இஸ்லாமும் - அடிமைகளும் என்ற முந்தைய பதிவில் ஏற்கெனவே எழுதியிருந்தாலும் மீண்டும்...
குடியேற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கருப்பின அடிமைகளுடன் பின்னிப் பிணைந்திருந்தன. குடியேற்ற நாடுகளில் மக்கள் தொகைப் பெருக பெருக குடியேற்றங்கள் விரிவடைந்து, ஏராளமான விவசாயப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. பண்ணைகளில் பணிபுரிய அதிகமான அடிமைகள் தேவைப்பட்டார்கள். தேவைக்கேற்ப கருப்பின அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டார்கள்.
இதனால் கருப்பின அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. அமெரிக்கா சுதந்திர போர்க்காலத்தில் சுமார் ஐந்து லட்சமாக இருந்த கருப்பின மக்கள், உள்நாட்டுப் போர்க்காலத்தில் சுமார் ஐம்பது லட்சமாக உயர்த்தப்பட்டனர். இவர்கள் புகையிலை, பருத்தி, கரும்புத்தோட்டங்களிலும் வயல் வெளிகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இங்குள்ள தோட்டங்களிலும் பண்ணைகளிலும் வேலை செய்ய அதிகம் அடிமைகள் தேவைப்பட்டதால் நாளடைவில் கருப்பின அடிமைகளுக்கு அதிகம் கிராக்கி ஏற்பட்டது. எனவே அவர்களின் விலையும் உயர்ந்தது. 1830ம் ஆண்டு 800 டாலர்களுக்கு சந்தையில் விற்கப்பட்ட அடிமைகள், 1860ல் 2400 டாலர்களுக்கு விற்கப்பட்டனர்.
கருப்பின அடிமைகளின் கடின உழைப்பால் தோட்டங்கள், பண்ணைகள் ஆகியவற்றின் உற்பத்தி பன்மடங்கு பெருகியது. இதனால் வெள்ளையர்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. நிலத்தில் பணிபுரிந்த அடிமைகளைத் தவிர வெள்ளையர்களின் வீட்டுப்பணிக்காக ஒரு பிரிவினர் அமர்த்தப்பட்டனர். இவர்களுள் பெரும்பாலோர் பெண்கள். இவர்கள் வெள்ளையர்களின் மாளிகையில் பல்வேறு வேலைகளைச் செய்து வந்தனர். இவர்கள் சற்று மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டனர்.
இப்பெண்மணிகளை வெள்ளையர்கள் தங்களது சுயநலத்திற்காகவும் பயன்படுத்தினர். இவர்கள் கருப்பின பெண் அடிமைகளை தங்களது காதல் பசியைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்தினர். அக்காலத்து வெள்ளையர்களின் காமவெறியைத் தணிப்பது கருப்பின அடிமைப் பெண்களின் தீராப் பொறுப்பாக இருந்தது. வெள்ளையர்களின் இரத்தம் ஓடாத கருப்பினப் பெண்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது. இவ்வாறு வெள்ளையர்கள் கருப்பின அடிமைகளை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், சுயதேவைகளுக்காகவும் பயன்படுத்தினர்.
வெள்ளையர்களில் பெரும்பாலோர் அடிமை முறையை ஆதரித்தாலும் ஒரு பிரிவினர் மனிதாபிமான நோக்கத்தில் இதற்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இதற்காக அடிமைமுறை ஒழிப்பு இயக்கம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி இக்கொடிய முறைக்கெதிராகச் செயல்பட்டதோடு அவர்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்துக் கடுமையாகப் போராடினார்கள். தம் நலத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் சுதந்திர மனிதர்களைப் பிடித்து அடிமைகளாக்கி விற்கவும், வாங்கவுமாக, வியாபாரப் பொருட்களாக்கிக் கொண்ட அடக்குமுறை சுயநலமுள்ள மனிதர்களின் கடந்த நூற்றாண்டின் வரலாறு இதுதான்.
சுதந்திர மனிதனை விற்கும் இதே வழக்கம் சுமார் கி.மு 19ம் நூற்றாண்டிலும் இருந்தது. இதைத் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
'ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தண்ணீர் எடுத்து வருபவரை அனுப்பினார்கள். அவர் தனது வாளியை (கிணற்றில்) விட்டார். 'இந்த நற்செய்தியைக் கேளுங்கள்! இதோ ஒரு சிறுவன்' என்றார். அவரை வியாபாரப் பொருளாக எடுத்து மறைத்துக் கொண்டனர். (012:019)
நபி யூசுஃப் (அலை) அவர்கள் சிறுவராக இருக்கும்பொழுது, அவருடைய சகோதரர்கள் அவரைக் கொல்வதற்காக கிணற்றில் தள்ளிவிட்டு சென்று விடுகிறார்கள். அந்நேரத்தில் அவ்வழியாக வரும் பயணக் கூட்டம் தண்ணீர் இறைப்பதற்காக வாளியைக் கிணற்றில் விடும்போது, சிறுவராக இருந்த யூசுஃப் (அலை) அதைப் பிடித்துக் கொண்டு மேலே வருகிறார். அவர்கள் காப்பற்றிய சிறுவரை அப்படியே விட்டுச் செல்லவில்லை. மாறாக அவரை ஒரு வியாபாரப் பொருளாக மறைத்து வைத்துக் கொண்டு, எகிப்து நாட்டில் அவரை அற்ப கிரயத்திற்கு விற்று விடுகிறார்கள். (012:020)
கிணற்றிலிருந்து காப்பாற்றிய சிறுவரை என்ன ஏதென்று விசாரிக்கவில்லை. அக்கம் பக்கத்தில் சிறுவரின் வசிப்பிடம் இருக்கலாம் என்று அவரை அப்படியே விட்டுச் செல்லவில்லை. அவரை பத்திரமாக வியாபாரப் பொருளாக்கி நகரத்தில் கொண்டு போய் விற்று விடுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் நம்ம ஊர்களிலும் பிள்ளை பிடிக்கிறவன் என்று சொல்வார்களே, பிள்ளைகளை பிடித்துக் கொண்டு போய் வெளிமாநிலங்களில் விற்று, அவர்களை ஊனமாக்கி பிச்சையெடுக்க வைக்கும் கூட்டத்தைப் போல். ஆனாலும் முந்திய காலத்தவர்கள் குழந்தைகளை ஊனமாக்கியதில்லை என்பதில் அவர்கள் இரக்கமுள்ளவர்களாகத் திகழ்கிறார்கள்.
முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக தேர்ந்தெடுப்பதற்கு முன், கதீஜா (ரலி) அவர்கள் உக்காழ் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸா என்பவரின் மகன் ஸைத் (ரலி) அவர்களை விலை கொடுத்து வாங்குகிறார். சிறுவரான ஸைத் கதீஜா (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா (ரலி) நபி (ஸல்) அவர்களை மணந்தவுடன், அந்த அடிமைச் சிறுவரை நபிவர்களுக்கு வழங்கி விடுகிறார்.
அதன் பின்னர் ஸைத், நபி (ஸல்) அவர்களுக்குப் பணியாளராக இருந்தார். இந்நிலையில் தன் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த ஹாரிஸா, நபி (ஸல்) அவர்களிடம் வந்து தம் மகனை விடுதலை செய்யுமாறும் அதற்கான விலையைத் தந்து விடுவதாகவும் கூறுகிறார். இங்கு தந்தைக்குத் தெரியாமலேயே சிறுவரான ஸைத் அடிமையாக விற்கப்பட்டிருக்கிறார்.
நபி யூசுஃப் அவர்கள் சிறுவயதில் போரில் கலந்து, எதிரிகளிடம் போர்க்கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு அடிமையாக்கி விற்கப்பட்டாரா? அல்லது ஒரு அடிமைக்கு மகனாக இருந்து அடிமையாக விற்கப்பட்டரா? இல்லை! இதே நிலையில்தான் சிறுவராக இருந்த ஸைதும் அடிமைச் சந்தையில் விற்கப்பட்டிருக்கிறார். இப்படித்தான் அக்காலத்தில் அடிமைமுறைக்கு எந்த அளவுகோலும் இல்லாமல் வலுத்தவன் இளைத்தவனை அடிமையாக்கி, அடிமைச் சந்தைகளில் விற்று வந்தார்கள்.
சுதந்திரமான மனிதனைப் பிடித்துக் கொண்டு வந்து, அவனை வியாபாரப் பொருளாக்கி விற்கும் இதுபோன்ற அடிமைமுறையை இஸ்லாம் ஆதரிக்கிறதா? என்றால் இல்லை! மாறாக, ஒரு மனிதனை அடிமையாக்கும் - எண்ணத்துடன் - அடிமையாக விற்றுவிடும் - நோக்கத்துடன் சிறைபிடிக்கும் ஆதிகால பழக்கத்தை இஸ்லாம் முழுமையாக தடைசெய்து விட்டது.
''மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன் -
ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன்!
இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்!
மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!'' - என்று இறைவன் கூறுகிறான். (புகாரி 2227)
நபி (ஸல்) அவர்களால் இஸ்லாம் பிரச்சாரம் துவக்கப்பட்ட காலத்திலிருந்த, சுதந்திர மனிதனை அடிமையாக்கும் முறைகளையும், அடிமைத் தொழிலுக்கும் கட்டாய வேலைக்கும் பிடித்து வந்து அடிமையாக விற்கப்பட்ட கடந்த நூற்றாண்டின் அடிமை முறைகளையும் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னே ஒழித்து விட்டது. சுதந்திரமான மனிதனை விற்பவன் இறைவனுக்கு எதிராக செயல்படுகிறான் என்று பிரகடனம் செய்கிறது.
(மீண்டும் அடுத்த பகுதியில்)
அன்புடன்,
அபூ முஹை
No comments:
Post a Comment