வட்டி கொடுப்பதும் தடுக்கப்பட்டிருப்பதற்கு தெளிவான குறிப்புகள் இருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள். மேற்கொண்டு தெளிவடையும் பொருட்டே இக்கேள்விகள் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.//
வட்டி வாங்குவதையும், கொடுப்பதையும் இஸ்லாம் தடை செய்திருக்கிறது.
//வாங்குபவரும் விற்பவரும் ஒப்புக் கொள்ளும் ஹலாலான ஒப்பந்தங்கள் அனுமதிக்கப் பட்டிருக்கிறது என்ற அடிப்படையில் வட்டி அல்லது எந்த பெயரிலும் கடன் கொடுத்தவருக்கு சிறுதொகையைக் கொடுப்பதும் நியாயம்தானே என்ற சந்தேகம் எழுகிறது. கடன் பெற்றவர் அதனை திருப்பிச் செலுத்தும்போது கடன் கொடுத்தவருக்கு மனமுவந்து மேலதிகத் தொகை அல்லது வேறு பரிசு கொடுப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி...) அவர்களிடம் வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்திய முஹம்மது நபி (ஸல்...) கடனாக வாங்கிய தொகையைவிட உபரியாகக் கொடுத்திருக்கிறார்கள்.இது சம்பந்தப்பட்ட ஹதீஸ் குறிப்பு புகாரியில் உள்ளது.//
கடன் வாங்கியவர் கடனைத் திரும்ப செலுத்தும் போது, தான் வாங்கியத் தொகையை விட சற்று அதிகமாக செலுத்துகிறார் என்றால் இது கடன் வாங்கியவர் விருப்பதுடன் கொடுக்கும் மேலதிகமான பணமாகும். இதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இவ்வாறு சற்று அதிகமாகக் கொடுப்பதை கடனை அழகிய முறையில் திரும்ப செலுத்தியவராகவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது.
கடன் வாங்கியவர் அதைத் திரும்ப செலுத்தும் போது அந்த ஒரு தடவையில் கடனையும் அடைத்து, கடன் தொகையோடு சேர்த்து கூடுதலாக அவர் விரும்பியதை: கவனிக்க அவர் விரும்பியதை செலுத்துகிறார். கடன் கொடுத்தவர் எனக்குத் திரும்பத் தரும் போது அதிகமாகத் தர வேண்டும் என்று கேட்கவில்லை. அதுவும் கடனைத் திரும்பத் தரும்வரை மாதமாதம் குறிப்பிட்டத் தொகையை தந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று கேட்டால் அது வட்டியாகும்.
//உதாரணமாக சென்ற வருடம் ஒருவர் ஒரு பவுண் தங்கக்காசைக் கடனாகப் பெற்று அதனை வர்த்தகத்தில் பயன் படுத்திவிட்டு, இந்த வருடம் திருப்பிக் கொடுக்கும் போது அதே ஒரு பவுண் தங்கக்காசின் சந்தை மதிப்பு சென்ற வருடத்தை விட சற்று கூடுதலாகவே இருக்கிறது.வாங்கிய ஒரு பவுனைக் திருப்பிக் கொடுக்க ஒப்புக்கொண்டிருப்பதால் ஒருபவுன் தங்கக்காசின் தற்போதைய கூடுதல் மதிப்பை கடன் பெற்றவர் தங்கநகைக் கடைக்காரரிடம் கொடுக்கிறார். அவ்வாறு கூடுதல் மதிப்பை கடன் கொடுத்து உதவாத யாரோ ஒரு மூன்றாம்நபர் பயனடைவதை விட பணம் கொடுத்து உதவியவர் பயனடைவது தவறாகப் படவில்லை. இதைத்தான் பணப்புழக்கத்தில் வட்டி என்று வேறுபடுத்தி அறிகிறோம். கடன் கொடுத்தவர்,//
ஒரு பவுண் தங்கக் காசைக் கடனாகப் பெற்றவர் தான் வாங்கிய ஒரு பவுண் தங்கக் காசைத் திரும்ப செலுத்துகிறார். தஙகக் காசின் சந்தை மதிப்பு கூடியதில், கடன் கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் எந்த பங்குமில்லை. இது பற்றி பணமதிப்பிற்கான விளக்கத்தையும் படித்துக் கொள்ளுங்கள்.
//கடனை திருப்பிச் செலுத்த போதுமான தவணை கொடுக்க வேண்டும் என்று சொல்வதோடு கடன் பெறுபவர் திருப்பிச் செலுத்தும் நோக்கத்தில் பெறவேண்டும் என்றும் சொல்கிறது. கடன் கொடுத்தவர் கடுமையாக நடந்து கொண்டபோது முஹம்மது நபி (ஸல்) பொறுமைகாத்ததோடு,கோபப்பட்ட தோழர்களின் இது கடன் கொடுத்தவரின் உரிமை என்றார்கள்.//
இஸ்லாம் கடன் பற்றி அதிகமாக எச்சரித்திருக்கிறது. கடன் வாங்கி விட்டு ஏமாற்றுபவனாத் தோன்றினால் அவனுக்குக் கடன் கொடுக்க வேண்டியதில்லை என்றே கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். கடன் என்பது சில அத்தியாவசியத் தேவைகளுக்காக பெறப்படுவது. ஆடம்பரத்திற்காக அல்ல.
இது பற்றி அப்துல் குத்தூஸ் அவர்கள் உதவியை வியாபாரமாக்கலாமா? என்று நல்ல உதாரணத்துடன் எழுதியிருக்கிறார். மேலும் விளக்கமிருந்தால் எழுதுங்கள். நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
அபூ முஹை, மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோரின் விளக்கத்தைப்பார்க்கும்போது, அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்கும்போது வட்டி வாங்குவது தவறு என்றுதான் திரும்பத் திரும்ப கூறுகின்றனரே தவர, வியாபார நோக்கத்திற்காகவும், வசதிவாய்ப்பைப் பெருக்கிக்கொள்வதற்காகவும் வாங்கப்படும் கடன் பற்றி விளக்கம் ஏதும் கூறவில்லை. அது மனிதாபிமான கடன் என்று கூற முடியாது. அதற்கு வட்டி ஏற்புடையதா?
அவர்களது விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
அன்பின் ரியோ உங்கள் வருகைக்கு நன்றி!
//அதை விடுங்கள். தேய்மானம் இல்லாத பொருட்களை வாடகைக்கு விடுவது தவறு என்பதுதான், 'பணத்தை வாடகைக்கு விடக்கூடாது' என்று நீங்கள் நியாயப்படுத்துவதற்கான உங்கள் பதிலாக இருக்குமானால், தேய்மானம் இல்லாமல் பல பொருட்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. அவையும் தவறு என்று சொல்வீர்களா?
உதாரணத்திற்கு,
சில மென்பொருட்களை குறிப்பிட்ட காலம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விற்கின்றனர்(வாடகைக்கு விடுகின்றனர்). அதற்கு சத்தியமாக எந்த் தேய்மானமும் ஏற்படாது.// - ரியோ
மென்பொருட்கள் பற்றி எனக்கு தெரிந்த வரையில் சொல்கிறேன்...
மென்பொருட்கள் ஒரு நபரின் உழைப்பினால் உருவானது. உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெற அவருக்கு உரிமை இருக்கிறது.
பிறர் உருவாக்கிய மென்பொருட்களை சிலர் விலை கொடுத்து வாங்கி அதை வாடகைக்கு விடலாம். இந்த transaction-ல் அந்த உரிமையாளர் தனது பணத்தை முதலீடு செய்திருக்கிறார். அப்பொருளை பிறருக்கு வாடகைக்கு விட்டு பொருளீட்டுவதில் தவறேதும் இல்லை.
மென்பொருட்கள் தேய்மானம் அடைவதில்லைதான். ஆனால் அவை சீக்கிரத்தில் வழக்கொழிந்து போய்விடும் அபாயம் இருக்கிறது (outdated). அதனால் குறுகிய கால அவகாசத்திலேயே, உழைத்தவர்கள் தமக்குரிய ஊதியத்தையும், முதலீட்டாளர்கள் தமக்குரிய லாபத்தையும் அடைந்து கொள்ள முயற்சிப்பது அனுமதிக்கப் பட்டதே!
மேலும், அறிந்தவர்கள் உதவலாம் நன்றி!
ரியோ, இங்கு காசு விற்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மற்ற கேள்விகள் பற்றியும் அடுத்து எழுதுகிறேன்.
அன்புடன்
அபூ முஹை
அப்துல் குத்தூஸ் உங்கள் வருகைக்கும் அழகானக் கருத்திற்கும் நன்றிகள்!
அன்புடன்,
அபூ முஹை
//வட்டிக்கும் வாடகைக்கும் உள்ள உறவை இப்படி நான் விளக்குகிறேன். ஒருவன் என்னிடம் பைக் வாங்க 40,000 கடன் கேட்கிறான். ஒரு வருடத்தில் 50ஆயிரமாக வட்டியுடன் திருப்பி தருவதாக கூறுகிறான். வட்டி வாங்குவது தவறாயிற்றே. எப்படி கொடுப்பது? என்னிடமுள்ள 40ஆயிரத்திற்கு பைக் வாங்கி அவனுக்குக் 50ஆயிரத்திற்கு விற்கிறேன். இப்போ இது வியாபாரம். இந்த 50ஆயிரத்தையும் ஒரு வருடத்தில் திருப்பி தரவேண்டுமென்கிறேன். இப்போ இது தவறாகுமா?// - ரியோ
விற்பனை என்றாலே வியாபாரமாகிவிடும். 40ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள வாகனத்தை 50ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறான் என்றால் 10ஆயிரம் ரூபாய் லாபத்தில் வியாபாரம் நடக்கிறது.
வாங்குபவனும் வாகனத்தின் அடக்க விலை 40ஆயிரம் ரூபாய்தான் என்று நன்கு தெரிந்திருந்திருந்தும் வாங்குகிறான். ஒரு ரூபாயும் கொடுக்காமல் 40ஆயிரம் ரூபாய் வாகனத்தை சும்மா, சுளையாகப் பெற்று ஒரு வருடம் உபயோகப்படுத்துகிறான், அதனால் வாங்கியவன் வாபமடைகிறான். அந்த லாபத்தையே வாகனத்தை விற்றவனுக்குச் செலுத்துகிறான்.
இங்கு பணம் பொருளாக மாறினால் அது வியாபாரம். இதில் இருவருக்கும் லாபம் இருக்கிறது. 40 ஆயிரம் ரூபாய் வாகனத்தின் விலையும் சேர்த்து, வாகனத்தை ஒரு வருடம் பயன்படுத்தியதற்கான வாடகையோ, அல்லது வாகத்தைப் பயன்படுத்தியதற்கான லாபமாகச் சேர்த்து 50ஆயிரம் ரூபாயாகக் கொடுக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டால் முரண்பாடு ஏற்படாது.
உங்கள் மற்ற கேள்விக்கும் அடுத்து எழுதுகிறேன். முரண்பாடு இருந்தால் எழுதுங்கள். நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
ஒருவனுக்கு 40ஆயிரத்துக்கு வாகனம் வாங்கிக்கொடுத்து வருட இறுதியில் 50ஆயிரம் பெறுவது சரியானது. ஆனால் அந்த 40ஆயிரத்தை வாகனமாக கொடுக்காமல் பணமாக கொடுப்பது தவறு!!!
இதில் எந்தளவிற்கு லாஜிக் உள்ளது???
அவனுக்கு பணமாக கொடுப்பதால் எவ்வளவு வசதி என்று தெரியுமா?
40ஆயிரத்தைக்கொண்டு அவன் விருப்பப்பட்ட வாகனத்தை விருப்பப்பட்ட உதிரி பாகங்களோடு, வேண்டுமானல் அவனுடைய கூடுதல் பணத்தையும் பயன்படுத்தி, பல ஷோரூம்களுக்குச் சென்று தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி, அவனுடனே கடன் கொடுப்பவனும் அலைந்து, இந்தியாவின் எந்த மூலையில் அவன் விருப்பப்படும் பொருள் உள்ளதோ அங்கேயே சென்று வாங்கிக்கொடுப்பது எப்படி?
உங்களுக்கே இது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா?
//ஒருவனுக்கு 40ஆயிரத்துக்கு வாகனம் வாங்கிக்கொடுத்து வருட இறுதியில் 50ஆயிரம் பெறுவது சரியானது. ஆனால் அந்த 40ஆயிரத்தை வாகனமாக கொடுக்காமல் பணமாக கொடுப்பது தவறு!!!
இதில் எந்தளவிற்கு லாஜிக் உள்ளது???
அவனுக்கு பணமாக கொடுப்பதால் எவ்வளவு வசதி என்று தெரியுமா?
40ஆயிரத்தைக்கொண்டு அவன் விருப்பப்பட்ட வாகனத்தை விருப்பப்பட்ட உதிரி பாகங்களோடு, வேண்டுமானல் அவனுடைய கூடுதல் பணத்தையும் பயன்படுத்தி, பல ஷோரூம்களுக்குச் சென்று தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி, அவனுடனே கடன் கொடுப்பவனும் அலைந்து, இந்தியாவின் எந்த மூலையில் அவன் விருப்பப்படும் பொருள் உள்ளதோ அங்கேயே சென்று வாங்கிக்கொடுப்பது எப்படி?
உங்களுக்கே இது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா? // - ரியோ
பணம் கடனாக வட்டிக்கு கொடுப்பதற்கும், அந்த பணத்திற்கு வாகனத்தை வாங்கி அதிக விலை வைத்து விற்பதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது.
கடன் கொடுப்பவர் அந்த பணம் எதற்கு பயன்படுகிறது என்பதில் அக்கறை கொள்ள மாட்டார்.
அவருக்கு உரிய வட்டியும் முதலும் குறிப்பிட்ட தேதியில் திரும்ப கிடைத்தால் போதும். கடன் வாங்கியவர் அந்த பணத்தைக் கொண்டு வாகனம் வாங்கினாரா, விரயம் செய்தாரா என்பது பற்றி அவருக்கு கவலை கிடையாது.
ஆனால் அந்த பணத்திற்கு வாகனம் வாங்கி அதிக விலைக்கு விற்கும் போது அது வியாபாரமாகி விடுகிறது. அந்த வியாபாரத்தில் முதலீடு செய்யுமுன் அவர் நன்கு யோசிப்பார். அதற்காக உழைப்பார். வாகனம் வாங்குபவர் அதன் விலையை திருப்பி செலுத்தும் தகுதி உள்ளவரா? போதிய வருமானம் உள்ளவரா? அவசியத் தேவைக்கு வாங்குகிறாரா? அல்லது ஆடம்பரத்திற்காக வாங்குகிறாரா?
இன்னும் இது போன்றவற்றை நன்கு அலசி ஆராய்ந்து, இந்த வியாபாரத்தில் தனக்கு லாபம் கிடைக்கும் என்பதையும் உறுதி செய்து கொண்ட பிறகே அவர் தன் பணத்தை முதலீடு செய்து அந்த வாகனத்தை வாங்கி விற்பனை செய்வார்.
பிந்தியதில் சமூக நலன் அக்கறை இருக்கிறது!
அன்புடன்,
அபூ முஹை
//மென்பொருட்கள் ஒரு நபரின் உழைப்பினால் உருவானது. உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெற அவருக்கு உரிமை இருக்கிறது.//
பணம் மட்டும் வானத்தில் இருந்தா விழுகிறது? அதுவும் கடின உழைப்பில் உருவானதுதான்.
//கடன் கொடுப்பவர் அந்த பணம் எதற்கு பயன்படுகிறது என்பதில் அக்கறை கொள்ள மாட்டார்.
அவருக்கு உரிய வட்டியும் முதலும் குறிப்பிட்ட தேதியில் திரும்ப கிடைத்தால் போதும். கடன் வாங்கியவர் அந்த பணத்தைக் கொண்டு வாகனம் வாங்கினாரா, விரயம் செய்தாரா என்பது பற்றி அவருக்கு கவலை கிடையாது.//
வாகனத்தை விற்பவர் மட்டும் வாகனம் எதற்கு பயன்படப்போகிறது என்பதை அலசி ஆராய்ந்து பின்னரே விற்பார் என்பது போல பேசுகிறீர்கள்!!
//ஆனால் அந்த பணத்திற்கு வாகனம் வாங்கி அதிக விலைக்கு விற்கும் போது அது வியாபாரமாகி விடுகிறது. அந்த வியாபாரத்தில் முதலீடு செய்யுமுன் அவர் நன்கு யோசிப்பார். அதற்காக உழைப்பார். வாகனம் வாங்குபவர் அதன் விலையை திருப்பி செலுத்தும் தகுதி உள்ளவரா? போதிய வருமானம் உள்ளவரா? அவசியத் தேவைக்கு வாங்குகிறாரா? அல்லது ஆடம்பரத்திற்காக வாங்குகிறாரா? //
ஆடம்பரத்திற்கு வாங்குகிறாரா இல்லையா என்று ஆராய்ந்து தான் எல்லாரும் வியாபராம் செய்கிறார்களா?
//பிந்தியதில் சமூக நலன் அக்கறை இருக்கிறது!//
!!!
இன்னும் எனது பல கேள்விகளுக்கு இன்னும் விடை அளிக்கப்படவில்லை
பணத்துக்கும் பொருளுக்கும் வித்தியாசம் இல்லை என்று பல உதாரணங்கள் காட்டி விட்டேன். ஒரு முடிவு கிட்டுவதாக இல்லை. நீங்கள் விடாக்கண்டனாக இருக்கிறீர்களா இல்லை நானா என்று புரியவில்லை.
மூன்றாம் நபர் இவ்விவாதங்களை படித்து கருத்து சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால் நம் இரண்டு மூன்று பேரைத்தவிர தமிழ்மணத்தில் உள்ள மற்ற பெருந்தலைகளுக்கு இதில் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.
நான் உங்களிடம் கேட்கும் கடைசி கேள்வி, இஸ்லாமில் வட்டி தடை செய்யப்பட்டிருப்பது ஏன் சரியானது என்று நீங்கள் உண்மையிலேயே 100% புரிந்து கொண்டு பேசுகிறீர்களா? அல்லது இறைவனின் வார்த்தைகள் பொய்யாகாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பேசுகிறீர்களா?
நீங்கள் இவ்வளவு விளக்கியும் எனக்கு ஏன் புரியவில்லை?
ரியோ,
வாடகையும், வட்டியும் ஒன்றுதான் என்று சொன்ன நீங்கள், அதற்கான எந்த ஒப்பீட்டையும் இதுவரை சொல்லவில்லை! பொருட்களின் தேய்மானத்திற்கு ஈடாக, பணமதிப்புக் குறைவதை பணத்தின் தேய்மானம் என்கிறீர்கள். இது எவரும் நடைமுறைப்படுத்தாத, ஏன் நீங்களே கடைபிடிக்காத செயலை உதாரணமாக வைக்கிறீர்கள்.
கடன் கொடுத்து வட்டி வசூலிப்பவர்கள், மாத வட்டித் தொகை என்னவோ அதையே மாதந்தோறும் பெற்றுக் கொள்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் பணமதிப்பின் அடிப்படையில் வட்டி தர வேண்டும் என்று முடிவு செய்வதில்லை. எத்தனை மாதங்களானாலும் கடன் கொடுத்தவருக்கு அசல் தொகையைத் திரும்பக் கொடுக்கும் போது இன்றைய பணமதிப்பின்படி தர வேண்டும் என்று கேட்பதில்லை புரிகிறதா?
60மாதங்கள் பணம் செலுத்துகிறேன் என சம்மதித்து தவணை முறையில் பொருளை வாங்குபருக்கு அவர் முதல் மாதம் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும். பிறகு மாதந்தோறும் எவ்வளவு தொகை, கடைசி மாதத் தவணையாக எவ்வளவு செலுத்த வேண்டும் என்று நிர்ணயித்து பொருட்கள் விற்கப்படுவதும், வாங்குவதும் நடைமுறையாக இருக்கிறது. இங்கு எங்குமே பணமதிப்பீட்டின் ஏற்றத் தாழ்வின் அடிப்படையில் பணம் செலுத்த வேண்டும் என்று விற்பவர், வாங்குபவரும் சம்மதித்துப் பேசிக் கொள்வதில்லை, எழுதிக் கொள்வதில்லை.
ஆனால், எந்த வகையிலும் வழக்கத்திலில்லாத பணமதிப்பின் ஏற்றத் தாழ்வை தேய்மானமாக, பொருளின் தேய்மானத்தோடு ஒப்பிடுகிறீர்களே இந்த அடிப்படையில் கடன் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள், தவணை முறையில் பொருட்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் யார் செயல்படத்துகிறார்கள் என்பதை விளக்குவீர்களா?
அன்புடன்,
அபூ முஹை
//இங்கு எங்குமே பணமதிப்பீட்டின் ஏற்றத் தாழ்வின் அடிப்படையில் பணம் செலுத்த வேண்டும் என்று விற்பவர், வாங்குபவரும் சம்மதித்துப் பேசிக் கொள்வதில்லை, எழுதிக் கொள்வதில்லை.//
வீட்டுக்கடனுக்கு வட்டி விகிதம் பண மதிப்பைப்பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். ஒரு வருடத்திற்கு முன் 8.5 சதவீதமாக இருந்தது இப்போது 10 சதவீதம் வரை கூடி இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் குறையலாம். இது பணமதிப்பின் ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் வட்டி நிணயிப்பதல்லாமல் வேறென்னவாம்?
நண்பரே,
கடைசியாக கீழ்கண்டவைகளுக்கும் விளக்கம் அளித்து விட்டீர்களென்றால், கடனில் வீடு வாங்கலாமா என்பது பற்றி எனது இஸ்லாமிய நண்பருக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
1) உங்களின் விளக்கத்தைப் பார்க்கும்போது, அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்கும்போது வட்டி வாங்குவது தவறு என்றுதான் திரும்பத் திரும்ப கூறுகின்றீர்களே தவிர, வியாபார நோக்கத்திற்காகவும், வசதிவாய்ப்பைப் பெருக்கிக்கொள்வதற்காகவும் வாங்கப்படும் கடன் பற்றி விளக்கம் ஏதும் கூறவில்லை. அது மனிதாபிமான கடன் என்று கூற முடியாது. அதற்கு வட்டி ஏற்புடையதா?
2) பணத்திற்கு தேய்மானம் இல்லையா?
இன்று 1 லட்சம் கொடுத்து விட்டு 2 வருடம் கொடுத்து அதை திருப்பி வாங்கும்போது பண மதிப்பு குறைந்து இருக்கும். விலைவாசி சீராக உயர்ந்துகொண்டுதான் இருக்கும். பணமதிப்பு குறைந்து கொண்டுதன் இருக்கும். அதுதான் பணத்தின் தேய்மானம்.
3)தொழிலாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதிக்கு (பி.எப்.) 8.5% வட்டி கொடுக்கின்றனர். அப்படியானால்தான் அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது ஒரு கணிசமான தொகை கிடைக்கும்.
வட்டி தவறென்று வாதிடும் அபூ முஹையும் அப்துல் குத்தூஸூம் மற்றவர்களும் இந்த வட்டி பற்றி என்ன நினைக்கிறார்கள்? வட்டியில்லாமல் அரசு திருப்பி கொடுத்தால் போதுமானதுதானா?
4)ஒரு முஸ்லீம் வங்கியில் வட்டிக்கு வீட்டுக்கடனோ, வாகன கடனோ வாங்கலாமா கூடாதா?
//வீட்டுக்கடனுக்கு வட்டி விகிதம் பண மதிப்பைப்பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். ஒரு வருடத்திற்கு முன் 8.5 சதவீதமாக இருந்தது இப்போது 10 சதவீதம் வரை கூடி இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் குறையலாம். இது பணமதிப்பின் ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் வட்டி நிணயிப்பதல்லாமல் வேறென்னவாம்?//
60மாதங்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற தவணை முறையில் பொருட்களை விற்கும் போது ஒவ்வொரு மாதமும் அவர் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்ற பட்டியல் விபரங்கள் வழங்கப்பட்டு, அதற்கான முன்னெச்சரிக்கையாக காசோலைகளும் பெறப்படுகிறது. தவணை முறையில் பொருளை வாங்கியவர் ஏற்கெனவே நிர்ணயித்தத் தொகையைத்தான் செலுத்தி வருகிறார்.
இந்தத் தவணை காலங்களில் பணமதிப்பு உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் இருவரும் பொறுப்பெற்பதில்லை.
5 சதவீத வட்டிக்கு ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தவர் அந்த 5 சதவீத வட்டியைத்தான் வசூல் செய்வார். அதுதான் கடன் கொடுத்தவருக்கும் கடன் வாங்கியவருக்குமிடையில் பேச்சு, அல்லது எழுத்து ஒப்பந்தம். பணம் மதிப்பு கூடுதல் குறைதல் என்பது ஏற்கெனவே கடன் வாங்கியவர்களைக் கட்டுப்படுத்தாது.
புதிய வாடிக்கையாளர்களுக்கே பணமதிப்புக் குறைவுக்கான வட்டி சதவீதத்தை அதிமாக்க முடியும்.
அன்புடன்,
அபூ முஹை
//1) உங்களின் விளக்கத்தைப் பார்க்கும்போது, அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்கும்போது வட்டி வாங்குவது தவறு என்றுதான் திரும்பத் திரும்ப கூறுகின்றீர்களே தவிர, வியாபார நோக்கத்திற்காகவும், வசதிவாய்ப்பைப் பெருக்கிக்கொள்வதற்காகவும் வாங்கப்படும் கடன் பற்றி விளக்கம் ஏதும் கூறவில்லை. அது மனிதாபிமான கடன் என்று கூற முடியாது. அதற்கு வட்டி ஏற்புடையதா?//
//அவசரமாக ஒருவர் மருத்துவ செலவுக்கு கடன் கேட்கிறார். அப்போது அவரது அவசர சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பது அநியாய வட்டியாகும். அதை தடுக்கத்தான் அரசே கந்து வட்டி தடைச்சட்டத்தை கொண்டுவந்துள்ளது.//
அவசர உதவியாக செய்யப்படும் மருத்துவத் தேவைக்கும் குறைந்த வட்டி வாங்கலாம் என்று சொல்லும் உங்களுக்கு, காய்ச்சலடிப்பவனுக்கு மாத்திரை வழங்குவது மட்டும் தான் உங்கள் பார்வையில் மனித நேயமாகத் தெரிகிறது. உயிருக்குப் போராடுபவனை காப்பற்றுவது மனிதநேயம் என்பது போல், அவனை வாழவைப்பதும் மனிதாபிமானம்தான்.
ஒருவரின் கல்விக்கு உதவுவது மனிதாபிமானம். ஒருவருக்கு வேலை கிடைக்க உதவுவது மனிதாபிமானம். ஒருவர் திருமணம் முடித்துக் கொள்ள உதவுவது மனிதாபிமானம். வீடு இல்லாதவருக்கு வீடு கிடைக்க உதவுவது மனிதாபிமானம். இப்படி மனிதனின் வாழ்வாதாரத் தேவைகளின் ஒவ்வொரு துறையிலும் அவனுக்கு பிறர் உதவுவது மனிதநேயம்.
பிழைப்புக்காக வியாபாரம் செய்பவனுக்கு கடன் கொடுத்து உதவுவதும் மனிதநேயம்.
//உதாரணமாக: நமது அண்டை வீட்டார் கடனாக வாங்கும் காபி பொடி, பால் போன்ற அத்தியாவசிய பொருளை திருப்பிக் கொடுக்கும் வரை அதற்காக வட்டி போட்டு ஏதாவது வாங்குவீர்களா? அப்படிப்பட்ட ஒரு செயலை எவ்வாறு எடுத்துக் கொள்வீர்கள்? எது மனிதாபிமானம் என்பது இப்பொழுதாவது விளங்குகின்றதா? நாம் எங்கு சென்றுகொண்டு உள்ளோம்? விளக்குவீர்களா?//
தேவைக்கதிகமான செல்வங்களைப் பெற்றவர்கள் பொருளில்லாதவருக்கு கொடுத்து உதவுவதால் நஷ்டமடைந்து விடுவதில்லை. சகோதரர் அப்துல் குத்தூஸ் அவர்களின் கருத்துரைப்பது போல், உதவிகள் செய்வது வியபாரமாகி, கருமாதி வீட்டிலும் லாபமாக வட்டியை எதிர்பார்க்கிறது மனிதநேயம்!?
//3)தொழிலாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதிக்கு (பி.எப்.) 8.5% வட்டி கொடுக்கின்றனர். அப்படியானால்தான் அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது ஒரு கணிசமான தொகை கிடைக்கும்.//
ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் தொகை கோடிக் கணக்காகும். இந்தப் பணங்கள் தொழிலில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து வரும் லாபத்தையே ஊழியர்களின் பி.எஃபில் சேர்க்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்தில் ஊழியர்களின் உழைப்பு முதலீடாக இருப்பதால், ஊழியர்கள் முதுமையடைந்து ஒய்வு பெறும் போது அவர்களுக்கு கொடுப்பது நிறுவனத்தின் கடமையாகும், வாங்குவது ஊழியர்களின் உரிமையாகும். இதை வட்டி என்று சொல்வீர்களனால் நிறுவனத்தில் உழைக்காதவர்களும் இதில் சேர்க்கப்பட வேண்டும். அப்படிச் சேர்க்கப்படுவதில்லை என்பதே இது, காலமெல்லாம் உழைத்து ஓய்வு காலத்தில் உதவித் தொகையாகக் கிடைக்க நிறுவனமும், ஊழியர்களும் செய்து கொண்ட ஒரு ஒப்பந்த திட்டம்.
அன்புடன்,
அபூ முஹை.
Post a Comment