இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காஷ்மீர் மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் அளித்த வாக்குறுதி:
இந்திய பாராளுமன்றத்தில் பிப்ரவரி 12.1951ல் ஜவஹர்லால் நேருவின் அறிக்கை:
''காஷ்மீர் மக்களுக்கும் இதோடு கூடவே ஐக்கிய நாடுகள் சபைக்கும் நாம் வாக்குறுதி அளித்துள்ளோம். நாம் முன்பும் அதில் உறுதியாக இருந்தோம். இன்றும் உறுதியாக இருக்கின்றோம். காஷ்மீர் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.
செப்டம்பர் 11.1951ல் இந்திய பிரதமர் நேரு ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதம்:
காஷ்மீர் இந்தியாவுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா? என்ற கேள்விக்கு பதில் - ஐ.நா. சபையின் கண்காணிப்பில் ஜனநாயக முறையிலான - சுதந்திரமான - சார்பற்ற வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தப்படுவதன் மூலமே முடிவு செய்ய முடியும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை இந்திய அரசாங்கம் மீண்டும் உறுதி செய்கிறது. ஆனால் அத்தகைய ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான சூழ்நிலைகள் கூடிய விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு ஆவலுடன் உள்ளது''
ஜூன் 16.1952ல் இந்திய பாராளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவின் அறிக்கை:
முறையான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு ''நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை'' என காஷ்மீர் மக்கள் கூறுவார்களானால், எங்களுக்கு அது வருத்தமாக இருப்பினும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே உள்ளோம். நாங்கள் அவர்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பப்போவதில்லை''
பாகிஸ்தான் பிரதமருக்கு இந்திய பிரதமர் நேரு அனுப்பிய தந்தியில் பின்வருமாறு கூறுகிறார்:
''இத்தகைய அவசரக் காலக்கட்டத்தில் காஷ்மீருக்கு நாங்கள் உதவுவது, அப்பிரதேசம் இந்தியாவுடன் இணைவதற்காக செய்யப்படும் நெருக்குதல் அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நாங்கள் தொடர்ந்து வெளிப்டையாக தெரிவித்து வருகின்ற கருத்து என்னவென்றால், ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமோ அல்லது மாநிலமோ இணைய வேண்டுமானால் அம்மக்களின் விருப்பத்தின் பேரில் தான் அது நடக்க நடைபெற முடியும் என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்'' (தந்தி எண் 402, அக்டோபர், 27,1947)
பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பப்பட்ட இன்னொரு தந்தியில் நேரு கூறினார்:
''மஹாராஜா அரசின் வேண்டுகோளின்படியும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலத்தின் செல்வாக்கு மிக்க கட்சியின் கோரிக்கையின்படியும் தான் காஷ்மீர் இந்தியாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதுவும் கூட சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டவுடன் காஷ்மீர் மக்கள் தான் இணைப்பைப் பற்றி முடிவு செய்வார்கள் என்ற நிபந்தனையுடன் தான் சம்மதிக்கப்பட்டது. எந்த நாட்டுடன் (இந்தியா அல்லது பாகிஸ்தான்) இணைந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு திறந்தே உள்ளது'' (தந்தி எண், 255, அக்டோபர் 31.1947ல் நேரு)
அனைத்திந்திய வானொலி மூலமாக நவம்பர் 2, 1947ல் நேரு நாட்டு மக்களுக்கு கூறிய செய்தி:
பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போதே காஷ்மீர் மக்களுக்கு முழு வாய்ப்பினை அளித்திடாமல் எதையும் இறுதி செய்யக்கூடாது என்ற நிலையில் நாம் உள்ளோம். அவர்கள் தான் இறுதியாக முடிவு செய்ய வேண்டும். ஒரு பிரதேசம் எந்த நாட்டுடன் இணைவது என்ற சர்ச்சை எழும் பொழுது, எதில் இணைவது என்பதைப் பற்றிய முடிவை அப்பிரதேச மக்கள் தான் மேற்கொள்ள வேண்டும் - இது தான் நமது கொள்கை இக்கொள்கையின் அடிப்படையில் தான் காஷ்மீரை இணைத்து ஒப்பந்தத்தில் ஒரு விலக்குப் பிரிவையும் சேர்த்துள்ளோம்.''
நவம்பர் 3, 1947ல் நாட்டு மக்களுக்கு ஒலிபரப்பிய இன்னொரு செய்தியில் நேரு கூறினார்:
''காஷ்மீரின் தலைவிதியை அம்மக்கள் தான் இறுதியாக முடிவு செய்யவேண்டும் என நாம் பிரகடனப்படுத்தியுள்ளோம். இவ்வுறுதி மொழியை காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகிற்கே நாம் அளித்துள்ளோம். இதிலிருந்து பின் வாங்க மாட்டோம், பின் வாங்கவும் முடியாது''.
பாகிஸ்தான் பிரதமருக்கு நவம்பர் 21,1947 தேதியிட்ட கடிதத்தில் நேரு எழுதியதாவது:
அமைதியும் ஒழுங்கும் ஏற்பட்ட பிறகு ஐ.நா. சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் கருத்துக் கணிப்பின் மூலமாகவோ அல்லது வாக்கெடுப்பின் மூலமாகவோ காஷ்மீரின் இணைப்பு முடிவு செய்யப்பட வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்''.
ஆகஸ்ட் 7, 1952ல் இந்திய பாராளுமன்றத்தில் நேரு கூறியதாவது:
''மக்களின் விருப்பம் மற்றும் நன்னம்பிக்கையின் அடிப்படையில் தான் காஷ்மீரின் எதிர்காலம் முடிவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை நாம் ஏற்கின்றோம் என்பதை நான் தெளிவாக கூறிக் கொள்கிறேன்.
இப்பாராளுமன்றத்தின் விருப்பமும் நன்னம்பிக்கையும் இப்பிரச்சனையில் முக்கியத்துவம் இல்லாதது. இதற்குக் காரணம் காஷ்மீர் பற்றிய பிரச்சனையை முடிவு செய்யும் பலம் இப்பாராளுமன்றத்திற்கு இல்லை என்பதனால் அல்ல, அத்தகைய ஒரு திணிப்பை இப்பாராளுமன்றம் கொண்டுள்ள கொள்கைக்கு எதிரானது''.
நன்றி: ஒற்றுமை ஆகஸ்ட் 01-15,2001 இதழ்
No comments:
Post a Comment