Sunday, October 01, 2006

3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.

போர்களை நடத்திச் செல்ல ஆட்சி அவசியமா..? இஸ்லாம் என்ன சொல்கிறது..?


போர் நடத்த வேண்டுமென்றால் அதைக் கட்டுப்படுத்த ராணுவம், ராணுவ அதிகாரிகள் என்று இருக்க வேண்டும். ராணுவம், ராணுவ அதிகாரிகளைக் கட்டுப்படுத்த ஆட்சி, ஆட்சியின் அதிகாரம் இருக்க வேண்டும். ஆட்சி செய்வதற்கு நாடு, அல்லது ஏதேனும் நிலப்பகுதியை கைப்பற்றி அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இப்படி முறையாக அமைக்கப்பட்ட ஆட்சி, ராணுவம், போர் வீரர்கள் என்று இருந்து, அது தனது எதிரி நாட்டுடன் சண்டையிட்டால் அது போர் என்று சொல்லப்படும்.

இப்படி எதுவும் இல்லாமல் ஒரே ஊருக்குள் நான்கு பேர், அல்லது நாற்பது பேர்கள் அடித்துக் கொண்டால் அதற்குப் பெயர் வன்முறை, அல்லது கலவரம் என்றுதான் பொருள்படும். அதைப் போர் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

இஸ்லாமும் இதைத்தான் செய்திருக்கிறது. மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குறைந்த அளவு அப்பாவி மக்களை போர் என்ற பெயரில் சொந்த நாட்டிலேயே கலவரத்தை ஏற்படுத்தி பலி கொடுக்கத் தயாரில்லை. இது சரியான முடிவுதானா? என்று கேட்டால் மடையர்களைத் தவிர யாரும் சரியான முடிவுதான் என்று சொல்வார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையில் ஆட்சி, அதிகாரம் எதுவும் அவர்கள் கையில் இல்லை. அதனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை பொறுமையைக் கடைபிடிக்க கட்டளையிடப்பட்டது. மக்கத்துக் காஃபிர்களின் தொல்லைகள் தாளாமல் பல முஸ்லிம்கள் தமது சொந்த நாட்டைத் துறந்து அகதிகளாக வேறு நாட்டில் அடைக்கலம் புகுந்தார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்களும் சொந்த ஊரைத் துறந்து அகதியாக வெளியேறினார்கள். மதீனா நகர் அவர்களை, இருகரம் நீட்டி வரவேற்று, அந்த நாட்டின் மன்னராக ஏற்றுக் கொண்டது.

மதீனா நகரத்தின் ஆட்சியதிகாரம் நபி (ஸல்) அவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இப்போது நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மன்னர் நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இப்போதுதான் ''உங்களை எதிர்த்து போருக்கு வருபவர்களுடன் நீங்கள் போர் செய்யுங்கள்'' என இறைக் கட்டளை வருகிறது. முறையான ராணுவம் அமைத்து, போர் வீரர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள் போருக்குத் தயாராகின்றனர். (மதீனா வந்த பின்னும் மக்கத்து காஃபிர்களின் தொல்லைகள் தொடர்ந்து கொண்டுதானிருந்தது என்பது பற்றி இதே தொடரில் பிறகு சொல்லயிருப்பதால் இங்கு தவிர்க்கப்படுகிறது)

போர் நடத்துவதற்கு ஆட்சி அவசியமா?

போர் செய்வதற்கு மட்டுமல்ல, நாட்டின் இறையாண்மையைக் காக்கவும் - குடிமக்கள் நலம் பேணவும், குற்றங்கள் நடக்காமல் தவறுகளைத் தடுக்க, தவறு செய்பவர்களை தண்டிக்கவும், ஆட்சியும் ஆட்சியை நடாத்திச் செல்ல அதிகாரம் பெற்ற மன்னர், அரசர், ராஜா அல்லது ஆட்சித் தலைவர் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் மிக அவசியமாகிறது.

//அரசியல் இஸ்லாம்
அரசியல் இஸ்லாம் என்பது முகமதுவால் துவங்கப்பட்டது. முகமது என்பவர் தமக்கு கிட்டிய ஆன்மீக அனுபவங்களை வைத்து உலகை கறுப்பு வெள்ளையாகப் பிரித்தார்(அதாவது தம்மை நம்புவோர்கள் , தம்மை நம்பாதவர்கள் - பிற்காலத்தில் இதுவே முஸ்லிம்கள் காபிர்கள் என்றானது).//
- இது கோணல் புத்தியுடையவரின் உளறல்.

ஆன்மீக இஸ்லாம், அரசியல் இஸ்லாம் என இரண்டு இஸ்லாத்தை இறைவன் ஏற்படுத்தவில்லை. மாறாக ஆன்மீகம், அரசியலையும் உள்ளடக்கிய ஒரே இஸ்லாத்தையே இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான். இறைத்தூதர் என்பவர் ஆசிரமத்தை அமைத்து அமர்ந்து கொண்டு, தன்னை நாடி வருபவர்களிடம் காணிக்கைகளைப் பெற்று ஆசீர்வாதங்களையும், பிரசாதங்களையும் வழங்கும் ஒரு ஆசிரமச் சாமியாராகவே நேசகுமார் என்பவர் கற்பனை செய்திருக்கிறார். பாவம் அவரால் ஆன்மீகம் என்பதை அதைக் கடந்து சிந்திக்க முடியவில்லை. அதனால் இஸ்லாம் கூறும் அரசியலும் ஆன்மீகம் என்பதை அவரின் குறைமதி ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

இறையாட்சியை நிறுவுவதே இறைத்தூதர்களின் வருகையாக இருந்தது. இறைவனின் வழிகாட்டல், இறை வணக்க வழிபாடு என்ற ஆன்மீகம் மட்டும் என்பதை இஸ்லாம் ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. வணக்க வழிபாடு எனும் ஆன்மீகம் மனித வாழ்க்கையில் ஒரு சிறு பகுதிதான். இறைவனை, நின்று, குனிந்து, நெற்றியை தரையில் வைத்து மண்டியிட்டு வணங்கும் வழிபாடுகளோடு இஸ்லாம் நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக தனி மனிதனிலிருந்து, ஆட்சியாளர்கள் வரை அரசியலிலும் ஒவ்வொரு துறையிலும் வழிகாட்டலை வழங்கி, அவ்வழியைக் கடைபிடித்து செயல்படுவதும் ஆன்மீகம் என்றே இஸ்லாம் கூறுகிறது.
போர் செய்வதற்கு முன் போர் படையை வழி நடத்த ஓர் அரசனைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான திருக்குர்ஆன் வசனங்கள்...

2:246. (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம், ''நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்'' என்று கூறிய பொழுது அவர், ''போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?'' என்று கேட்டார்; அதற்கவர்கள்; ''எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?'' எனக் கூறினார்கள். எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.

2:247. அவர்களுடைய நபி அவர்களிடம் ''நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்'' என்று கூறினார். (அதற்கு) அவர்கள், ''எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள். மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே!'' என்று கூறினார்கள். அதற்கவர், ''நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், (யாவற்றையும்) நன்கறிபவன்'' என்று கூறினார்.

(நபிமார்கள் அரசர்களாகவும் இருந்திருக்கிறார்கள். நபி இறைவனின் பாதையில் வழிகாட்டியாக இருந்து, வேறொருவர் ஆட்சியின் மன்னராகவும் இருந்திருக்கிறார் என்பதை, 2:246, 247 ஆகிய வசனங்களிலிருந்து விளங்கலாம்)

அநீதிக்கு எதிரான போர்.

இஸ்லாமியப் போர்கள் முதல் தொடரில் குறிப்பிட்டது போல் மக்காவை விட்டு, வெளியேற இயலாத - வழி தெரியாத பலவீனமான முஸ்லிம்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். இவர்களின் மீதும் குரைஷிகளின் அடக்கு முறை மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது. மக்கத்துக் காஃபிர்களின் அடக்கு முறைக்கு ஆளான முஸ்லிம்களின் பிரார்த்தனை இவ்வாறாக இருந்தது.

4:75. பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) ''எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக'' என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம் என்று விமர்சிக்கும் இஸ்லாத்தின் எதிரிகள் படிப்பினைப் பெற வேண்டிய வசனங்களில் 4வது அத்தியாயத்தின் 75வது வசனமும் ஒன்றாகும். இஸ்லாத்தைத் தவறாக விளங்கி பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்தும் மிகச் சில அரைகுறை முஸ்லிம்களும் இந்த வசனத்தை சரியாக விளங்கிக் கொண்டால் பயங்கரவாதச் செயலை இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்பதை புரிந்து கொள்வார்கள்.

மக்கத்துக் காஃபிர்களின் அடக்கு முறைக்கு ஆளாகித் துன்பத்திற்கு தள்ளப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களை போராடச் சொல்லவில்லை. தனி மனிதன் அல்லது ஒரு குழுவின் மீது அநீதி இழைக்கப்பட்டு அவர்கள் போராடலாம் என்பதை மேற்கண்ட (4:75வது) வசனம் நியாயப்படுத்தவில்லை. மாறாக அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ''அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் ஏன் போர் செய்யக்கூடாது?'' என்று மதீனாவில் இருக்கும் இஸ்லாமிய ஆட்சியை நோக்கி இந்தக் கேள்வியை முன் வைக்கிறான் இறைவன்.

முன்பு ஆட்சியதிகாரம் இல்லாத நிலையிலிருந்து போர் செய்வதைத் தடுத்த இறைவன், மதீனாவில் ஆட்சியதிகாரம் அமைக்கப்பட்ட பின் போர் செய்யக் கட்டளையிடுகிறான்...

4:77. ''உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக!'' என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு ''எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக, ''இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது. நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.''

மக்காவில் துன்பங்களை அனுபவித்த போதும், நாடு துறந்து அபிஸீனிய நாட்டிற்கு சென்ற போதும் முஸ்லிம்களுக்கு படை திரட்டும்படி கட்டளையிடப்படவில்லை. மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி அமைந்ததும் நாட்டை பாதுகாக்கவும், எதிரிகளைப் போரில் சந்திக்கவும் படை பலத்தைத் தயார் செய்து கொள்ள - ராணுவத்தை பலப்படுத்திக் கொள்ளச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் தனி மனிதனுக்கோ, ஒரு குழுவைச் சேர்ந்தவர்களுக்கோ பிறப்பிக்கப்பட்டக் கட்டளையில்லை. மாறக ஆட்சியிருப்பவர்களுக்கு ராணுவத்தை திறமையாக நிர்வாகிக்கும்படி சொல்லும் அறிவுரைகள்.

8:60. அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்) அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும். (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.

இஸ்லாமிய ஆட்சியிலும் பலமில்லாத ராணுவத்தை வைத்துக் கொண்டு, போர் என்ற பெயரில், போர் செய்யும் வீரர்களை பலி கொடுக்கச் சொல்லவில்லை இஸ்லாம். எதிரி நாட்டின் போர்ப் படையில் பாதி பலத்தையேனும் பெற்றிருந்தால் மட்டுமே போருக்கு தயாராகும்படிச் சொல்கிறது. கீழ்காணும் வசனங்கள்...

8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள். உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க முனையும் போது குறைந்த பட்சப் படைபலம் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கிலிருந்தால் மட்டுமே இஸ்லாமிய ஆட்சியாளர்கள் போருக்கு தயாராக வேண்டும். அதை விடக் குறைவாக இருந்தால் ஆட்சியாளருக்கும் போர் செய்வது கடமை இல்லை. சதவிகிதத்தில் குறைவான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தைப் பெற்ற ஒரு நாடு போர் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனும் போது, தனி நபர், அல்லது ஒரு குழுவாகச் சேர்ந்து ''ஜிஹாத்'' என்ற பெயரில் செய்யும் பயங்கரவாதத்தை ஒரு போதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

தனி மனிதர்களின் செயல்பாடுகளை வைத்து இஸ்லாம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மார்க்கம் என்று இஸ்லாத்தை விமர்சிக்கும் எதிரிகளின் கருத்தில் நேர்மை இல்லை!

விளக்கங்கள் தொடரும்)

அன்புடன்,
அபூ முஹை

No comments: