ஊடகங்களில் தொடரும் தனிமனிதத் தாக்குதல்கள்
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008
ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றத் தக்கவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை. ஆனால், அவையே தகாதவர்களின் கரங்களில் சிக்கும்போது விளைவு படுமோசமடைவதையும் மறுப்பதற்கில்லை.
ஒரு சமுதாயம் முன்னேற்றம் பெறுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் அச்சமுதாயத்தின் இளவல்கள்தாம் பெரும் பங்காற்றக் கூடியவர்கள். அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தினால் சாதித்துக் காட்டுவார்கள். அவர்களை நெறிப் படுத்தத் தவறினால் தங்களுக்கும் தம் தலைவர்களுக்கும் தம் சமுதாயத்திற்கும் அவர்களால் விளையும் தீங்குகள், அவமானங்கள் எல்லை மீறிவிடும்.
காட்டுப்பாடற்ற இணைய வசதியான மின்னஞ்சல் என்ற ஊடகம் இயக்க வெறிபிடித்த இளைஞர்களிடம் சிக்கியபோது தம்மை மறந்தனர்; தரம் தாழ்ந்தனர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் சில முஸ்லிம் இயக்கங்களின் இளவல்களின் கரங்களில் மின்னஞ்சல் வசதி சிக்கிப் படாத பாடுபட்டது. மாற்றி மாற்றித் தூற்றிக் கொள்வற்கும் அவற்றைப் பெறுபவரது அனுமதியின்றிப் பலருக்கும் அனுப்பி வைப்பதுமாக ஃபித்னாக்களைப் பரப்புவதில் இயக்க இளவல்கள் படு உற்சாகத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது நமக்குக் "குரங்கு கையில் பூமாலை" பழமொழிதான் நினைவுக்கு வந்தது.
நிலைமை மாறுதலடைந்தது; அதாவது மிக மோசமடைந்தது! இலவச வலைப்பூக்கள் இணையத்தில் கிடைக்கத் தொடங்கியதிலிருந்து இளவல்கள் ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டு, ஷைத்தானின் குணங்களை ஆவணப் படுத்தத் தொடங்கினர்.
இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கும் கொள்கை விளக்கங்களுக்கும் அருமையாகப் பயன் படத்தக்க வகையில் அல்லாஹ் வழங்கியுள்ள அற்புதமான ஊடகங்களான மின்னஞ்சலையும் வலைப்பூக்களையும் "முகத்திரையைக் கிழிப்போம்", "தோலுரித்துக் காட்டுவோம்", "வேஷத்தைக் கலைப்போம்" போன்ற கொள்கை(?) முழக்கங்களோடு கட்டற்ற இணைய வசதியை எதிர்க் கருத்துக் கொண்டவர்களை நோக்கி இளவல்கள் திருப்பினர். தாக்குதல்-எதிர்த் தாக்குதல் ஆகிய பாவங்களில் சிந்தனையைச் செலவு செய்து, தங்களது பொன்னான நேரத்தை வீணடிப்பதில் வீறு கொண்டு எழுந்தனர்.
"இளவல்களின் ஆர்வக் கோளாறுக்குத் தலைவர்கள் என்ன செய்வார்கள்?" என்று நாம் நல்லெண்ணம் கொண்டிருந்ததைக் கடந்த 17ஆம் தேதி (17.08.2008) இரவு விண் தொலைக்காட்சி நிகழ்ச்சி உடைத்துப் போட்டது.
ரமளான் பிறை, ஈதுப் பெருநாள் ஆகியவற்றுள் மாற்றுக் கருத்துகள் கொண்டிருக்கும் ஓர் அமைப்பின் நிர்வாகிகளை, "இறையச்சம் அற்றவர்கள்", "கருத்தில் தெளிவில்லாதவர்கள்", "தனித்துக் காட்டுவதற்காகத் தவறுகளைச் செய்யச் கூடியவர்கள்" என்றெல்லாம் அவைப் பண்பாடுகளை மறந்து நிகழ்ச்சி நடத்தியவர்கள் திட்டித் தீர்த்தது மட்டுமின்றி, எதிர்க் கருத்துக் கொண்டவர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவிப் பார்த்ததுபோல் "உள்நேக்கம் தெரிகிறது" என்றார்கள்.
உதிரத்தை வியர்வையாக்கிக் காசு சம்பாதித்து அனுப்புபவனிடம் ஓயாமல் நிதி வேண்டிக் கோரிக்கை வைப்பவர்கள், அந்தக் காசு எதற்காகச் செலவிடப் படவேண்டும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்த்து, தங்களது கருத்துகளைச் சான்றுகளின் அடிப்படையில் வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளில் வலுவில்லை என்றால், அதையும் - அதாவது கருத்தை மட்டும் - விமர்சனம் செய்ய வேண்டும்.
அதை விடுத்துத் தனிநபர் தாக்குதலைத் தொலக்காட்சியில் நடத்தித் தங்கள் இளவல்களுக்குப் போலி உற்சாகம் அளிக்க வேண்டாம் என்பது சம்பந்தப் பட்ட இயக்கத் தலைவர்களுக்கு நாம் முன்வைக்கும் வேண்டுகோளாகும்.
அமைப்புகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் தஃவாவுக்கென்று தருகிறார்கள்; ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து தாக்கிக் கொள்வதற்கல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும் என்பதை இங்கு அழுத்தமாகப் பதிவு செய்கிறோம். தலைவர்கள் பண்பாட்டைச் சிறிது கைவிட்டால், இளவல்கள் முழுவதுமாகக் கைவிடுவர் என்பதையும் நினைவுறுத்துகிறோம்.
நல்லதை எடுத்துச் சொல்வது மட்டுமே நமது கடமை; எடுப்பதும் விடுப்பதும் அவரவர் உரிமை.
அனைத்து நிகழ்வுகளையும் தீர்ப்புக்காகக் கணக்கெடுத்து வைப்பது அல்லாஹ்வின் தனியுரிமை. இதை உணர்ந்து செயல் பட்டால் அனைவர்க்கும் பெருமை!
"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருங்கள். ஒரு கூட்டத்தார் மீது உங்களுக்கிருக்கும் வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்டக் கூடாது. நீதி செய்வீர்; அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்! நீங்கள் செய்பவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாவான்" (அல்-குர் ஆன் 005:008).
நன்றி: சத்தியமார்க்கம்.காம்
4 comments:
//"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருங்கள். ஒரு கூட்டத்தார் மீது உங்களுக்கிருக்கும் வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்டக் கூடாது. நீதி செய்வீர்; அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்! நீங்கள் செய்பவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாவான்" (அல்-குர் ஆன் 005:008).//
உங்களின் கூற்றுப்படி அந்த தகாதவர்களின் நீதி தவறியச் செயலை எங்கு கண்டீர்கள் என் கூறமுடியுமா? அவர்களின் தனிப்பட்ட வாழ்கையைப் பற்றி எங்கும் விமர்சிக்க வில்லையே? மார்க்கத்தைப்பற்றியே அவர்களின் விமர்சனம் அமைந்திருந்தது.
உங்களின் இந்தச் செயல்தான் அவர்களின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக தனிமனித மற்றும் சமுதாயத்திற்காக உழைக்கக்கூடிய அமைப்பின் மீது சரியான காரணம் கூறமுடியாத தாக்குதலைத் துவங்கியுள்ளீர்கள்.
அவர்களின் குறை மற்றும் தான் உங்களின் கண்களுக்கு தெரிகிறது என்றால் பிறகு உங்களைப் பற்றி கூற வேற ஒன்றும் தேவையில்லை.
மார்க்கத்தை பற்றி பேசும் போது அந்த விசயத்தை சார்ந்த நபர்களின் மார்க்க அறினை தான் பேசினார்களே தவிற இங்கு எங்கு இருந்து வந்தது தனிமனித தாக்குதல்
நீங்கள் பதிந்தது தான் தனிமனித மற்றும் தனி இயக்க தாக்குதல்
///"குரங்கு கையில் பூமாலை"////
//உதிரத்தை வியர்வையாக்கிக் காசு சம்பாதித்து அனுப்புபவனிடம் ஓயாமல் நிதி வேண்டிக் கோரிக்கை வைப்பவர்கள், அந்தக் காசு எதற்காகச் செலவிடப் படவேண்டும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்த்து, தங்களது கருத்துகளைச் சான்றுகளின் அடிப்படையில் வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.//
சிந்திப்பவர்களுக்கு நீங்கள் கூறுவது புரியும். ஆனால், சிந்தனையே செத்து விட்டக் கூட்டங்களுக்கு....? மனதில் காழ்ப்புணர்வும் வெறுப்பும் மிகைத்து விட்டக் கூட்டங்களுக்கு...?
//உங்களின் இந்தச் செயல்தான் அவர்களின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக தனிமனித மற்றும் சமுதாயத்திற்காக உழைக்கக்கூடிய அமைப்பின் மீது சரியான காரணம் கூறமுடியாத தாக்குதலைத் துவங்கியுள்ளீர்கள்.//
அப்துல் குத்தூஸ்,
தெளிவாகப் படித்து விட்டுத்தான் இவ்வாறு கூறுகிறீர்களா?
//ரமளான் பிறை, ஈதுப் பெருநாள் ஆகியவற்றுள் மாற்றுக் கருத்துகள் கொண்டிருக்கும் ஓர் அமைப்பின் நிர்வாகிகளை, "இறையச்சம் அற்றவர்கள்", "கருத்தில் தெளிவில்லாதவர்கள்", "தனித்துக் காட்டுவதற்காகத் தவறுகளைச் செய்யச் கூடியவர்கள்" என்றெல்லாம் அவைப் பண்பாடுகளை மறந்து நிகழ்ச்சி நடத்தியவர்கள் திட்டித் தீர்த்தது மட்டுமின்றி, எதிர்க் கருத்துக் கொண்டவர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவிப் பார்த்ததுபோல் "உள்நேக்கம் தெரிகிறது" என்றார்கள்.//
இதில் கூறப்பட்டுள்ள வாசகங்களுக்குத் தக்கக் காரணம் உங்களால் கூற முடியுமா?
எதிர்தரப்பினர் "இறையச்சம் அற்றவர்கள்" என்பது இந்தக் கூட்டத்திற்கு எப்படி தெரிந்தது?. இவர்களுக்காகத் தனியாக ஜிப்ரீல் வந்தாரோ?
எல்லாவற்றையும் விடுங்கள், அவர்களின் கருத்தில் இருக்கும் "உள்நோக்கம்" இவர்களுக்கு எப்படி "தெரிந்தது"?. மனதை ஊன்றிப் பார்க்கும் விஷேஷ கண்ணாடி ஏதாவது இவர்களுக்காக இறைவன் இறக்கிக் கொடுத்தானோ?
முழுவதும் படித்து விட்டு நடுநிலையாகச் சிந்தித்துப் பாருங்கள். மனதில் இறைவன் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வும் இருக்கட்டும். உண்மைகள் தெளிவாக விளங்கும்.
//அவர்களின் குறை மற்றும் தான் உங்களின் கண்களுக்கு தெரிகிறது//
அப்படியானால் அவர்களிடம் திருத்த முடியாத குறை உள்ளது என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்கள் தானே?. குறைகளைத் திருத்த முன்வராதவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டாம் என்றா கூறுகிறீர்கள்?
"திருத்த முடியாதவர்கள்" என்றதற்கான காரணம் எனது இணையதளத்தில் உள்ளது. பார்த்து கருத்திடுங்கள்.
ஒரே ஒரு கேள்வி தான் வைத்துள்ளேன். இதுவரை அதற்குச் சரியான விளக்கம் தராத இவர்கள், என்ன நல்லவை செய்து என்ன பிரயோஜனம்?
ஷேக் முஹம்மது
சூரங்குடி.
சகோதரர்கள் அப்துல் குத்தூஸ் மற்றும் Your Friend
பிறை விவாதம் இன்று புதிதாக ஏற்பட்டதல்ல. பிறைத் தோற்றம் பற்றிய கருத்து வேறுபாடு நபித்தோழர்கள் காலத்திலேயே ஏற்பட்டு விட்டது. கருத்து வேறுபாடுகள் உள்ள, மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவரவர் கருத்தைக் கூறலாமே தவிர, எதிர் கருத்துடையவர்களே ''இறையச்சம் இல்லாதவர்கள்'' என தனிமனித தக்குதல் தவிர்க்கப்பட வேண்டும். பிறர் இதயங்களை ஊடுறுவி - உள்ளங்களை கண்டறிந்து வாசிக்கும் மேதாவித்தனம் கண்டிக்கப்பட வேண்டியது. இதை யார் செய்திருந்தாலும் அது விமர்சிக்கப்பட்டிருக்கும். எந்த ஓர் அமைப்பையும் குறிப்பிட்டு விமர்சனம் இல்லை, ஆனால் உங்களுக்கு ஏன் நெறி கட்டுகிறது?
//"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருங்கள். ஒரு கூட்டத்தார் மீது உங்களுக்கிருக்கும் வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்டக் கூடாது. நீதி செய்வீர்; அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்! நீங்கள் செய்பவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாவான்" (அல்-குர் ஆன் 005:008).//
எதிர் கருத்துடையவர்களை - எதிர் கருத்திலிருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக - தங்கள் கருத்தையேற்கவில்லை என்பதற்காக இவர்களுக்கு இறையச்சம் இல்லாதவர்களாகி விடுகிறார்களே அதுதான் பிறருக்கு நீதி செய்ய மறுப்பது!
இவர்களைப் பொறுத்தவரை இறையச்சத்தின் அளவுகோல்: தங்கள் கருத்தையேற்றவர்கள் இறையச்சம் உள்ளவர்கள். ஏற்காதவர்கள் இறையச்சம் இல்லாதவர்கள். இது என்னய்யா நியாயம்? இறையச்சத்தை அளந்ததில் - ''இறையச்சம் இங்கே இருக்கிறது'' என்று இதயத்தைத் தொட்டுக்காட்டிய - நபி (ஸல்) அவர்களையும் மிஞ்சிவிடவில்லையா இவர்கள்!
//அவர்களின் குறை மற்றும் தான் உங்களின் கண்களுக்கு தெரிகிறது என்றால் பிறகு உங்களைப் பற்றி கூற வேற ஒன்றும் தேவையில்லை.//
குறைகள் திருத்தப்பட வேண்டும். அல்லாஹ்வின் அதிகாரத்தில் கை வைத்தல், பெருங்குறை என்பதால் கண்டிப்பாகத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றே விமர்சிக்கப்பட்டது.
///"குரங்கு கையில் பூமாலை"////
''ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு கண்ணாடியாக இருக்க வேண்டும்'' வலைப்பதிவுகளில் பார்க்கிறோம், ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு கரிக் கட்டையாக இருக்கிறார். அமைப்புகள் என்ற பெயரில் யாஇறைவா! சகிக்க முடியாத பதிவுகள். ஒருவரையொருவர் சாடியும் - வசைபாடியும் வலைப்பூக்கள் பதியப்படுகின்றன. இரு தரப்பினரும் யார்? என்றால் முஸ்லிம்கள். வலுவான மீடியா எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது பார்த்தீர்களா?
மின்னஞ்சல் முகவரிகளைத் திரட்டி இந்தப் பதிவுகள் சுற்றுக்கு விடப்படுகிறது! யாராவது இவர்களிடம் கேட்டோமா?
*****
''அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது'' (திருக்குர்ஆன், 007:176)
இறைமறையில் உவமானமாக முன்னுதாரணம் இருந்ததினாலேயே,
//அப்போது நமக்குக் "குரங்கு கையில் பூமாலை" பழமொழிதான் நினைவுக்கு வந்தது.// - ஒரு சக்தியான மீடியாவெனும் வலைப்பூ, ஒருவரையொருவர் தாக்கி வசைபாடும் முஸ்லிம்களிடம் கிடைத்து என்ன பாடுபடுகிறது. இது குரங்கு கையில் சிக்கிய பூமாலையை நினைவுப்படுத்துகிறது.
பதிவை நிதானத்துடன் படிக்கவில்லை என்பது உங்கள் விமர்சனத்திலிருந்து விளங்க முடிகிறது. மீண்டும் ஒருமுறை படித்து விமர்சிக்குமாறுக் கோருகிறேன் நன்றி!
Post a Comment