Tuesday, July 31, 2007

தாலிபானின் செயல் கண்டிக்கத்தக்கது.

இஸ்லாம், குற்றங்களுக்கு தண்டனையாகவே தவிர, எந்த சூழ்நிலையிலும் தனியொரு மனிதனைக் கொலை செய்வதை மன்னிப்பதில்லை. தனியொரு மனிதனைக் கொலை செய்தவன் முழு மனித சமுதாயத்தையே கொன்றதற்கு சமம் எனவும் இஸ்லாம் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு முன்பு, அரபு மக்களிடையே உருப்படியான அரசியல் நெறிமுறை எதுவுமில்லை. அவர்களிடையே சமூகச் சீர்கெடு மண்டிக்கிடந்தது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித பாதுபாதுகாப்பும் இல்லாமல் இருந்தது. வலியவன் எளியவனைத் தாக்கி, எளியவனின் உரிமைகள் பறிக்கப்பட்டது.

இவற்றை எதிர்த்துக் கேட்கவோ. தடுத்து நிறுத்தவோ நாதியில்லாமல் இருந்தது. சின்னஞ்சிறு பிரச்சனை என்றாலும் தகராறு, சண்டை, போர்கள் என இரத்தம் சிந்தப்பட்டது. அநீதி, அக்கிரமங்கள் தலை விரித்தாடியது. அமைதிக்குரிய இடமாக அமைந்த மக்கா போன்ற நகரின் நிலைமையும் மேம்பட்டிருக்கவில்லை. இச்சமயத்தில் பொது வாழ்வில் அக்கறை கொண்டு, நல்லெண்ணம் கொண்ட சிலர், இத்தகைய அவல நிலையை நீக்கிட வேண்டும் என்று விரும்பினார்கள். இதற்கான ஆலோசனைக்காக அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் என்பவரின் வீட்டில் ஒன்று கூடினார்கள்.

''என்ன விலை கொடுத்தாவது அநீதியையும், கொடுமையையும் தடுத்திட வேண்டும். மக்காவில் வசிப்பவராக இருந்தாலும் சரி, வெளியிலிருந்து வந்தவராக இருந்தாலும் சரி எவரும் அநீதிக்குள்ளாகக்கூடாது. அநீதி இழைப்பவனை அடக்கி, அநீதிக்குள்ளானோருக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும். அவரது உரிமையை அவருக்குத் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். இல்லாதாருக்கும், தேவையுடையோருக்கும் உதவிட வேண்டும்'' என்று ஒப்பந்தம் செய்தார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். இந்த ஒப்பந்தம் நபித்துவத்திற்கு முன்பு நடைபெற்றது என்றாலும், நபித்துவத்திற்குப் பிறகும் நபி (ஸல்) அவர்கள் இந்த ஒப்பந்தத்தைப் புகழ்ந்து கூறினார்கள்.

''நான் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் (முக்கியமான) ஓர் ஒப்பந்தத்தில் கலந்து கொண்டேன். அதற்கு பகரமாக (அரபுகளின் சிறந்த செல்வமாகிய) செந்நிற ஒட்டகங்கள் எனக்குக் கிடைப்பதை நான் விரும்பவில்லை. இஸ்லாம் வந்த பிறகு அதற்கான அழைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டாலும் அதனை நான் ஏற்றுக் கொள்வேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( தபகாத், இப்னு ஹிஷாம்)

நபித்துவம் பெறுவதற்கு முன் நடந்த அநீதிக்கெதிரான இந்த ஒப்பந்தத்தை, ''இஸ்லாம் வந்த பிறகு அதற்கான அழைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டாலும் அதனை நான் ஏற்றுக் கொள்வேன்'' என்று கூறி இஸ்லாத்திற்கு இணையான ஓர் ஒப்பந்தமாக நபி (ஸல்) அவர்கள் புகந்ழ்துரைத்திருக்கிறார்கள்.

மனிதகுல நன்மைக்காக அநீதியையும், அநியாயங்களையும் எதிர்த்திட எந்த கூட்டமைப்பு உழைக்கிறதோ அதுவே அந்த சமுதாயத்தின் முதலீடாகும். விலைமதிப்பில்லாத இந்த மூலதனத்தைப் பெற்றிராத சமுதாயம் வீழ்ச்சியடைந்துவிடும். இஸ்லாம் இத்தகைய மூலதனத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது.

ஆனால்...

இஸ்லாமிய ஆட்சிக்கு பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் தாலிபான் என்ற இயக்கம், இஸ்லாத்துக்கு எதிராக - இறைக்கட்டளைக்கு மாறாக செயல்பட்டு வருகிறது.
தென்கொரியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு பணிக்காக வந்த இஞ்சினியர்களை, அவர்களின் பணியிடத்திலிருந்து தாலிபான் கடத்திச் சென்று பணயக்கைதிகளாய் வைத்துள்ளது.

ஆப்கான் அரசிடம் உள்ள சில கோரிக்கைகள் (ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தாலிபான் படையினரை விடுதலை செய்யக் கோரியது) பலனின்றி போனதைத் தொடர்ந்து ஒவ்வொரு பிணைக்கைதியாக தாலிபான் கொன்று வருகிறது.

தாலிபானின் இந்த மனிதநேயமற்ற செயலுக்கும், இஸ்லாத்துக்கும் எவ்வித ஒட்டுமில்லை. மாறாக இஸ்லாம் வன்மையாக கண்டிக்கும் - அநீதிக்கு எதிரான செயல் இது. அப்பாவி மக்களைக் கடத்தி வைத்துக்கொண்டு அரசு தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பதற்காக, சம்பந்தமேயில்லாத பிணைக்கைதியான அப்பாவிகளைக் கொல்வது நேர்மையற்ற செயல். மனித உரிமைக்கும், உயிருக்கும் அநீதி - அநியாயம் இழைத்துக் கொண்டிருக்கும் தாலிபான் இயக்கத்தின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அன்புடன்,
அபூ முஹை

12 comments:

╬அதி. அழகு╬ said...

சரியாகச் சொன்னீர்கள் அபூமுஹை.

அபூ ஸாலிஹா said...

அமெரிக்க ஆளுமைக்குக் கீழ் உள்ள ஆப்கானின் தற்போதைய பொம்மை அரசின் கையாளாகாதனத்தை எதிர்கொள்ள வேறெதுவும் வழியில்லாத சூழலில் தாலிபான் மேற்கொள்ளும் இத்தகைய செயல்கள், இஸ்லாத்தின் மீதான தவறான எண்ணத்தையும் அச்சத்தையுமே சர்வதேச அளவில் விதைக்கும்.

ஆப்கான் ஒரு போர்க்களம் என்று தெரிந்திருந்தும் காசுக்காக உயிருக்குத் துணிந்து வந்து பணிபுரிந்திருந்தாலும், போரிடத் திராணியற்ற அப்பாவிகளை எந்த ஒரு காரணத்தையும் சொல்லி அநியாயமாக கொலை செய்வதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தாலிபானின் இத்தகைய செயலை உங்களுடன் இணைந்து வன்மையாக கண்டிக்கிறோம்.

podakkudian said...

"இஸ்லாமிய ஆட்சிக்கு பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் தாலிபான் என்ற இயக்கம், இஸ்லாத்துக்கு எதிராக - இறைக்கட்டளைக்கு மாறாக செயல்பட்டு வருகிறது."

தாலிபானின் இத்தகைய செயலை உங்களுடன் இணைந்து வன்மையாக கண்டிக்கிறோம்.

பிறைநதிபுரத்தான் said...

போரிடத்திராணியற்ற ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை கொல்ல அமெரிக்க படை திரட்டிய போது - தனது அமெரிக்க எஜமானுக்கு விசுவாசம் காட்டுவதற்காக, தென் கொரிய அரசு தனது 200 படைவீரர்களை அனுப்பியது.

தென் கொரிய தொண்டு நிறுவன ஊழியர்கள் இருவர் தலிபான்களால் கொல்லப்படதும் கடத்தப்பட்டவர்களை அப்பாவிகளாக சான்றிதழ் கொடுக்கும் நடு நிலைவாதிகள் - 2001 லிருந்து ஆப்கானியர்களை அழித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு 'அடியாட்களாக' வந்த தென்கொரியாவை எப்போதாவது கண்டித்ததுண்டா?

அமெரிக்காவும்- அதன் கையாளான தென்கொரிய படையும், தங்களால் இதுவரை கொல்லப்பட்ட ஆப்கானியர்களில் யாரையும் பாவி- அப்பாவி என்ற பாகுபாடு காட்டாமல் 'காக்கை-குருவியை' சுடுவதுபோல சுட்டுத்தளியிருக்கிறார்கள்.

'முற்பகல் செய்யின் - பிற்பகல் விளையும்' என்பதை தென் கொரியாவும் அதுபோன்ற பிற அமெரிக்க அடிவருடி நாடுகளும் இனியாவது உணர்ந்துக்கொள்ளவேண்டும்.

தலிபான் - வன்முறை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் என்று எண்ணுவது அடிமுட்டாள்தனமானது.

தலிபான் தனது அனுகு முறையை மாற்றிகொள்ளாவிட்டால் - தானும் அழிந்து - தனது நாட்டையும் அழித்துக்கொண்டு விரைவில் - 'ஆப்கனிஸ்தானை' - கப்ருஸ்தானாக மாற்றும் நாள் தொலைவில் இல்லை.

தலிபான் ஆட்சியிலிருந்த பொழுது ஆப்கனிய ஆண்கள் 'தாடி' வளர்ப்பதில் காட்டிய கண்டிப்பில் நூற்றில் ஒரு பங்கை காட்டி - தனது குடிமக்களின் குறிப்பாக பெண்களின் 'அறிவை' வளர்க்க தவறிவிட்டது.

தலிபான் - உடனடியாக, கடத்தப்பட்ட கிறித்துவ தொண்டு ஊழியர்களை விடுவித்து - இயன்றால் அந்நாட்டிலிருந்து வந்த ஆக்கிரமிப்பு படைவீரர்களை குறிப்பாக அமெரிக்கர்களை பிடித்து- கடத்தி தனது வீரத்தை காட்டிக்கொள்ளட்டும்.

அட்றா சக்கை said...

சகோதரர் அபூமுஹை,

தாலிபான்கள் எது செய்தாலும் அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்குக் களங்கம் கற்பித்த கைக்கூலிகளுக்கு இந்த பதிவே பதிலாக அமையும்.

நிராயுதபாணிகளாக இருக்கும் சிவிலியன்களைக் கடத்திப் பணயமாக வைத்து அரசை மிரட்டிப் பணியவைக்கலாம் என்ற தாலிபான்களின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கதே. இந்த செயலின் மூலம் தமக்கு மாறாத இழுக்கைத் தேடிக் கொண்டுள்ளார்கள் தாலிபான்கள்.

அநியாயமாக இரு உயிர்களை எடுப்பது மாபெரும் அக்கிரமச் செயல் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

அபூ முஹை said...

அழகு, அபூ ஸாலிஹா, podakkudian, பிறைநதிபுரத்தான், அட்ற சக்கை உங்கள் அனைவரின் வருகைக்கும், உங்கள் கருத்தைப் பகிர்தமைக்கும் நன்றிகள்!

//போரிடத்திராணியற்ற ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை கொல்ல அமெரிக்க படை திரட்டிய போது - தனது அமெரிக்க எஜமானுக்கு விசுவாசம் காட்டுவதற்காக, தென் கொரிய அரசு தனது 200 படைவீரர்களை அனுப்பியது.// -

-பிறைநதிபுரத்தான்,

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று இஸ்லாம் கூறுகிறது.

தமது விசுவாசத்தைக் காட்ட தென் கொரியா அரசு அமெரிக்காவுக்கு படை வீரர்களை அனுப்பி வைத்ததற்கான எதிர்ப்பை தென் கொரியா அரசாங்கத்திடம் தான் காட்டவேண்டும். அதைச் செய்யாமல் தென் கொரியாவின் அப்பாவி பொது மக்களை எதிரிகளாக்கிக் கொன்று வருவது, இஸ்லாத்திற்கு எதிரான செயல்.

அன்புடன்,
அபூ முஹை

முகவைத்தமிழன் said...

//இஸ்லாமிய ஆட்சிக்கு பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் தாலிபான் என்ற இயக்கம், இஸ்லாத்துக்கு எதிராக - இறைக்கட்டளைக்கு மாறாக செயல்பட்டு வருகிறது.
தென்கொரியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு பணிக்காக வந்த இஞ்சினியர்களை, அவர்களின் பணியிடத்திலிருந்து தாலிபான் கடத்திச் சென்று பணயக்கைதிகளாய் வைத்துள்ளது. //

இவ்வாறு எழுதி தாலிபான்களை கண்டித்த சகோதரர் அபூ முஹையை நான் வண்மையாக கண்டிக்கிறேன்.

எதையும் எழுதுவதற்கு முன் அந்த செய்தியின் நிலைப்பாடு குறித்து சற்று ஆராய்ந்தபின் எழுதுவது உசிதம்.

கடத்தப்பட்டு பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்வர்களும், கொல'லப் பட்டுள்ளவர்களும் பணிக்காக ஆஃப'கானுக்கு வந்த பொறியாளர்கள் அல்ல மாறாக அவர்கள் அமெரிக்கர்களிடம் பணம் பெறும் ஒரு கிருத்துவ மிசனரி ஊழியர்கள் ஆவார்கள். அதில் முதலில் கொல்லப்பட்டவர் ஒரு ஃபாதர் ஆவார்.

இன்னுமு் இவர்கள் ஆஃப்கானுக்கு வந்தது தாங்கள் கூறியது போல் பணி செய்வதற்காகவோ அல்லது ஆஃப்கானை கட்டி எழுப்பவோ அல்ல மாறாக அங்குள்ள எம் முஸ்லிம் சமுதாய சகோதர சகோதரிகளை போரால் சரழிந்து வாழக்கையையும் வசதிகளையுமு் இழந்து நிற்கும் அவர்களின் வறுமையை பயன்படுத்தி நீங்கள் எந்த மார்க்கத்தை பாதுகாக்க இணையத்தில் போராடுகின்றீர்களோ அந்த இஸ்லாமை அவர்களின் உள்ளத்தில் இருந்து அகற்றி அங்கு கிருத்துவம் எனும் நச்சு விதையை விதைத்திட வந்த அயோக்கியர்கள் அவர்கள்.

இவர்களும் யுத்த பூமியில் எதிரிகளாகவே கணிக்கப்படுவர். தாலிபான்களின் நடவடிக்கை நியாயமானதே.

சகோதரர் அபூ முஹை மீண்டுமெருமுறை அந்த கொரியர்களின் பின்புலத்தை அலசுவது நல்லது. எல்லா மீடியாக்களும் அவாக்ளை CHRISTIAN AID WORKERS என்றே அழைக்கின்றார்கள். CHRISTIAN AID WORKERS என்றால் அபூ முஹையின் ஆங்கில அகராதியில் பணிக்கு வந்த இன்ஜினியர்கள் என்று அர்த்தமா?

நன்றி
முகவைத்தமிழன்

அரபுத்தமிழன் said...

சகோதரர் முகவைத் தமிழன் சொல்வது சரியாகப் படுகிறது. யுத்த பூமியிலாவது பிழைக்க வருவதாவது ?!!.
இஸ்லாத்தைப் பின்பற்ற நினைப்பவர்கள் அப்பாவிகளைக் கொல்ல நினைக்க மாட்டார்கள்.அப்பாவிகள் கொல்லப் படுவது இன/மத வெறியர்களால்தான். தாலிபான்கள் தமது ஆட்சி போனாலும் பரவாயில்லை தமக்கு உதவி செய்ய சொந்த நாட்டையே துறந்து உதவி செய்த இஸ்லாமிய சகோதரனைக் காத்த புனிதர்கள். முஸ்லிம்களின் பெயராலும் கொடுமை நிகழ்த்த அமெரிக்க நாய்களுக்கு சொல்லியா கொடுக்கணும்

அபூ முஹை said...

சகோதரர் முகவைத் தமிழன் உங்கள் வருகைக்கு நன்றி!

திருக்குர்ஆன் 003:061 வசனத்தின் பின்னணி: நஜ்ரானிலிருந்து கிறிஸ்துவ மதகுருமார்கள் - பாதிரியார்கள் மதீனாவுக்கு வந்து நபவி பள்ளிவாசலில் தங்கினார்கள். தங்களது திரியேத்துவ கடவுட்க் கொள்கையை நிலைநாட்ட நபி (ஸல்) அவர்களுடன் விவாதமும் செய்தனர்.

அந்த கிறிஸ்துவ பாதிரியார்கள், அவர்களின் மத வழக்கப்படி நபவி பள்ளிவாசலில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றவும் நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். அன்று கிறிஸ்துவக் கொள்கையை நிலைநாட்ட விவாதத்திற்கு வந்த கிறிஸ்துவ மிஷனரியோடு அழகிய முறையில் நடந்து கொண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் தாலிபான் இயக்கம், ஆப்கான் வந்த கிறிஸ்துவ மிஷனரியைச் சேர்ந்தவர்களை பிணையக் கைதிகளாகச் சிறைப்பிடித்து அவர்களை ஒவ்வொருவராகக் கொலை செய்வது அரக்கத்தனமான இனவெறி!

தாலிபானின் இந்த இனவெறிச் செயலை ஆதரிக்கும் நீங்களும் இனவெறிப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்.

''போர்களத்தில் போரிடுங்கள், வரம்பு மீறாதீர்கள், சிறுவர்களையும் மதகுருமார்களையும் கொல்லாதீர்கள்'' (ராவி, புரைதா (ரலி) முஸ்லிம்) என்பதே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரை. போர்க் களத்தில் மதகுருமார்களைக் கொல்லாதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் புறக்கணித்து, மதத்தை பிரச்சாரம் செய்ய வந்த கிறிஸ்துவ மிஷனரி ஊழியர்களை சிறைப் பிடித்து கொலை செய்வதை நியாயப்படுத்தும் அளவுக்கு உங்கள் சிந்தனையை எங்கே அடகு வைத்தீர்கள்?

மத சுதந்திரம் வழங்கியுள்ள இஸ்லாத்தில், பிறமதப் பிரச்சாரம் செய்பவர்களை கொலை செய்ய வேண்டும் என்பதை எங்கிருந்து பெற்றீர்கள்? சான்றுகள் தருங்களேன்!

நான் பொறியாளர்கள் என்று எழுதியது என்ன பெரிய விஷயமா?

யாராக இருந்தால் என்ன? போருக்கு சம்பந்தமில்லாத அப்பாவி மக்களைக் கொல்லக்கூடாது என்பது தானே மையக் கருத்து.

அதிலும் பாதிரியார்களைப் போர்க் களத்திலும் கொல்லக்கூடாது என்றல்லவா இஸ்லாம் கூறுகிறது.

முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் எவருக்கும் அநீதி, கொடுமை நடந்து விடக்கூடாது, வலியவன் எளியவனுக்கு அநீதி, கொடுமைகள் இழைத்தால் அதைத் தடத்திட வேண்டும். அநீதிக்குள்ளானோருக்குப் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்பதே வரும் ஒப்பந்தத்தின் பொருள்.

''என்ன விலை கொடுத்தாவது அநீதியையும், கொடுமையையும் தடுத்திட வேண்டும். மக்காவில் வசிப்பவராக இருந்தாலும் சரி, வெளியிலிருந்து வந்தவராக இருந்தாலும் சரி எவரும் அநீதிக்குள்ளாகக்கூடாது. அநீதி இழைப்பவனை அடக்கி, அநீதிக்குள்ளானோருக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும். அவரது உரிமையை அவருக்குத் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். இல்லாதாருக்கும், தேவையுடையோருக்கும் உதவிட வேண்டும்'' என்று ஒப்பந்தம் செய்தார்கள்.

நீங்கள் இதை முறையாக விளங்கியிருந்தால், தக்க ஆதாரத்துடன் தாலிபானைக் கண்டித்த என்னை, எவ்வித ஆதாரமும் இல்லாமல் கண்டித்திருக்க மாட்டீர்கள் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

கோவி.கண்ணன் said...

//தாலிபானின் இந்த மனிதநேயமற்ற செயலுக்கும், இஸ்லாத்துக்கும் எவ்வித ஒட்டுமில்லை. மாறாக இஸ்லாம் வன்மையாக கண்டிக்கும் - அநீதிக்கு எதிரான செயல் இது. அப்பாவி மக்களைக் கடத்தி வைத்துக்கொண்டு அரசு தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பதற்காக, சம்பந்தமேயில்லாத பிணைக்கைதியான அப்பாவிகளைக் கொல்வது நேர்மையற்ற செயல். மனித உரிமைக்கும், உயிருக்கும் அநீதி - அநியாயம் இழைத்துக் கொண்டிருக்கும் தாலிபான் இயக்கத்தின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அன்புடன்,
அபூ முஹை//

அதே சமயத்தில்... என்று முடித்த இடத்தில் ஆரம்பித்து வேறு எதையும் குறிப்பிட்டு ஞாயப்படுத்தல் செய்யாமல் முடித்திருப்பது உங்கள் தெளிவை காட்டுகிறது.

பாராட்டுக்கள்.

ஏனென்றால் பலர் தன்னை சார்ந்தவர்களை கண்டிக்கும் போது எதிராளிக்கும் சேர்த்தே 'ப்ஞ்ச்' வைப்பாங்க.பதிவு எழுதி நோக்கம் செத்துவிடும். அது இங்கே மிஸ்ஸிங்

மறுபடியும் பாராட்டுகள் அபூ முஹை

அபூ முஹை said...

கோவி.கண்ணன் உங்கள் வருகைக்கு நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

sabeerbasha said...

In the Name of Allah

Dear brother,

Assalamu alaikkum,

I came to know that those koreans came to afghan to spread christianity under missonary work. Jazakkalah.

sabeer