Wednesday, July 12, 2006

யுனிகோட் உமர் தம்பி மரணம்.

மரணம் எவராலும் ஜீரணிக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சந்தித்தாக வேண்டும். மரணத்திலிருந்து எவரும் தப்ப முடியாது, இதுதான் இறைவனின் நியாதி. உமர் தம்பி அவர்களின் மறைவால், அன்னாரின் பிரிவால் துக்கத்திலிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ''இறைவனிடமிருந்தே வந்தோம், இறைவனிடமே மீளுவோம்''

அபூ முஹை


அதிரை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வர்களில் ஒருவரும், தமிழ் கணினியுலகில் யூனிகோட் எனும் தானியங்கி எழுத்துரு (Font) மேம்பாட்டிலும் இன்னும் பல கணினி சாதனைகள் படைத்தவரும், கல்வியாளருமான உமர் தம்பி அவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில் மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

உமர் தம்பி அவர்களின்  சாதனைகள் தமிழிணையப் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், நுணுக்கமான யுக்திகளைக் கொண்டதாகவும் உள்ளன.

வலைப்பூக்கள் என்று அறியப்படும் Blogs இல் தமிழில் எழுதப்படும் பதிவுகள் உமர்தம்பி அவர்களின் இணைய மென்பொருள் உதவியுடன் மிகச்சிறப்பாக அனைத்து வகை கணினியிலும் தெரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதாகும்.

உலகத் தமிழர்களின் வலைப்பூக்களை திரட்டும் தமிழ்மணம்.காம், (www.thamizmanam.com) உமர் தம்பி அவர்களின் செயலியைப் பயன்படுத்தும் முன்னணி தளமாகும்.

இவற்றுடன் தமிழ் இணைய அகராதி, யூனிகோட் உருமாற்றி, தமிழ் ஈமெயிலர், தேனிவகை எழுத்துறுக்கள்  ஆகியவை உமர் தம்பி அவர்களின்  இலாப நோக்கற்ற தனிப்பட்ட படைப்புகளாகும்.

மேலும் நமது இணைய தளத்திலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இவை மட்டுமின்றி தமிழாயாஹூ குரூப், மரத்தடி டாட் காம், ஈ சங்கமம் ஆகிய தமிழர் குழுமங்களிலும் இணைய தளங்களிலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.

உமர் தம்பி அவர்களின் இணைய மென்பொருட்களை கீழ்கண்ட சுட்டிகளில் காணலாம்.

http://www.geocities.com/csd_one/UniConMagz.zip

http://www24.brinkster.com/umarthambi/tamil/ETamil_search.asp

http://www.geocities.com/csd_one/fonts/ 

உமர் தம்பி அவர்களின் இழப்பு அதிரைக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்றால் மிகையில்லை.

அல்லாஹ் அன்னாரின் நற்கருமங்களைப் பொருந்திக் கொண்டு, உயரிய சுவர்க்கவாழ்வை வழங்குவானாக. ஆமீன்.

21 comments:

Boston Bala said...

அஞ்சலி

சீனு said...

ஹூம்...ஒருவர் இறக்கும் பொழுது தான் அவர் செய்த நல்லவைகள் தெரிகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்.

சன்னாசி said...

தேனீ இயங்கு எழுத்துருவைக் கடந்த இரண்டு வருடங்களாகப் பயன்படுத்தி வருபவர்களில் நானும் ஒருவன். அவருக்கு என் அஞ்சலிகள்.

Balaji-Paari said...

அன்னாரின் இழப்பு மிகுந்த துக்கத்தை கொடுக்கின்றது. அவரது இழப்பு ஆறாம் திணையாகிய இணையத் தமிழுக்கு மாபெரும் இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Venkat said...

ஆழ்ந்த வருத்தங்களும் அனுதாபங்களும்.

என்ன ஆயிற்று? ஏன் இப்படி? உடல் நிலை சரியில்லாமல் இருந்தாரா? அவர் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.

gulf-tamilan said...

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

துளசி கோபால் said...

வருத்தமாக இருக்கிறது.

அன்னாரின் குடும்பத்தினருக்கும், நம் தமிழ்வலைஞர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Chandravathanaa said...

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.


என்ன ஆயிற்று? ஏன் இப்படி? உடல் நிலை சரியில்லாமல் இருந்தாரா?

அபூ முஹை said...

வெங்கட் அவர்களே,
உமர் தம்பி அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்து சிகிச்சையும் பெற்று வந்தார். இன்று அதிகமான உடல் நலக்குறைவுக்கு ஆளாகி சிகிச்கை பயனளிக்காமல் மறைந்தார்.

இது நண்பர்கள் மூலம் நானறிந்த செய்தி.

இளங்கோ-டிசே said...

வருத்தம் தரும் விடயம்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அதிர்ச்சியான செய்தி. உமரின் தேனீ எழுத்துருவும் பிற முயற்சிகளும் தமிழ்க்கணிமைக்கு முக்கியமானவை. அவரது மறைவிற்கு அஞ்சலி.

மலைநாடான் said...

ஐயா!

நீர் தந்த நிரலாலே
நினைந்துருகிச்
சொன்னோம்
அஞ்சலி!

-/பெயரிலி. said...

அதிர்ச்சியடைந்தேன். என் வருத்தத்தினை அவர் குடும்பத்துக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இப்போதும் அவருடைய tamil tools bar இனைப் பயன்படுத்துகிறேன்.

இராம.கி said...

oஎன்னால் நம்பவே முடியவில்லை! தமிழ்க் கணிமையின் பயன்பாட்டைக் கூட்டியதில் நண்பர் உமர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர். அவரோடு தமிழ் உலகம் மடற்குழுவில் பலமுறை உரையாடி இருக்கிறேன்.

நிமிர்ந்த நெஞ்சும், கனிவான சொற்களும் உடையவர். தமிழின் மேல் ஆராத பற்றுடையவர். அதை பாராட்டும் வகையில் வெளிக்காட்டியவர்.

அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராதாகிருஷ்ணன் said...

தமிழ் இணைய உலகிற்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் முன்னோடியாக இருந்து உருவாக்கிய படைப்புகள் அனைத்தும் அவர் பெயர் சொல்லிக் கொண்டே இருக்கும்.

கானா பிரபா said...

அன்னாருக்கு என் அஞ்சலிகளும், அவரின் குடும்பத்திற்கு என் அனுதாபங்களும் உரித்தாகுக

Muthu said...

என் ஆழ்நத இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர் இறந்தாலும் அவரின் எழுத்துருக்கள் செயலிகள் மூலம் அவர் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

ஜெ. ராம்கி said...

I register my deepest condolence. I feel ashame to type it in English. But no other way. May his soul rest on peace.

மணியன் said...

உங்கள் பதிவைப் பார்க்கவில்லை. இதை திரு நா.கணேசன் தமிழ்மணம் கூகிள் குழுமத்தில் இட்டிருந்தார். நல்ல தகவல்கள் அனைவரையும் அடைய வேண்டும் என்று அதை தனிப்பதிவாக்கி எனது வலைப்பதிவில் ஏற்றியுள்ளேன். இப்போது உங்கள் பதிவைப் பார்த்தபிறகே நான் மறுபதிப்பு செய்திருக்கிறேன் என உணர்ந்தேன்.

தமிழிணையம் தன் தன்னிகரில்லா தொண்டனை இழந்து தவிக்கும் இந்நேரத்தில் அவரது உழைப்பின் பலனை நாளும் பாவிக்கும் எனது அஞ்சலிகள்.

Sivabalan said...

மறைந்த திரு. உமர் அவர்களின் குடும்பத்திற்க்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.