Wednesday, April 20, 2005

நரகம் பற்றிய பயமேன்? 2

தண்டிக்கும் கடவுள்களெல்லாம் அன்புக்கு மாறிவிட்டனவாம், இனி மனிதர்களுக்கு கடவுள் தண்டினை என்பது இல்லவே இல்லை, எல்லாமே அன்புதான். மிச்சம் - மீதமிருந்த கடவுள் பயத்தையும் துடைத்தெறிந்துவிட்டு மனிதர்கள் பஞ்சமா பாதகங்களை துணிந்து செய்யலாம் கடவுள் தண்டிக்கவே மாட்டார், மாறாக அன்பையேக் காட்டுவார்.

//*முதலாவது காரணம், தண்டிக்கும் கடவுளிலிருந்து, அன்புவடிவான கடவுளுக்கு அனைத்து மதங்களும் மெல்ல நகர்ந்துவிட்டன. ருத்ரன் சிவனானது போல - ஜெஹோவாவுக்கும் கர்த்தருக்குமான பரினாம வளர்ச்சியைப் போல. ஆனால் இஸ்லாத்தில் இன்னமும் இந்த பழைய கடவுட் கோட்பாடே நிலவிவருகிறது. இது முக்கிய காரணம்*//

ருத்ரன் சிவனானதால் தானோ, காவித் துறவிக்கு கொலை சிந்தனை உதித்து - ஐம்பது லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமான கொலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ருத்ரன் அன்பாகி விட்டதால் - என்ன அக்கிரமம் செய்தாலும் கடவுள் தண்டிக்கவே மாட்டார் என்ற தைரியத்தில் துறவியும் - மனிதனை வெட்டி சாய்க்கத் துணைபோயுள்ளார் - குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று வைத்துக் கொண்டாலும், அவதூறு சொன்னவர்களையும் கடவுள் தண்டிக்க மாட்டார், அவதூறு சொன்னதற்காக அன்பு காட்டுவார். அவதூறால் அவமானப்பட்டவர் மன உளைச்சலுக்கு ஆளானதெல்லாம் வெறும் பிரமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் - அதாவது அவதூறு சுமத்தப்பட்டவனுக்கும் கடவுள் அன்பு காட்டுவார், அவதூறைச் சுமத்தியவனுக்கும் கடவுள் அன்பு காட்டுவார் என்பது உறக்கத்தில் உளறிய நல்லவொரு கடவுட் கோட்பாடு(?)

இன்னும் கேளுங்கள்.
கொலை செய்தவனுக்கும் அன்பு - கொலையுண்டவனுக்கும் அன்பு - பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கும் அன்பு - செய்யப்பட்டவளுக்கும் அன்பு - திருட்டு, பாக்கெட்டடி, கொள்ளையடித்தவனுக்கும் அன்பு - பறிகொடுத்தவனுக்கும் அன்பு - உணவுப் பொருளில் கலப்படம் செய்தவனுக்கும் அன்பு - கலப்படத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அன்பு - போலி மருந்தைத் தயாரித்தவனுக்கும் அன்பு - போலி மருந்தை உபயோகித்துச் செத்தவர்களுக்கும் அன்பு - அரசியல் என்ற பெயரில் குடிமக்களின் வரிப்பணத்தை ஆயிரமாயிரம் கோடியாகக் கொள்ளையடிப்பவர்களுக்கும் அன்பு - விழித்துக் கொண்டே பறிகொடுத்த மக்களுக்கும் அன்பு. மொத்தத்தில் நியாயம் - அநியாயம் என்ற பாகுபாடு இல்லாமல், அநியாயம் செய்தவன் மீதும் அன்பு - அநியாயம் செய்யப்பட்டவன் மீதும் அன்பு. இதுதான் தண்டிக்கும் கடவுளிலிருந்து, அன்பே வடிவான கடவுளுக்கு மாறிய நவீனயுகக் கடவுட் கொள்கை. மனிதன்தான் அடிக்கடிக் கொள்கைகளை மாற்றிக் கொள்வான். கடவுளும் கொள்கைகளை மாற்றிக் கொள்வதென்பது, கடவுட் கொள்கைகளை மனிதன் தீர்மானிக்கிறான் என்றே பொருள்.

இஸ்லாத்தின் இறைக் கொள்கைகளில் இந்தத் தடுமாற்றங்கள் இல்லை. அன்பு காட்டும் இறைவன் தண்டிக்கவும் செய்வான் என்பதே இஸ்லாம். அநீதி இழைக்கப்பட்டவன் மீது அன்பு காட்டுவதும் - அநீதி இழைத்தவனை தண்டிப்பதும் இறைத்ததன்மைக்கு முரணானதில்லை. தன்னை வணங்குபவர்களை நேசிப்பதும் - வணங்காதவர்களைத் தண்டிப்பதும் இறை நியதிக்கு மாற்றமானதில்லை. இது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன்..

கிறிஸ்துவக் கடவுட் கொள்கை
நேேசகுமார் தமது இத்துப் போன வாதத்திற்கு வலு சேர்க்க கிறிஸ்த்துவ மதத்தையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் - தண்டிப்பதிலிருந்து, அன்புக்கு மெல்ல நகர்ந்த மதங்களில் கிறிஸ்த்துவத்தையும் சேர்த்துக் கொண்டார். ஆனால் பைபிள் இவருக்கு மாற்றமாகக் கூறுகிறது.

''என் நாமத்தினால் அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவி கொடாதாவன் எவனோ அவனை நான் ''விசாரிப்பேன்'' (பழைய ஏற்பாடு, உபாகமம்-18, வசனம்-19)
கத்தோலிக்க பைபிளில் இவ்வசனத்தின் இறுதி வாக்கியம் ''அவனை நான் பழி வாங்குவேன்'' என்றுள்ளது.

''பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் ''விசாரிக்கப்படுவார்'' (உபாகமம் 5:9, யாத்ராகமம் 34:7)


இறுதித் தீர்ப்பு நாள் விசாரணை உண்டு என்பதையே பைபிளின் வசனங்களும் உறுதி செய்கிறது.

''பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி 'கர்த்தாவே! கர்த்தவாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை..'' (மத்தேயு 7:21-23)

ஒரிறைக் கொள்கையை நிராகரித்தவர்கள் பரலோக ராஜ்யத்தில் (சொர்க்கத்தில்) பிரவேசிப்பதில்லை என்றும் - கிறிஸ்த்துவ மதக் கடவுளும் ''விசாரித்துத் தண்டிக்கக் கூடியவரே'' என்று கிறிஸ்துவ வேதமான பைபிள் கூறுகிறது.

மீண்டும் சந்திப்போம்.

No comments: