Saturday, July 08, 2006

கணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..?

எல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது பொருந்தும். கணவன் தன் உடல் இச்சையைத் தணிப்பதற்காக மனைவியை அழைப்பது ஒரு சாதாரண விஷயம். இஸ்லாம் இதிலும் தலையிட்டு, ''கணவன் அழைத்தால் மனைவி மறுக்கக்கூடாது'' என்று கூறுவதால் ''இஸ்லாம் ஓர் பெண்ணடிமை மதம்'' என்று அவசர முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

ஆணுக்கு ஏற்படும் உடற்கிளர்ச்சி அவனை, மிருகத்தனத்திங்குத் தள்ளி தனக்கு உரிமையில்லாத அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்கவும் தூண்டி விடுகின்றது. எல்லா ஆண்களும் இப்படி இல்லையென்றாலும், கணிசமான ஆண்கள், அன்னியப் பெண்களிடம் வரம்பு மீறி கீழ்த்தரமாக நடந்து கொள்வது அன்றாடச் செய்திகளில் வாசிக்கிறோம்.

உடல் உணர்வுகள் கணவனுக்கும், மனைவிக்கும் சரிசமம் என்றாலும், கணவன் தயாராகாமல், மனைவிக்கு உணர்வுகள் ஏற்பட்டு எதுவும் நடந்து விடப்போவதில்லை. கணவனுக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டு, மனைவி தயார் இல்லாமல் இருந்தாலும் காரியம் நடந்துவிடும். அதற்காக கணவன், மனைவியை பலாத்காரம் செய்யலாம் என்று பொருளில்லை. பாலின உடற்கூறுகள், கணவன் தயாராகாமல் மனைவியுடன் உடலுறவு சாத்தியமில்லை.

விஷயத்துக்கு வருவோம்.

ஒரு பெண் அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவளாக இருந்தாலும், எந்த நாட்டில் அவனைப் பார்க்க நேர்ந்தாலும், அல்லது மனிதர்கள் வாழாத காட்டில் காண நேர்ந்தாலும், அவள் நம் மதத்தை சார்ந்தவளாக இருந்தாலும், அல்லது எந்த மதத்தையும் சேராதவளாக இருந்தாலும் ஒரு முஸ்லிம் அப்பெண்ணை எந்த சூழ்நிலையிலும், எந்த நிலையிலும் பலாத்காரம் செய்ய முடியாது - கூடாது. அப்பெண்ணின் நிலையும் அந்தஸ்தும் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவள் அச்செயலுக்கு உடந்தையாக இருந்தாலும், உடன் படாவிட்டாலும் சரியே -

''நீங்கள் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்'' (திருக்குர்ஆன், 17:32) என்று - தவறான ரகசிய உறவுகள் அனைத்தும் அவனுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

''விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்'' இது முஸ்லிமான ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் இறைவனின் கட்டளையாகும். திருமண பந்தத்தை ஏற்படுத்தி, கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதைத் தவிர, மற்ற தவறான - ரகசிய உறவாக, விபச்சாரத்தின் மூலமாக உடல் இச்சையைத் தணிக்கும் அனைத்து வழிகளையும் இஸ்லாம் அடைத்து விட்டது. (இங்கு, முஸ்லிம்கள் விபச்சாரம் செய்வதில்லையா? என்று விமர்சிப்பது பொருத்தமாக இருக்காது. விபச்சாரத்தை இஸ்லாம் தடை செய்துள்ளது. முஸ்லிம்கள் செய்யும் தவறை, இஸ்லாத்தை நோக்கி திருப்ப வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்)

நபிமொழிகள்,
''ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 5193)

மேற்காணும் நபிமொழியைப் படிப்பவர்கள், மனைவி நோயாளியாக, அல்லது இயலாமல் இருந்தாலும் கணவன் அழைக்கும்போது உடலுறவுக்கு ஒத்துப்போக வேண்டுமா? இது எப்படி சாத்தியமாகும்? இது என்ன கொடுமை? என்றெல்லாம் தமக்குத் தோணுவதை கற்பனையால் விரிவுபடுத்தி, இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதம் என்று விமர்சிக்கின்றனர்.

தவறானக் கண்ணோட்டத்துடன் அணுகும் இவர்களின் கற்பனைக்கு எள்ளளவும் இந்த நபிமொழியில் சான்றுகள் இல்லை.

''எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை'' என்ற இறைவாக்கிற்கு எதிராக - உடலுறவுக்கு சக்தியற்ற மனைவி மறுத்தால் - வானவர்கள் ஒரு போதும் சபிக்க மாட்டார்கள். கணவன் படுக்கைக்கு அழைக்கும்போது, உடலுறவுக்கு வலுவிருந்தும் மறுக்கும் மனைவியையே வானவர்கள் சபிக்கின்றனர் என்று விளங்கலாம்.

மனைவி உடல் நலமின்றி, இயலாமல் இருக்கும்பொழுது, மனிதாபிமானமுள்ள எந்தக் கணவனும் மனைவியுடன் உடலுறவு கொள்ள முயலமாட்டான். சுகமில்லாத மனைவிக்கு சிகிச்சையளித்து குணமடைய வேண்டியதைச் செய்வான்.

வெறுப்பு - கோபம்.
''ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் சபிக்கின்றனர்.'' (புகாரி, 5194)

''ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.'' (புகாரி, 3237)

கணவன் படுக்கைக்கு அழைக்கும்போது எவ்வித காரணமுமின்றி மனைவி அதை மறுத்து வெறுத்தால், கணவன் கோபமடைவது இயல்பு. தாம்பத்திய உறவுக்கு பெரும்பாலும் கணவனிடமிருந்தே முதல் முயற்சி தொடங்கும். கணவனுக்கு மனைவியின் மீது ஏற்படும் நியாயமான ஆசைகள், மனைவியால் மறுக்கப்பட்டால் பின் விளைவு, விபச்சாரம் - அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் என விபரீத விளைவுகளுக்குத் தூண்டும் அபாயம் ஏற்படும். எனவே தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தாலும் அதற்காக பழி தீர்க்க எண்ணி படுக்கையை வெறுப்பது கூடாது என்று இங்கு வலியுறுத்தப்படுகிறது. (இன்னும்... அடுத்த பகுதியில்)

அன்புடன்,
அபூ முஹை

8 comments:

அகமது சுபைர் said...

ஆழமான கருத்து. அதனை அணுகிய விதமும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

அபூ முஹை said...

அஹமது சுபைர்,
உங்கள் வருகைக்கு நன்றி,

அன்புடன்,
அபூ முஹை

நாமக்கல் சிபி said...

அருமையான பதிவு. நல்ல விளக்கம்.

dondu(#11168674346665545885) said...

"உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது பொருந்தும்."
உண்மையாகக் கூறவேண்டுமென்றால் ஆண் பெண் இருவருக்குமே இது பொருந்தும். அவ்வாறு மனைவி அழைக்கும்போது கணவன் மறுத்தால் வானவர்கள் என்ன செய்வார்கள் என்ற குரான் பதிவு ஏதும் கைவசம் உண்டா?

"ஆணுக்கு ஏற்படும் உடற்கிளர்ச்சி அவனை, மிருகத்தனத்திங்குத் தள்ளி தனக்கு உரிமையில்லாத அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்கவும் தூண்டி விடுகின்றது."
அதே போல கணவன் மறுத்தால் மனைவியும் வேறு எங்கும் செல்லக்கூடும் என்பதையும் அன்றாடச் செய்திகளில் பார்க்கிறோமே?

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் வகையிலும் அது என்னுடைய அப்பதிவுக்கும் ரெலெவண்ட் ஆனதாலும் அதன் நகலை என்னுடைய ஆண் பெண் கற்பு நிலை - 3ல் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அபூ முஹை said...

பாலாஜி மனோகரன் அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி!

அபூ முஹை said...

நா.ராகவன் அவர்களே வருகைக்கு நன்றி.

மனைவிக்கு உடலுறவுத் தேவைப்படும் போது, தக்க காரணமின்றி கணவன் மறுத்தால் அவனையும் வானவர்கள் சபிக்கவே செய்வார்கள். இஸ்லாம் திருமணத்தை ஒப்பந்தம் என்பதால், உடல் உணர்ச்சிகள் விஷயத்தில் கணவன், மனைவி இருவருக்கும் சம உரிமை உண்டு. இது பற்றி எழுதவிருக்கும் அடுத்த பகுதியில் விளக்கம் கிடைக்கும்.

//அதே போல கணவன் மறுத்தால் மனைவியும் வேறு எங்கும் செல்லக்கூடும் என்பதையும் அன்றாடச் செய்திகளில் பார்க்கிறோமே?// -

- பெண், ஆணைப் பலவந்தமாக - பலாத்காரம் செய்ததாக நான் செய்திகளில் வாசித்ததில்லை.

அபூ முஹை said...

Srinithi, உங்கள் வருகைக்கு நன்றி!

மனைவியின் விருப்பமின்றி, கணவன் மனைவியை நெருங்கக்கூடாது என்பதை எழுதியுள்ள கட்டுரையிலிருந்தே நீங்கள் விளங்கலாம்.

//''ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.'' (புகாரி, 3237)//

கணவன் அழைத்து மனைவி வரவில்லையென்றால், மனைவியின் விருப்பமின்றி பலவந்தமாக உடலுறவில் ஈடுபடும் பேச்சுக்கே இடமில்லை. மனைவியில்லாமல் தனியாக கணவன் இரவைக் கழிக்க வேண்டும். கட்டுரையை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

நீங்கள் தவறாக விளங்கி, அதே கண்ணோட்டத்துடன் தவறாக விமர்சித்துள்ளீர்கள். நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

Srinithi, நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை நீக்கி விட்டேன். தமிழில் எழுதுங்கள் புரிந்து கொண்டு விளக்கம் தருகிறேன். நன்றி!

//எனவே தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தாலும் அதற்காக பழி தீர்க்க எண்ணி படுக்கையை வெறுப்பது கூடாது என்று இங்கு வலியுறுத்தப்படுகிறது.//

இது இருவருக்கும் சொல்லப்பட்டது.

அன்புடன்,
அபூ முஹை