Monday, March 14, 2005

கற்காலம் சொல்லும் கருத்து!?

சகோதரர் நாகூர் ரூமியின் ''கற்காலம்'' என்ற கட்டுரையின் சுட்டியை அனுப்பி, இது பற்றிய "இஸ்லாத்தின் கருத்தென்ன? என்பதை முடிந்தால் விளக்குங்கள்'' என்று நண்பரொருவர் கேட்டிருந்தார். கட்டுரையைப் படித்ததில், இஸ்லாத்திற்கு முரணானக் கருத்தாக என் சிந்தனைக்குத் தோன்றுவதை இங்கே பதிவு செய்கிறேன் தவறிருந்தால் திருத்துங்கள்.

கல்லெறிந்து கொல்லும் தண்டனை இஸ்லாத்தில் இல்லை என்பதைப் போல் காட்ட கற்காலம் கட்டுரையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. எதற்காக இந்தக் கட்டமைப்பு? யாரைத் திருப்திப்படுத்த இந்த சுத்தி வளைப்பு?

திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால், அவர்களுக்கு கசையடியும், திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்தால், அவர்கள் மரணிக்கும் வரை கல்லாலடிப்பதும், விபச்சாரக் குற்றத்திற்காக இவ்விருவகையான தண்டனைகளை இஸ்லாம் விதித்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை இந்தச்சட்டம் மாற்றப்படவில்லை. நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியே கலிஃபாக்களின் ஆட்சியிலும் விபச்சாரம் செய்த திருமணம் ஆகாதவர்களுக்கு தண்டனையாக கசையடியும், விபச்சாரம் செய்த திருமணம் ஆனவர்களுக்கு தண்டனையாக கல்லெறிந்து கொல்வதும் என இருவகை தண்டனைகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதை பல ஹதீஸ்களிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகிறது.

தவறான புரிதல். (விபச்சாரம் செய்த குரங்கு!?)
அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேண். நானும் அவற்றோடு சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன். (தமிழ் புகாரி, எண்3849)

நபிமொழி, அல்லது நபிவழி என்று ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வதற்கு அந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என இம்மூன்றில் ஏதாவது ஒன்று இடம்பெற்றிருக்க வேண்டும். நபிவழி ஹதீஸ்களை - செய்திகளைத் தேர்ந்தெடுக்கும் தகுதிகளில் இதுவும் ஒரு அளவுகோலாகும்.

புகாரி 3849வது செய்தியை மைமுன் என்பவரின் மகன் அம்ர் (ரஹ்) அவர்கள் தமது கருத்தாகவேச் சொல்கிறார். இது நபிமொழி என்ற அந்தஸ்தைப் பெறாது. (மூலத்தில்) அறிவிப்பாளர் தொடரில் நபித்தோழர் யாரும் இடம்பெறவில்லை, நபித்தோழர்கள் மட்டுமே நபிவழிச் செய்தியை அறிவிக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்தும், நபி (ஸல்) அவர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டாதவர் ஆவார். (இர்ஷாத்துஸ் ஸாரீ, பார்க்க புகாரி பின் குறிப்பு) எனவே அம்ர் (ரஹ்) நபித்தோழர் அல்ல. மேலும் சட்டம் வகுக்க இது நபிமொழி இல்லை.

//இது நபிகள் நாயகம் அவர்களின் ஆளுமைக்கே எதிரானது.//
தாயிஃப் மக்களை மன்னித்தது.
விஷம் வைத்துத் தன்னைக்கொல்ல வந்தவரை மன்னித்தது.
தன்னை எதிர்த்தும், கொல்லவும் முயற்சி செய்த குறைஷிகளை மன்னித்தது.

இவையெல்லாம், நபி (ஸல்) அவர்கள் தமக்குத் தீங்கிழைத்தவர்களை மன்னித்தார்கள். ஆனால் குற்றவாளிகள் எவரையும் மன்னிக்காமல் தண்டனை வழங்கியிருக்கிறார்கள். ''என் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் குற்றவாளிகளை தண்டித்து தீர்ப்பு வழங்குவதில் உறுதியான ஆட்சியாளராக இருந்தார்கள்.

இஸ்லாம், சில குற்றத்திற்காக மரண தண்டனை விதித்திருப்பதைப்போல், மணமானவர்கள் விபச்சாரம் செய்தக் குற்றத்திற்காகவும் கல்லெறிந்து கொல்லும் - மரண தண்டனையை நிறைவேற்றும்படி சட்டம் இயற்றியுள்ளது.
''இது எப்படி நபி (ஸல்) அவர்களின் ஆளுமைக்கு எதிரானதாகும்''?

//1.என்னிடமிருந்து ஹதீதுகளை அறிவிப்பாளர்கள் வந்து உங்களிடம் கூறுவார்களானால், அந்த ஹதீதுகளை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள், திருக்குர்ஆனின் ஒளியில் அவற்றை உரசிப் பாருங்கள். திருக்குர்ஆனோடு அது ஒத்துப்போனால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் அதை விட்டுவிடுங்கள்.//

இந்த கருத்தில் வரும் ஹதீஸ் பலவீனமானது, மட்டுமல்ல இந்த ஹதீஸின் கருத்தும் முரணானவை. எப்படி?

''என்னுடைய செய்தி திருக்குர்ஆனோடு ஒத்துப் போனால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் விட்டுவிடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்களின் சொல் திருக்குர்ஆனுக்கு முரண்படும் என்ற முரண்பட்ட கருத்தை முன்வைக்கிறது. மேலும் ''இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை திருக்குர்ஆனாகவே இருந்தது'' என்ற உண்மையான நபிமொழிக்கும் முரண்படுகிறது.

இன்னும் எழுதுவேன், எழுதியவற்றில் தவறிருந்தால் சகோதரர் நாகூர் ரூமி திருத்துங்கள்.

4 comments:

அபூ முஹை said...

தனக்கு உரிமையே இல்லாத மாற்றானின் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் காட்டுமிராண்டித்தனத்துக்குப் பெயர்தான் மனித உரிமையா?

ஒருவனுக்கு மட்டுமே மனைவியாக இருப்பேன் என்று உறுதிமொழியெடுத்து, அந்த ஒப்பந்தத்தை மீறி, மற்றொருப் பெண்ணின் கணவனுடன் உடலுறுவு கொள்ளும் தரங்கெட்ட மிருகச் செயல்தான் உங்கள் பார்வையில் மனித நேயமாகத் தெரிகிறதா?

திருமணமே செய்து கொள்ளாமல் திருமண உறவை இஸ்லாம் அனுமதிக்கவில்லை அதற்கு நியாயமான காரணங்கள் உண்டு அதை விளக்கும்வரை பொறுத்திருங்கள்.

நல்லடியார் said...

//so you are in support of such barbaric practices.this is nothing but fundamentalism and you have no
sense of humaness.//

விசிதா,

பெங்களூர் கால்சென்டர் ஊழியர் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் Hang the Rapist என்ற பதாகைகளுடன் பெண்களும் ஆண்களும் கோஷம் போட்டனர். உங்கள் பார்வையில் அவர்களும் மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டிகளா? அல்லது
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மனிதாபிமானமற்ற செயலா?

அபூ முஹை said...

வ அலைக்கும் ஸலாம்.
அன்பின் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு.

''உங்களிடம் ஹதீஸ் வருமானால் அதை குர்ஆனோடு சேர்த்துப் பாருங்கள். குர்ஆனுக்கு ஒத்திருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். குர்ஆனுக்கு மாற்றமாக இருக்குமானால் அதை விட்டு விடுங்கள்'' என்று ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது புனையப்பட்ட தவறான ஹதீஸாகும். இதற்கு ஹதீஸ் நூல்கள் எதிலும் ஆதாரமில்லை (ஷரஹ் - சுனன் அபூதாவூத்)

உண்மையான ஹதீஸ்களோடு பலவீனமான, புனையப்பட்ட ஹதீஸ்களும் இடைச் செருகலாகியுள்ளது என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். உண்மையான நபிமொழிகளை உறுதிப்படுத்திக்கொள்ள திருக்குர்ஆன்தான் முதல் உரைகல் என்பதில் நம்மிடையே மாற்றுக் கருத்தில்லை ஆனால்..

//1.என்னிடமிருந்து ஹதீதுகளை அறிவிப்பாளர்கள் வந்து உங்களிடம் கூறுவார்களானால் அந்த ஹதீதுகளை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் திருக்குர்ஆனின் ஒளியில் அவற்றை உரசிப் பாருங்கள். திருக்குர்ஆனோடு அது ஒத்துப்போனால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் அதை விட்டுவிடுங்கள்.// - ஹதீஸ்களை திருக்குர்ஆனோடு ஒப்பிட்டுப் பாருங்கள், திருக்குர்ஆனுக்கு ஒத்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், மாற்றமாகயிருந்தால் விட்டு விடுங்கள் என்று இந்த செய்தியில் சரியான கருத்துதானே சொல்லப்படுகிறது? என்றாலும் - நபி (ஸல்) அவர்கள் இப்படி சொல்லியிருக்கிறார்களா?, சொல்லியிருப்பார்களா? என்பதே கவனிக்கத் தக்கது.

//மேலே கண்ட ஹதீஸ் பலமானதா என்னவென்று எனக்கு தெரியாது. ஆனால் தாங்கள் கூறியுள்ள படி அதன் கருத்து முரணாணது அல்ல.// - கருத்து முரணாக இல்லை என்பதற்காக அதை ஹதீஸ் என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே நமது நிலைப்பாடு.

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மட்டுமே (இஸ்லாமிய வழக்கில்) ஹதீஸாகும். நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பு திருக்குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கும் என்று நபி (ஸல்) அவர்களே கூறியதாக இருப்பதால், மேற்கண்ட செய்தியின் கருத்தை மேலோட்டமாகப் பார்த்தாலே இது புறக்கணிக்கப்பட வேண்டியது - புறக்கணிக்க வேண்டுமென்று மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

அன்புள்ள அப்துர்ரஹ்மான், நீங்கள் மிக அவசரப்படுகிறீர்கள் என்று கருதுகிறேன்.

உங்கள் மின்னஞ்சலை பார்த்துக் கொண்டேன். ஹஜ் பெருநாள் கழியும்வரை எனக்கு வேலைப்பளு இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் அதன்பின் உங்களுக்கு விளக்கம் எழுதுகிறேன். நன்றி!

அன்புடன்,
அபூ முஹை