Friday, May 23, 2008

முஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்மை வணங்கும்படிக் கட்டளையிட்டிருந்தால் முஸ்லிம்கள் முஹம்மத் நபியை வணங்கியிருப்பார்கள். மறாக, இறைவன் ஒருவன் மட்டுமே வணங்கத் தகுதியானவன் என்று ஓரிறைவனையே நபியும் வணங்கி முஸ்லிம்களும் வணங்க வேண்டும் என்று பிராச்சாரம் செய்தார்கள்.

''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை''

''நான் அல்லாஹ்வின் அடியாரும், தூதருமாவேன்''

இப்படித்தான் வணங்குபவனையும், அடியார்களையும் நபியவர்கள் அடையாளம் காட்டினார்கள்.

''நான் உங்களைப் போன்ற மனிதனே, எனக்கு இறைச்செய்தி வருகிறது'' (திருக்குர்ஆன், 018:110. 046:006) என்பதற்கு மேல் நபியவர்கள் தம்மை இறையாக, வணங்கத் தகுதியுள்ளவராக அறிமுகம் செய்ததில்லை.

நான் ஹியாரா எனும் ஊருக்குச் சென்றேன் மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். ''நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்'' என்று நபியவர்களிடம் கூறினேன். அதற்கு நபியவர்கள் ''ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் பணியக்கூடாது'' என்று என்று கூறினார்கள். நபிமொழியின் சுருக்கம், நூல்: அபூதாவூத்.

தமக்குச் சிரம் பணியத் தயாராக ஒரு கூட்டம் இருந்தும் மனிதனுக்கு மனிதன் அவ்வாறு செய்யக் கூடாது. எனக்கும் எவரும் சிரம் பணியக்கூடாது என்று நபியவர்கள் சுய மரியாதையைக் கற்றுக்கொடுத்தார்கள். இன்று பார்க்கிறோம், மனிதனின் காலில் மனிதன் விழுந்து வணங்குகிறான். அதுவும் ஆன்மீகத் தலைவர்கள் என்றால் காலில் விழுவது இன்னும் அதிகம். முஸ்லிம்கள் காலில் விழத் தகுதியான ஒரே ஆன்மீகத் தலைவர் நபியவர்கள் மட்டும் தான். நபியும் என் காலில் விழக்கூடாது, யார் காலிலும் யாரும் விழக்கூடாது என்றும் தடை செய்தார்கள்.

''எனது மண்ணறையைக் கடந்து சென்றால் அதற்குச் சிரம் பணியாதீர்கள்'' (நூல்: அபூதாவூத்)

''எனது மண்ணறையை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே'' என்று மக்களுக்குத் தெரியும் வகையில் இறைவனிடம் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்'' (நூல்: அஹ்மத்)

''யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்'' என்று தமது மரணப் படுக்கையில் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். (நூல்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சிரிக்கை செய்யாவிட்டால் அவர்களின் அடக்கத் தலத்தையும் உயர்த்திக் கட்டியிருப்பார்கள். (நூல்: புகாரி)

நபியவர்கள் இருக்கும் போதும் தன்னை வணங்கக் கூடாது என்றார்கள். தன் மறைவுக்குப் பின்னும் தன்னை வணங்கக் கூடாது என்றும் எச்சிரித்துச் சென்றார்கள்.

வணங்குவதும், நேசித்தலும்

முஸ்லிம்கள் நபியை நேசிக்கிறார்கள் என்றால் அது அவரை வணங்கியதாகுமா? என்றால் நிச்சயமாக இல்லை! நபியை நேசித்தல் என்பது ஆன்மீகத்தில் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும்.

''நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்'' (திருக்குர்ஆன், 003:031)

நீங்கள் இறைவனை நேசிக்கிறீர்களா? அப்படியானால் இறைத்தூதரைப் பின்பற்றுங்கள். இறைவன் உங்களை நேசிப்பான். என்று பின்பற்றத்தக்க ஒரே தலைவர் நபியவர்கள் என்பதை எளிமையாகக் கூறுகிறது திருமறை வசனம்.

அல்லாஹ்வை இறைவனாகவும்,

முஹம்மதை இறையடியாராகவும், இறைத்தூதராகவும்,

இஸ்லாத்தை மார்க்கமாக - வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர் தனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நபியவர்களின் வழிகாட்டலை ஏற்றுச் செயல்பட வேண்டும்.

உதாரணமாக:

வைகறை வணக்கமானத் தொழுகையை நிறைவேற்ற உறக்கத்திலிருந்து விழிப்பவர் அது நபியவர்களின் வழிகாட்டல் என நபியவர்களைப் பின்பற்றுவதற்காகவே அதிகாலையில் விழித்தெழுகிறார். அன்றைய தினம் பொருளீட்டுவதும், தாம் திரட்டும் பொருள் நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதில் நபியவர்களைப் பின்பற்றுகிறார். இவ்வாறு உண்ணுவதிலிருந்து அன்றாட அலுவலில் எதைச் செய்தாலும் அதில் நபியைப் பின்பற்றி தனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்கிறார். உறங்கு முன்னும், மனைவியுடன் உடலுறவு கொள்ளும் முன்னரும் நபியவர்கள் கற்றுத் தந்த பிராத்தனைகளைக் கூறி இங்கும் ஒரு முஸ்லிம் நபியவர்களைப் பின்பற்றுகிறார்.

எனவே, இங்கு இறைச் செய்தியைப் போதிக்கும், இறைத்தூதுவர் என்ற பதவிதான் பின்பற்றப்படுகின்றன. இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த இறைத்தூதரே இறைச் செய்தியைப் பின்பற்றும் முதல் முஸ்லிமாக இருந்தார்.

''முஸ்லிம்களில் நான் முதலாமானவன்'' என்று கூறுவீராக! (திருக்குர்ஆன், 006:163)

இறைச் செய்தியை மக்களுக்கு அறிவித்துவிட்டு இறைத்தூதர் செயல்படாமல் இருக்கவில்லை. அவரும் தொழ வேண்டும், உண்ணா நோன்பிருக்க வேண்டும், இறைச் செய்தி என்னென்ன கட்டளையிடுகின்றதோ அவைகளையெல்லாம் இறைத்தூதர் முதல் முஸ்லிமாக செயல்படுத்தி, பிற முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் முதல் முஸ்லிமாக இருந்து, முஹம்மத் நபி (ஸல்) அவர்களை வணங்கினார்கள் என்று எந்தக் கொம்பராலும் சான்றுகளைக் காட்ட இயலாது. முஹம்மத், முஹம்மதை வணங்கியிருந்தால் அதுவே முஸ்லிகள் பின்பற்றும் வழிகாட்டியாக இருந்திருக்கும் இஸ்லாத்தில் அப்படி இல்லை. முஹம்மத் எவனை வணங்கி, வணங்கச் சொல்லியும் வழிகாட்டினாரோ, அந்த ஏக இறைவனையே முஸ்லிம்கள் வணங்குகின்றனர். இறைத்தூதர் முஹம்மதை வணங்கவில்லை, வணங்க மாட்டார்கள், வணங்கவும் கூடாது.

ஆனாலும், திண்ணையில் மலர் மன்னன் இவ்வாறு எழுதியுள்ளார்...

//...தங்கள் இறைத் தூதரை அவர்கள் வணங்குவதில்லை என்று சொல்வது ஒரு சம்பிரதாயமே ஆகும். வேண்டுமானால் ஒன்று கேட்டுப் பார்ப்போம். "எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல' என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா? அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட ஜிஹாதிகளின் "ஹிட் லிஸ்ட்' பெயர்ப் பட்டியலில் வந்துவிடாதா?//


கடந்த சனிக்கிழமை, 17,05.2008 அன்று திண்ணையில் வெளியாகிய, பெயரின் முக்கியத்தவம் பற்றி என்ற கட்டுரை.

எவ்வித ஆதார அடிப்படையில்லாத, நம்பிக்கையற்ற போகிற போக்கில் கேட்டுப் பார்ப்போமே என்று சொல்வார்களே அதுபோல் உள்ளது மலர் மன்னனின் திரு வாசகம். அவருக்குச் சொல்லிக்கொள்ளவே இந்த ஆக்கம் என்று கொள்க!

நான் பின்பற்றும் இஸ்லாத்தின் இறைத்தூதராகிய முஹம்மத் நபியை நான் வணங்கவில்லை! வணங்கவும் மாட்டேன்! என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.

நான் மட்டுமல்ல, எந்த முஸ்லிமும் இறைத்தூதர் முஹம்மத் நபியை வணங்கவில்லை, வணங்க மாட்டார்கள், வணங்கவும் கூடாது. என்றும் உரக்கச் சொல்லிக்கொள்கிறேன்.

''ஹிட் லிஸ்டில்'' பதிவு செய்ய மலர் மன்னன் சிபாரிசு செய்யலாம்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

நன்றி: திண்ணை.காம்

4 comments:

ஜோ/Joe said...

வண்டி வண்டியா பேசுற இந்த மலர் மன்னனுக்கு இந்த அடிப்படை விஷயமே தெரியல்லயா! கொடுமையப்பா!

அபூ ஸாலிஹா said...

அபூ முஹை அவர்களே,

நீங்களோ அல்லது சில வலைப்பதிவர்களோ - திண்ணையில் ம.ம என்பவரின் இஸ்லாத்தின் அடிப்படையைக் கூட அறியா ஒரு Ignorance Slip-up க்காக இவ்வளவு மெனக்கெட்டிருக்கக் கூடாது என்பதாகத் தோன்றுகிறது.

ஏனெனில், அவசரத் 'தேவை'களுக்காக கேள்விகளை அவிழ்த்துப் போட்டு விட்டு அம்மணமாய் ஓடும் இவர்கள், பதில்களைப் பெற கேள்வி கேட்பதுமில்லை. அப்படியே பதில் வந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டு அடுத்த டாப்பிக்-க்கு தாவுவதற்கு வெட்கப்படுவதுமில்லை.

அபூ முஹை said...

ஜோ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

அபூ முஹை said...

அபூ ஸாலிஹா அவர்களே, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

மொத்த முஸ்லிம்களின் சார்பாக ஓரிரு முஸ்லிகளும் இதற்குக் கருத்துச் சொல்லவில்லையெனில்,

''பார்த்தீர்களா! முஸ்லிம்கள் முஹம்மது நபியை வணங்குகிறார்கள்'' என்று தப்பானப் பிரச்சாரத்தை முடுக்கிவிடும் பேர்வழிகளுக்கு அவல் கொடுத்தது போலாகிவிடும்.

மேலும், அவருக்கு இந்த அடிப்படைக் கூடத் தெரியாமலிருக்கும் என்றும் நான் நம்பவில்லை!