இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது. மாறாக மணவாழ்வு ஆன்மீகப் பாதைக்கு எதிரானது என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணம் நிறைவேறுவதற்கென்று சடங்கு சம்பிரதாயங்கள் எதையும் விதிக்கவில்லை. உறுதியான உடன்படிக்கை செய்துகொண்டு, மணமக்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவது இஸ்லாமியத் திருமணம்.
''...உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே.'' (திருக்குர்ஆன், 4:21)
திருமணம் செய்து கொள்வதற்கு, இரண்டு காரணங்களையும் இஸ்லாம் குறிப்பிடுகிறது.
1. ''மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களை, பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.'' (திருக்குர்ஆன், 4:1)
2. ''உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்திப் பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் (பிற பெண்களை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும், கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.'' (நபிமொழி)
மனித இன மறு உற்பத்தியாகச் சந்ததிகளைப் பெற்றுக் கொள்வது. கற்பு நெறியுடன் ஒழுக்கமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. இதுவே மணமுடிக்கும் நோக்கத்தின் மிக அவசியமாக இங்கு சொல்லப்படுகிறது.
ஆண், பெண் இரு பாலாருக்கும் உடல் சுகம் மிகவும் அவசியமானது. இந்த சுகத்தை, கணவன், மனைவி என்ற உறவுடன் இணைந்து, இல்லற வாழ்வின் மூலம் முறையாகப் பெற்றுக் கொள்ளக் கண்டிப்புடன் எடுத்துச் சொல்கிறது இஸ்லாம்.
இல்லற சுகம் அனுபவிப்பதற்காகவே திருமணம் செய்கிறார்கள். தேவைப்படும்போது தக்கக் காரணமின்றி இல்லற சுகம் மறுக்கப்படால் திருமண வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். உடலுறவுத் தேவை கணவனுக்கு இருப்பது போல், மனைவிக்கும் பொதுவானது. மனைவியின் பால் கணவனுக்கு நாட்டம் இருப்பது போலவே, மனைவிக்கும் கணவன் பால் நாட்டம் இருக்கும். இருவருடைய உணர்வுகளும் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால், மனைவி விரும்பினாலும், கணவன் விரும்பாமல் இல்லற சுகம் பெற முடியாது. இந்த உடற்கூறு வித்தியாசத்தையும் மறுக்க முடியாது. ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மட்டுமே மனைவியை ''அவர்களைப் படுக்கையிலிருந்து (தற்காலிமாக) விலக்கி வையுங்கள்'' (4:34) என்று சொல்லிவிட்டு -
''கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று, மனைவியர்க்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு'' (திருக்குர்ஆன், 2:228)
- கணவன், மனைவி இருவருமே இல்லற சுகத்தை அனுபவிப்பதற்கு ஒருவர் மீது மற்றவர் உரிமை பெற்றிருக்கிறார்கள் என்பதை 2:228வது வசனத்திலிருந்து விளங்கலாம். கணவனின் தேவைக்காக மனைவியை அழைப்பது போல், மனைவியும் தன் தேவைக்காக கணவனை அழைக்கும் உரிமை பெற்றிருக்கிறார். கணவனின் தேவையை சரியானக் காரணமின்றி மனைவிப் புறக்கணிக்ககூடாது - மனைவியின் தேவையையும் தக்கக் காரணமின்றி கணவன் மறுக்கக்கூடாது. இதை ஆதிக்கம் என்று சொல்வதைவிட கணவன், மனைவி உரிமைகள் என்றே சொல்ல வேண்டும்.
நபிமொழிகள்.
நபி(ஸல்) அவர்கள் ஸல்மான்(ரலி), அபூ தர்தா(ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் அபூ தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபூ தர்தாவின் மனைவி) உம்மு தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று அவரிடம் ஸல்மான் கேட்டதற்கு உம்மு தர்தா(ரலி), 'உம் சகோதரர் அபூ தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை'' என்று விடையளித்தார்.
(சற்று நேரத்தில்) அபூ தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபூ தர்தாவிடம், 'உண்பீராக!' என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, 'நான் நோன்பு வைத்திருக்கிறேன்' என்றார். ஸல்மான், 'நீர் உண்ணாமல் உண்ணமாட்டேன். என்று கூறியதும் அபூ தர்தாவும் உண்டார். இரவானதும் அபூ தர்தா(ரலி) நின்று வணங்கத் தாயரானார். அப்போது ஸல்மான்(ரலி), 'உறங்குவீராக' என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், 'உறங்குவீராக' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான்(ரலி), 'இப்போது எழுவீராக!' என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபூ தர்தாவிடம் ஸல்மான்(ரலி), 'நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக'' என்று கூறினார்கள். பிறகு அபூ தர்தா(ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைத் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஸல்மான் உண்மையையே கூறினார்!'' என்றார்கள். (புகாரி, 1968)
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.
நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!'' என்று கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்) நோன்பு வையும், (சில நாள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும், (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன், உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன, உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன், உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!... (புகாரி, 1974, 1975, 5199)
தன்னை முழுமையாக இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டு, உலக வாழ்க்கையில் கடமைகளை மறந்த அல்லது புறக்கணித்தத் தமது தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.
மேற்காணும் நபிமொழிகளில், மனைவியின் தேவையைப் பூர்த்தி செய்வது கணவனுக்குக் கடமை என்று சொல்லப்பட்டுள்ளது. கணவனின் தேவையைப் பூர்த்தி செய்வதும் மனைவியின் கடமையென்று, இதிலிருந்து அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி அறிவு வேண்டுமென்பதில்லை. திருமண ஒப்பந்தம் என்ற அடிப்படையில் கணவன் அழைத்து மனைவி மறுத்தாலும் - மனைவி அழைத்து கணவன் மறுத்தாலும், உடலுறவுக்கான தகுதியும், திறனுமிருந்து வேறு காரணங்கள் இல்லாமல் மறுத்தால், இருவரையும் வானவர்கள் சபிப்பார்கள்.
அன்புடன்,
அபூ முஹை
No comments:
Post a Comment