தாலிபானின் செயல் கண்டிக்கத்தக்கது.
இஸ்லாம், குற்றங்களுக்கு தண்டனையாகவே தவிர, எந்த சூழ்நிலையிலும் தனியொரு மனிதனைக் கொலை செய்வதை மன்னிப்பதில்லை. தனியொரு மனிதனைக் கொலை செய்தவன் முழு மனித சமுதாயத்தையே கொன்றதற்கு சமம் எனவும் இஸ்லாம் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு முன்பு, அரபு மக்களிடையே உருப்படியான அரசியல் நெறிமுறை எதுவுமில்லை. அவர்களிடையே சமூகச் சீர்கெடு மண்டிக்கிடந்தது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித பாதுபாதுகாப்பும் இல்லாமல் இருந்தது. வலியவன் எளியவனைத் தாக்கி, எளியவனின் உரிமைகள் பறிக்கப்பட்டது.
இவற்றை எதிர்த்துக் கேட்கவோ. தடுத்து நிறுத்தவோ நாதியில்லாமல் இருந்தது. சின்னஞ்சிறு பிரச்சனை என்றாலும் தகராறு, சண்டை, போர்கள் என இரத்தம் சிந்தப்பட்டது. அநீதி, அக்கிரமங்கள் தலை விரித்தாடியது. அமைதிக்குரிய இடமாக அமைந்த மக்கா போன்ற நகரின் நிலைமையும் மேம்பட்டிருக்கவில்லை. இச்சமயத்தில் பொது வாழ்வில் அக்கறை கொண்டு, நல்லெண்ணம் கொண்ட சிலர், இத்தகைய அவல நிலையை நீக்கிட வேண்டும் என்று விரும்பினார்கள். இதற்கான ஆலோசனைக்காக அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் என்பவரின் வீட்டில் ஒன்று கூடினார்கள்.
''என்ன விலை கொடுத்தாவது அநீதியையும், கொடுமையையும் தடுத்திட வேண்டும். மக்காவில் வசிப்பவராக இருந்தாலும் சரி, வெளியிலிருந்து வந்தவராக இருந்தாலும் சரி எவரும் அநீதிக்குள்ளாகக்கூடாது. அநீதி இழைப்பவனை அடக்கி, அநீதிக்குள்ளானோருக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும். அவரது உரிமையை அவருக்குத் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். இல்லாதாருக்கும், தேவையுடையோருக்கும் உதவிட வேண்டும்'' என்று ஒப்பந்தம் செய்தார்கள்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். இந்த ஒப்பந்தம் நபித்துவத்திற்கு முன்பு நடைபெற்றது என்றாலும், நபித்துவத்திற்குப் பிறகும் நபி (ஸல்) அவர்கள் இந்த ஒப்பந்தத்தைப் புகழ்ந்து கூறினார்கள்.
''நான் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் (முக்கியமான) ஓர் ஒப்பந்தத்தில் கலந்து கொண்டேன். அதற்கு பகரமாக (அரபுகளின் சிறந்த செல்வமாகிய) செந்நிற ஒட்டகங்கள் எனக்குக் கிடைப்பதை நான் விரும்பவில்லை. இஸ்லாம் வந்த பிறகு அதற்கான அழைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டாலும் அதனை நான் ஏற்றுக் கொள்வேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( தபகாத், இப்னு ஹிஷாம்)
நபித்துவம் பெறுவதற்கு முன் நடந்த அநீதிக்கெதிரான இந்த ஒப்பந்தத்தை, ''இஸ்லாம் வந்த பிறகு அதற்கான அழைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டாலும் அதனை நான் ஏற்றுக் கொள்வேன்'' என்று கூறி இஸ்லாத்திற்கு இணையான ஓர் ஒப்பந்தமாக நபி (ஸல்) அவர்கள் புகந்ழ்துரைத்திருக்கிறார்கள்.
மனிதகுல நன்மைக்காக அநீதியையும், அநியாயங்களையும் எதிர்த்திட எந்த கூட்டமைப்பு உழைக்கிறதோ அதுவே அந்த சமுதாயத்தின் முதலீடாகும். விலைமதிப்பில்லாத இந்த மூலதனத்தைப் பெற்றிராத சமுதாயம் வீழ்ச்சியடைந்துவிடும். இஸ்லாம் இத்தகைய மூலதனத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது.
ஆனால்...
இஸ்லாமிய ஆட்சிக்கு பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் தாலிபான் என்ற இயக்கம், இஸ்லாத்துக்கு எதிராக - இறைக்கட்டளைக்கு மாறாக செயல்பட்டு வருகிறது.
தென்கொரியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு பணிக்காக வந்த இஞ்சினியர்களை, அவர்களின் பணியிடத்திலிருந்து தாலிபான் கடத்திச் சென்று பணயக்கைதிகளாய் வைத்துள்ளது.
ஆப்கான் அரசிடம் உள்ள சில கோரிக்கைகள் (ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தாலிபான் படையினரை விடுதலை செய்யக் கோரியது) பலனின்றி போனதைத் தொடர்ந்து ஒவ்வொரு பிணைக்கைதியாக தாலிபான் கொன்று வருகிறது.
தாலிபானின் இந்த மனிதநேயமற்ற செயலுக்கும், இஸ்லாத்துக்கும் எவ்வித ஒட்டுமில்லை. மாறாக இஸ்லாம் வன்மையாக கண்டிக்கும் - அநீதிக்கு எதிரான செயல் இது. அப்பாவி மக்களைக் கடத்தி வைத்துக்கொண்டு அரசு தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பதற்காக, சம்பந்தமேயில்லாத பிணைக்கைதியான அப்பாவிகளைக் கொல்வது நேர்மையற்ற செயல். மனித உரிமைக்கும், உயிருக்கும் அநீதி - அநியாயம் இழைத்துக் கொண்டிருக்கும் தாலிபான் இயக்கத்தின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அன்புடன்,
அபூ முஹை
