Saturday, April 16, 2005

தலைமைக்குக் கட்டுப்படல் நிர்ப்பந்தமா?

திருக்குர்ஆன் 4:59ம் வசனத்தைச் சுட்டிக்காட்டி அந்த வசனத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளங்கிக் கொள்ள முடியாதக் கருத்தை,(நிர்ப்பந்திக்கிறது) தமது கைச் சரக்காகச் சேர்த்து முன் வைத்திருக்கிறார். இது நேசகுமாரின் நுனிப்புல் மேயும் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

4:59 வசனத்தை விளங்குவதற்கு முன், திருக்குர்ஆன் வசனங்களை விளங்குவதற்கு, திருக்குர்ஆன் என்ன நிபந்தனை விதிக்கிறது என்பதை விளங்குவோம்.

25:73. இன்னும் அவர்கள் தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)

அல்லாஹ்வின் வசனங்கள் என்றாலும் அதை செவிட்டுத்தனமாகவும், குருட்டுத்தனமாகவும் நம்பாமல் அந்த வசனத்தில் சொல்லப்படும் விஷயங்களை சிந்திக்கச் சொல்கிறது. அறிவைக் கொண்டு, ஆய்வு செய்து இறைவசனத்தில் சொல்லப்படும் நன்மை, தீமைகளை விளங்கி செயல்படவே கட்டளையிடுகிறது. இன்னும் பிரபல்யமான ஒரு நபிமொழியையும் நாம் தெரிந்து கொள்வோம்.

''ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமானதாகும்'' நபிமொழி.

ஒருவர் கேள்விப்படும் செய்தி, தகவல் இது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். இதைப்பரிசீலிக்காமல் தமது காதில் விழும் செய்திகள் அனைத்தையும் மற்றவருக்குச் சொல்வது பொய் பரப்புவதற்கு துணை போவதாகவே இருக்கும். ஆகவே உண்மையா, பொய்யா என்பதை நன்கு பரிசீலித்தப் பின்னரே தாம் கேள்விப்பட்ட தகவலை ஒருவர் அடுத்தவரிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் அவரும் பொய்யராகவேக் கருதப்படுவார். இதை மனதில் பதித்துக் கொண்டு மேலே செல்வோம்.

//*இவற்றிற்கு மேலும் சில நிபந்தனைகளும் பல இடங்களில் உண்டு. ஆவிகள்(ஜின்), அமானுஷ்ய சக்திகள், வானவர்கள்(ஜிப்ரில்,ஜிப்ரியீல் என்றழைக்கப் படும் காப்ரியேல் போன்றவர்கள்), ஜிப்ரிலின் மகத்தான செயல்பாடுகள் என ஒரு மாய மந்திர உலகை கண்முன் நிறுத்தி அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாது அல்லாஹ்வின் தூதருக்கும், இஸ்லாமிய தலைமைக்கு அடிபணிந்து நடப்பதற்கும் நிர்ப்பந்திப்பது(பார்க்க திருக்குரான் வசனம் 4:59) என பல விதங்களில், பல இஸ்லாமிய சமூகங்களில் வேறு வேறு விதமான அரசியல் இஸ்லாம்கள் பின்பற்றப் படுகின்றன, முன்வைக்கப் படுகின்றன.*//

நேசகுமார் பயம் என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு திருக்குர்ஆன் வசனங்களுக்கு மனம் போன போக்கில் பொய்யான விளக்கங்களை தைரியமாக முன் வைக்கிறார். இது பொய்யர்களாலேயே சாத்தியம் என்பதை ''கேள்விப்படுவதையெல்லாம் தீர விசாரிக்காமல் பிறருக்கு அறிவிப்பதே பொய்யர் என்பதற்கு போதுமானதாகும்'' நபிமொழியும் உறுதி செய்கிறது.

அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கட்டுப்படுவதுஅல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கட்டுப்படுவது பற்றி 3:32, 3:132, 4:13, 4:69, 4:80, 5:92 இன்னும் பல வசனங்கள் வலியுறுத்துகிறது. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதும், அல்லாஹ்விடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு போதித்த அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் போதனைகள். இறைத்தூதர்கள் மூலமாகவே இறைவன் மக்களுக்கு நல்வழிகளைப் போதிக்கிறான். தூதருக்குக் கட்டுப்படுதல் என்பது ஒரு மனிதருக்குக் கட்டப்படுவது போன்றதல்ல, எவரும் பெற முடியாத இறைத்தூதுவத்திற்குக் கட்டுப்படுவதாகும்.

தூதருக்குக் கட்டுப்படாமல், அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது ஒரு போதும் சாத்தியமில்லை. ஏனெனில் எவரும் அல்லாஹ்விடமிருந்து நேரடியாகச் செய்தியைப் பெற்று நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. இறைத்தூதர் வழியாகவே இறைவனை நம்புகிறார்கள். தூதருக்குக் கட்டுப்படாமல் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவேன் என்று ஒருவன் சொன்னால் அவன் இறைநம்பிக்கையை விட்டு வெளியேறியவனாவான். இதனால் சில அரை வேக்காடுகள் சொல்வது போல் ''அல்லாஹ்வைவிட தூதருக்கு வழிபடுகிறோம்'' என்பது பொருளல்ல.

4:80. எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்.

இறைத்தூதருக்குக் கட்டுப்படுவதை, தனக்குக் கட்டுப்படுவதாக அல்லாஹ் கூறிகிறான். சற்று நிதனாமாக சிந்தித்தால் செயல் ரீதியாக, இறைத்தூதருக்குக் கட்டுப்படாமல் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது என்பது அறிவுக்குப் பொருத்தமில்லாதது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

4:59ம் வசனத்தைப் பற்றிப் பார்ப்போம்.
4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

திருக்குர்ஆனில் பல வசனங்கள் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்றுரைக்கிறது. 4:59வது வசனத்தில் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்பதோடு, ''உங்களின் தலைவருக்கும் கட்டுப்படுங்கள்'' என்று கூறுகிறது. இவ்வசனத்தை நடுநிலையோடு சிந்தித்தால் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்பதையே இறுதி முடிவாகச் சொல்கிறது. எப்படி?

தலைமைக்குக் கட்டுப்படுதல்.
தலைவருக்குக் கட்டுப்படுதல் என்றால் தலைவர் என்ன சொன்னாலும் அதற்குக் கட்டப்பட வேண்டும் என்பது பொருளல்ல. ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் சாதியினத் தலைவர்களும் எது சொன்னாலும் அதில் அடங்கியுள்ள தீமைகளைப் பரிசீலிக்காமல் அதை அப்படியேக் கண்மூடி பின்பற்றும் பக்தர்கள் போல - தொண்டர்கள் போல் செயல்பட இஸ்லாம் சொல்லவில்லை. தலைமைக்குக் கட்டுப்படுவது பற்றியும் இஸ்லாம் அளவுகோல் விதித்திருக்கிறது அதைப் பார்ப்போம்.

''பாவத்தைக்கொண்டு ஏவப்படாதவரைத் தமது விருப்பிலும், வெறுப்பிலும் தலைமைக்கு செவிமடுத்துக் கீழ்படிய வேண்டும். பாவத்தைக்கொண்டு ஏவப்பட்டால் செவிமடுக்கவோ, கீழ்படியவோ கூடாது'' (நபிமொழி)

தலைமைக்குக் கட்டுப்படும் அளவுகோலாக பல நபிமொழிகள் இருந்தாலும், அறிவுடையோர் விளங்கிக்கொள்ள இந்தவொரு நபிமொழியே போதும். தலைவர்களுக்குக் கட்டப்படும் போது தீமையான செயல்களின் ஏவல்கள் இருப்பதாக சந்தேகப்பட்டால் - இதில் கருத்து வேறுபாடு உருவானால் திருக்குர்னிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்தும் ஆதாரங்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆதாரம் இருந்தால் மட்டுமே பின்பற்ற வேண்டும். ஆதாரம் இல்லையென்றால், திருக்குர்ஆன் நபிவழிக்கு மாற்றமாக தலைவர்கள் கட்டளையிட்டிந்தால் அதற்குக் கட்டுப்படத் தேவையில்லை.

4:59. உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

சமுதாயத்தில் கருத்து வேறுபாடு உருவானால் ''அதை அல்லாஹ்விடமும், அல்லாஹ்வின் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள்'' என்று கருத்து வேறுபாட்டிற்கு திருக்குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் தீர்வு காணச் சொல்வதோடு, இதுதான் சிறப்பான, அழகான தீர்வாக இருக்கும் என்றும் 4:59ம் வசனத்தின் இறுதிப்பகுதி எடுத்தியம்புகிறது.

தலைவரைக் கண்மூடிப் பின்பற்றினால்.
தலைவரின் கட்டளைப்படி, மலையிலேறி விறகு சுமந்து வந்து, தரையில் குழி தோண்டி விறகை குழியில் போட்டு தீயை மூட்டி எரிகின்ற தீயில் குதியுங்கள் என்று தலைவர் சொல்ல அதில் குதிப்பவர்கள் அந்தத் தீயிலிருந்து வெளியேறவே முடியாது - அதாவது நரகவாசிகள் என்று இஸ்லாம் கூறுகிறது. கண்மூடிப் பின்பற்றுபவர்களின் கதி இதுதான். இன்னும், அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கட்டுப்படாமல், தலைவருக்கும் பெரியவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களின் நிலை என்ன? என்பதையும் இவ்விரு வசனங்களிலிருந்தும் விளங்கலாம்.

33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில் ''ஆ கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே, இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!'' என்று கூறுவார்கள்.

33:67. ''எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்'' என்றும் அவர்கள் கூறுவார்கள்.

தலைவர்களைக் கண்மூடிப் பின்பற்றி நரகத்தைச் சென்றடைந்தவர்களின் அவலமே 33:66,67 வசனங்களில் எடுத்துச் சொல்லப்படுகிறது. இதற்கு முரணாக 4:59வது வசனத்தை விளங்கி, ''இஸ்லாமிய தலைமைக்கும் அடிபணிந்து நடப்பதற்கு நிர்ப்பந்திருக்கிறது'' என இஸ்லாம் கூறாததை - தமது சுய விளக்கத்தை அவதூறாக வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

நற்சிந்தனையாளர்களுக்கோர் இறைவசனம்.
5:2. நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்.

2 comments:

பாபு said...

இஸ்லாம் பற்றி 'நெகட்டிவ்'வாகவே எழுதப்பட்ட புத்தகங்களையும் இணைய தளங்களையும் மேய்கிற 'நேச குமார்' போன்றவர்கள் இதுபோல் 'பாசிட்டிவ்' வான எழுத்துக்களையும் வாசிக்க வேண்டும். இஸ்லாம் குறித்த நேச குமார்களின் குழப்பத்துக்கு இதுவே நிவாரணமாகிவிடும். காரணம், அவருடைய அறிவின் மீது எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது

அபூ முஹை said...

//*அவருடைய அறிவின் மீது எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது*//

உங்கள் நம்பிக்கை பலிக்கட்டும்!

இந்திய வாழ் முஸ்லிம்கள் மீது ''வட்டி'' திணிக்கப்பட்டிருக்கிறது என்பதை விளங்காமல் - வட்டியிலும் பொடு போக்காக நேசகுமார் தனது கோணல் புத்தியை காட்டியிருப்பதைப் பார்த்தால், ஒரு வேளை உங்கள் நம்பிக்கை...