இம்ரானா - நூர் இலாஹி.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்மணி தொழுவதற்காகப் புறப்பட்டார். அவரை ஒரு ஆண் கண்டு போர்வையால் போர்த்தி அவரைக் கற்பழித்து விட்டார். அவள் சப்தமிட்டதும் அவன் ஓடி விட்டான். வேறொரு ஆடவர் அவளருகே வந்தார் இந்த மனிதன் என்னைக் கெடுத்துவிட்டான் என்று அப்பெண் கூறினாள். முஹாஜிர்களில் ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்ற அப்பெண் ''இந்த மனிதன் என்னைக் கெடுத்து விட்டான்'' என்ற கூறினார். யார் அவளைக் கெடுத்ததாக அப்பெண் அடையாளம் காட்டினாளோ அவரைப் பிடித்து வந்தனர். ''அவன்தான்'' என்று அப்பெண் அடையாளம் காட்டினாள். நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டு வரப்பட்டு கல்லெறியுமாறு உத்தரவிடப்பட்டதும் அப்பெண்ணை உண்மையிலேயே கெடுத்தவர் எழுந்து ''அல்லாஹ்வின் தூதரே நான்தான் அவளைக் கெடுத்தவன்'' என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் நீ செல்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்'' என்று கூறினார்கள். (தவறாகப் பிடித்து வரப்பட்ட) மனிதரிடம் அழகிய வார்த்தைகளைக் கூறினார்கள். அப்பெண்ணைக் கெடுத்தவரைக் கல்லெறியுமாறு ஆணையிட்டார்கள். ''மதீனாவாசிகள் அனைவரும் எந்த அளவு தவ்பா - பாவமன்னிப்புக் கேட்டால் ஏற்கப்படுமோ அந்த அளவு இவர் தவ்பா - பாவமன்னிப்புக் கேட்டு விட்டார்'' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர், வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) திர்மிதீ, அபூ தாவூத் )
//*எனக்கு தெரிந்து கற்பழிப்பு குற்றங்களை செய்த எந்த ஆணும் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டதாக தெரியவில்லை. வறலாற்றில் கூட நான் கேள்விபடவில்லை.*//
ரோஸா வசந்த் அவர்களுக்கு மேற்கண்ட செய்தியில் விளக்கம் கிடைக்குமென்று நம்புகிறேன்.
1. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை அடையாளம் காட்ட வேண்டும்.
2. பலவந்தமாகக் கற்பழிக்கப்பட்டப் பெண் குற்றவாளி இல்லை - அதனால் அவளுக்கு தண்டனை கிடையாது.
3. கற்பழித்தவனுக்கே மரண தண்டனை.
4. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை ''இவன்தான் என்னைக் கெடுத்தான்'' என்று அடையாளம் காட்டினால் போதும் வேறு சாட்சிகள் தேவையில்லை என்பதை நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். (இது, கற்பழிப்பை நிரூபிக்க நான்கு சாட்சிகள் வேண்டும் என்று சொல்பவர்கள் கவனத்திற்கு)
5. ''அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளைக் கெடுத்தவன்'' என்று உண்மையை ஓப்புப் கொண்டு முன் வந்தவருக்கே கற்பழிக்கப்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கவில்லை! (என்பது ந.ராகவன் அவர்களின் கவனத்திற்கு)
இனி இம்ரானாவின் விஷயத்துக்கு வருவோம்.
''நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்தப் பெண்களை மணக்காதீர்கள்'' (திருக்குர்ஆன், 4:22)
இந்த வசனத்தில் தந்தையின் மனைவியை அதாவது மாற்றாந்தாயை, தந்தை மரணித்து விட்டாலோ அல்லது தந்தை மனைவிளை விவாகரத்து செய்தாலோ அந்தப் பெண்ணை அவருடைய ஆண்மக்கள் திருமணம் செய்யக்கூடாது என்று தடை விதிக்கிறது. இந்த வசனத்தின் அடிப்படையில்தான் இம்ரானாவின் மாமனார் இம்ரானாவை பலாத்காரம் செய்து உடலுறுவு கொண்டதால் இம்ரானா, நூர் இலாஹியின் தந்தையின் மனைவி!? என்ற அந்தஸ்துக்கு உரியவராகிறார் இனி கணவர் நூர் இலாஹிக்கு இம்ரானா மனைவியாக முடியாது என்று இங்கே ஷரியத்தைக் கேலிக் கூத்தாக்குகிறார்கள்.
''உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளாதீர்கள்'' (திருக்குர்ஆன், 4:23)
மகனின் மனைவி அதாவது மருமகளை, மகன் இறந்து விட்டால் அல்லது மகன் மனைவியை விவாகரத்துச் செய்தாலோ அந்தப் பெண்ணை அவருடைய தந்தைத் திருமணம் செய்யக்கூடாது என்று 4:23ம் வசனம் தடை விதிக்கிறது. திருமணம் செய்துகொள்ள விலக்கப்பட்ட, தன் மகனின் மனைவியை திருமண உறவையும் கடந்து சண்டாளன் பலத்காரம் செய்தது கீழ்த்தரமான செயல் -இச்செயலுக்கு மகனின் மனைவியை கற்பழித்தத் தந்தைக்கே மணமுடிப்பது இஸ்லாத்திற்குப் பொருந்தாதத் தீர்ப்பு இச்சட்டத்தை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை நாமறியவில்லை.
கற்பழித்தவன்தான் குற்றவாளி, கற்பழிக்கப்பட்டப் பெண் நிரபராதி - அவள் தவறுக்கு உடன்படவில்லை - நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் ''நீ செல்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்'' என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லியிருப்பது பலவந்தப்படுத்தப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது. மேலும் திருக்குர்ஆன் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மீது குற்றமில்லை (5:3) என்று கூறுகிறது.
இம்ரானா குற்றமற்றவர் என்பதால் அவர் தன் கணவரோடு சேர்ந்து வாழ்வதற்கு இஸ்லாத்தில் தடை இருப்பதாக நாமறியவில்லை. அவர் தன் கணவரோடு சேர்ந்து வாழலாம் என்பதே எமது நிலைப்பாடு! மாற்றுக் கருத்துள்ள - இதற்குத் தடை இருக்கிறது என்பதையறிந்த முஸ்லிம் சகோதரர்கள் கண்டிப்பாக தமது கருத்தைப் பதித்து தவறைச் சுட்டிக்காட்டுங்கள் இதைத் தனிப்பதிவாகவும் பதித்துள்ளேன். நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
