Friday, March 03, 2006

வேண்டாம் அணுத்திமிர்!

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் புஷ் ஆகிய இருவரும் இரு நாடுகளின் ஒப்பந்தமாக அணுசக்தி பிரச்சனை பற்றிய பேச்சு வார்த்தையில் நல்லதொரு உடன்படிக்கையை எட்டியிருக்கிறார்கள். - அணுசக்தியை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தி, அழிவை நோக்கி அகிலத்தை மிரட்டும் அணு(ஆயுத)த்திமிர் ஏற்படாதவரை - இது மிகவும் வரவேற்கத்தக்க, நாட்டுக்கு நலனைத்தரும் நல்ல விஷயம்தான் - உலக நாடுகள் அனைத்தும் அணுத்திமிரை கைவிட வேண்டும்.

அன்புடன்,
அபூ முஹை


அணு பேரழிவு...
ஆயுதமாக மாறியதின் தொடக்கம்!


அணுவை ஆயுதமாகப் பயன்படுத்தும் போக்கின் தொடக்கம் மிக அப்பாவித்தனமாக 1896ல் தொடங்கியது. அந்த ஆண்டில் தான் அந்தோனி ஹென்றி பெக்குரில் என்பவர் யூரேனியத்தில் கதிர் வீச்சு இருப்பதை கண்டுபிடித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு அணுகுண்டை தயாரிக்க உதவிடும் என்று பெக்குரில் எதிர்பார்க்கவில்லை.

1902ல் மேரி மற்றும் பியரி குரி-ரேடியம் என்னும் கதிர் வீச்சு உலோகத்தைத் தனியாக பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர். இதற்கு மூன்று ஆண்டுகள் கழித்து ஓரு அதிர வைக்கும் சாதனையாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது THEORY OF RELATIVITY என்ற சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார். (அளவைகள் யாவும் ஒன்றையொன்று சார்ந்ததன்றித் தனிநிலை இயல்புகள் உடையவை அல்ல என்பதே சார்பியல் கோட்பாடு) திடப்பொருளும் சக்தியும் ஒரே பொருள் இரண்டு வகையான மாதிரிகள் என்று ஐன்ஸ்டீன் கூறினார். ஏதாவது ஒரு வகையில் திடப்பொருளை சக்தியாக மாற்றினால், மிகப்பெரும் அளவிலான ஆற்றலை வெளிப்படுத்த இயலும் என்றும் ஐன்ஸ்டீன் வாதிட்டார்.

வெறும் சித்தாந்தமாக ஐன்ஸ்டீன் தெரிவித்த கருத்துகளுக்கு செயல் வடிவம் அளிக்கும் பணி 1920களில் நடைபெற்றது. எர்னஸ்ட் ருத்தர் போல்ட் மற்றும் நீல்ஸ் போஹர் என்ற இரு விஞ்ஞானிகள் அணுவின் உள்ளடக்கத்தை மேலும் துல்லியமாக விவரித்தனர்.
அணுவின் பாகங்களாக மையக் கருவும் (NUCLEUS) அதனைச் சுற்றி எதிர்மின் ஆற்றலுடைய உள்ளணுத் துகள்களும் உள்ளன என்று அவர்கள் அறிவித்தனர். அணு சக்தியை வெளிப்படுத்த வேண்டுமெனில் மையக் கருவை உடைத்து, சிதைத்து வெடிக்க வைக்க வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

1934ல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த என்ரிகோ பெர்மி நியூட்ரான்களை (மின் இயக்கமில்லாத சிற்றணுக்களை) பயன்படுத்தி வலுவான அணுக்களைப் பிளக்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டினார்.

யூரேனியத்தை பயன்படுத்தி டிசம்பர் 1938ல் இதே முறையில் அணுவைப் பிளந்து பெர்லினில் ஒட்டோ ஹான் மற்றும் பிரிட்ஜ் ஸ்ராஸ்மேன் ஆகியோர் சாதனை புரிந்தனர். அணுவின் கருவுள் அவர்கள் வெற்றிகரமாக பிளவை ஏற்படுத்தினர். அணுவைப் பிளந்ததால் சக்தியை வெளியேற்றலாம் என்ற ஐன்ஸ்டீனின் கூற்றை 38 அண்டுகளுக்கு பிறகு வெற்றிகரமாக சாதித்துக் காட்டனர்.

1939 ஆகஸ்ட் 2ம் தேதியன்று அமெரிக்க குடியரசுத் தலைவர் பிாங்க்ளின் ரூஸ்வோல்டிற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு கடிதம் எழுதினார். அக்கடித்தில் ''கடந்த 4மாதங்களாக பிரான்ஸைச் சேர்ந்த ஜோலியோட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெர்மி மற்றும் ஸ்ஜிலார்ட் ஆகியோர் மிகப் பெரும் அளவிலான யூரேனியத் திடப் பொருளை பயன்படுத்தி சங்கிலித் தொடரான அணு அதிர்வுகளை ஏற்படுத்த முடியும் என்பதை செயல் ரீதியாக காட்டியுள்ளனர்.

இதன் விளைவாக குண்டுகளையும் தயாரிக்க இயலும். இதுபோன்ற ஒரேயொரு குண்டு துறைமுகம் ஒன்றில் வெடிக்குமேயானால் ஒரு முழு துறைமுகத்தை மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் முற்றிலும் அழிக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. எனவே தாமதமின்றி அணு ஆயதத் திட்டத்தை நீங்கள் தொடங்க வேண்டும்'' என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தமது வாழ்வின் அந்திமக் காலத்தில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதத்தைத் தயாரிக்கத் தான் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் பெரிதும் வருந்தினார். இது குறித்து லினஸ் பாலிங் என்ற மற்றொரு முக்கிய விஞ்ஞானிக்கு எழுதிய கடிதத்தில் ''அணுகுண்டுகளை தயாரிக்குமாறு அதிபர் ரூஸ்வோல்டிற்கு பரிந்துரை செய்து நான் எழுதிய கடிதம் என் வாழ்வில் நான் செய்த மாபெரும் தவறாகும்'' என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார்.

ஐன்ஸ்டீன் தனக்கு எழுதிய கடிதத்தை அமெரிக்க அதிபர் ரூஸ்வோல்ட் தனது உதவியாளருடன் ''இது செயல்படுத்தப்பட வேண்டும்'' என்ற குறிப்புடன் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து ''மேன்ஹாட்டன்'' திட்டம் என்ற பெயரில் அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்க நிர்வாகம் இறங்கியது. விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தளபதிகள், அரசு அதிகாரிகள் என ஒரு பெரும் வல்லுனர்கள் குழுவாக இணைந்து ஆறு ஆண்டு காலம் ஆய்வில் இறங்கினார்கள். முதலில் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்த ஆய்வுகள், பிறகு அசுர வேகத்தில் வளர்ந்தன.

அணுகுண்டு தயாரிக்கும் இந்த ஆய்விற்காக அமெரிக்கா 200 கோடி டாலர்களை செலவு செய்தது. அதிக எண்ணிக்கையில் சிறப்பு ஆய்வுக்கூடங்கள் இதற்காக உருவாக்கப்பட்டன. அமெரிகாவில் 19 மாகாணங்களிலும், கனடாவிலும் 37 ஆய்வு மையங்கள் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் ஒரு சிறிய வட்டத்தைத் தவிர அதற்கு வெளியில் உள்ள எவருக்கும் இது பற்றிய விபரம் தெரியாமல் ரகசியமாக இந்த நாசகரப் பணிகள் நடைபெற்று வந்தன.

இப்படியாக அணுகுண்டு தயாரிப்புப் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. 1945 ஆகஸ்ட் 6ம் நாள் ஈனோலாகே என்றழைக்கப்பட்ட அமெரிக்க விமானம் உலக வரலாற்றில் முதன் முறையாக ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் அணுகுண்டை வீசியது. இதில் 1,40,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1945 ஆகஸ்ட் 9 அன்று மீண்டும் அமெரிக்கா மற்றொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் அணுகுண்டு வீசியது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட்டு விலகி ஒரு மைலுக்கு அப்பால் குண்டு வெடித்தது. இருப்பினும் 75,000 பேர் இதில் கொல்லப்பட்டார்கள்.
அணு சக்தி ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு, மனித இன பேரழிவிற்கு வழிவகுத்த கொடிய வரலாறு இப்படித்தான் தொடங்கியது.

நன்றி: ஒற்றுமை இதழ் ஜுன், 16.2002

(2002ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் மூளும் அபாயம் இருந்தது. அச்சமயத்தில் அணு ஆயுதப்போர் குறித்து சில அடிப்படை தகவல்களை வழங்கியது ஒற்றுமை இதழ்)

3 comments:

Amar said...

அபு முறை அவர்களே.

மிக நல்ல பதிவு.

கைகுடுங்கள்!

தெவையில்லை rhetoric எதுவும் இல்லாமல் மிக நன்றாக ஒரு கருத்தை சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க.

அணுத்திமிர் வேண்டாம், அணுசக்தி வேண்டும்!

வெளிகண்ட நாதர் said...

இது போன்ற விளக்க கட்டுரைகள் மிகவும் அவசியம், அனத்துசாராரும் இசக்தியினை நன்றரிய! வாழ்த்துக்கள்!

அபூ முஹை said...

சமுத்ரா அவர்களே நன்றி!
இந்தியாவின் சிறந்த பொருளாதார விஞ்ஞானியாகிய நமது மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், அமெரிக்காவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை ஆதரிக்கிறேன்.

வருகை தந்த வெளிகண்ட நாதர் அவர்களே நன்றி!

அன்புடன்,
அபூ முஹை