Thursday, March 24, 2005

இது இஸ்லாம், இவர் முஸ்லிம்.

கொள்கைகளால் வேறுபட்டு பல மதங்களாக பிரிந்திருந்தாலும், மனிதயினத் துவக்கம் ஒரு மனிதரிலிருந்தே பல்கிப் பெருகிப் பரவியது என்றே இஸ்லாம் கூறுகிறது.

மனிதர்களே! அவன்தான் உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (திருக்குர்ஆன், 4:1, 7:189, 39:6)

சாதி, இனம், மொழி, கொள்கையென்று வேறுபட்டு - பிரிந்து கிடந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒரு தந்தை வழித் தோன்றிய, ஒரேகுடும்பத்தினரே என்பதை இஸ்லாம் அழுத்தமாகச் சொல்கிறது.

//" இறைவன் ஒருவனே என்ற இந்த அழுத்தமான தத்துவமானது, இறைவனின் படைப்பான மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற சிந்தனைக்கு மனிதனை அழைத்துச் செல்வதாக உள்ளது. எனவே இறைவனின் ஒருமையையும், முஹம்மது அவனது இறைதூதர் என்பதையும் பறைசாற்றும் கலிமா, ஒரு முஸ்லிம் முஸ்லிமாக இருப்பதற்கு அடிப்படையானது. இந்த கலிமாவை மனதால் முற்ற முழுக்க ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளாதவர் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?" [பக்கம் 32, இஸ்லாம் ஒர் எளிய அறிமுகம்.] // (பக்கம் 40, இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், இரண்டாம் பதிப்பு)

நாகூர் ரூமியின் முதல் பாதி கருத்துக்கள் மிக அருமை. பிற்பகுதியில் ''இந்த கலிமாவை முற்ற முழுக்க ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்பதை அறிவுரையாக ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் வலியுறுத்த முடியாது.

லாயிலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை என்றும், முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும், தூதருமாவார் என சாட்சி கூறுகிறேன். என்று சொல்லிவிட்டால் அவர் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவராக இஸ்லாத்தில் நுழைந்து முஸ்லிம் ஆகிவிடுகிறார்.

ஓரிறைக் கொள்கையை உளமாற ஏற்றுக்கொண்டாரா? அல்லது உள்ளத்தால் ஓரிறைக் கொள்கையை ஏற்காமல் வேறு காரணத்திற்காக ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர் போல் இஸ்லாத்தில் நுழைந்தாரா? என்று ஆராய்ச்சி செய்யும் அதிகாரத்தை இறைவன் எவருக்கும் வழங்கவில்லை.

''நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக ''நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறிவிடாதீர்கள்''.. (திருக்குர்ஆன், 4:94)

''அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதிமொழி கூறி, தொழுகையைக் கடைபிடித்து, ஸகாத்தும் வழங்கும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் செய்து விட்டால் -தகுந்த காரணம் இருந்தாலன்றி - என்னிடமிருந்து தம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

(ஒரு போரில்) ''நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போய்ச் சேர்ந்தோம். அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்டபோது அவர் ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்ல அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டவே அவர்கள் என்னிடம் 'உஸாமா! அவர் ''லாயிலாஹா இல்லல்லாஹ்'' என்ற (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?'' என்று கேட்டார்கள். ''ஆயுதத்தை அஞ்சித்தான் அவர் இவ்வாறு சொன்னார் அல்லாஹ்வின் தூதரே'' என்று கூறினேன். ''அதை அவர் (உளப்பூர்வமாகச்) சொன்னாரா இல்லையா என்று அறிய அவருடைய இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா? என்று கடிந்து கேட்டார்கள்''. (புகாரி, முஸ்லிம்)

மேற்கண்ட இறைவசனமும், நபிமொழிகளும் நம்பிக்கை கொண்டவரின் வெளிப்படையைத்தான் அறியச் சொல்கிறது. நம்பிக்கை கொண்டவரின் அந்தரங்க நோக்கத்தை அலசச் சொல்லவில்லை. நம்பிக்கை கொண்டவரின் அந்தரங்கங்களை அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
நம்பிக்கை கொண்டு ஓரிறைக் கொள்கையை மொழிந்து, இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முஸ்லிமாகும் ஒருவர் அறிந்தும், அறியாமலும் இஸ்லாத்திற்கெதிராக செயல்படும் அவரின் செயல்களுக்கு அவரே பொறுப்பாளியாகிறார். என்பதையும் நாம் முன் வைத்த ஆவனங்களிலிருந்து விளங்கலாம்.

எது இஸ்லாம், யார் முஸ்லிம்?
இவையிரண்டுமே விரிவாக விளக்கப்பட வேண்டியவை. சுருக்கமாச் சொன்னால் திருமறைக் குர்ஆனும், திருக்குர்ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உண்மையான வழிகாட்டியும் மட்டுமே இஸ்லாம்!

லாயிலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று சாட்சி கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் முஸ்லிம்.

''அவன்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம் என்று பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது)'' (திருக்குர்ஆன், 22:78)

//இத்தெளிவை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், ஹமீது ஜா·பருக்கு என் தரப்பு பதில்களையும், ஏனைய கேள்விகளையும் முன்வைக்கிறேன்.//

மேலும் விளக்கம் தேவையெனில் எழுதவும். போதுமெனில் ஹாமீத் ஜாஃபருக்கு, நேசகுமார் தமது தரப்பு பதில்களையும், கேள்விகளையும் முன்வைக்கலாம்.

அதற்கு முன் இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் - ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள் என்ற 7.1.05ல் வலைப்பதிவு செய்த திண்ணைக் கட்டுரையைக் காணவில்லை அதை மீண்டும் நேசகுமார் பதிவு செய்து கொள்ளவும்
http://www.thinnai.com/le01060519.html

No comments: