Sunday, June 25, 2006

கணவன், மனைவியை அடிக்கலாமா?

''விரும்பியவர் நம்பட்டும், விரும்பியர் மறுக்கட்டும்'' என்று திருக்குர்ஆன் (18:29) கூறுவதால், இஸ்லாத்தில் மனித அபிப்ராயத்துக்கு எள்ளளவும் எள் முனையளவும் இடமேயில்லை. இறைவன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கற்பனையால் இறைவனைப் படைப்பவர்களுக்கு, இறை வேதங்களை தமக்கு தோதாக திரிப்பதும், நீக்குவதும், சேர்ப்பதும் சாத்தியம்.

அனைத்தையும் ஏக இறைவன் ஒருவனே படைத்து மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக வேதங்களை வழங்கினான் என நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இறை வேதங்களில் மனிதக் கருத்தைத் திணிப்பது துளியும் சாத்தியமில்லை.

ஐம்புலன்களுக்கும் எட்டாதவை யாவும் மறைவானதாகும், ''அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்'' (2:3) என்பதால், மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது, வானவர்கள், சொர்க்கம், நரகம், தீர்ப்பு நாள் போன்ற - மறைவானவற்றை உலக வாழ்வில் கண்ணால் காணமுடியாது என்றாலும் - மறைவானவற்றை நம்புவதும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளில் ஓர் அம்சமாகும்.

இஸ்லாம் கூறும் மறைவானவைகளை இவ்வுலகின் ஆய்வுக் கூடத்தில், கண்ணாடி குடுவைகளைக் கொண்டு ஆய்வு செய்து சொர்க்கம், நரகத்தை உண்டு என்று நிரூபிக்க முடியாது. என்பது போல், அதே ஆய்வுகளைக் கொண்டு சொர்க்கம், நரகத்தை இல்லையென்றும் நிரூபிக்க முடியாது.

இந்த உலகமல்லாத இன்னொரு மறுமை வாழ்க்கை உண்டு, அல்லது இல்லை எனத் தீர்மானிப்பது மறுமையில் மட்டுமே சாத்தியம். சொர்க்கம், நரகம் போன்ற மறைவானவற்றை நீங்கள் மறுமையில்தான் அறிந்து கொள்வீர்கள் எனவும், அதை நம்பாதவர்களும் அங்கே கண்டு கொள்வார்கள் எனவும் இஸ்லாம் சொல்வதால், இவற்றை இவ்வுலக வாழ்க்கையில் நிரூபிக்க முயல்வது வீணே!

மறைவானவற்றைக் கண்ணால் பார்க்காமல் நம்புவது எப்படி ஆட்டுமந்தைத் தனமோ, அதுபோல் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்பதும் ஆட்டுப் புத்தியே. ''உனக்கு இரை இருக்கிறது வா'' என்று எந்த ஆட்டையும் அழைத்தால் வராது. ஆனால் ஆடுகளின் பார்வையில் படும்படி கீரைகளையோ, புல்லுக் கட்டையோக் காட்டினால் ஆடுகள் ஓடோடிவரும், இதை ஆடுகள் உணருமா? கண்ணால் பார்க்காமல் ஒரு போதும் ஆடுகள் தன் இரையை உணராது.

நிற்க,
''மனைவியை அடியுங்கள்'' என்று சொல்லும் 4:34வது வசனத்திற்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ன விளக்கம் சொன்னார்கள் என்கிற நபிமொழிகளையும், சம்பந்தப்பட்டவர்கள் இங்கே பதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ் இந்தப் பதிவில் இது பற்றிப் பேசுவோம்.

//"எலும்பு முறியாதவரை பெண்களை அடிக்கலாம்"// என்று சொல்பவர்கள், இந்த வாசகம் இடம் பெற்ற நபிமொழியையும் - நபிமொழி மட்டுமிருந்தால் இங்கே அறியத்தரவும். - நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

4 comments:

arunagiri said...

"மறைவானவற்றைக் கண்ணால் பார்க்காமல் நம்புவது எப்படி ஆட்டுமந்தைத் தனமோ, அதுபோல் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்பதும் ஆட்டுப் புத்தியே".

உண்மை. ஆராய்ந்து தெளிவதும் அவ்வித ஆராய்ச்சிகளும், கேள்விகளும், சுய அலசல்களும் ஊக்கப்படுத்தப்படுவதும் அவசியம். அதனால்தான் கடவுளையே கேள்வி கேட்டும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என இடித்துரைத்தும் எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற வகையிலும் சுய சிந்தனையை உயர்ந்த விஷயமாக அனுமதிக்கிறது இந்து மதம்.

அபூ முஹை said...

மனித ஆராய்ச்சிக்கு எட்டாத, மறைவானவற்றை எதன் அடிப்படையில் விவாதிப்பது. ''மறைவானவற்றின் திறவுகோல் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்''(6:59) இறைவனைத் தவிர, மறைவானவற்றை வேறு எவரும் அறிய முடியாது. எனும்போது எந்த அளவுகோலை வைத்து, மெய்ப்பொருள் காண்பது?

குற்றம் குற்றமே எனக் கடவுளை இடித்துரைக்கலாம் என உங்கள் மதம் போதிக்கிறது. இறைவன் தவறே செய்யாதவன் என்று எங்கள் மதம் போதிக்கிறது. இறைவன் தவறுவான் என்பது இறை இலக்கணத்துக்கே இழுக்கு. இறைவன் தவறுவான் என்று முஸ்லிம்கள் உள்ளத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாது. மேலும், இறைவனை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவன்தான் மற்றவர்களை கேள்வி கேட்பான் என்றும் இஸ்லாம் சொல்கிறது.

''எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'' இதையே இஸ்லாம் கீழ்கண்டவாறு அறிவிக்கிறது.

''ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும்'' (நபிமொழி, முஸ்லிம்)

ஒருவர் தாம் கேள்விப்படும் தகவல்களை உண்மையா, பொய்யா என்று பரிசீலித்த பின்னரே, கேள்விப்பட்ட தகவலை அடுத்தவரிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் அவரும் பொய்யரே! - சுய சிந்தனையையே இஸ்லாம் தூண்டுகிறது.

அன்புடன்,
அபூ முஹை

arunagiri said...

(இறைவன் தவறற்றவன் என்பது ஒரு நம்பிக்கை. இறைவன் தவறற்றவன் என்பதை தர்க்க ரீதியாக எளிதாக மறுக்க முடியும். நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை)

சுய சிந்தனையைத் தூண்டுவது என்றால் இறையை எதிர்த்துக் கேள்வி கேட்பதும் அனுமதிக்கப்படத்தான் வேண்டும். நக்கீரனும் வாலியும் இறைவனைப் பார்த்து கேள்வி கேட்கத் தயங்கவில்லை. இறைவன் தவறினானா இல்லையா என்பதல்ல , இறைவனையும் கேள்வி கேட்கலாம் என்பதே இதன் பொருள். இதனாலேயே மன்னனை எதிர்த்து சாதாரண பிரஜையும் கேள்வி கேட்கலாம் என்ற நிலை நம் நாட்டில் இருந்தது. கேள்வி கேட்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது சுய சிந்தனையை வளர்க்கும் மார்க்கம் அல்ல.

(word verification-ஐ எடுத்து விடுங்கள், மிகுந்த தொல்லையாய் இருக்கிறது)

அபூ முஹை said...

இறைவனை யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதால், யாரையும் கேள்வி கேட்கக்கூடாது என்பதல்ல. அக்கிரமக்கார அரசனை எதிர்த்து சாதாரணக் குடிமகனும் நீதியைச் சுட்டிக் காட்டிக் கேள்விகள் கேட்கலாம் - கேட்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மன்னனையே எதிர்த்து கேள்விகள் கேட்கலாம் எனும்போது, இறைவனையும் கேள்விகள் கேட்பது போல் இருக்க வேண்டும் என்ற கருத்து, மன்னனுக்கும் இறைத் தன்மையில் பங்கு இருப்பதாகக் கருதத் தூண்டுகிறது. மனிதன் என்ற தன்மையில் மன்னனிடமும் தவறுகள் ஏற்படும். சர்வ வல்லமை பொருந்திய இறைவன் ஒரு போதும் நீதி தவறமாட்டான். இறைவன் அநீதி இழைக்க மாட்டான் என்று நம்புவதும் சுய சிந்தனைக்குட்பட்டதுதான்.


//word verification-ஐ எடுத்து விடுங்கள், மிகுந்த தொல்லையாய் இருக்கிறது//

முன்பு எரிதங்களின் பின்னூட்டங்கள் வந்து குவிந்ததனால் Word Verification-ஐ இடும் சூழ்நிலை.

எரித பின்னூட்டங்கள் மட்டுறுத்தலுக்காக காத்திருந்தாலும் கூட, அவைகளினால் எனது நேரம் விரயமாகக்கூடாது என்பதால் Word Verification-ஐ தொடரும் சூழ்நிலை.

சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
அபூ முஹை