மதமாற்றம் ஏன்? -3
ஐயம்:
2.) ஆதாம் கடவுளால் தோற்றுவிக்கப் பட்டான்; ஏவாள் அவனது விலா எலும்பிலிருந்து உண்டாக்கப் பட்டதாக பழைய ஏற்பாடு சொல்கிறது. இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம்? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? (தருமியின் பதிவு)
தெளிவு:
''சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்'' (திருக்குர்ஆன், 55:14) ஆதாம் - ஆதம் இறைவனால் படைக்கப்பட்டார் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது.
//இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.// மனிதன் உறைந்த இரத்தத்திலிருந்து படைக்கப்பட்டதாக சில மொழி பெயர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது. ''மனிதனை அவன் இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான்''. (திருக்குர்ஆன், 96:2) திருக்குர்ஆன் மூலத்தில் ''அலக்'' என்கிற வார்த்தையை ''இரத்தக் கட்டி'' என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இது தவறான பொருளாகும்.
(இன்னும் சில வசனங்களில் ''அலக்'' என்ற வார்த்தையை மொழிபெயர்க்காமல் அப்படியே சொல்லப்பட்டுள்ளது.
''நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு ''அலக்கிலிருந்தும்'' பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்''. (திருக்குர்ஆன், 22:5)
''பின்னர் அந்த இந்திரியத் துளியை ''அலக்'' என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த ''அலக்கை'' ஒரு தசைப் பிண்டமாக்கினோம்''. (திருக்குர்ஆன், 23:14)
''அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் ''அலக்'' என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்''. (திருக்குர்ஆன், 40:67)
''பின்னர் அவன் ''அலக்'' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்''.) (திருக்குர்ஆன், 75:38)
கரு, அதன் வளர்ச்சிக் கட்டத்தின் எந்த நிலையிலும் ''இரத்தக் கட்டி'' என்ற நிலைக்கு வருவதில்லை. இது விஞ்ஞானத்தின் தீர்க்கமான முடிவு. ''அலக்'' என்பதற்கு 'பற்றிப் பிடித்துக் கொண்டு தொங்கும் பொருள்' என்பதே நேரடியான மொழிபெயர்ப்பாகும். கருத்தரித்ததும் அந்தக் கரு, கருப்பையின் சுவற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு தட்டையான பொருளாக மாறி கருவறை சுவற்றோடு அப்பிக் கொள்கிறது. இப்போது அதை மருத்துவத்தில் (PLACENTA - நச்சுக் கொடி) சூலகத்தின் கருவக ஒட்டுப் பகுதியென்று குறிப்பிடுகிறார்கள்.
வளரும் கருவுக்கு அது குழந்தையாகி வெளியே வரும்வரை சுவாசப்பை, ஈரல், சிறுநீரகம் எல்லாமே இந்த ''பிளஸென்டா'' தான்! எனவே ஒரு குழந்தை உருவாவதற்குரிய எல்லாமாகச் செயல்படும் பிளஸென்டாவைத்தான் இறைவன் இங்கே ''அலக்'' என்று குறிப்பிடுகிறான். எனவே ''அலக்' என்றால் ''இரத்தக் கட்டி'' என்பது தவறான பொருளாகும்.
''அலக்'' என்பதற்கு இரத்தக் கட்டி என்கிற பொருள் தவறானது எனும்போது, அதைத் தொடர்ந்து //..ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ?// என்ற தருமியின் சந்தேகக் கேள்வியும் தவறானதே.
ஐயம்:
3.)ஆபிரஹாமின் வழித்தோன்றல்கள்தான் கிறித்தவர்களும், இஸ்லாமியரும் - பழைய ஏற்பாட்டின் படி. அதை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா? (ஏனெனில், குழந்தை இல்லா ஆபிரஹாமுக்கும் அவர் மனைவி சாராயின் அடிமைப் பணிப் பெண்ணான ஆகாருக்கும் பிறந்த குழந்தையான - ‘இஸ்மயேலின்’ சந்ததிகள்தான் பின்னால் இஸ்லாமியர்களாக ஆனார்கள் - என்கிறது பழைய ஏற்பாடு.) அதோடு, கடவுளின் தூதர் இஸ்மயேலைப் பற்றி சொல்லும் “நல்ல″ வார்த்தைகள்…? (ஆதி. 16, 17) அவைகளை நான் இங்கு தர விரும்பவில்லை; வேண்டுமென்றால் தெரியாதோர் அங்கு சென்று வாசித்துக் கொள்ளவும்.
தெளிவு:
//ஆபிரஹாமின் வழித்தோன்றல்கள்தான் கிறித்தவர்களும், இஸ்லாமியரும் - பழைய ஏற்பாட்டின் படி. அதை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா?// - ''ஆப்ரஹாமின் வழித்தோன்றல்கள் மட்டுமே இஸ்லாமியர்கள் - முஸ்லிம்கள் என்பது தவறு. ஆப்ரஹாமின் சந்திதிகள் மட்டுமே முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.'' இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய ஆரம்ப காலத்தில் அடிமைகள் சிலரே இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அபிசீனிய நாட்டைச் சேர்ந்த கருத்த அடிமையான பிலால் அவர்களும் இஸ்லாத்தை ஏற்றிருந்தார். இவர் ஆப்ரஹாமின் வழித்தோன்றலில் உள்ளவரல்ல.
இன்று உலகளாவிய நிலையில் பரந்து விரிந்து வேர்களைப் பதித்திருக்கும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து முஸ்லிம்களும் ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களல்ல என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும். முஸ்லிம்களில் - ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களும் இருக்கிறார்கள் - ஆப்ரஹாமின் வழித்தோன்றலல்லாதவர்களும் உண்டு. இஸ்லாத்தை ஏற்க ஆப்ரஹாமின் சந்ததிகளென்ற அந்தஸ்து அவசியமில்லை.
ஆப்ரஹாம் இறைவனின் தோழர் என்றும், இரண்டு மனைவியரை அவர் திருமணம் செய்திருந்தார், அவ்விருவரில் சாராள் முதல் மனைவி, ஆகார் இரண்டாம் மனைவி. ஆப்ரஹாமின் குடும்பத்தில் தோன்றிய முதல் குழந்தையை - இஸ்மவேலை - ஆகார்தான் பெற்றெடுத்தார் என்றும் பைபிள் கூறுகிறது. இதை இஸ்லாம் ஒப்புக்கொள்கிறது.
இஸ்மவேல் - இஸ்மாயீல் அவர்கள் பால்குடி பருவமாகயிருந்தபோதே - இஸ்மாயில் அவர்களையும், அவரின் தாயார் ஆகார் - ஹாஜராவையும், ஆப்ரஹாம் - இப்ராஹீம் அவர்கள் அழைத்து வந்து மக்காவில் குடியமர்த்தினார் இவர்கள் குடியேறிய வேளையில் அங்கு எவருமே குடியிருந்திருக்கவில்லை. இவர்களின் காரணமாகவே இங்கே ஸம், ஸம் என்ற நீரூற்றை இறைவன் தோன்றிடச் செய்தான். இந்த நீரூற்றின் காரணமாக ஜுர்ஹும் என்ற குலத்தார் இங்கே குடியேறினர். இஸ்மாயீல் அவர்கள் ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அரபி மொழியைக் கற்றுக்கொண்டார். இஸ்மாயீல் வாலிப வயதையடைந்தபோது அவருக்கு, தங்களில் ஒரு பெண்ணை ஜுர்ஹும் குலத்தார் திருமணம் செய்து வைத்தனர். (இது நீண்ட ஹதீஸின் சுருக்கம். பார்க்க: தமிழ் புகாரி 3364, 3365) இஸ்மவேல் - இஸ்மாயீலின் சந்ததிகளே அரபியர்கள்.
''இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' (திருக்குர்ஆன், 14:39) என்று ஆப்ரஹாம் - இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்கு நன்றி கூறிப் புகழ்ந்துரைக்கிறார்.
ஆகாருக்கு இஸ்மவேல் பிறந்து பல ஆண்டுகள் சென்றபின், ஆப்ரஹாமின் முதல் மனைவி சாராவுக்கு ஈசாக் - இஸ்ஹாக் பிறந்தார். இஸ்ஹாக்கின் சந்ததிகளே இஸ்ரவேலர்கள். யாகூப், யூசுப், மூஸா, ஹாரூன், தாவூத், சுலைமான், ஸக்கரிய்யா, எஹ்யா, ஈஸா அடங்கிய அதிகமான இறைத்தூதர்கள் இஸ்ரவேலர்களில்தான் அனுப்பப்பட்டார்கள்.
ஐயம்:
4.)யூதர்களுக்கு அருளப்பட்ட தோராவும், கிறித்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாடும் திரிக்கப்பட்டு விட்டதாலேயே ‘இறுதி’ வார்த்தைகளாக குரான் கொடுக்கப்பட்டது என்ற வாதம் ஒன்று வந்தது. இது ஏதோ மதங்களின் பரிணாம வளர்ச்சிபோல சொல்லப்பட்டு, அந்தப் பரிணாம வளர்ச்சியின் ‘இறுதி நிலை’தான் (the final format)இந்த இஸ்லாம் என்பதுபோல கூறப்பட்டது. உலகம் என்ன இந்த மூன்றே மூன்று மதங்களை மட்டுமா கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான மதங்கள்; நம்பிக்கைகள் - அவைகளில் இந்த மூன்றும் உண்டு; அவ்வளவே. நம் பார்வைகள் அகன்றிருக்க வேண்டிய அவசியம் இந்த விவாதத்திலிருந்து தெரியும்.
தெளிவு:
உலகம் தோன்றி, முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் - ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை மூன்று மதங்களைத்தானா உலகம் கண்டிருந்தது? என்றால் நிச்சயமாக இல்லை! குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வேதம் என்று சொல்லிக்கொள்ளுமளவிற்கு, நபி மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தோரா - தவ்ராத் என்ற வேதமும், நபி ஏசு - ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட பைபிள் - இன்ஜில் என்ற வேதமும் ஆக இவ்விரு வேதங்கள் மட்டுமே இருந்தன, அதுதான் இங்கு சுட்டப்படுகிறது.
இதனால், தவ்ராத் வழங்கப்பட்ட இறைத்தூதர் மோசே - மூஸா (அலை) அவர்களுக்கு முன்பு வாழ்ந்த சமூகங்களுக்கு நேர்வழி காட்ட இறைத்தூதர்கள் அனுப்பப்படவில்லையென்றோ, இறை வேதங்கள் வழங்கப்படவில்லையென்றும் பொருளல்ல. அப்படி விளங்குவது குறுகிய கண்ணோட்டத்தையே உறுதிப்படுத்தும். (பழைய, புதிய ஏற்பாடுகள் திரிக்கப்பட்டதா? இதற்கான விளக்கத்தை தருமியின் ஐந்தாவது கேள்வியில் சேர்த்து தெளிவுபடுத்துவோம்.)
(வளரும்)

