Friday, February 16, 2007

குரைஷி குலத்தில் 12 ஆட்சியாளர்கள்.

இஸ்லாம் மார்க்கத்தில் சமூகம், இனம், குலம், கோத்திரத்திற்கெல்லாம் எந்த மதிப்பீடுமில்லை என்று வரும் 049:013ம் இறைவசனம் எடுத்துக் கூறுகிறது. குலங்கள், கோத்திரங்களாக இருப்பதும் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவேயன்றி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமை பாராட்டுவதற்கல்ல. நீங்கள் எந்தக் கோத்திரத்தையும் - எந்த குலத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதனால் உங்களில் ஒருவர் உயர்ந்தவராகவே, தாழ்ந்தவராகவோ ஆகிவிட மாட்டார். இறைவனை எவர் அஞ்சுகின்றரோ அவரே இறைவனிடத்தில் அதிகம் சிறந்தவராவார்.

மனிதர்களே! நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அஞ்சுபவர்தான் அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன், நன்கறிபவன். (திருக்குர்ஆன், 049:013)

சிந்திக்கும் திறன் பெற்ற எவரும் மறுத்துப் பேச முடியாத அளவுக்கு மேற்கண்ட வசனம் இனமாச்சரியங்களுக்கு சாவுமணி அடிக்கிறது. ஆனாலும், எதற்கோ - யாருக்கு தமது விசுவாசத்தைக் காண்பிக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பவர்கள் தொடர்ந்து இஸ்லாம் மார்க்கத்தைத் திரிப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

அந்த வரிசையில் குரைஷியர்கள் பற்றி இஸ்லாம் உயர்வாகப் பேசியிருக்கிறது, குரைஷியரல்லாதவர்கள் குரைஷியரை விடத் தாழ்ந்தவர்கள் - தாழ்ந்த ஜாதியினர், இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் - குரைஷிக் குலத்தை சேர்ந்தவர் என்பதால் மக்களை ஆள்வதற்குத் தகுதியானவர்கள் குரைஷி குலத்தவர்களே என்று - தீர்ப்பு சொல்லி விட்டதாக, புதிய திரிபுகளை சலவை செய்யப்பட்ட தங்கள் அறிவுக்கேற்ற மாதிரி விளங்கி கீழ்கண்ட நபிமொழியை எடுத்து வைக்கிறார்கள்.

''நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அதை என் அடிமை நாஃபிவு வசம் கொடுத்தனுப்பினேன். அதில் '' நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்டிருந்தேன்.

அவர்கள் எனக்குப் பதில் கடிதம் எழுதினார்கள். (அதில் பின் வருமாறு தெரிவித்திருந்தார்கள்.
ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று (மாயிஸ்) அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் (விபச்சாரக் குற்றத்திற்காக) கல்லெறிந்து கொல்லப்பட்ட மாலைப் பொழுதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''மறுமை நாள் நிகழ்வதற்கு முன் உங்களை பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் ஆளும்வரை இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்'' ...
(முஸ்லிம், 3723)

ஒரு அடிமட்ட மூடன் கூட, ஜாதி வெறியைக் காட்டுவதற்காக, அல்லது ஆண், பெண் என பாலின வேறுபாடுகளை தூண்டுவதற்காக இந்த நபிமொழியைக் கையாள மாட்டான். ''மறுமை நாள் நிகழ்வதற்கு முன்'' என்று நபிமொழியில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதே இது ஒரு முன்னறிவிப்பு என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அப்படியிருக்கும்போது இதை இனவெறிக்கு சான்றாக வைத்தவரின் அறிவுத் திறமையை எந்த பட்டியலில் சேர்க்க...?

''ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த (மறுமை)நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் எதுவும் ஏற்படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

''பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் ஏறத்தாள முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதிநாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 3609)

மக்களை வழிகெடுக்கும் கொடியவன் தஜ்ஜால் தோன்றாமல் மறுமை நாள் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் ஏராளமான முன்னறிவிப்புகள் செய்திருக்கிறார்கள். இதனால் தஜ்ஜால் உயர்ந்தவன் - உயர்ந்த ஜாதிக்காரன் என்று பொருள் கொண்டால் அது முட்டாள்தனம்.

''பன்னிரண்டு ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள், அனைவரும் குரைஷிகளாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 7223)

தனக்குப்பின் தொடர்ந்து ஆட்சிக்கு வரும் பன்னிரண்டு பேர்கள் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்று எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிவிக்கப்பட்டதே இந்த முன்னறிவிப்பு. மற்றபடி குரைஷியர்களை சிறப்பித்துக் கூறியதல்ல...

''இந்தக் குரைஷிக் குலத்தவர் (களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், (அப்படியொரு நிலை வந்தால்) 'நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று' கேட்டார். ''அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாக இருக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 3604)

'உண்மையாளரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தரின் அழிவு குரைஷி இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது' என்று சொல்ல நான் கேட்டேன்'' - அபூ ஹூரைரா (ரலி) (புகாரி, 3605, 7058)

குரைஷியர்கள் உயர் குலத்தினரோ - உயர் ஜாதியினரோ அல்ல. அவர்களும் சராசரி மனிதர்களைப் போன்றவர்களே! குரைஷியரிடமும் நல்லவர்களும் கெட்டவர்களும் தோன்றுவார்கள். ஆட்சிக்கு வரும் குரைஷியர்களால் சமுதாயத்திற்கு அழிவும் ஏற்படும் என்று சேர்த்தே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதையெல்லாம் சாதாரணமாகப் படித்தாலே புரிந்து கொள்ள முடியும் ஆனால் சிந்தனை சுத்தமாக இருக்க வேண்டும்.

முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார்

முஆவியா(ரலி) அவர்களிடம் குறைஷிகளின் ஒரு தூதுக் குழுவில் ஒருவனாக நான் வருகை தந்திருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு அம்ர் பின் ஆஸ்(ரலி) அவர்கள் 'கஹ்தான் குலத்திலிருந்து மன்னர் ஒருவர் தோன்றுவார்'' என்று அறிவிப்பதாகச் செய்தி வந்தது. முஆவியா(ரலி) கோபமடைந்து எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிப் படியுள்ள வர்ணனைகளால் புகழ்ந்துவிட்டு பின்னர், 'இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகிறேன். உங்களில் சிலர், அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத, அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கப்படாத செய்திகளைப் பேசுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறியாதவர்கள் ஆவர். வழி கெடுத்து விடுகிற வெற்று நம்பிக்கைகளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன் - ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும். அவர்களுடன் அது தொடர்பாகப் பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டி வரும் வரை இந்நிலை நீடிக்கும்'' என்று கூற கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.
(புகாரி, 3500, 7139)

குரைஷியர்கள் மட்டுமல்ல எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியாளராக வந்தாலும், மார்க்கத்தை நிலை நாட்டும் வரை அவர்கள் ஆட்சியில் நீடிப்பார்கள், தீனை நிலைநாட்டத் தவறினால் மக்களால் அகற்றப்படுவார்கள். குரைஷியர்களும் மக்களால் அகற்றப்பட்டார்கள். பிறகு கஹ்தான் எனும் குலத்திலிருந்து ஒருவர் ஆட்சியாளராக வந்து மக்களை வழி நடத்திச் செல்வார் என்பதை வரும் நபிமொழி கூறுகிறது...

''கஹ்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 3517)

உயர்ந்த குலம் - உயர்ந்த ஜாதி என்று பார்த்து தலைவரைத் தேர்ந்தெடுக்க இஸ்லாம் சொல்லவில்லை. மாறாக...

நபி (ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையில், ''அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்படியுங்கள்'' என்று கூறினார்கள். (முஸ்லிம், 3750)

இன்னும், பல அறிவிப்புகள் குரைஷிகள் அல்லாதவர்களும் ஆட்சியாளராக வருவார்கள் என்பதைச் சொல்லி, அப்படி வருபவர் எந்த ஜாதியினர் என்று பார்க்காமல், அல்லாஹ்வின் வேதப்படி மக்களை வழி நடத்தும், உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட கருப்பு நிற அடிமையொருவர் தலைவராக வந்தாலும் அவருக்குக் கீழ்படிந்து நடக்கவே இஸ்லாம் கட்டளையிடுகிறது.

நிறம் - இனம் - மொழி - உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுக்கு இஸ்லாத்தில் இடமில்லை, இஸ்லாத்தில் ஜாதியை நிறுவ முயற்சிப்பவர்கள் தக்க சான்றுகளுடன் எழுதலாம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

6 comments:

அபூ முஹை said...

test

சுல்தான் said...

அருமையான விளக்கம் நன்றி அபூமுஹை.

அபூ முஹை said...

சுல்தான் உங்கள் வருகைக்கு நன்றி!

ஏமாறாதவன் said...

அபூ முஹை அய்யா,

ஏகப்பட்ட மேற்கோள்கள் காட்டினால் விழயம் திசை திருப்பப்பட்டுவிடும் என்று உங்களுக்கு தோன்றுகிறது போலும்!!! :-))

குரைஷி குலத்தை முகம்மது இயற்றிய குர்ரான் தூக்கி வைக்கிறது என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

குரைஷி 12 ஆட்சியாளர்கள் ஏற்கனவே வந்து விட்டார்கள். இன்னும் அல்லாஹ் கணக்கு முடியவில்லையா? இதனால், குர்ரான் முகம்மதுவின் புரட்டுப்புத்தகம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கருதுகிறேன்.

என் பதிவில் ஒரு அனானி அவர்கள் சில குர்ரான் வசனங்களை மேற்கோள் காட்டி இதற்கு விடையாக அங்கு பதிந்திருக்கிறான். பிளாக்கர் பெயர் இல்லாத்தால் இங்கு பதியவில்லையாம். நேரமிருப்பபி்ன் அதை படித்து தங்கள் ஒப்புதலை எதிர்பார்க்கிறேன்.

இஸ்லாத்தை மனம் திறந்து பாருங்கள். குர்ரான் இறைவசனமே என்பதற்கு ஒரு ஆதாரமும் தெரிகிறதா? இஸ்லாம் ஒரு அரேபிய ஆதிக்க இயக்கம் என்றே தோன்றுகிறதல்லவா? தாங்கள் இதை உணர்ந்து வாய்மையின் வலிமையை ஒப்பி தங்கள் சந்ததிகளை இந்த இருளிலிருந்து காப்பாற்ற வேணும் என்பதே என் அவா.

அபூ முஹை said...

ஏமாறாதவன் உங்கள் வருகைக்கு நன்றி!

//ஏகப்பட்ட மேற்கோள்கள் காட்டினால் விழயம் திசை திருப்பப்பட்டுவிடும் என்று உங்களுக்கு தோன்றுகிறது போலும்!!! :-))//

மிகச் சரியான நபிமொழிகளையே பொருத்தமான இடத்தில் பதிவு செய்திருக்கிறேன். எங்கே எது திசை திருப்பல் என்று சொல்லுங்கள்...? பார்க்கலாம்.

//குரைஷி 12 ஆட்சியாளர்கள் ஏற்கனவே வந்து விட்டார்கள். இன்னும் அல்லாஹ் கணக்கு முடியவில்லையா? இதனால், குர்ரான் முகம்மதுவின் புரட்டுப்புத்தகம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கருதுகிறேன்.//

இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவித்து, நடந்து முடிந்த ஒரு முன்னறிவிப்புக்கு தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் சாட்சியாக இருக்கிறீர்கள்!

ஒரு நிகழ்ச்சிக்கு ஐந்து பேர்கள் வரவேண்டும். அந்த ஐந்து பேர்கள் வந்தால்தான் நிகழ்ச்சி நடக்கும் என்றிருக்கும்போது அதில் ஒருவர் மட்டும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்திருந்தால் அந்த ஒருவர் வந்தது உண்மை, அவர் வந்து விட்டதால் நிகழ்ச்சி நடக்குமா...? என்றால் நடக்காது. இன்னும் நான்கு பேர்கள் வரவேண்டியிருக்கிறது அவர்களும் வந்தால் நிகழ்ச்சி நடக்கும்.

ஐந்து பேர்கள் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சிக்கு ஒருவர் மட்டும் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, ஒருவர் வந்தும் நிகழ்ச்சி நடக்கவில்லை என்று முடிவு செய்தால் இது அநேகமாக அவசரப்புத்தியாகவே இருக்கும். (புரிந்து கொள்வதற்காக இந்த சிறு உதாரணம்)

நபி (ஸல்) அவர்கள் அறிவித்திருந்த பல முன்னறிவிப்புகளில், ''மறுமை நாள் நிகழ்வதற்கு முன் குரைஷிக் குலத்திலிருந்து பன்னிரண்டு ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள்'' என்ற அறிவிப்பு நடந்து முடிந்து விட்டது என்று நீங்கள் சொல்வதிலிருந்து இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களை மிக அழகாக உண்மைப்படுத்தியிருக்கிறீர்கள் நன்றி! :-)

ஆனால் நபி (ஸல்) அவர்கள் மறுமை நாள் நிகழ்வதற்கு முன் இன்னும் பல சம்பவங்கள் நிகழும் என்றும் முன்னறிவிப்புச் செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளும் நடப்பதற்கு முன் மறுமை நாள் ஏற்படாது. தஜ்ஜால் தோன்றுவது, நபி ஈஸா (அலை) அவர்களின் வருகை, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது இதுபோல் இன்னும் பல முன்னறிவிப்புகள் நிகழ வேண்டியிருக்கிறது. அந்த நிகழ்வுகளும் நடந்து முடிந்தால் இறைவன் மிகச் சரியாக கணக்குத் தீர்ப்பான். அவசரப்படாதீர்கள் - அனானிக்கும் இதையே பதிலாகச் சொல்லி விடுங்கள்.

//மனிதர்களே! நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். (049:013)
கோத்திரங்கள் கிளைகள் என்று சொல்வது மனிதர்களை பிரிப்பது. அதனை உருவாக்கியது தானே என்றுதான் அல்லாஹ் சொல்கிறார்.// - அனானி

கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம் என்று இறைவன் சொல்வதை மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று பிரிப்பதாக அனானி சொல்ல வருகிறாரா...? தெளிவுபடுத்தினால் மேலும் விளக்கம் கொடுக்க வசதியாக இருக்கும்.

//6:165 அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான் அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களில் சிலரைச் சிலரைவிட உயர்த்தினான்// - அனானி

''சிலரை விடச் சிலரை உயர்த்தினான்'' இதையும் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என இறைவன் ஆக்கியிருப்பதாக அனானி சொல்கிறாரா...?

அன்புடன்,
அபூ முஹை

அட்றா சக்கை said...

அபூ முஹை,

பலரை ஏமாற்றுவதாய் நினைத்துக் கொண்டு ஏமாறதவன் என்ற பெயர் கொண்டு திரியும் இந்த ஏமாளி முதலில் சுவனப்பிரியன் பின்னர் சுல்தான் போன்ற சகோதரர்களிடம் மூக்குடைபட்டு இப்போது இங்கே வந்திருக்கிறார்.

பரவாயில்லை அந்த ஆள் அப்படி வந்தாலும் தன் 'குடுமியை' மறைக்காததால் தான் யார் என அடிக்கடி வெளிக்காட்டியிருக்கிறார்.

தங்களின் விளக்கங்களுக்கு நன்றி