இம்ரானா - நூர் இலாஹி.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்மணி தொழுவதற்காகப் புறப்பட்டார். அவரை ஒரு ஆண் கண்டு போர்வையால் போர்த்தி அவரைக் கற்பழித்து விட்டார். அவள் சப்தமிட்டதும் அவன் ஓடி விட்டான். வேறொரு ஆடவர் அவளருகே வந்தார் இந்த மனிதன் என்னைக் கெடுத்துவிட்டான் என்று அப்பெண் கூறினாள். முஹாஜிர்களில் ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்ற அப்பெண் ''இந்த மனிதன் என்னைக் கெடுத்து விட்டான்'' என்ற கூறினார். யார் அவளைக் கெடுத்ததாக அப்பெண் அடையாளம் காட்டினாளோ அவரைப் பிடித்து வந்தனர். ''அவன்தான்'' என்று அப்பெண் அடையாளம் காட்டினாள். நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டு வரப்பட்டு கல்லெறியுமாறு உத்தரவிடப்பட்டதும் அப்பெண்ணை உண்மையிலேயே கெடுத்தவர் எழுந்து ''அல்லாஹ்வின் தூதரே நான்தான் அவளைக் கெடுத்தவன்'' என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் நீ செல்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்'' என்று கூறினார்கள். (தவறாகப் பிடித்து வரப்பட்ட) மனிதரிடம் அழகிய வார்த்தைகளைக் கூறினார்கள். அப்பெண்ணைக் கெடுத்தவரைக் கல்லெறியுமாறு ஆணையிட்டார்கள். ''மதீனாவாசிகள் அனைவரும் எந்த அளவு தவ்பா - பாவமன்னிப்புக் கேட்டால் ஏற்கப்படுமோ அந்த அளவு இவர் தவ்பா - பாவமன்னிப்புக் கேட்டு விட்டார்'' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர், வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) திர்மிதீ, அபூ தாவூத் )
//*எனக்கு தெரிந்து கற்பழிப்பு குற்றங்களை செய்த எந்த ஆணும் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டதாக தெரியவில்லை. வறலாற்றில் கூட நான் கேள்விபடவில்லை.*//
ரோஸா வசந்த் அவர்களுக்கு மேற்கண்ட செய்தியில் விளக்கம் கிடைக்குமென்று நம்புகிறேன்.
1. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை அடையாளம் காட்ட வேண்டும்.
2. பலவந்தமாகக் கற்பழிக்கப்பட்டப் பெண் குற்றவாளி இல்லை - அதனால் அவளுக்கு தண்டனை கிடையாது.
3. கற்பழித்தவனுக்கே மரண தண்டனை.
4. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை ''இவன்தான் என்னைக் கெடுத்தான்'' என்று அடையாளம் காட்டினால் போதும் வேறு சாட்சிகள் தேவையில்லை என்பதை நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். (இது, கற்பழிப்பை நிரூபிக்க நான்கு சாட்சிகள் வேண்டும் என்று சொல்பவர்கள் கவனத்திற்கு)
5. ''அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளைக் கெடுத்தவன்'' என்று உண்மையை ஓப்புப் கொண்டு முன் வந்தவருக்கே கற்பழிக்கப்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கவில்லை! (என்பது ந.ராகவன் அவர்களின் கவனத்திற்கு)
இனி இம்ரானாவின் விஷயத்துக்கு வருவோம்.
''நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்தப் பெண்களை மணக்காதீர்கள்'' (திருக்குர்ஆன், 4:22)
இந்த வசனத்தில் தந்தையின் மனைவியை அதாவது மாற்றாந்தாயை, தந்தை மரணித்து விட்டாலோ அல்லது தந்தை மனைவிளை விவாகரத்து செய்தாலோ அந்தப் பெண்ணை அவருடைய ஆண்மக்கள் திருமணம் செய்யக்கூடாது என்று தடை விதிக்கிறது. இந்த வசனத்தின் அடிப்படையில்தான் இம்ரானாவின் மாமனார் இம்ரானாவை பலாத்காரம் செய்து உடலுறுவு கொண்டதால் இம்ரானா, நூர் இலாஹியின் தந்தையின் மனைவி!? என்ற அந்தஸ்துக்கு உரியவராகிறார் இனி கணவர் நூர் இலாஹிக்கு இம்ரானா மனைவியாக முடியாது என்று இங்கே ஷரியத்தைக் கேலிக் கூத்தாக்குகிறார்கள்.
''உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளாதீர்கள்'' (திருக்குர்ஆன், 4:23)
மகனின் மனைவி அதாவது மருமகளை, மகன் இறந்து விட்டால் அல்லது மகன் மனைவியை விவாகரத்துச் செய்தாலோ அந்தப் பெண்ணை அவருடைய தந்தைத் திருமணம் செய்யக்கூடாது என்று 4:23ம் வசனம் தடை விதிக்கிறது. திருமணம் செய்துகொள்ள விலக்கப்பட்ட, தன் மகனின் மனைவியை திருமண உறவையும் கடந்து சண்டாளன் பலத்காரம் செய்தது கீழ்த்தரமான செயல் -இச்செயலுக்கு மகனின் மனைவியை கற்பழித்தத் தந்தைக்கே மணமுடிப்பது இஸ்லாத்திற்குப் பொருந்தாதத் தீர்ப்பு இச்சட்டத்தை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை நாமறியவில்லை.
கற்பழித்தவன்தான் குற்றவாளி, கற்பழிக்கப்பட்டப் பெண் நிரபராதி - அவள் தவறுக்கு உடன்படவில்லை - நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் ''நீ செல்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்'' என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லியிருப்பது பலவந்தப்படுத்தப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது. மேலும் திருக்குர்ஆன் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மீது குற்றமில்லை (5:3) என்று கூறுகிறது.
இம்ரானா குற்றமற்றவர் என்பதால் அவர் தன் கணவரோடு சேர்ந்து வாழ்வதற்கு இஸ்லாத்தில் தடை இருப்பதாக நாமறியவில்லை. அவர் தன் கணவரோடு சேர்ந்து வாழலாம் என்பதே எமது நிலைப்பாடு! மாற்றுக் கருத்துள்ள - இதற்குத் தடை இருக்கிறது என்பதையறிந்த முஸ்லிம் சகோதரர்கள் கண்டிப்பாக தமது கருத்தைப் பதித்து தவறைச் சுட்டிக்காட்டுங்கள் இதைத் தனிப்பதிவாகவும் பதித்துள்ளேன். நன்றி!
அன்புடன்,
அபூ முஹை


பி. ஜைனுல் ஆபுதீன் போன்ற மார்க்க அறிஞர்கள் மதஹப்களை கடுமையாக எதிர்ப்பதின் பலனை இப்பொழுதாவது புரிந்துக்கொண்டீர்களா? ஒற்றுமை என்ற போர்வையில் பெயரளவில் முஸ்லிமாக இருந்து மார்க்கத்தை சரியாக பின்பற்றாமல் ஏற்படும் ஒற்றுமையில் என்ன வெற்றியைக் கண்டுவிடப்போகின்றனர்?
இஸ்லாத்தை சரியாக பின்பற்றக்கூடிய விஷயத்தில் ஏற்படும் ஒற்றுமையே ஈருலகத்திலும் வெற்றியைத் தருகின்ற ஒற்றுமையாகும்.
இந்த இம்ரானா - நூர் இலாஹி விஷயத்தில் இந்த அறிஞர்கள் பின்பற்றிய சட்டமானது '' ஹனபி மதஹப்பின் '' சட்டமாகும். ஒரு ஆண், இன்னொருத்தனின் மனைவியுடன் உடலுறவு கொண்டால் அன்று முதல் அவன் அவனின் மனைவியாவாள். இதுதான் ஹனபி மதஹப் இன் சட்டமாகும்.
இவ்வாறு இன்னும் அதிகமான கேடுகள் இந்த மதஹப் ஜ பின்பற்றக்கூடியவர்களின் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதைக் கண்டுதான் மாற்றுமதத்தினர் நம்மை கடுமையாக சாடுகின்றனர். இந்த இஸ்லாமியர்கள் பின்பற்றுவது ஒரு சட்டம், மாற்று மதத்தினரிடம் கூறுவது வேறு சட்டம். என்று சாடுகின்றனர்.
இஸ்லாத்தை கருவறுக்க காத்துக் கொண்டிருக்கும் இரண்டுக் கூட்டங்களில் ஒன்று இந்தியாவில் ஆஎஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் மற்றும் இந்தியாவிற்கு உள்ளேயும், மற்றைய நாடுகளில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்புணர்வு கூட்டமும் நாம் அறிந்த கூட்டங்கள். மற்றொன்று இஸ்லாமியர்கள் அறியா வண்ணம் இஸ்லாத்தை கருவறுக்கக் கூடியவர்கள். அதில் இந்த மதஹப் ஜ வெறித்தனமாக பின்பற்றக்கூடியவர்கள், காதியாணிக்கள், தப்லீக் ஜமாத்தினர், ஒற்றுமை என்று கூறிக்கொண்டு இஸ்லாமிய பெயர்தாங்கிகள் எதைக் கூறினாலும் அதைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவர்கள். இவ்வாறாக விரிகின்றது இந்த கூட்டத்தினர்.
யார் ஒருவர் திருமறைக் குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்றவில்லையோ! அப்படிப்பட்டவரிடம் இஸ்லாம் என்ற பெயரில் இப்படிப்பட்ட கேடுகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.
எந்த ஒரு முஸ்லிமும் இப்படிப்பட்டக் கேடைக்கண்டு கடுமையாக எதிர்க்கவில்லையோ அல்லது இப்படிப்பட்ட தவறான வழியிலிருந்து முஸ்லிம்களை நேர்வழிபடுத்த பாடுபடவில்லையோ அவர்களெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என்பதை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். இவற்றிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக.
Posted by
அப்துல் குத்தூஸ் |
Sat Jul 02, 12:52:00 AM
அந்த காமுக மாமனார் கடுமையாகத் தண்டிக்கப்படவும் நிர்பந்தத்துக்கு உள்ளான இம்ரானா தன் இயல்பு வாழ்க்கையைத் தொடரவும் வேண்டும் என்பதே நியாயவான்களின் கருத்தாக இருக்க முடியும்.
இஸ்லாமிய இறைச் சட்டங்களின் படியும் அதுவே நல்ல தீர்ப்பாக அமையும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள்.
ஆதங்கப்படாமலும் உணர்ச்சி வசப்படாமலும் 'விளக்கம் தருவதற்காக' எழுதுகிற உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
முஸ்லிம் அறிஞர்கள் என்று சொல்லப்படுகிறவர்களே இவ்வாறு தவறாக தீர்ப்பளிப்பதை முஸ்லிம்களே எதிர்க்க முன் வர வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் இஸ்லாம் மீது சேறு பூச காத்து கிடப்பவர்களை எப்படி தடுப்பீர்கள்?
இஸ்லாத்தினை விமர்சனம் செய்பவர்கள் இரு வகையாக இணையத்தில் இன்று:
1). மனதில் துவேஷம் கொண்டு இஸ்லாத்தை தாக்கி எழுதுவதையே 'இலட்சியமாக' வைத்துள்ளவர்கள்.
2). இஸ்லாம் பற்றியும் அதன் வரலாற்றையும் முறையாக விளங்காமல் (அ) தவறாக விளங்கியிருப்பதால் 'சில விமர்சகர்களின் ''வலை'' யில் விழுந்து தவறாக எழுதுபவர்கள்.
உங்களின் விளக்கங்கள் இரண்டாம் பிரிவினருக்கு வெகுவாகப் பயன் தரத்தக்கது.
Posted by
BABU |
Sat Jul 02, 05:53:00 AM
சகோதரர் அப்துல் குத்தூஸ்,
நீங்கள் குறிப்பிட்ட பிரிவுகள் இஸ்லாத்தை விளங்கவும் எடுத்துச் சொல்லவும் பிற்கால முஸ்லிம்கள் வகுத்துக் கொண்டவை. இதில் ஒரு சிலர் கண்மூடித்தனமாக குறிப்பிட்ட பிரிவை பின்பற்றி வருகிறார்கள். இன்னும் சிலர் தாங்கள் தாம் சரியாக பின்பற்றுகிறோம் என தர்க்கித்து வருகின்றனர். இத்தகைய பிரிவுகள் தேவையா? வேண்டாமா? என்பதல்ல தற்போதைய பிரச்சினை.
இஸ்லாமே தேவையில்லை, ஒழிக்கப்பட வேண்டும் என துவேஷமாக சில கருத்துக்கள் கிளம்பியுள்ள சூழலில், இதுதான் சமயம் என அவதூராகவும், திசை திருப்பியும் இஸ்லாத்தை தவறாக சித்தரிக்கும் கும்பலுக்கு உங்கள் பின்னூட்டம் ஒரு காரணமாகி விடக்கூடாது என்பதே எனது வேண்டுகோள்.
இஸ்லாமிய அடிப்படையைப் பேணாத எந்த இயக்கமும், பிரிவும் புறக்கணிக்கப் பட வேண்டியவையே. அது மார்க்க விஷயமாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி!
காதியானிகள் - அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டாலும், குலாம் ரசூல் காதியானி என்ற இந்தியரை! இறைவனின் கடைசி தூதர் என நம்பி வழிகெட்டவர்கள். இதுபோல் இன்னும் பல வழிகேடர்களும் இஸ்லாத்தில் உண்டு. இவர்களோடு, தப்லீக் பணி செய்பவர்களை ஒப்பிடுவது சரியல்ல. இஸ்லாத்தை முஸ்லிம்களுக்குள் எடுத்துச் செல்/சொல்வதில் மட்டும் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.
தவ்ஹீத், தப்லீக் மற்றும் மத்ஹப் என்ற பிரிவுகளாக பிரிந்து, (தொழும்போது விரலை எப்படி வைத்துக்கொள்வது போன்ற) சிறிய சிறிய விஷயங்களில் தர்க்கம் செய்து முஸ்லிம்களுக்குள் பிரிந்து இருப்பவர்களால்தான், இஸ்லாத்தை தூற்றுபவர்கள் தங்கள் பணியை ஏனையோர்களிடம் இலகுவாக செய்ய முடிகிறது.
இம்ரானா விஷயத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அநீதி என்பதோடு குர்ஆன், ஹதீஸுக்கு முரணானது என்பதில் சந்தேகமில்லை. தீர்ப்பு வழங்கியவர்கள் நிச்சயம் பாரபட்சமாகவே நடந்து கொண்டுள்ளனர் என்பது பெரும்பாலான முஸ்லிம்களின் கருத்து.
இதுபோன்ற அவசர தீர்ப்புகளால், இஸ்லாமிய சட்டங்கள் தற்காலத்திற்கு ஒவ்வாதவை என கூக்குரலிடும், இஸ்லாமிய விரோதிகளின் "வெற்று வாய்க்குக் கிடைத்த அவல்" ஆகவே இருக்கும்.
தேவ் பந்த் மதரஸா இஸ்லாமிய தலைமையகம் அல்ல. ஒரு சாதாரண கல்விக்கூடமே. இதில் மார்க்கத்தை நன்கு அறிந்தவர்களும் இருக்கலாம், அறியாதவர்களும் இருக்கலாம். அவ்வாறு அறியாமலோ அல்லது நிர்ப்பந்தத்தாலோ வழங்கப்பட்டதே இம்ரானா விஷயத்தில் நடந்துள்ளது. உலமாக்களுக்குள் விவாதம் நடத்தி சரியான தீர்ப்பு கிடைக்கும்.
தேவ்பந்த் மதரஸாவின் கடந்த கால இஸ்லாமிய பணிகளும், இந்திய சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிராக வழங்கிய தீர்ப்புகளும், இம்ரானாவுக்கு வழங்கப்பட்ட தவறான தீர்ப்பால் கொச்சை படுத்தக் கூடாது.
இம்ரானாவுக்கு நிச்சயம் சரியான இஸ்லாமிய தீர்ப்பு கிடைக்கும். இதனை இந்திய சட்டப்படியும் பெற முடியும்.
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், இம்ரானா விஷயத்தில் இஸ்லாத்தை விமரிசித்த பெண்ணுரிமைவாதிகள் காமுக மாமனாருக்கு கற்பழிப்புக்கான தண்டனையை செயல் படுத்தச் சொன்னால், மனிதஉரிமை ஆர்வலர்களாக மாறி விடுவார்கள்!!
Posted by
நல்லடியார் |
Sun Jul 03, 12:10:00 AM
//இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், இம்ரானா விஷயத்தில் இஸ்லாத்தை விமரிசித்த பெண்ணுரிமைவாதிகள் காமுக மாமனாருக்கு கற்பழிப்புக்கான தண்டனையை செயல் படுத்தச் சொன்னால், மனிதஉரிமை ஆர்வலர்களாக மாறி விடுவார்கள்!!//
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!
Posted by
Jafar Ali |
Sun Jul 03, 02:06:00 AM
கல்லெறிந்து கொல்வது போன்றவற்றை தண்டனையாகக் கொள்ளும் சமூகம் நாகரிகமடைந்த சமூகம் அல்ல.அனைவருக்கும் பொதுவான சிவில், குற்றவியல் சட்டம் தேவை.அங்கு மதத்திற்கு இடமில்லை. பெண்ணியவாதிகள் மனித உரிமைகள் குறித்து அக்கறைக் காட்டுவதிலும், கல்லெறிந்து கொல்தல் போன்றவற்றை எதிர்ப்பதிலும் முரண்பாடு ஏதும் இல்லை. பிரச்சினை பெண்கள் உரிமை,சட்டம்,
மனித உரிமைகள் குறித்த உங்கள் புரிதலில்தான் இருக்கிறது.
Posted by
wichita |
Sun Jul 03, 03:32:00 AM
//பெண்ணியவாதிகள் மனிதஉரிமைகள் குறித்து அக்கறைக் காட்டுவதிலும், கல்லெறிந்து கொல்தல் போன்றவற்றை எதிர்ப்பதிலும் முரண்பாடு ஏதும் இல்லை//
பெண்ணுரிமை பற்றி பேசும்போது இஸ்லாத்தை சாடுபவர்கள், பெண்ணின் உரிமை மீறப்படும் போது அதே இஸ்லாம் பரிந்துறைக்கும் தண்டனையை சாடுவதும்,
போதை மருந்து கடத்தி ஒரு தலைமுறையை அல்லது தனிநபரை கெடுத்தவனை தூக்கிலிட்டு அல்லது வேறு முறையில் கொல்வதை ஒப்புக்கொண்ட உலகம், கற்பழித்து ஒரு பெண்ணைக் கெடுத்தவனை கொல்வதை எதிர்ப்பதும் முரண்பாடல்லவா?
தண்டனைகள் என்பது உண்மையில் குற்றவாளி தண்டிக்கப்படுவதாக இருக்க வேண்டும். இதை சரியாக புரிந்து கொண்டால் முரண்பாடுகளுக்கு இடமில்லை. நன்றி!
Posted by
நல்லடியார் |
Sun Jul 03, 04:52:00 AM
மரண தண்டலையை எல்லா நாடுகளும் ஏற்றுக்கொள்ள்வில்லை. இந்தியாவில் அரிதினும் அரிதாகவே
மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. போதைப் பொருள கடத்தல், விநியோகத்தினை கடுமையாகக் தண்டிக்கும் நாடுகள் கூட மரண தண்டனைத் தான் ஒரே தண்டனை என்று சட்டமியற்றிடவில்லை.
மரணதண்டனை சட்ட பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள நாடுகள் பலவற்றிலும் கல்லெறிந்து கொல்வது போன்றவை தண்டனையாகத் தரப்படுவதில்லை. மரண தண்டனையினை ஒரு தீர்வாக ஏற்காத பெண்ணியவாதிகளும் உண்டு. எனவே குட்டையைக் குழப்ப முயலாதீர்கள். சரியாகத் தெரிந்து கொண்டு எழுதுங்கள்.இங்கு மதச்சட்டதிற்கு என்ன தேவை.
பாலியல் வன்புணர்ச்சிக்கு குற்றவியல் சட்டபடி தண்டனை தர வேண்டும். சேர்ந்து வாழ்வது குறித்து அந்தக் கணவன் -மனைவிதான் முடிவு செய்ய வேண்டும். அப்பெண் மீது தவறில்லாத போது அவரை எதற்காக தண்டிக்க வேண்டும்.
28 வயதில் 5 குழந்தைகளுடன் இருக்கும் அவரால் சுயமாக சம்பாதித்து தன்னையும், தன் குழந்தைகளையும் காப்பாற்ற முடியுமா.
முஸ்லீம் பெண்களில் கல்வி அறிவு பெற்றோர் விகிதம் ஏன் குறைவாக உள்ளது. உங்களுடைய மார்க்க அறிஞர்கள் முதலில் பெண் கல்வியினை கட்டாயமாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கட்டும், அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டாம், இரண்டு குழந்தைக்கு மேல் வேண்டாம், பலதார மணம் வேண்டாம் என்று அறிவுறுத்தட்டும்.
Posted by
wichita |
Sun Jul 03, 06:34:00 AM
கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவன் என முடிவான பின், அது என்ன ஆயுள் தண்டனை, மரண தண்டனை என்ற பாகுபாடு? ஒரு அப்பாவியையா கல்லால் அடிக்கச் சொல்கிறார்கள்?
கல்லால் அடித்துக் கொள்ளுங்கள் என்பது கூட குற்றத்தின் கடுமையை பகிரங்கப்படுத்தவே. இஸ்லாமிய நாடுகளில் கூட, இச்சட்டம் பெயரளவில் மட்டுமே இருக்கிறது. இதர நாடுகளைப்போல ஆயுள் தண்டனையும், வெகுகுறைவாக மரண தண்டனையுமே கொடுக்கப்படுகிறது.
இஸ்லாமியப் பெண்கள் கல்வியில் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. தற்போதுதான் விழிப்படைந்து வருகிறார்கள். பெண்களை கல்வி கற்கக்கூடாது என இஸ்லாம் ஒரு போதும் தடை விதிக்கவில்லை.சொல்லப்போனால் கல்வி கற்பது கட்டாய கடமை என்று மத ரீதியில் கட்டளையிடும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! இதில் ஆண்-பெண் என்ற பேதமில்லை.
இம்ரானா அப்பாவி, அநீதி இழைக்கப் பட்டவள், நியாயம் கிடைப்பதோடு கொடுமை இழைத்தவன் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றுதானே நாங்களும் சொல்கிறோம். அது ஏன் உங்கள் கண்ணில் படவில்லை? மாறாக பலதார மணம், குடும்பக் கட்டுப்பாடு என்ற அதே பழைய பல்லவி!
நீங்கள் பெண்ணுரிமையும் பேசவில்லை, மனித நேயமும் பேசவில்லை. இவற்றின் பெயரில் உங்கள் பங்குக்கு இஸ்லாத்தை விமரிசித்துள்ளீர்கள். அவ்வளவுதான்!
குற்றவாளிகளுக்கு பரிவு காட்டுபவர்கள் உங்களைப்போல் இருக்கும் வரை அத்தகைய குற்றங்களும் குறையப் போவதில்லை குற்றம் செய்தவர்களும் திருந்தப் போவதில்லை.
Posted by
நல்லடியார் |
Sun Jul 03, 08:19:00 AM
//"கல்லெறிந்து கொல்வது போன்றவற்றை தண்டனையாகக் கொள்ளும் சமூகம் நாகரிகமடைந்த சமூகம் அல்ல." - wichita //
அப்படிப்பார்த்தால், பல மாணவர்கள் அந்தத் தவறை செய்ய கூடாது என்பதற்காக பொறுப்பான ஆசிரியர் ஒருவர், தவறு செய்த மாணவனுக்குத் தரும் பெஞ்சு தண்டனை கூட அநாகரிகம்தான்.
"23 பெண்களை ஏமாற்றிக் கல்யாணம் செய்தவர் 24 -வது முறை கல்யாணம் செய்யும்போது மாட்டினார்" ங்கற மாதிரியான செய்திகள் எல்லாம் படிக்கும் போது, இவனுங்கள திருத்தவே முடியாது என்று நீங்கள் முணுமுணுத்ததில்லையா Mr.wichita?
தண்டனை எவ்வளவு மோசமாக இருக்க வேண்டும் என்று "பாதிக்கப்பட்டவரை" கேட்டால் கல்லால் அடித்துக் கொல்வதை விட இன்னும் அதிகப்படியானது எதுவும் இல்லையா என்பார் என்பது மட்டும் யதார்த்தம்.
// "குற்றவாளிகளுக்கு பரிவு காட்டுபவர்கள் உங்களைப்போல் இருக்கும் வரை அத்தகைய குற்றங்களும் குறையப் போவதில்லை குற்றம் செய்தவர்களும் திருந்தப் போவதில்லை." -நல்லடியார்//
சரியாகச் சொன்னீர்கள்!
Posted by
சர்தார் |
Mon Jul 04, 10:49:00 AM
சூப்பரான பின்னூட்டங்கள் ரொம்ப நன்றி. கட்டுரைக்கும் நன்றி.
http://www.geocities.com/shafihitayetullah/a1.html
Posted by
shafi8466 |
Mon Jul 04, 12:30:00 PM
பெரியாரின் சீடரும் பெண்ணியவாதியுமான மேடம் wichita அவர்களின் கவனத்திற்கு:
'கடுமையான குற்றங்களுக்கும் கல்லால் எறிந்து கொல்வது' பெண்ணிய வாதிகளின் பார்வையிலும் ஏற்புடையதாகயில்லை என்பது சரிதானா?
முன்னாள் உள்துறை அமைச்சர் L.K.ADVANI நாடளுமன்றத்தில் அளித்த தகவல் படி டெல்லி போன்ற 'நாகரீகமடைந்த சமூக' நகரத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 48 கற்பழிப்புகள் நடக்கின்றன. (அரை மணிக்கு ஒன்று என்ற அளவு). எனவே, L.K.A. கற்பழிப்புக்கு மரண தண்டனையை பரிந்துரைத்தார்.
கொடூர தண்டனைகளை அமல்படுத்தும் "நாகரீகமடையாத" நாடுகளிலும் கற்பழிப்புகள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஒரு நாளைக்கு 48 என்ற அளவில் அல்ல. (48 நாட்களுக்கு ஒன்று அல்லது அதற்கு குறைவாகவோ). ஆகவே, கொடூரத் தண்டனைகளின் நோக்கம் புலப்படத்தானே செய்கிறது.
மேலும் பலதார மணம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல்:
M.G.R அவர்கள் முதல்வராக இருந்த சமயத்தில் சட்டமன்றத்தில் பேச்சு 'மக்கள் தொகைப்பெருக்கம் பற்றி இருக்கும்போது முதல்வர் தன்னுரையில் 'முஸ்லிம்களின் பலதார மணமும் இதற்கு ஒரு காரணம் என்று குறிப்பிட்டாராம்.
அப்போது அவையில் இருந்த மறைந்த அப்துல் சமது (முஸ்லிம் லீக் தலைவர்) எழுந்து சொன்னாராம்:
"இங்கு நானும் அப்துல் லத்தீஃப் உள்ளிட்ட முஸ்லிம் உறுப்பினர்களும் எத்தனை மனைவியரோடு வாழ்கிறோம் என்பதும் மற்ற மதத்தைச் சேர்ந்த நமது முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் (திரு. மு.க) இன்னும் நமது அமைச்சர் பெருமக்களும் (காளி முத்து) எத்தனை மனைவியரோடு வாழ்கிறார்கள் என்பதையும் சிந்திது உண்மை உணருங்கள்" என்று சொன்னாராம்.
அதாவது, மதரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தான் மற்றவர்களை ஒப்பு நோக்கும் போது குறைந்த சதவீத அளவில் பலதார மணம் புரிந்திருக்கிறார்கள் என்பதை இந்திய அரசின் புள்ளி விவரஙKளும் ஒத்துக்கொள்கின்றன.
'நீதியாக நடக்க இயலாது என்று பயந்தால் ஒரு மனைவியோடு போதுமாக்கிக் கொள்ளுங்கள்' என்கிற குர்-ஆனின் போதனையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
மேலும் இப்படிச் சொல்கிற ஒரே வேதபுத்தகம் 'குரான்' மட்டுமே!
(பலதார மணம் அனுமதிக்கப்பட்டதன் பிண்ணனி காரணங்கள் விரிவாக பார்க்கப்படவேன்டியதால் அவை பிறகு).
இப்பின்னூட்டத்தின் நோக்கம் 'பாவம் ஓரிடம் பழி வேறிடம்' என்பதை உணர்த்துவதற்கே! நன்றி!
Posted by
MALLIGA-YASMIN |
Tue Jul 05, 04:58:00 AM
மல்லிகா யாஸ்மின் அவர்களே, இம்ரானா அவர் கணவருடன் வாழக்கூடாது என்றளிக்கப்பட்ட தீர்ப்பு சரியா? அவர் தன் கணவனுடன் வாழக்கூடாது என்று கூற பஞ்சாயத்துக்கு என்ன உரிமை? அதாவது திருமணமானப் பெண்ணை ஒருவன் வன்புணர்ச்சி செய்தால் அவள் திருமணம் செல்லாததாக ஆகி விடுமா? என்ன இதெல்லாம்?
உங்கள் பெயரிலிருந்து நீங்கள் பெண் என்று ஊகிக்கிறேன். அப்படியில்லையென்றாலும் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். இங்கு நீங்கள் பெண்ணா இல்லையா என்பது பற்றி ஏன் கேட்டேன் என்றால் பலருக்கு இஸ்லாமியத் திருமண சட்டங்கள் பெண்களுக்கெதிராகவே உள்ளது என்று தோன்றுகிறது. ஆகவே கேட்டேன், தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
மாமனாருக்கு கல்லடி தண்டனையும் குறைவுதான் என்பது என் தனிப்பட்டக் கருத்து என்பதையும் இங்கே கூறி விடுகிறேன்.
மற்றப்படி தலாக்கிலிருந்து ஆரம்பித்து ஒரு ஆண் சாட்சிக்கு இரு பெண் சாட்சிக் கணக்குகள் எல்லாமே பெண்களுக்கெதிரானதாகத்தான் தோன்றுகின்றன என்பதையும் நான் கூறி விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Posted by
dondu(#4800161) |
Tue Jul 05, 07:19:00 AM
மாமனாருக்கு கல்லடி தண்டனையும் குறைவுதான் என்பது என் தனிப்பட்டக் கருத்து என்பதையும் இங்கே கூறி விடுகிறேன்
நன்றி டோண்டு ராகவன், நீங்களாவது மனசாட்சியுடன் ஒப்புக் கொண்டீர்களே!
/தலாக்கிலிருந்து ஆரம்பித்து ஒரு ஆண் சாட்சிக்கு இரு பெண் சாட்சிக் கணக்குகள் எல்லாமே பெண்களுக்கெதிரானதாகத்தான் தோன்றுகின்றன என்பதையும் நான் கூறி விடுகிறேன்.//
தலாக் பற்றிய அபூமுஹையின் விளக்கத்தையும், இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு சமமா? என்ற எமது பதிவையும் பாருங்கள். ஓரளவு விளக்கியுள்ளோம் என்றே நினைக்கிறேன்.
இம்ரானாவைப்பற்றி ஊடகங்களில் வருவதை வைத்தே நாம் விவாதிக்கிறோம். அத்தகைய சம்பவம் உண்மையில் நிகழ்ந்திருப்பின், அதற்கான இஸ்லாமிய நிலை என்னவென்றும் குர்ஆன், ஹதீஸ் மூலம் சொல்லியுள்ளோம்.
சமீபத்திய செய்திகளில் இம்ரானா கற்பழிக்கப் படவே இல்லையென்றும், AIMPLB மற்றும் தேவ்பந்த் அவ்வாறு அநீதியான தீர்ப்பு வழங்கவில்லை எனவும் அறிய முடிகிறது. உண்மை வெளிவந்தால், ஊடகங்களின் முகமூடி கிழியலாம். அதுவரை நாமும் எந்த முடிவுக்கும் வர இயலாது!
எதற்கும் கீழ்கண்ட இணைய செய்திகளையும் பாருங்கள்
http://www.arabnews.com/?page=5§ion=0&article=66380&d=4&m=7&y=2005
http://timesofindia.indiatimes.com/articleshow/1158204.cms
http://www.arabnews.com/?page=4§ion=0&article=66373&d=4&m=7&y=2005
Posted by
நல்லடியார் |
Tue Jul 05, 09:05:00 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் 1.07.2005 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
//உத்தரப்பிரதேசம் மாநிலம் முஸாபர் நகரைச் சாhந்தவர் நூர் இலாஹி. இவருடைய மனைவி இம்ரானா.வயது 28.இம்ரானாவை அவரது கணவனின் தந்தை அலி முஹம்மது கற்பழித்து விட்டார்.
இம்ரானா கணவருடன் சேர்ந்து வாழும் உரிமையை இழந்து விட்டார். எனவே அவர் கணவருடன் சேர்ந்து வாழக் கூடாது என்று உ.பி. மாநிலம் தேவ்பந்த் நகரில் உள்ள தாருல் உலூம் கல்வி நிறுவன மார்க்க அறிஞர்கள் உத்தரவு ஃபத்வா பிறப்பித்தனர்.
இந்தக் கருத்தை அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியமும் அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பு இஸ்லாத்திற்கு எதிரானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இஸ்லாமிய மார்க்கத்தில் எந்த ஒரு தீர்ப்பு அளிப்பதாக இருந்தாலும் திருக்குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் கொண்டு, அல்லது முஹம்மது நபியின்; வழிகாட்டுதலை ஆதாரமாகக் கொண்டு தீhப்பளிக்க வேண்டும். இவ்விரு மூல ஆதாரங்கள் இல்லாமல் அளிக்கப்படும் தீர்ப்பு ஒருக்காலும் இஸ்லாமியத் தீர்ப்பாக ஆக முடியாது.
தேவ்பந்த் நகரில் உள்ள தாருல் உலூம் மதக் கல்விக் கூடம் அளித்த மேற்கண்ட தீர்ப்பு திருக்குர்ஆன் மற்றும் நபிவழியை ஆதாரமாகக் கொண்டு வழங்கப்படவில்லை. மாறாக அது திருக்குர்ஆனுக்கும் முஹம்மது நபியின் வழிகாட்டுதலுக்கும் முரணானது.
மருமகளை மாமனார் கற்பழித்தால் மருமகளுக்கும் அவரது கணவருக்கும் இடையே உள்ள திருமண உறவு நீங்கி விடும் என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பொன்மொழி தொகுப்புகள் எதிலும் இவ்வாறு கூறப்படவே இல்லை என்பதை முஸ்லிம்களும் மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தாருல் உலூம் மார்க்க அறிஞர்கள் தங்களின் தீர்ப்புக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் வாதங்கள் யாவும் கேலிக் கூத்தானவை. ஒரு முஸ்லிம் யாரையல்லாம் திருமணம் செய்யக் கூடாது என்று திருக்குர்ஆன் பட்டியலிடுகிறது.
உங்கள் தந்தையின் மனைவியை நீங்கள் மணக்கக் கூடாது.(திருக்குர்ஆன் 4:22)
உங்கள் மகனின் மனைவியை நீங்கள் மணக்கக் கூடாது.(திருக்குர்ஆன் 4:23)
உங்கள் மனைவியின் தாயை நீங்கள் மணக்கக் கூடாது.(திருக்குர்ஆன் 4:23)
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்தக் கட்டளைகள் நாகரீகத்தைக் கடைபிடிக்கும் அனைவரும் ஏற்றுக் கொள்கிற சட்டங்கள் தான். பெரும்பாலான மனிதர்கள் இந்தக் கோட்பாட்டை ஏற்றுச் செயல்படுகின்றனர்.
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மூன்றும் திருமணம் செய்வது பற்றிப் பேசுகின்ற கட்டளைகளாகும். மாமனார் மருமகனிடம் விபச்சாரம் செய்வது பற்றியோ மருமகள் மாமனாரிடம் விபச்சாரம் செய்வது பற்றியோ அல்லது கற்பழிப்பது பற்றியோ இவ்வசனங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசவில்லை.
மருமகளை மாமனார் கற்பழித்தவுடன் அந்த மருமகள் தனது கணவருக்குத் தாயாக ஆகிவிட்டாள்; எனவே இனிமேல் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று தாருல் உலூம் அறிஞர்கள் வாதிடுகின்றனர்.
மேற்கண்ட தாருல் உலூம் அறிஞர்கள் இதை மட்டும் கூறவில்லை. மருமகளை ஆசையுடன் மாமனார் தொட்டாலே அவள் கணவனுடன் வாழ முடியாது என்பதும் இவர்களின் கொள்கையாகும்.
விபச்சாரம் வேறு, திருமணம் வேறு என்ற சாதாரண உண்மையைக் கூட விளங்காதவர்களாக இவர்கள் உள்ளனர். இஸ்லாம் கூறாத ஒன்றை இஸ்லாத்தின் பெயரால் கூறுகின்றனர்.
திருமணம் பற்றி கூறும் வசனத்தை விபச்சாரத்துடன் தொடர்பு படுத்துவதை விட மடத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.
கணவன் இறந்து விட்டால் அவனது சொத்தில் மனைவிக்கு வாரிசுரிமை உண்டு என்பது இஸ்லாத்தின் சட்டம். மாமனார் மருமகளை கற்பழித்தால் மாமனாரின் சொத்தில் மருமகளுக்கு வாரிசுரிமை உண்டு என்று இவர்கள் கூற மாட்டார்கள். நடந்தது விபச்சாரம் தானே தவிர திருமணம் அல்ல என்று இவர்களே காரணம் கூறுவார்கள்.
ஒருவன் இன்னொருவனின் மனைவியை மணக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் சட்டம். ஒருவனது மனைவியை இன்னொருவன் கற்பழித்து விட்டால் அவனுக்கு அவள் மனைவியாகி விட்டாள் என்று கூற முடியுமா? கற்பழிக்கப்பட்ட எந்தப் பெண்ணின் வாழ்க்கையையும் அதோடு முடிந்து விடும் என்று தீர்ப்பளிப்பது எத்தகைய அநீதி என்பதைச் சிந்தித்து பார்க்க வேண்டும்.
கணவன் காணாமல் போய்விட்டால் அவனது மனைவி 90 வருடங்கள் காத்திருந்து மறுமணம் செய்து கொள்ளலாம் என்று கிறுக்கத்தனமான தீர்ப்பை அளித்தவர்கள்தான் தேவ்பந்த் தாருல் உலூம் அறிஞர்கள். 90 வருடங்களுக்கு மேல் ஒரு பெண்ணுக்கு மறுமணம் எதற்கு என்ற சிந்தனை கூட இல்லாமல் அபத்தமான தீர்ப்பை கடந்த காலங்களில் இவர்கள் அளித்துள்ளனர்.
ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறி அடியோடு திருமணத்தை ரத்து செய்ய இயலாது என்று முஹம்மது நபி அறிவித்திருந்தும் அற்கு எதிராக ரத்து செய்ய இயலும் என்றும் கடந்த காலங்களில் இவர்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்.
இவர்களின் தெளிவற்ற சிந்தனைக்கு மேற்கண்ட தீர்ப்புகள் தகுந்த உரைகல்லாக அமைந்துள்ளன.
இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். மேற்கண்ட நிகழ்ச்சியில் மருமகளும் மாமனாரும் விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடவில்லை. மருமகளின் விருப்பத்துக்கு எதிராக கற்பழிப்புத் தான் நடந்துள்ளது.
ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் விரும்பாமல் திணிக்கப்பட்ட எதற்காகவும் அவர்கள் குற்றம் பிடிக்கப் படமாட்டார்கள்.
நிர்பந்தப்படுத்தப்படும் ஒருவன் 'கடவுளே இல்லை' என்று வாயால் மட்டும் கூறினால் கூட அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேற மாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (திருக்குர்ஆன் 16:106)
ஒரு பெண் பலவந்தமாகக் கற்பழிக்கப்ட்டால் அவளைப் பொருத்த வரை அவளது கற்புக்கு எந்தக் கேடும் நேரிடவில்லை. அவளைக் கற்பழித்தவன் தான் கற்பிழந்துள்ளான். அவளைப் பொருத்தவரை எதுவுமே நடக்கவில்லை எனும் போது அவளது கணவருடன் வாழ்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று கூறுவது இவர்களது மூளை வறட்சிக்கு நல்ல ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
மனித நாகரீகத்தை வலியுறுத்தும் இஸ்லாத்திற்கு எதிரான இத்தீர்ப்பை இந்திய முஸ்லிம்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இவர்களது இத்தீர்ப்பை எதிர்த்து மாநில அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவுள்ளோம்.//
Source from
Posted by
NET Fan |
Wed Jul 06, 04:08:00 AM
இத்தீர்ப்பு பற்றி முஹம்மது கான் பாகவி அவர்களின் விளக்கம் இன்றைய தினமணியில் வெளிவந்துள்ளது. அப்பதிவை குற்றவாளிக்கு பரிசு! என்ற பதிவில் இணைத்துள்ளேன். நன்றி!
Posted by
நல்லடியார் |
Wed Jul 06, 05:16:00 AM
இம்ரானா விவகாரம்
திருமண பந்தம் முறியுமா?
-ஜன்னாமைந்தன்
உத்தரபிரதேச மாநிலம் முஜாபர்பூர் அருகில் உள்ள சர்தவால் கிராமத்தைச் சேர்ந்த இம்ரானா என்ற 28 வயது பெண்னை அவளது மாமனார் அலி முஹம்மது பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல் லப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சர்தவால் கிராம பஞ்சாயத்தும், தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் அரபிக் கல்லூரியும் இது குறித்து தெரிவித்த கருத்துகள் என்று ஊடகங்களில் வந்த செய்திகள் இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளன. இந்த விவகாரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாரதீய ஜனதா கட்சி பொது சிவில் சட்டம் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி யுள்ளது.
இம்ரானா விவகாரத்தில் பல உண்மைகள் மூடி மறைக்கப் பட்டுள்ளன. சரியான புரிதல் இன்றி பல தரப்பட்டவர்களும் இந்த விவகாரத்தில் கருத்துக் கூறி மக்களை குழப்பியுள்ளனர். இந்த குழப்பத்திற்கு செய்தி ஊடகங்களும் முக்கிய காரண மாக விளங்குகின்றன.
சர்தவால் கிராமத்தைச் சேர்ந்த அலி முஹம்மதின் மகன் நூர் இலாஹிக்கும் இம்ரானா விற்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளில் ஒன்று பேச்சு திறனும், கேட்கும் திறனும் இழந்த குழந்தையாகும்.
ஜுன் மாதம் முதல் வாரத்தில் நள்ளிரவில் தனது கணவர் வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருந்த போது மாமனார் அலி முஹம்மது தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தாக இம்ரானா குற்றஞ்சாட்டி யுள்ளார். இதனைத் தொடர்ந்து சர்தவால் வந்த அவரது சகோதரரும் குடும்பத்தி னரும் அலி முஹம்மதை அடித்து உதைத்தனர். இந்த விவகாரத்தை அவர்கள் கிராமத்தைச் சேர்ந்த சில பெரியவர்களிடமும், உறவினர் களிடமும் எடுத்துச் சென்றனர். அவர்கள் இம்ரானா தனது மாமனாருடன் உடல் உறவு கொண்டதால் அவரது திருமண பந்தம் முறிந்து விட்டது என்றும், 7 மாதம் 10 நாட்கள் அவர் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு அவர் மாமனாரையே மணமுடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பு அபத்தமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த தீர்ப்பு சில தனி நபர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பே தவிர அந்த ஊர் கிராம பஞ்சாயத்தினால் வழங்கப்பட்டது அல்ல. மேலும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையிலும் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. அந்த அடிப்படையில் தீர்ப்பு கூறும் அவையிடமும் இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு ஏழை குடும்பத் தில் நடந்த இந்த விவகாரத்தை மோப்பம் பிடித்த உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியான அபி தக் இதைப் பற்றிய செய்தியை பரபரப்பாக வெளி யிட்டது. கிராம பஞ்சாயத், ஷரியத் சட்டத்தின் படி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் பொய் செய்தி பரபரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப் படும் விவகாரமாக செய்தி ஊடகங்களால் ஊதிப் பெரிதாக் கப்பட்டது.
பாலியல் பலாத்காரத்திற்கு இலக்காகும் பெண்களின் பெயர்களை செய்தி ஊடகங்கள் வெளியிடுவதற்கு சட்ட ரீதியான தடை உள்ளது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இம்ரானா பெயரைக் குறிப் பிட்டே அனைத்து மீடியாக் களும் செய்திகளை வெளி யிட்டன.
இந்த விவகாரம் செய்தி ஆன பின்பே உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகள் இம்ரானாவை புகார் கொடுக்கும்படி கூறினார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த ஜுன் 13ம் தேதி இம்ரானா சர்தவால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். சம்பவம் நடந்து 8 நாட்கள் கழித்து இந்த புகார் பதிவுச் செய்யப்படுவதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜுன் 16ம் தேதி அலி முஹம்மது கைது செய்யப்பட்டார். ஜுன் 20ம் தேதி பாலியல் பலாத்காரம் நடைபெற்றதா என்பதை அறிவதற்காக இம்ரானா மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். முஜாபர்நகர் பெண்கள் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சோதனைக்குப் பிறகு, பாலியல் பலாத்காரம் நடைபெற்றது குறித்து உறுதியாக கூற முடியாது என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இம்ரானா விவகாரத்தில் ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் உண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா என்று ஆராயும் போது, அவரது விவகாரத்தை சுட்டிக்காட்டி எந்தவொரு அரபிக்கல்லூரியோ ஷரீஅத் நீதிமன்றமோ பத்வா வழங்கவில்லை என்பது தெரிகின்றது. முதலில் இந்த விவகாரத்தில் கருத்துக் கூறிய கிராம பெரியவர்களின் கூட்டத்தை ஷரீஅத் நீதிமன்றம் (இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் அமைப்பு) என்று கிஞ்சிற்றும் கருத இயலாது. இந்த விவகாரம் தாருல் உலூம் தேவ்பந்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற போது இது குறித்து விசாரித்து தீர்ப்பு பெற உள்ளூர் ஷரீஅத் நீதிமன்றத்தை அணுகுமாறு அது கூறியது. அந்த உள்ளூர் ஷரீஅத் நீதிமன்றமோ இம்ரானா விவகாரத்தை இன்னும் விசாரிக்கவே தொடங்கவில்லை. இதற்கிடையே தான் தேவ்பந்த் அரபிக் கல்லூரி இம்ரானா விவகாரத்தில் தீர்ப்பு வழங்கி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. தாங்கள் இம்ரானாவின் பெயரைக் குறிப்பிட்டு அவரது விவகாரம் குறித்து பிரத்யோகமாக பத்வா எதனையும் வழங்கவில்லை என்று தாருல் உலூம் தேவ்பந்தின் செய்தித்தொடர்பாளர் ஆதில் சித்தீக்கி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் பத்வா துறையின் துணைத் தலைவரிடம் மாமனாரால் கற்பழிக்கப்பட்ட மருமகளின் திருமண பந்தம் முறித்து விடுமா என்று கேட்டதாகவும் அதற்கு ஆம் என்று கூறியதை பத்வா என கருதி செய்தி பரப்பப்பட்டுள்ளது என்றும் சித்தீக்கி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இம்ரானாவின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், தாருல் உலூம் தேவ்பந்த் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பத்வா, மாமனாரால் பாலியல் பலாத்காரத்திற்கு இலக்கான பெண்ணின் திருமண பந்தம் முறிந்து விடும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
தாருல் உலூம் தேவ்பந்த் வழங்கிய இத்தீர்ப்பு சரியானது தானா என்று நாம் சென்னையில் உள்ள இப்னு கையிம் ஆய்வு மற்றும் வழிகாட்டல் மையத்தைச் (ஐ.ஆர்.ஜி.சி) சேர்ந்த டாக்டர் ஆர். கே. நூர்முஹம்மது மதனி மற்றும் தாருல் ஹுதா வெளியீட்டகத்தின் நெறியாளர் முஃப்தி உமர் ஷரீப் காசிமி ஆகியோரிடம் கருத்துக் கேட்டோம். ஒரு பெண்ணுடன் அவளது மாமனார் பலாத்காரமாகவோ அல்லது இசைவான நிலையிலோ பாலியல் உறவுக் கொண்டாலும் அந்த பெண்ணின் திருமண பந்தம் முறியாது என்பது தான் திருக்குர்ஆன் மற்றும் நபிவழி அளிக்கும் தீர்ப்பாகும். விபச்சாரம் அல்லது பாலியல் பலாத்காரம் முதலிய குற்றங்களுக்கு மார்க்கம் தண்டனையைத் தான் விதித்துள்ளதே தவிர, இந்த குற்றங்கள் நிகழ்வதின் விளைவாக அதில் தொடர்புடையவர்களின் திருமணப் பந்தம் தானாகவே முறிந்து விடும் என்று இஸ்லாம் விதியாக்கவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள், (பேட்டி தனியாக இடம் பெற்றுள்ளது),
சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்பு துறையின் நெறியாளர் மவ்லவி முஹம்மது கான் பாகவியிடம் இது குறித்து கருத்துக் கேட்டோம். தாருல் உலூம் தேவ்பந்த் இம்ரானா தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்ள இயலாது. ஹனபி சிந்தனைப்பிரிவு (மத்ஹப்) அடிப்படையில் அவர்கள் தீர்ப்பு கூறியுள்ளார்கள். ஆனால் ஷாபி, மாலிகி மற்றும் ஹன்பலி சிந்தனைப் பிரிவுகளில் திருமணப் பந்தம் முறியாது என்றே கூறப்பட்டுள்ளது. திருமணப் பந்தம் முறியாது என்பதே சரியான முடிவாகும் என்று குறிப்பிட்டார். (பேட்டி தனியாக இடம் பெற்றுள்ளது)
தாருல் உலூம் தேவ்பந்த் அளித்துள்ள தீர்ப்பை அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியமும் ஆதரிப்பதாக பரவலாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மை தானா என்று வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் எஸ். கியூ. ஆர். இல்யாசிடம் வினவினோம். இம்ரானா விவகாரத்தில் தனியார் சட்ட வாரியம் எந்தவொரு கருத்தையும் இது வரை கூறவில்லை. இது குறித்து விவாதித்து முடிவெடுக்க விரையில் வாரியத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. வாரியத்தின் இரு உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தேவ்பந்த் தீர்ப்பை ஆதரித்துள்ளார்கள். ஆனால் அதனை தனியார் சட்ட வாரியத்தின் கருத்தாக கருத முடியாது.
இம்ரானா தொடர்பான சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு நேரில் சென்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் உண்மை அறியும் குழுவில் டாக்டல் இல்யாசும் இடம்பெற்றிருந்தார். இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் பாலியல் பலாத்காரச் சம்பவம் நடந்திருக்குமா என்பது சந்தேகமே என்று அவர் பேட்டி அளித்திருந்தார். நள்ளிரவில் நடைபெற்ற சம்பவம் பற்றி நீங்கள் எந்த அடிப்படையில் அது நடந்திருக்காது என்று சந்தேகப் படுகின்றீர்கள் என்று நாம் வினவினோம். சம்பவம் நடைபெறுவதாக கூறப்படும் இம்ரானா வசித்த வீட்டிற்கு சென்றிருந்தோம். அது 100 சதுர அடி மட்டுமே கொண்ட ஒரு சிறிய வீடு. சம்பவம் நடைபெற்ற வீட்டில் ஐந்து பெரியவர்களும், ஏழு குழந்தைகளும் இருந்துள்ளார்கள். இவர்கள் யாருக்குமே தெரியாமல் அந்த சம்பவம் அந்த சிறிய வீட்டில் நடந்திருக்க வாய்ப்பில்லை. இம்ரானாவிற்கு வயது 28. அவரது மாமனாருக்கோ வயது 65. பலாத்காரம் செய்யும் போது இம்ரானா கத்தியிருக்க வேண்டும், முரண்டு பிடித்திருக்க வேண்டும். அது வீட்டில் இருந்த மற்றவர்களை விழிக்க செய்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இது குறித்து நாம் திரும்ப திரும்ப இம்ரானாவிடம் கேட்ட போது அவர் திருப்திகரமான பதிலைத் தரவில்லை. தனது வாயை கைகளால் பொத்தி, தனது இருகைகளை கட்டி விட்டு அலி முஹம்மது பலாத்காரம் செய்ததாக திரும்ப திரும்ப கூறினார். துப்பாக்கியை காட்டி மிரட்டி தான் பலாத்காரம் செய்ததாக இம்ரானா கூறியுள்ளாரே என்று இல்யாசிடம் வினவினோம். துப்பாக்கியை காட்டியதற்கு எந்த ஆதாரமும் இல்லை, அலி முஹம்மதை கைது செய்த காவல் துறையினர் எந்தவொரு துப்பாக்கியையும் கைப்பற்ற வில்லை என்று பதில் அளித்தார் இல்யாஸ். பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக ஒன்றும் சொல்ல மாட்டீர்களா என்று நாம் கேட்ட போது, நாம் எந்த முடிவிற்கும் வரவில்லை. செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அனைத்து தரப்பினரையும் விசாரித்து விட்டு தமது கருத்துகளை வெளியிட வேண்டும். ஆனால் இம்ரானா விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக நடந்துள்ளார்கள். இம்ரானாவின் மாமனார் அலி முஹம்மது அவர்கள் வாழ்ந்து வரும் வீட்டை விற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனை இம்ரானாவும் அவரது கணவரும் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனை இம்ரானாவின் மாமியாரும் ஒத்துக் கொள்கிறார். பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். இந்த விவகாரத்தில் தனது மாமனாரை பழித் தீர்ப்பதற்காக கூட பலாத்காரம் என்று கூறியிருக்கலாம். இருப்பினும் நீதிமன்றம் இது குறித்து விசாரித்து தீர்ப்பு அளிக்கும் முன்பு நாம் ஏன் அவசரப்பட்டு முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது கருத்து என்றார் இல்யாஸ். இம்ரானா வீட்டிற்கு அருகில் வாழும் டாக்டர் முஹம்மது ஹனிப் தியாகியும், இது அடிப்படையில் ஒரு சொத்து விவகாரம். வீட்டை விற்பனைச் செய்யலாமா என்பது குறித்து இம்ரானா மற்றும் அவரது கணவர் ஒரு பக்கமும், மாமனாரும் மாமியாரும் எதிர்பக்கமும் இருந்தார்கள். மாமனாரை இம்ரானா சிக்க வைத்துள்ளார் என்று கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் கூறுகின்றது.
இம்ரானா விவகாரத்தை காரணம் காட்டி பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்தை அத்வானி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளது அவர்களது பாசிச போக்கின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டு வருவதால் மாமனார்கள் மருமகள்களை பாலியல் பலாத்காரத்திற்கு இலக்காக்குவது நின்றா விடும்? இம்ரானா விவகாரத்தில் நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவது ஒரு கிரிமினல் குற்றமே. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு பின் நாட்டின் பொதுவான கிரிமினல் சட்டப்படி தண்டிப்பதற்கு எந்தவொரு முஸ்லிமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தேவ்பந்த அரபிக் கல்லூரி வழங்கியுள்ள தீர்ப்பை கட்டாயமாக பின்பற்றித் தான் ஆக வேண்டிய நிர்பந்தம் இம்ரானாவிற்கு கிடையாது. அவரும் அவரது கணவரும் விரும்பினால் தொடர்ந்து இணைந்து வாழ்வதற்கு எந்த சட்டமும் குறுக்கே நிற்கவில்லை. நாட்டில் உள்ள பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகள் இம்ரானா விவகாரத்தில் தேவ்பந்த் அரபிக் கல்லூரி வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. எனவே இந்த விவகாரத்தை காரணம் காட்டி பொது சிவில் சட்டம் பற்றி பேசுவது நாட்டின் பன்முகத்தன்மையை சிதைப்பதாகவே இருக்கும்
இம்ரானா விவகாரத்தில் பல தரப்பினரும் முழுமையாக ஆய்வு செய்யாமல் குற்றம் இழைத்துள்ளார்கள். இவர்களில் பிரதான குற்றவாளிகள் தாருல் உலூம் தேவ்பந்த் சார்பாக தீர்ப்பு அளித்தவர்களும், செய்தி ஊடங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். இவர்கள் அனைவரது பொறுப்பற்ற அவசர கோலச் செயல் ஒரு பெண்ணின் வாழ்வை இருள் மையமாக்கியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்திற்கே தேவையில்லாமல் ஒரு களங்கத்தை ஏற்படுத்த முயன்றுள்ளது.
நன்றி: மக்கள் உரிமை
http://www.tmmkonline.org/tamil/other_news/120imrana.HTM
Posted by
NET Fan |
Wed Jul 13, 12:29:00 PM
இம்ரானா விடயத்தை நிறையப் பேசியாகி விட்டது. நடுநிலையாளர்கள் அனைவரும் ஒத்த கருத்துக்கு வந்திருக்கிறார்கள்.
1. இம்ரானாவின் விருப்படி தொடர்ந்து வாழ வேண்டும்.
2. குற்றவாளிக்கு தண்டனை வேண்டும்.
3. முன்பு சொன்ன தீர்ப்பு தவறு.
அவ்வளவே. இதுக்கு மேல் அங்கே விமரிசிப்பதற்கு ஒன்றுமில்லை.
// இஸ்லாத்தினை விமர்சனம் செய்பவர்கள் இரு வகையாக இணையத்தில் இன்று:
1). மனதில் துவேஷம் கொண்டு இஸ்லாத்தை தாக்கி எழுதுவதையே 'இலட்சியமாக' வைத்துள்ளவர்கள்.
2). இஸ்லாம் பற்றியும் அதன் வரலாற்றையும் முறையாக விளங்காமல் (அ) தவறாக விளங்கியிருப்பதால் 'சில விமர்சகர்களின் ''வலை'' யில் விழுந்து தவறாக எழுதுபவர்கள்.
உங்களின் விளக்கங்கள் இரண்டாம் பிரிவினருக்கு வெகுவாகப் பயன் தரத்தக்கது. //
பாபு, முதலாம் நபர்களைப் பற்றி நானொன்றும் சொல்லப் போவதில்லை. காரணம் அவர்கள் செய்வது தவறு. அவர்களை என்ன சொல்லியும் திருந்தப் போவதில்லை. அவர்களை உதாசீனப் படுத்துவதே நன்று.
இரண்டாமணியினர். என்றைக்குமே கற்றது கைமண்ணளவு. நமக்குத் தெரிந்த விடயங்களை வைத்துக் கொண்டு அவற்றில் எது சரி அல்லது தவறு என்று சொல்கின்ற உரிமை எவருக்கும் உண்டு. மேலும் விவரங்கள் தெரியும் பொழுது கருத்துகள் மாறலாம். இவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. காரணம் முதலாமவர் இல்லாத எல்லாருமே இரண்டாவது வகையிலுள்ளவர்கள்.
இவர்கள் தவறான முடிவுக்கு வந்திருந்தால், அவர்களுக்குத் தேவையான தகவல்களை கொடுக்க வேண்டியது நடுநிலையாளர் கடமையாகும். இஸ்லாம் என்றல்ல, இந்து மதத்தைத் தவறாக விமரிசிக்கும் பொழுதும் இவர்கள் கருத்துக் கூறத்தான் செய்வார்கள். ஆகையால் "வலையில் விழுந்து" என்கின்ற சொற்கள் அதிகமாகத் தெரிகின்றன. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.
Posted by
G.Ragavan |
Thu Jul 14, 01:14:00 AM
ராகவன் அண்ணன் சொல்வது உண்மைதான். விளக்கம் வேண்டுவோர் கடைசி வரை தேடிக் கொண்டே இருப்பர். நமது தேடல்கள் ஓயும்போது, சிந்தனையும் ஓய்ந்து விடும்.
பாபு அவர்கள், தவறான அர்த்ததில் சொல்லியிருப்பார் என நான் நினைக்கவில்லை.
சகோதரர் ராகவன், முதல் வகை துவேஷக்காரர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் உங்கள் போன்றோர் விலகி இருக்கக் கூடாது. தவறு எனும் பட்சத்தில் தயங்காமல் கண்டிக்க வேண்டும். இதை முஸ்லிம் பெயரில் நாம் கண்டித்தால் மீண்டும் மத துவேஷமாகத்தான் திசை திருப்புவார்கள். அதுவே நீங்கள் செய்யும் போது அத்தகைய காரணங்கள இல்லை. என்ன சொல்வது சரிதானே?
Posted by
நல்லடியார் |
Thu Jul 14, 01:55:00 AM
உண்மைதான் நல்லடியார். நானும் சில திரிகளின் கடுமையாகவே சொல்லியிருக்கிறேன். இம்ரானா தொடர்பான வலைப்பூப் பதிவுகளில் இதை மதப் பிரச்சனையாகப் பார்க்காமல் கிரிமினல் பிரச்சனையாகப் பார்க்கச் சொல்லி எழுதியிருக்கிறேன். அதே போல மற்றொரு திரியில் ஒரு இஸ்லாமிய அன்பர் முதலாம் வகையினர் போல செய்தியிட்ட பொழுதும் சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான் செய்ய வேண்டும். அடுத்தவர் தரத்திற்கு நாம் தாழலாகாது.
Posted by
G.Ragavan |
Thu Jul 14, 05:32:00 AM
பின்னூட்டிய அனைவருக்கும் நன்றிகள்!
இரண்டு குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என்று wichita அவர்கள், குடும்பக் கட்டுப்பாடு பற்றி இங்கே வலியுறுத்திருக்கிறார். வறுமையை ஒழிப்பதற்கு குடும்பக் கட்டுப்பாடு மிக அவசியம் என்பதையும் கோடிட்டு சொல்லியிருக்கிறார்.
வறுமைக்குக் காரணம் மக்கள் தொகை அல்ல என்பது, மக்கள் தொகை அதிமான இன்றைய காலத்தில் உணவுப் பொருட்கள் மிகத் தாராளமாகவே கிடைத்து கொண்டிருப்பது நிரூபிக்கிறது. குடும்பக் கட்டுப்பாடு செய்தால் வறுமை நீங்கிவிடும் என்பது போலிப் பிரச்சாரம் என்பதை விளங்கலாம்.
இஸ்லாம் தற்காலிகக் கருத்தடையை அனுமதித்து, நிரந்தரமான கருத்தடையை அனுமதிக்கவில்லை! அதிலும் வறுமைக்காக கருத்தடை செய்வதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ள வில்லை!
வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது மிகப்பெரிய குற்றமாகும். (அல்குர்ஆன், 17:31, 6:151)
இந்த இறை வசனத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் முஸ்லிம்கள்.
ந. ராகவன் அவர்களின்,
//*இஸ்லாமியத் திருமண சட்டங்கள் பெண்களுக்கெதிராகவே உள்ளது என்று தோன்றுகிறது.*//
இஸ்லாமியத் திருமணச் சட்டங்களில் பெண்களுக்கு என்ன குறைகள் இருக்கின்றது என்பதை விளக்கி எழுதினால் அது விளங்கவும் - விளக்கவும் தோதாக இருக்கும்.
இம்ரானா விஷயத்தில் நடுநிலையாகச் சிந்தித்த கோ.ராகவன் அவர்களுக்கு மீண்டும் நன்றி!
இம்ரானாவின் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் பலாத்காரம் நடந்த நிகழ்வு அல்ல என்று இப்போது வேறு செய்திகள் தெரிவிக்கின்றன. எது உண்மை? என்பது புதிராகத்தான் இருக்கிறது. தகவல்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுபவர்கள் அதை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிட்டால் நல்லது. ஊடகங்களின் நம்பிக்கையின் தரங்கள் பற்றி சந்தேகிக்கும் நிலையில் இம்ரானா பற்றியத் திரிக்கப்பட்ட செய்திகள் மேலும் ஒரு கரும்புள்ளி.
//*இம்ரானா விவகாரத்தில் பல தரப்பினரும் முழுமையாக ஆய்வு செய்யாமல் குற்றம் இழைத்துள்ளார்கள். இவர்களில் பிரதான குற்றவாளிகள் தாருல் உலூம் தேவ்பந்த் சார்பாக தீர்ப்பு அளித்தவர்களும், செய்தி ஊடங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். இவர்கள் அனைவரது பொறுப்பற்ற அவசர கோலச் செயல் ஒரு பெண்ணின் வாழ்வை இருள் மையமாக்கியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்திற்கே தேவையில்லாமல் ஒரு களங்கத்தை ஏற்படுத்த முயன்றுள்ளது.*//
இதற்கு யார் பொறுப்பு..?
Posted by
அபூ முஹை |
Fri Jul 15, 11:05:00 AM
//முறையாக விளங்காமல் (அ) தவறாக விளங்கியிருப்பதால் 'சில விமர்சகர்களின் ''வலை'' யில் விழுந்து தவறாக எழுதுபவர்கள்.//
//"வலையில் விழுந்து" என்கின்ற சொற்கள் அதிகமாகத் தெரிகின்றன. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.//
Dear Br. Raghavan,
I am very sorry if any of my words hurts you. Really I don't mean it.
I am fully aware of your neutral stand and thirst of knowledge.
Also, sorry for my late response as I 've seen your comment today only.
Posted by
BABU |
Sun Jul 24, 08:46:00 AM