''போர்க்களத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லாதீர்கள்'' என்ற நபிமொழிக்கு முரணாக ''போர்க்களத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல நேர்ந்தால் அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே'' என மற்றுமொரு நபிமொழி அறிவிக்கின்றது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான கருத்துடன் உள்ளதே என்று தோன்றினாலும், சரியாகப் புரியப்படாத சில விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். நபித்துவத்தைக் களங்கப்படுத்துவதற்கென்றே களமிறங்கியவர்கள் இவ்விரு வகை நபிமொழிகளையும் முன்னிருத்தி, இஸ்லாமை மாசுப்படுத்திட பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி வருகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்கள் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள். (நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587)
மற்றோர் நபிவழிச் செய்தி
''பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை விதித்தார்கள்'' (புகாரி, 3015. முஸ்லிம், 3588. திர்மிதீ, அபுதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன)
போர்க் காலங்களில் எதிரிகளுடன் யுத்தம் தொடங்கிய நிலையில் போர்க்களத்தில் பெண்களையும், சிறுவர்களையும் தாக்கக்கூடாது. என முஸ்லிம் அணியினருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விதித்தப் போர் விதியாகும். போர்க்களத்தில் எதிரிகளின் பெண்களையும், சிறுவர்களையும் தாக்கிக் கொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கின்றார்கள்.
முஸ்லிம் அணியின் சார்பாக பெண்கள் அறப் போரில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம் அணியில் நின்று யுத்தக்களமிறங்கி எதிரிகளுடன் சண்டையிடுவது பெண்களுக்குக் கடமையல்ல.
"இறைத்தூதர் அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்" என்றார்கள். (நூல்: புகாரி 1520, 1861, 2875, 2876)
பெண்கள் போர்க்களத்தில் ஆயதமேந்தி அறப்போர் செய்வது தடுக்கப்பட்டிருந்தாலும், எதிரிகளுடன் யுத்தம் நடத்தும் போர் வீரர்களாகிய தமது அணியினரின் தாகத்துக்குத் தண்ணீர் கொடுப்பது, காயமுற்றால் சிகிச்சையளித்து, காயமுற்றவர்களை அப்புறப்படுத்துவது போன்ற சேவைகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை!
அபூ பக்ர்(ரலி) அவர்களின் மகள் ஆயிஷா(ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) இருப்பதை கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சுரத்திலிருந்து இரண்டு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது. (நபிமொழிச் சுருக்கம் புகாரி 3811, 4064)
"(பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும், மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களையும், (காயமுற்றவர்களையும்) மதீனாவுக்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்." (புகாரி, 2882, 5679)
''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது அவர்களுடன் (என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி) அவர்களும் இன்னும் சில அன்சாரிப் பெண்மணிகளும் கலந்துகொள்வர். அப்பெண்கள் (அறப்போர் வீரர்களுக்கு) தண்ணீர் கொடுப்பார்கள். காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்'' (முஸ்லிம், 3698)
ஆயுதம் தாங்கி நேரடியாக போர்க்களத்தில் எதிரிகளுடன் போரிடுவது பெண்களுக்கு கடமை இல்லை என்றாலும் தற்காப்புக்காக பிச்சுவாக் கத்தி போன்ற சிறு ஆயுதத்தை வைத்துக்கொள்வதை நபியவர்கள் தடுக்கவில்லை. (முஸ்லிம் 3697)
முஸ்லிம் அணியின் சார்பாக போர் வீரர்களுக்கு உதவும் அடிப்படையில் போர்க்களத்தில் பெண்கள் கலந்துகொண்டு சேவை செய்யலாம். முஸ்லிம் அணியில் இருக்கும் பெண்கள் போராளிகளாக இல்லை என்பது போல் எதிரணியில் இருக்கும் பெண்களும் போராளிகளாக இல்லாமல் இருக்க வேண்டும். இரு அணிகளிலும் சேவைக்காகவே பெண்கள் உள்ளனர் போராளிகளாக இல்லை. என்று வைத்துக்கொண்டாலும் ஒவ்வொரு அணியினருக்கும் பிற அணியிலுள்ள பெண்கள் எதிரிகளைச் சார்ந்தவர்கள். பெண்கள் போராளிகளாக இல்லை எனினும் போரில் வெற்றிப்பெற்ற அணியினர் தோல்வியுற்ற எதிரணியினரின் பெண்களையும் போர்க் கைதிகளாக சிறைப்பிடிப்பர்.
போரில் பெண்களைக் கொல்லக்கூடாது என்பது போர்க்களத்தில் போராளிகளாக இல்லாத பெண்களையேச் சுட்டுகின்றது. யுத்தத்தில் நேருக்கு நேர் எதிரணியைச் சந்திக்கும்போது பெண் போராளித் தாக்க வந்தால் அவரை எதிர்த்துத் தாக்கவேண்டும் என்பதே போர் விதி! பெண்களைத் தாக்கக்கூடாது என்ற சட்டத்தை இங்கு கடைபிடித்தால் எதிரியான பெண் போராளியால் ஆண் போராளிக் கொல்லப்படுவார். போரில் பெண்களைக் கொல்லக்கூடாது என்கிற விதி தாக்கவரும் பெண் போராளிகளுக்குப் பொருந்தாது!
உஹதுப் போரில் வீரமரணமடைந்த ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலைக் கிழித்து ஈரக்குலையைக் கடித்துத் துப்பிய பெண்மணியாகிய ஹிந்த் (ரலி) அவர்கள் அப்போது முஸ்லிம்களுக்கு எதிரணியில் இருந்தார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. நேருக்கு நேர் எதிரிகளைச் சந்திக்கும் போரில் மூர்க்கத்தனமாக தாக்கவரும் எதிரி ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எதிர்த்துத் தாக்க வேண்டும்.
போர்களத்தில் பெண்கள் சிறுவர்கள் கொல்லப்பட்டால்
''இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே'' என்று பதிலளித்தார்கள். (நூல்கள் - புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590)
முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ள மற்றோர் நபிவழிச் செய்தியில்,
''குதிரைப் படையினர் இரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தும்போது (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடுவார்களே?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையரைச் சார்ந்தவர்களே'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (முஸ்லிம், 3591)
போரில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்லக்கூடாது என்ற (நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587) நபிமொழிக்கு முரணாக, போரில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டால் அவர்களும் எதிரிகளைச் சார்ந்தவர்களே என்று (நூல்கள்: புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590) மேற்கண்ட நபிமொழிகள் உரைக்கின்றது. இது எதிர்மறை முரணாகத் தோன்றினாலும், போர்க்களத்தில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்லக்கடாது என்பது விதி! போர்க்களத்தில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்ல நேர்ந்தால்... என்பது விதிவிலக்கு!
இருஅணியினர் யுத்தம் செய்யும்போது முஸ்லிம் அணியினருக்கு இணைவைப்பாளரின் அணியினர் எதிரிகள். இணைவைப்பாளரின் அணியினருக்கு முஸ்லிம் அணியினர் எதிரிகள். இரு அணியினரின் குடும்பத்தினரும் பிற அணியினருக்கு எதிரிகளைச் சார்ந்தவர்கள் என்பதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை! முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் யுத்தம் செய்யாத வரை இவர்கள் நேரடி எதிரிகள் அல்ல. அதே நேரத்தில் எதிரிகளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இது இருஅணியினருக்கும் பொருந்தும்.
போர்க்களத்தில் பெண்களையும் சிறுவர்களையும் தாக்கக்கூடாது எனத் தடை உள்ளதால் திடீர் தாக்குதல் நடத்தும்போது போரில் நேரடியாக ஈடுபடாத பெண்களையும் சிறுவர்களையும் திட்டுமிட்டுத் தாக்கும் எண்ணமில்லை என்றாலும் தெரியாமல் அவர்கள் தாக்கப்பட்டால் என்ன செய்வது? என்பதே இரண்டாவது வகையான ஹதீஸ்கள் விளக்குகின்றன. இதை இன்னும் சற்றுத் தெளிவாக இடம்பெறும் செய்தியில் விளக்கம் கிடைக்கின்றன.
''எங்களின் குதிரைகள் இணைவைப்பாளர்களின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் மிதித்து விட்டன'' என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். ''அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ, 1495. அஹ்மத், இப்னுமாஜா)
போர்க்களத்தில் எவ்வித திட்டமுமின்றி எதிர்பாரா விதமாக பெண்களும் சிறுவர்களும் தாக்கப்பட்டால் அது குற்றமாகாது என்பதை எடுத்துரைப்பதே நோக்கமாகும். போர்க்களத்தில் இவைத் தவிர்க்க இயலாது. எடுத்துக் காட்டாக:
எதிரிகளின் இராணுவ முகாமைத் தாக்கும்போது அவர்களின் குடும்பத்தினரும் அங்கு இருந்து திடீர் தாக்குதலில் பெண்களும், சிறுவர்களும் சிக்கிப் பாதிக்கப்படுவார்கள். இது தாக்கியவர்களின் குற்றமல்ல! தாக்கப்பட்ட எதிரிகள் இராணுவ முகாமில் குடும்பத்தினரை வைத்திருந்தது குற்றமாகும். போர் சூழலில் குடும்பத்தினர் இராவணுத்துடன் சேர்ந்திருக்காமல் அவர்களை பாதுகாப்பான தனி இடத்தில் வைக்க வேண்டும். இராணுவத்துடன் சேராமல் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்ட எதிரிகளின் முதியவர்கள், பெண்கள், சிறுவர்களைத் தேடிச் சென்று அவர்களைத் தாக்கக்கூடாது. இது போர் என்ற பெயரில் செய்யும் வன்முறையாகும். இதை முதல் வகையான ஹதீஸ்கள் தடைவிதிக்கின்றன.
இராணுவத்தினருடன் சேர்ந்து - கலந்து முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் இருந்து எதிர்பாராமல் இராணுவ வீரர்களுடன் இக்குடும்பத்தினரும் தக்குதலுக்குள்ளாக நேரிட்டால் அது குற்றமில்லை என இரண்டாவது வகையான ஹதீஸ்கள் கூறுகின்றன.
இன்று நவீனகாலப் போர் முறைகளின் தாக்தலுக்கு பெரும்பான்மை அல்லது சிறிய அளவில் பொதுமக்களும் பலியாகின்றனர். இதற்கான காரணி: ''எங்கள் உளவுத்துறை மிகச் சரியான தகவல்கள் தந்து, நாங்கள் இராணு முகாமைத் தாக்கினோம். அங்கு இராணுவத்திருடன் பொதுமக்கள் இருந்தால் அல்லது பொதுமக்களுடன் இராணுவத்தினர் இருந்தால் எங்கள் குற்றமில்லை'' என்று தாக்கியவர்கள் எளிதாக சமாதானம் சொல்லி - எதிரிகளுடன் இருப்பவர் எதிரிகளைச் சார்ந்தவர்கள் என - மிகச் சுலபமாக பொருத்திவிடுகின்றனர்.
போர் சூழலில் முதியவர்கள், பெண்கள், சிறுவர்களும் அறியாமல் தாக்கப்பட்டால் போரில் இவைத் தவிர்க்க இயலாது. என்பதையே இரண்டாவது வகையான ஹதீஸ்களின் கருத்தாகும். இஸ்லாமை விமர்சிப்பவர்கள் முதல் வகையான ஹதீஸ்களை இருட்டடிப்புச் செய்து, இரண்டாவது வகையான ஹதீஸ்களை முன்னிலைப்படுத்தி உண்மைக்கெதிராக, பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர்.
அன்புடன்,
அபூ முஹை
5 comments:
அன்பு சகோதரர் முஹை,
செங்கொடி என்பவர், இஸ்லாத்தை நோக்கி கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார். நீங்கள் பதில் எழுதினால், லண்டனில் வாழும் எமக்கு பேருதவியாயிருக்கும். அல்லாஹ உங்களுக்கு அருள் புரிவானாக!
(செங்கொடி.காம் இணையத்தளத்தில்)
வ அலைக்குமுஸ்ஸலாம்
கேள்விகளை அறியத் தாருங்கள்!
அன்புடன்,
அபூ முஹை
http://senkodi.wordpress.com/2009/10/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/
//இஸ்லாம் போர்க்களத்தில் சிறுவர்களைக் கொல்லச் சொல்கின்றதா?//
அபு முஹை அய்யா,
இல்லை அய்யா இல்லை.போர்க்களத்தில் கொல்லச் சொல்லவில்லை.
ஆனால், சவுதி,பஞ்சாபி பாக்,மற்றும் தாலிபான் கும்பல் பின்பற்றும் சுன்னி வஹாபி குரான் ஜிஹாத் மூலம்,ஷியா,அஹமதியா,ஹிந்து,கிறித்த்வ,யூத காஃபிர் சிறுவர்களையும்,பெண்களையும் போட்டுத்தள்ளுங்க என்று ஆணையிட்டுருப்பதாக முல்லா ஒமார் அய்யா ஆணித்தரமாக சொல்கிறார்.மத்தபடி இஸ்லாம் சமாதானம் விரும்பும் மதம் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா என்ன?
பாலா
வாங்க பாலா ஐயா!
செளக்கியமா?
இங்கு எழுதிய ஆக்கத்திற்கு முறையான மாற்றுக் கருத்து இருந்தால் ஆதாரத்துடன் எழுதுங்கள்!
உங்களுக்குத் தெரியவில்லை எனில் உங்க குரு முல்லா உமரிடம் கேட்டறிந்து எழுதுங்கள்!
பாக் உங்க பூர்வீகமா?
முல்லா உமரை கேட்டதா சொல்லுங்க ஐயா!
Post a Comment