Monday, July 24, 2006

மதங்கள் மனிதர்களுக்காகவா..?

மனிதனால் அறியப்பட்டு உலகுக்கு அறிமுகம் செய்யப்படும் நவீனங்கள் ஒவ்வொன்றிலும் கண்டுபிடித்து அறிமுகம் செய்பவரின் வழிகாட்டல் நிச்சயமாக இருக்கும். எப்படி உபயோகிப்பது? - எப்படி இயக்குவது? என்கிற குறிப்புகளடங்கிய குறிப்பேடு, அதில் சொல்லப்பட்டுள்ளபடியே உபயோகப் படுத்த வேண்டும் - இயக்க வேண்டும். அதற்கு மாற்றமாக உபயோப்படுத்தினாலும், மாற்றமாக இயக்கினாலும் விபரீதங்கள் ஏற்படும்.

மனிதனால் கண்டுபிடிக்கப்படும் ஒரு கருவியை இயக்க, அவருடைய வழிகாட்டல் அவசியம் எனும்போது, இறைவனால் படைக்கப்பட்ட மனிதன், நன்மை - தீமைகளை விளங்கி செயல்பட அவனுக்கு வழிகாட்டல் அவசியமாகிறது. குறைந்த அறிவே வழங்கப்பட்டுள்ள மனிதன், நன்மைகளைத் தேர்ந்தெடுப்பது போல, பல சந்தர்ப்பங்களில் நன்மையெனக் கருதித் தீமைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். இது தவிர்க்கப்பட வேண்டுமாயின் மனிதத்தின் மீது முழு அக்கறை கொண்ட ஒரு பேரறிவாளனின் வழிகாட்டல் வேண்டும்.

மதம்.
மதம் என்றால் வெறி, சம்மதம் என்ற அடிப்படையில் மனிதன் தானாகச் சம்மதித்து ஏற்றுக்கொண்ட ஒரு வழி என்றுதான் சொல்ல முடியும். மதம் மனிதனை மதங்கொள்ளச் செய்வது. இறைவனால் வழங்கப்பட்டதல்ல. இறைவனால் கொடுக்கப்பட்டது, மனிதன் சம்மதித்தாலும், சம்மதிக்கா விட்டாலும் - சரி கண்டாலும் சரி காண விட்டாலும் ஏற்று நடக்க வேண்டிய மார்க்கம் ஆகும். இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் மனிதச் சமுதாயம் சுபீட்சமாகவும், அமைதியாகவும் வாழும் வழியாகும். எனவே மனித சுபீட்சத்திற்கும் - அமைதிக்கும் எதிரான செயல்பாட்டிற்கு ஆதரவாக, இறை கொடுத்த மார்க்கம் - மதத்தில் அறவே வழிகாட்டல் இல்லை.

சண்டைகள், போராட்டங்கள், வன்முறைகள், பயங்கர வாதங்கள் என எத்தனையோ நடந்துள்ளதை வரலாற்று ஏடுகளில் நாம் பார்க்கிறோம். அவற்றுக் கெல்லாம் காரணம் மதங்களல்ல, மதவாதிகளே..! - நான் ஏற்கெனவே சொல்லி வருவதுதான் - மதவாதிகள் செய்யும் தவறுகளை மதங்களை நோக்கித் திருப்பக்கூடாது.

அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் தவறான நடவடிக்கைகளுக்காக சட்டத்தின் மீது பழி சுமத்த முடியாத போது - மதத்தைப் பின் பற்றுபவர்களின் தவறுகளையெல்லாம் மதத்தின் மீது சுமத்துவது சரியல்ல.

''மதவாதிகளின் தவறுகளுக்கு மதங்களின் மீது பழி சுமத்துவது தவறு!''

''மதவாதிகளின் ஒவ்வொரு செயலும் மதத்தின் இயற்கையான விளைவுகளே என முடிவு செய்வதும் தவறு!''


மதம் என்பது மனித முயற்சியின் வெளிப்பாடு என்று கருதினால் அதற்கு திட்டவட்டமான அளவுகோல் எதுவும் இருக்க முடியாது. இந்நிலையில் இயற்கையாகவே ஒவ்வொரு மனிதனும் தனித்தனியே வேறு பட்டு நிற்பது தவிர்க்க முடியாததாகிவிடும். ''நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல'' என்தும் அது அவர் கண்ட மதம். மதவாதிகளின் செயல்பாடுகளை கவனித்து மதங்களே இப்படித்தானோ? என தவறானக் கருத்தோட்டத்தில் மதங்களை விட்டு ஒதுங்குவதாகக் கருதி தனியொரு மதத்தை உருவாக்குகிறார்.

இஸ்லாம்.
இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில், இறைநெறி - மார்க்கம் அல்லது மதம் என்பது மனித உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளல்ல. 'உண்மையைத் தேடும் மனித முயற்சியே மதம்' என்பதையும் இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக, இறைவன் இறக்கியருளிய கட்டளைகளின் தொகுப்பே இறைநெறியாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இறைநெறி என்பது முற்றிலும் இறைக் கட்டளைகளாகும். சத்தியத்தையும், அசத்தியத்தியத்தையும் அந்த இறைநெறி வகுத்தத் தந்த துலாக்கோலில் தான் மதிப்பிட வேண்டும்.

இறைவன் அருளிய துலாக்கோலைப் புறக்கணித்து விட்டு, ஒரு முஸ்லிம் தன்னுடைய அறிவை மட்டுமே பயன்படுத்தி சத்தியத்தை அறிய முற்படுவானேயானால் நிச்சயமாக அதில் அவன் வெற்றி பெறவே முடியாது. மாறாக அவன் குழப்பத்தில் மூழ்கி வழிகெட்டுப் போய் விடுவான்.

மதத்திற்கு இறை வெளிப்பாடுதான் (வஹீ) மூல ஆதாரம் என்று ஏற்றுக் கொள்பவர்கள் வஹீயின் மூலம் கிடைக்கும் செய்திகள்தான் ஏதார்த்த உண்மைகள் என்று ஒப்புக்கொள்வார்கள். அந்த மூல அறிவுக்கு வெளியே மத உண்மைகள் இருப்பதாக நம்பமாட்டார்கள். அப்படி இருப்பது சாத்தியமுமல்ல.

ஒவ்வாரு மனிதனும் தனித்தனியாக ஏதார்த்த உண்மையைக் கண்டுபிடிக்கும் போது ஒவ்வொரு மனிதனிடமும் ஏதார்த்த உண்மையை பற்றிய கருத்தோட்டமும் வெவ்வேறாகவே இருக்கும். இப்படி வேறுபட்டக் கருத்துக்கள் ஒருபோதும் மனித சமுதாயத்தை நல்வழிபடுத்திட உதவாது. எனவே, பக்குவப்படுத்தவும், நேர்வழி காட்டவும் மனிதனுக்கு மதத்தின் தேவை மிகவும் அவசியம்.

அன்புடன்,
அபூ முஹை

4 comments:

தருமி said...

//மதம்.
மதம் என்றால் வெறி, சம்மதம் என்ற அடிப்படையில் மனிதன் தானாகச் சம்மதித்து ஏற்றுக்கொண்ட ஒரு வழி என்றுதான் சொல்ல முடியும்.//
இது உங்கள் எழுத்து. ஒரு சின்ன எழுத்துப் பிழையுள்ளதென்று நினைக்கிறேன். பெரும் தவறான பொருள் தந்து விட்டதென நினைக்கிறேன்.

தருமி said...

//''மதவாதிகளின் தவறுகளுக்கு மதங்களின் மீது பழி சுமத்துவது தவறு!''//

எந்தவொரு இயக்கத்தைச் சார்ந்தவர்களின் நடவ்டிக்கைகளும் அந்த இயக்கங்களின் இயல்புக்கு ஏற்பவே அமைவது கண்கூடு.

//அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் தவறான நடவடிக்கைகளுக்காக சட்டத்தின் மீது பழி சுமத்த முடியாத போது - //
இன்றைய நிலையில் நல்லவன் கூட சில துறைகளில் சேர்வதாலேயே கெட்டவனாவதைக் கண்கூடாகப் பார்ர்கிறோமே. அதையும் மீறி நல்லவர்களாக இருப்பவர்கள் எத்தனை பேர்? மனித குணம் தான் சார்ந்துள்ளவைகளால் மாறும் குணம் உடையதுதானே? நான் சொல்வது இயல்பாக நம்மைச்சுற்றி நடக்கும் நடைமுறைகளை.

அபூ முஹை said...

வாருங்கள் தருமி உங்கள் வருகைக்கு நன்றி!

//மதம்.
மதம் என்றால் வெறி, சம்மதம் என்ற அடிப்படையில் மனிதன் தானாகச் சம்மதித்து ஏற்றுக்கொண்ட ஒரு வழி என்றுதான் சொல்ல முடியும்.//
இது உங்கள் எழுத்து. ஒரு சின்ன எழுத்துப் பிழையுள்ளதென்று நினைக்கிறேன். பெரும் தவறான பொருள் தந்து விட்டதென நினைக்கிறேன்.//

எழுத்துப் பிழை அல்லது கருத்துப் பிழை எதுவாக இருந்தாலும் நீங்கள் திருத்தலாம். திருத்திக் கொள்வேன்.

அந்த பாராவை முழுவதும் படித்திருப்பீர்கள் இரு வகையான மதம் பற்றி எழுதிருந்தேன். எழுதியது பெரும் தவறென்றால், உங்கள் விளக்கங்களை வரவேற்கிறேன் நன்றி!

********************************

//''மதவாதிகளின் தவறுகளுக்கு மதங்களின் மீது பழி சுமத்துவது தவறு!''//

எந்தவொரு இயக்கத்தைச் சார்ந்தவர்களின் நடவ்டிக்கைகளும் அந்த இயக்கங்களின் இயல்புக்கு ஏற்பவே அமைவது கண்கூடு.

//அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் தவறான நடவடிக்கைகளுக்காக சட்டத்தின் மீது பழி சுமத்த முடியாத போது - //
இன்றைய நிலையில் நல்லவன் கூட சில துறைகளில் சேர்வதாலேயே கெட்டவனாவதைக் கண்கூடாகப் பார்ர்கிறோமே. அதையும் மீறி நல்லவர்களாக இருப்பவர்கள் எத்தனை பேர்? மனித குணம் தான் சார்ந்துள்ளவைகளால் மாறும் குணம் உடையதுதானே? நான் சொல்வது இயல்பாக நம்மைச்சுற்றி நடக்கும் நடைமுறைகளை//

நல்லவன் கெட்டவனாகிறான் என்பது சரியே! அதற்கு சட்டத்தை குறை சொல்வது சரியல்ல!

சுமை தாங்கியின் மீது சுமையை இறக்கி வைத்த பின், சுமை கீழே விழுந்தால் அது சுமை தாங்கியின் தவறு அல்ல மாறாக இறக்கி வைக்கும்போது சுமையை சரியாக வைக்கவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

முதல் பின்னூட்டத்தை நீங்கள் விளக்க முயலும் போது இரண்டாவது பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்கு முரண்படாமல் விளக்குவீர்கள் என்பதையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
அபூ முஹை

தருமி said...

மதம் என்றால் நெறி - என்பதற்குப் பதில் மதம் என்றால் வெறி என்று தவறுதலாக வந்து விட்டதாய் நினைத்து அந்தத் திருத்தம் சொன்னேன்.

//நல்லவன் கெட்டவனாகிறான் என்பது சரியே! அதற்கு சட்டத்தை குறை சொல்வது சரியல்ல! // சட்டத்தைக் குறை சொல்லவில்லை; அந்த அமைப்பைக் - institution- குறை சொல்கிறேன். நல்ல உதாரணம் ஒன்று கொடுக்கலாமே. N.C.C.-யில் விருப்பமுடன் சேர்ந்துள்ள மாணவர்களின் நடை, உடை, பண்புகளில் புதிய நல்ல மாற்றங்களைக் காணலாம்.
நோம்பு காலங்களில் - அது ஐயப்பன் நோம்பாக இருக்கட்டும்; இல்ல இஸ்லாமியரின் நோம்பாக இருக்கட்டும் - அந்த சமயங்களில் தனி மனிதர்களின் குணமே வேறுபடுவதில்லையா?
கட்டுப்பாடு கொண்ட எந்த அமைப்புமே தனி மனித மனங்களிலும், பண்புகளிலும் கட்டாயமாக மாற்றத்தை ஏற்படுத்தும். mass psychology வேறு உள்ளது.