முஸ்லிம் பெண்களின் விவாகரத்து உரிமை.
மனைவியைப் பிடிக்கவில்லை என்றால் தலாக் - விவாகரத்துச் செய்யும் உரிமை, இஸ்லாத்தில் ஆண்களுக்கு இருப்பது போன்று, பெண்களுக்கு இல்லை என்று முஸ்லிமல்லாதோர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். இஸ்லாம் பெண்களுக்கும் அந்த உரிமையை வழங்கியிருக்கிறது என்பதை அறியாததால் அவர்கள் இவ்வாறு கருதுகின்றனர். கணவன் - மனைவி இருவருக்குமிடையே விவாவரத்துச் செய்யும் முறையில் வித்தியாசமிருக்கிறதே தவிர உரிமையில் வித்தியாசமில்லை.
சில முஸ்லிம்களும் இஸ்லாத்தை அறியாததால் பெண்களின் விவாகரத்து உரிமை மறுக்கப்பட்டாலும் இதற்காக இஸ்லாத்தைக் குறை கூற முடியாது. திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள கணவனுக்கு உரிமை இருப்பது போல் மனைவிக்கும் உரிமையிருப்பதை இவ்வசனத்திலிருந்து விளங்கலாம். ''கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று, மனைவியர்க்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு'' 2:228
தவறான எண்ணம்.
கணவனால் கொடுமைப்படுத்தப்படும் மனைவி, அவனிடமிருந்து பிரிய விரும்புகிறாள் இந்த நிலையில் கணவன் மறுக்கிறான் - அவன் தலாக் விட்டால் தான் மனைவி பிரிய முடியுமென்றால் - காலமெல்லாம் அவனின் கொடுமைக்கு அவள் ஆளாகிக் கொண்டிருக்க நேரிடும் இது எவ்வளவு பெரிய விபரீதம் என்று தவறாக விளங்கி, இஸ்லாத்தை விமர்சிக்கிறார்கள். இது களையப்பட வேண்டும்.
கணவன் செய்யும் அக்கிரமங்களையெல்லாம் சகித்துக் கொண்டு, கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று ஆணாதிக்க சக்திக்கு அடிமைப்பட்டு வாழ பெண்களை ஒரு போதும் இஸ்லாம் நிர்ப்பந்திக்கவில்லை. மனைவியைப் பிடிக்கவில்லையெனில் ''தலாக்'' சொல்லி விவாக பந்தத்தை முறித்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு இருப்பது போல், கணவன் மீது அதிருப்தியுற்ற மனைவி ''குலா'' எனும் விவாகப் பிரிவினையின் மூலம் கணவனைப் பிரியும் உரிமையைப் பெற்றிருக்கிறாள்.
ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் நன்னடத்தையையோ, அவரின் குணத்தையோ குறை சொல்லவில்லை. ஆயினும் நான் இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'சரி! அவர் (உனக்கு மஹராக - மணக்கொடையாக வழங்கியத்) தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அவரும் 'சரி' என்றார். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கணவரிடம் ''தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்று கூறினார்கள். (புகாரி, நஸயீ)
பெண்ணுக்கு வழங்கியுள்ள இந்த விவாகரத்து உரிமையை இஸ்லாமிய வழக்கில் ''குலா'' என்பார்கள். இந்த நபிவழியிலிருந்து விளங்கும் சட்டங்கள்.
1 ஒரு பெண்ணுக்கு தன் கணவனைப் பிரிய வேண்டுமானால் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும்.
2 அவள் திருமணத்தின் போது மஹராக - மணக் கொடையாக எதை வாங்கினாளோ அதைக் கணவனிடம் ஒப்படைக்குமாறு தலைவர் கட்டளையிட வேண்டும்.
3. அந்த மஹரைப் பெற்றுக் கொண்டவுடனே, அவளை விட்டுப் பிரிந்து விடுமாறு கணவருக்குத் தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படா விட்டாலும், தலைவர் அத்திருமணத்தை ரத்துச் செய்வார்.
4 கணவனைப் பிடிக்காத மனைவி அதற்கானக் காரணத்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இஸ்லாத்தில் விவாகரத்து என்பது ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும், முறையில் வித்தியாசமிருந்தாலும் உரிமையில் சமமாகவே வழங்கப்பட்டிருக்கிறது. மனைவியைத் தலாக் சொல்லும் கணவன் அது பற்றி அந்தப் பகுதி தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும். அதே மாதிரி கணவனைப் பிரிய எண்ணும் மனைவியும் அந்தப் பகுதி தலைவரிடம் முறையிட வேண்டும். ''தலாக்'', ''குலா'' இவ்விரண்டுமே ரகசியமாக நடப்பதில்லை. ஊரறியப்படுவதுதான் மறுமணத்திற்கான வாய்ப்பையும் எளிதாக்கும்.
திருமணப் பந்தத்தின் மூலம் இணையும் தம்பதியர்கள் ஒருவரையொருவர் புரிந்து நல்லிணக்கத்தோடு தொடர்ந்து வாழலாம். அல்லது தம்பதியரிடையே பிணக்கு ஏற்பட்டு தொடர்ந்து அதில் நீடிக்க விரும்பாமல் நிரந்தரமாகப் பிரிந்துவிடும் நிலையும் ஏற்படலாம். இஸ்லாம், கணவன் - மனைவி இருவருக்கும் மணவிலக்கை இலேசாக்கியிருக்கிறது. இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளைத்தான் பிரிக்க முடியாது. திருமணத்தினால் ஏற்படும் கணவன், மனைவி உறவைப் பிரிக்கவே முடியாத உறவாக இஸ்லாம் கருதவில்லை. திருமணத்திற்குப் பின் கணவன் ஒழுக்கமில்லாதவன் என்று அறியப்பட்டால் அதை சகித்துக் கொண்டு அவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சமமாக ''விவாகரத்தில்'' இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியிருக்கிறது.
No comments:
Post a Comment