Wednesday, December 08, 2004

மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம்.


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையில் (ஹிஜ்ரி) மூன்றாம் ஆண்டு, நபியவர்களின் ஐம்பத்தாறாவது வயதில், ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை திருமணம் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களின் திருமணங்களிலேயே விஷேசமாக மாற்றாரால் விமர்சிக்கப்பட்டு, நபி (ஸல்) அவர்களைக் காமுராகச் சித்தரிக்க இந்தத் திருமணத்தை சான்றாகக் கூறுகின்றனர்.

இதில் மாற்றாரின் மீது குற்றம் சுமத்துவதில் எவ்வித நியாயமும் இல்லை. நம்மவர்களே இத்திருமணத்திற்கு கொச்சையானக் கற்பனைக் கதையை உருவாக்கி ஏடுகளில் எழுதி வைத்திருப்பதால் அதனடிப்படையில் இத்திருமணம் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றது. ஆகையால் இது பற்றிய முழு விபரங்களையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
கதீஜா (ரலி) அவர்கள் உக்காழ் எனும் அரேபியாச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஸைத்(ரலி) அவர்களை விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா(ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார்.
கதீஜா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை நபி (ஸல்)அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இச்சிறுவரை அடிமையாகவே வைத்துக் கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் இவரை விடுதலை செய்து விடலாம் என்று கூறிவிட்டார்கள்.
இதற்குப்பின் அவர் நபி(ஸல்) அவர்களின் பணியாளராக இருக்கலானார். இந்த நிலையில் தம் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த ஹாரிஸாவும் அவரது சகோதரர் கஃபு என்பவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை செய்யுமாறும், அதற்குரிய விலையைத் தந்துவிடுவதாகவும் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள் ''உங்களுடன் வருவதற்கு ஸைத் ஒப்புக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை அழைத்துச் செல்லலாம். எனக்கு நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தர வேண்டியதில்லை. அவர் உங்களுடன் வர விரும்பாவிட்டால் அவரை உங்களுடன் அனுப்ப இயலாது'' என்ற கூறினார்கள்.
இதன் பிறகு 'ஸைத்' அவர்களிடம் வந்தவர்கள் பேசிப் பார்த்தனர். ''முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில் நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது'' என்று ஸைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் ''ஸைத் இனிமேல் என் மகனாவார் அவர் இனி அடிமை இல்லை. நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார். எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்கும் ஸைதுக்குமிடையே உள்ள உறவைப் புரிந்து கொண்ட அவரது தந்தை மகிழ்வுடன் திரும்பிச் சென்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும்போது முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்படவில்லை. (அல் இஸாபா)
அன்றிலிருந்து நபி(ஸல்)அவர்கள் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள்வரை (ஸைத் இப்னு முஹம்மத்) முஹம்மதின் மகன் ஸைத் என்றே குறிப்பிட்டார்கள்.
''அவர்களை அவர்களின் தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள்".. (அல்குர்ஆன் 33:5) வசனம் அருளப்படும் வரை ''முஹம்மதின் மகன் ஸைத்" என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம். (புகாரி, முஸ்லிம்)
சொந்த மகனைப் போலவே ஸைதை நபி(ஸல்) அவர்கள் தமது இருபத்தைந்தாம் வயது முதல் ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஸைத் அவர்களின் எல்லாக் காரியங்களுக்கும் நபி(ஸல்) அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அதுபோல் ஸைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபி(ஸல்) அவர்களையே சார்ந்திருந்தார்கள் என்பதைத் தெளிவு படுத்திடவே இந்த விபரங்கள்.
நபி(ஸல்) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி 'உஸைமா' என்பாரின் மகள் ஸைனப் அவர்களை, அதாவது தமது சொந்த மாமிமகளை ஸைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள். மிகவும் உயர்ந்த குலம் என்று பெருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணை - தமது மாமி மகளை ஒரு அடிமைக்குத் திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அமைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாகும்.
ஜஹ்ஷுடைய மகள் ஸைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஸைதுக்கும் நடந்த இத் திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயிற்று. குடும்ப அமைதி குலைந்து போகும் நிலை உருவாயிற்று. இறுதியில் ஸைனபை விவாகரத்து (தலாக்) கூறும் நிலைக்கு ஸைத்(ரலி) ஆளானார். இதுபற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது.
(நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர், ''அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்கு செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்'' என்று சொன்னபோது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர். ஆனால் அல்லாஹ் அவன் தான் நீர் பயப்படுவதற்குத் தகுதியானவன்,... (அல்குர்அன் 33:37)
ஸைத் தம் மனைவி ஸைனபை விவகாரத்து (தலாக்) கூற விரும்பியதும், அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனைக் கலந்ததும் நபி (ஸல்) அவர்கள் ''தலாக்'' கூற வேண்டாம்" என்று அவருக்குப் போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.
இதே வசனத்தின் இறுதியில் ''அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர்'' என்று இறைவன் கடிந்துரைக்கிறான். தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட விஷயம் என்ன? என்பது இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற அறிவிலிகள் எவ்வித ஆதாரமுமின்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.
ஸைத் வெளியே சென்றிருந்த போது நபி(ஸல்) அவர்கள் ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்களாம். ஸைனபின் சொக்க வைக்கும் பேரழகைக் கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என்று மனதுக்குள் எண்ணினார்களாம்! ஸைத் தலாக் கூற முன்வந்ததும் ''தலாக் கூற வேண்டாம்'' என்று வெறும் வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் ''அவர் தலாக் கூற வேண்டும்'' அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத்தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். இப்படிப் போகிறது கதை.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைத்திருந்த எண்ணத்தை நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் ஊடுறுவி அறிந்தார்களா? அல்லது நபி(ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தைக் கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபி(ஸல்) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்தக் கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், நபி(ஸல்) அவர்கள் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட மர்மம் என்ன? என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகப் பார்ப்போம்.
ஸைத்(ரலி) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது ஸைனப்(ரலி) அவர்களின் வயது முப்பத்தி நான்கு அல்லது முப்பத்தி ஐந்து இருக்கலாம். நேரடியாக இது பற்றிக் கூறப்படாவிட்டாலும் கிடைக்கின்ற குறிப்புகளை வைத்து இதை நாம் முடிவு செய்ய இயலும்.
அது வருமாறு:-
ஸைத்(ரலி) அவர்களும் ஸைனப்(ரலி) அவர்களும் ஒரு ஆண்டு அல்லது அதைவிட சற்று அதிகம் இல்லறம் நடத்தியுள்ளனர். (பார்க்க இப்னு கஸீர்) நபி(ஸல்) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்த போது ஸைனபுடைய வயது முப்பத்தி ஐந்து (பார்க்க அல் இஸாபா) ஸைனப்(ரலி) அவர்களின் இந்த முப்பத்தி ஐந்து வயதில் ஸைதுடன் வாழ்ந்த ஒரு ஆண்டைக் கழித்தால் ஸைதுடன் திருமணம் நடந்த போது ஸைனபின் வயது முப்பத்தி நான்காகத்தான் இருக்க முடியும். ஏனெனில் ஸைத் விவாகரத்துக் கூறியவுடன் (இத்தா முடிந்ததும்) உடனேயே நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்ததை அல்குர்ஆன் 33:37 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
ஸைனப்(ரலி) அவர்களுக்கு 34 வயதில் தான் முதல் திருமணம் நடந்திருக்கும் என்பதும் நம்புவதற்குச் சிரமமானது, சாத்தியக் குறைவானது. ஸைதை மணப்பதற்கு முன் அவர்கள் வேறு கணவருடன் வாழ்ந்து விதவையாகி இருக்க வேண்டும் அல்லது தலாக் கூறப்பட்டிருக்க வேண்டும். 34 வயது வரை முதல் திருமணம் நடக்காமலிருக்கும் அளவுக்கு வரதட்சணை போன்ற கொடுமைகள் அன்றைய சமுதாயத்தில் இருந்திருக்கவில்லை. வேறு காரணங்களும் இல்லை. இந்த அனுமானம் தவறாகவே இருந்தாலும் ஸைதைத் திருமணம் செய்யும் போது ஸைனபின் வயது 34 என்பது நிச்சயமான ஒன்று. நபி(ஸல்) அவர்களைத் திருமணம் செய்யும் போது 35 வயது என்பது அதை விடவும் நிச்சயமானது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு அந்தக் கதையின் தன்மையை நாம் அலசுவோம்.
நபி(ஸல்) அவர்களின் மாமி மகளாகிய ஸைனப் (ரலி)அவர்கள் சிறு வயது முதல் நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஒருவராக வளர்கிறார். ஸைனப்(ரலி) பதினைந்து வயதில் பருவமடைந்தார்கள் என்று வைத்துக் கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்களின் வயது 37, எவ்வாறெனில் நபி(ஸல்) அவர்கள் ஸைனபுடைய 35வது வயதில் அவரைத் திருமணம் செய்த போது நபி(ஸல்) அவர்களின் வயது 56.
நபி(ஸல்) அவர்களின் 37வது வயதில் (56வயதில் நாடுவதை விட அதிகம் பெண்கள் நாடக்கூடிய 37வது வயதில்) பருவ வயதிலிருந்த ஸைனப்(ரலி) அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை நபி(ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும், அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக் கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஸைனப் ஆவர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு நபி(ஸல்) அவர்களுக்கு வாய்த்திருந்தது.
நபி(ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 20வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 25வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15வயது முதல் 30 வரையிலான பல்வேறு பருவங்களில் ஸைனபைப் பார்த்துப் பேசிப் பழகியிருக்கிறார்கள்.
இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஸைனபின் அழகில் சொக்கிவிடாத நபி(ஸல்) அவர்கள் 34 வயதை ஸைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடையோர் எவரும் ஏற்க முடியுமா?
நபி(ஸல்) அவர்களின் 50வயது வரை அவர்ககளுக்கு கதீஜா(ரலி) மனைவியாக இருந்தார்கள். கதீஜா(ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நபி(ஸல்) அவர்களுக்கு மனைவியின்பால் தேவையிருந்தது. கதீஜா(ரலி) மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஸைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உண்மையானால் கதீஜா(ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஸைனபை மணந்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே! இன்னும் சொல்வதென்றால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தாவைவிட - ஆயிஷாவைவிட - அதிக சிரத்தையுடன் நபி(ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள இவர்களுக்கல்லவா அக்கரை அதிகமிருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்கு மட்டும் தான் இருந்தது.
நபி(ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஸைனப்(ரலி) அவர்கள் விரும்பாதிருக்கலாம், அதன் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காதிருக்கலாம் அல்லவா? என்ற ஐயம் எழுக்கூடும். அந்த ஐயத்தையும் பின் வரும் சான்று அகற்றி விடுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மண முடித்துக் கொள்ளுமாறு ஸைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னாள் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப் (ரலி) மறுத்து விடுகிறார்கள். உடன் பின் வரும் இறை வசனம் இறங்கியது.
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36) இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஸைனப்(ரலி) அவர்கள் ஸைதைத் திருமணம் செய்ய சம்மதித்தார்கள். (இப்னு ஜரீர், இப்னு கஸீர்)
இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆரம்பம் முதலே ஸைத்(ரலி) அவர்களை மணந்து கொள்ள ஸைனப்(ரலி) விரும்பவிலலை என்பதும், நபி (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகின்றார் என்பதும் தெளிவாகிறது. நபி(ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காக தமக்கு விருப்பமில்லாத இன்னொருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க முடியாது. ஸைத்(ரலி) விவாகரத்து செய்ததும் ஸைனப்(லி) அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் திருமணம் செய்ததும், ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை மணந்து கொள்ள ஆரம்ப காலத்தில் மறுத்திருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்கிறது.
இன்னொரு கோணத்தில் சிந்திக்கும் போதும் அந்தக் கதை பொய்யானது என்பதைத் தெளிவாக உணரலாம். ஸைனபைப் பார்க்கத் தகாத நிலையில் நபி(ஸல்) அவர்கள் பார்த்து ஆசைப்பட்டார்கள் என்றால் அந்தக் கதையை அன்றைய மக்கள் நன்றாகவே அறிவர். (அவர்களில் யாரும் அறியாவிட்டால் இதை எழுதி வைத்த நூலாசிரியர்களுக்குத் தெரிய முடியாது)
இந்தச் செய்தியை ஸைத் அவர்களும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம் மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக நபி(ஸல்) அவர்களிடமே ஆலோசனை கேட்கிறார்கள். அதன் பின்பும் நபி(ஸல்) அவர்களுடன் முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை. இதுவும் அந்தக் கதை பொய் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
இந்தக் கதை பொய்யானது என்று தெளிவான பின், மற்றொரு சந்தேகம் நீக்கப்பட வேண்டியுள்ளது. ''மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்தீர்'' என்று அல்லாஹ் குறிப்பிடுவது எதை? இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும்.
(அடுத்த பதிப்பில்)

6 comments:

அருளடியான் said...

இஸ்லாத்தின் மீது விமர்சனம் தொடுப்பவர்களுக்கு நாம் அழகிய முறையில் பதில் அளிக்கவும், அவர்களிடம் விவாதம் செய்யவும் உதவும் இந்த தளத்தை நடத்துபவர்களுக்கும், இதில் பங்கு பெறுபவர்களுக்கும் இறைவன் ஈருலக நன்மைகளை அருளட்டும்!

அருளடியான்

Jafar ali said...

தொடருங்கள் அபு முஹை! வாழ்த்துக்கள்! உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.

அபூ முஹை said...

அன்புள்ள!
சுடர், அருளடியான், ஜாஃபர் உங்களுக்கு நன்றி!

அன்பின் raj அவர்களுக்கு, இஸ்லாத்தின் மீது களங்கத்தைச் சுமத்த 'பச்சை' பொய்யுடன் எவர் களமிறங்கினாலும் அவர்களைத் தோலுரித்துக்காட்ட இஸ்லாம் தயாராகவே இருக்கும். ''சத்தியம் வந்தால் அசத்தியம் அழிந்து விடும்'' என்பதே இறைவாக்கு.
அன்புடன்
அபூ முஹை

Salahuddin said...

«ýÒ º§¸¡¾Ã§Ã! «Š…Ä¡Ó «¨ÄìÌõ.

§¿ºÌÁ¡Ã¢ý §¸ûÅ¢¸ÙìÌ Á¢¸ ¦¾Ç¢Å¡É Å¢Çì¸ò¨¾ «Ç¢ò¾¢Õ츢ã÷¸û. ¾¢ñ¨½Â¢ø «ÅÃÐ ¸ðΨâø «ý¨É ¨…Éô (ÃÄ¢) «Å÷¸Ç¢ý ¾¢ÕÁ½õ ¦¾¡¼÷À¡É «Åàü¨È «Å÷ ÌÈ¢ôÀ¢ð¼§À¡Ð, «¾ü¸¡É ¬¾¡Ãí¸¨Ç §¸ðÊÕó§¾ý. «Å÷ þýÛõ ±ó¾ ¬¾¡Ãò¨¾Ôõ «Ç¢ì¸Å¢ø¨Ä. «ÅÕìÌ À¾¢ø ±Ø¾ Ó¨Éó¾§À¡Ð¾¡ý ¯í¸Ç¢ý þó¾ «Õ¨ÁÂ¡É Å¨ÄôÀ¾¢× ¸ñ½¢ø Àð¼Ð. þ¨ÈÅý ¯í¸Ç¢ý þó¾ º¢Èó¾ ÓÂüº¢ìÌ ¾Ìó¾ ÀÄ¨É ¿øÌÅ¡É¡¸!

«ýÒ¼ý
ºÄ¡†¤ò¾£ý

Shankaran er said...

தங்களின் பதிவு கண்டேன். விரிவாக விளக்கியுள்ளீர்கள். ஆயினும் என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் நபி தனக்கு மருமகள், அதிலும் தனது வளர்ப்பு மகனின் மனைவியை, விவாகரத்தே ஆனாலும்,மருமகள் முறையிலுள்ள பெண்ணை மீண்டும் திருமணம் செய்ய வேண்டும்? இது அந்நாளைய பொதுவான வழக்கமா? இக்கேள்விக்கு சரியான பதில் தாங்கள் அளித்த சுட்டியிலும் இல்லை.

இக்கேள்விக்கு தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

அபூ முஹை said...

நண்பர் சங்கரன்,

உங்கள் மறுமொழிக்கு

தனிப் பதிவாக இங்கு

நன்றி!