Monday, January 29, 2007

முன் மாதிரியாக ஒரு வரலாறு.

இஸ்லாம் வழங்கிய ஷரியா என்பது, இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். மார்க்க அறிஞர்கள், நீதிபதிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் முஸ்லிம்கள் எவராயினும் அவர்கள் வழங்கும் தீர்வுக்கு திருக்குர்ஆன், சுன்னாவைக் கொண்டு வலு சேர்த்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன், சுன்னாவிலிருந்து பெறப்படாத தீர்ப்பு - விளக்கம் எதுவாயிருந்தாலும் அது சொன்னவரின் கருத்தாகவேக் கொள்ளப்படும். அல்லாஹ் அருளியதைக் கொண்டே தீர்ப்பளிக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை திருக்குர்ஆன் விதிக்கிறது...

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் மறுப்பவர்கள். (005:044)

...அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (005:45)

...அவர்கள் குற்றவாளிகள் (005:047)

மார்க்கத் தீர்ப்புகள் இஸ்லாத்தின் ஆதாரங்களின் அடித்தளத்தின் மேல் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்று மேற்கண்ட இறை வசனங்கள் தெளிவு படுத்துகிறது. ஷரியாவின் தீர்ப்பு என்று சொல்லிக் கொள்ளும் நீதிமன்றங்களின் நீதிபதிகளானாலும் அந்தத் தீர்ப்புகள் அல்லாஹ் அருளியதிலிருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது ஒரு தீர்ப்பின், முன்மாதிரி - நகல் - பிரகாசம் அது இஸ்லாத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியில்லாத தீர்ப்புகள் எதுவும் ஷரியாவிலிருந்து பெறப்பட்டது என்ற அந்தஸ்தை இழந்து விடும்.

ஒரு வரலாற்றுச் சம்பவம் முன் மாதிரியாக.

நபி யூஸுஃப் (அலை) சிறுவராக இருந்தபொழுது, எகிப்து நாட்டில் அற்ப விலைக்கு விற்கப்பட்டார். அவரை விலைக்கு வாங்கிய அமைச்சரின் வீட்டில் வளர்ந்து வந்தார். யூஸுஃப் (அலை) வளர்ந்து வாலிபப் பருவத்தை அடைந்த போது அமைச்சரின் மனைவி, யூஸுஃப் (அலை) அவர்களை அடைந்திட ஆசை கொள்கிறாள். வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் ''வாசல்களை அடைத்து வா'' என்று அமைச்சரின் மனைவி, யூஸுஃப் (அலை) அவர்களிடம் கூறுகிறாள்.

இதை யூஸுஃப் (அலை) மறுக்க, அமைச்சரின் மனைவி அவரை பலவந்தமாக அடைய முற்படுகிறாள். இந்த முயற்சியில் அமைச்சரின் மனைவி, யூஸுஃப் (அலை) அவர்களின் சட்டையின் பின்புறத்தைக் கிழித்து விடுகிறாள். அந்த நேரத்தில் அமைச்சர் வந்துவிட, நடந்த சம்பவத்தைத் தலை கீழாக மாற்றி தன்னிடம் தகாத செயலுக்கு முயற்சி செய்ததாக பழியை யூஸுஃப் (அலை) அவர்களின் மீது சுமத்துகிறாள். அதை அவர் மறுத்துரைக்கிறார்.

''அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள், அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள், அவர் உண்மையாளர்'' என்று அவளது குடும்பத்தைச் செர்ந்த ஒருவர் சான்றுரைத்தார்.

அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது. ''இது உனது சூழ்ச்சியே பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது'' என்றார்.

பிறகு வேறெரு சந்தர்ப்பத்தில், ''அவரை நான் தான் மயக்கப் பார்த்தேன் அவர் விலகிக் கொண்டார்'' என்று அமைச்சரின் மனைவி ஒப்புக் கொள்கிறாள். இந்த வரலாற்றுச் சம்பவங்களை திருக்குர்ஆனில் 012வது அத்தியாயம், 019லிருந்து 032வது வசனங்கள் வரை வாசிக்கலாம்.

பலவந்தம் செய்யப்பட்டவரிடம் தடயங்கள் இருக்குமெனில் அதை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீர்மானிக்கலாம் என்பதை படிப்பினையாக மேற்கண்ட திருமறை வசனங்கள் நம் முன் வைக்கிறது. பலாத்காரம் - வன்புணர்ச்சி செய்யப்பட்ட பெண், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தன்னை பலாத்காரம் செய்தவனை அடையாளம் காட்டி புகார் செய்தால், அதிகாரிகள் பலாத்காரம் செய்தவனை விசாரிக்கும் போது அவன் அதை மறுத்தால், பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணையும், பலாத்காரம் செய்தவனையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி குற்றவாளியை உறுதி செய்யலாமென்றால் அதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

நவீனத்துவத்திற்கு இஸ்லாம் எதிரானதல்ல. எல்லாக் காலத்திலும், எந்த நிலையிலும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது மறுக்கப்படக்கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது.

பலாத்காரம் செய்வது ஆணாதிக்கத்தின் ஆளுமை என்று ஒரு பக்கமே சாய்ந்து விடக்கூடாது. வன்புணர்ச்சி செய்யப்பட்டேன் என்று சொல்லும் எல்லாப் பெண்களையும் கண் மூடித்தனமாக நம்பிடவும் கூடாது. சதிவலை பின்னி, ஒருவரையொருவர் பழி தீர்த்துக் கொள்வதில் ஆண், பெண் இருவரும் சமமானவர்கள். நடந்த சம்பவம் - பலாத்காரம் செய்யப்பட்டவள், பலாத்காரம் செய்தவன் - இருவர் மட்டுமே அறிந்து, பலாத்காரம் செய்தவன் தன் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை மறுத்தால் மரபணு மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கி நீதி வழங்கலாம். (இறைவன் மிக அறிந்தவன்)

அன்புடன்,
அபூ முஹை

3 comments:

அபூ முஹை said...

சுடர், உங்கள் வருகைக்கு நன்றி!

Unknown said...

சிறந்த பதிவு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். அல்லாஹ் மென்மேலும் அருளட்டும்

அபூ முஹை said...

சுல்தான், உங்கள் வருகைக்கு நன்றி!