Thursday, November 17, 2005

காஷ்மீர் ஓர் பார்வை-1

காஷ்மீர் - இந்தியாவின் மேற்கே உச்சத்தில் அமைந்துள்ள ஒரு சொர்க்க பூமி. காஷ்மீரைப் பற்றி நினைக்கும் எவரது உள்ளத்திலும் பனித் தென்றல் வீசும். அதன் வரலாற்றை படிக்கும் போது அந்த பனித் தென்றலுடன் இரத்த வாடையும் சோகமும் சுமையும் மனதை கவ்விக் கொள்ளும். வெகுளித்தனமும் வெள்ளை மனதும் கொண்ட காஷ்மீரத்து மக்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்கள் வெகுளித்தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். காரணம் நில ஆக்ரமிப்பை தங்கள் கொள்கையாகக் கொண்ட இந்திய - பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறைதான். சொந்த பூமி கண்முன்னே சூறையாடப்படுவதையும் - தம் மக்கள் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு உள்ளாக்கப்படுவதையும் பார்த்துப் பார்த்து உறைந்து போன மக்கள் சுய போராட்டம் ஒன்றே தீர்வு என்றெண்ணி ஆயுதமேந்தத் தயாராகி விட்டார்கள். விளைவு இந்தியா - பாகிஸ்தான் - உள்நாட்டுப் போராளிகள் என்று முத்தரப்பு பிரச்சனைகளில் அந்த மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

காஷ்மீர் அதன் வரலாறு என்ன? அங்கு என்ன நடந்தது. ஆரம்பத்தில் தனிநாடாக சுய அதிகாரத்துடன் விளங்கிய நாடு இன்றைக்கு இந்தியா பாகிஸ்தானுக்கு மத்தியில் சிக்கித் தவிப்பதேன். போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் முகமாக இங்கு கட்டுரைகள் தொகுக்கப்படுகிறது.

வரலாற்றுத் துணுக்குகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகள் காஷ்மீரின் சொந்த - சோகக்கதையை எடுத்துக் காட்டும் முயற்சியின் சிறுதுளியாகும். நான் படித்ததை இங்கு பதிந்து வைக்கிறேன்.

அன்புடன்
அபூ முஹை


காஷ்மீரின் வரலாற்றை நான்கு காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம்.
முதலாவது காலக்கட்டத்தில் உள்ளூர் அரசர்கள் காஷ்மீரை ஆட்சி செய்து வந்தார்கள். இந்த காலக்கட்டத்தில் சில சந்தர்ப்பங்களில் இந்தியாவிலிருந்து வந்த ஆட்சியாளர்கள் காஷ்மீரை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள் வேறு சந்தர்ப்பங்களில் காஷ்மீர் ஆட்சியாளர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு அப்பால் இந்தியா மற்றும் மத்திய ஆசியா வரை தங்கள் ஆளுகையை நீடித்துக் கொண்டார்கள்.

இந்த காலக்கட்டத்தில் தான் அசோகரின் ஆட்சியும் காஷ்மீரில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் நிலைநாட்டப்பட்டது. இந்த ஆட்சியின் போதுதான் காஷ்மீரில் பெளத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி முதலாம் நூற்றாண்டில் கனிஷ்கரின் ஆட்சியின் போது பெளத்தம் காஷ்மீரில் மேலும் வலுவடைந்தது. ஆனால் அதற்கு பிறகு காஷ்மீரில் உள்ளூர் ஆட்சியாளர்களின் கரம் மேலோங்கி பெளத்தம் அழிக்கப்பட்டு பிராமணியத்திற்கு புத்துயிர் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாம் காலக்கட்டம் தொடங்கிய ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 'ஹன்' இனத்தவர் காஷ்மீரைக் கைப்பற்றினர். சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் உள்ளூர் ஆட்சியாளர் வசமே காஷ்மீர் மீண்டது.

ஆனால் மிக விரைவிலேயே உஜ்ஜைன் சாம்ராஜ்யத்தின் மேலாண்மையை காஷ்மீர் ஏற்றுக்கொண்டது. உஜ்ஜைனில் உள்ள விக்கிரமாதித்தவர்களின் ஆட்சி பலவீனம் அடைந்தபோது காஷ்மீர் உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆளுகைக்கு வந்தது.

ஏழாம் நூற்றாண்டில் துர்லபாவிர்தனா என்ற ஆட்சியாளர் கர்கோட்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். கி.பி. 855ல் உட்பாலா சாம்ராஜ்யம் கர்கோட்ட சாம்ராஜ்யத்தை அகற்றிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு தந்த்ரின், யாஷ்காரா, பார்வா குப்தா பரம்பரையினர் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தனர். குப்தா மன்னர் ஒருவரின் விதவையான தித்தா எனபவர் கி.பி. 1003 வரை ஆட்சி செய்தார். இதன் பிறகு லோஹாரா பரம்பரை ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு காஷ்மீர் வரலாற்றின் மூன்றாம் காலக்கட்டம் தொடங்கியது.

14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஷ்மீர் மீது தார்த்தாரியர்கள் தாக்குதல் தொடுத்தார்கள். இந்த தாக்குதலை சமாளிப்பதற்காக காஷ்மீர் அரசரின் தளபதி இரண்டு நபர்களின் உதவியைக் கோரினார். இவர்களில் ஒருவர் காஷ்மீர் மேற்கில் இருந்த ஸ்வாத் பகுதியைச் சேர்ந்த ஷமீர். மற்றொருவர் காஷ்மீரின் கிழக்கே இருந்த திபெத்தைச் சேர்ந்த ரைன்ஷன் ஷா.

தார்த்தாரியர்களின் படையெடுப்பை இவர்கள் வெற்றிகரமாக முறியடித்தார்கள். காஷ்மீர் தளபதியின் மகள் குத்தாராணியை ரைன்ஷன் ஷா மணமுடித்துக் கொண்டார். அதன் பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை சத்ருத்தீன் என்று மாற்றிக்கொண்டார். இவரது மதமாற்றம் குறித்து வரலாற்று ஆசிரியர் லாரன்ஸ் குறிப்பிடும்போது -

- காஷ்மீரில் இருந்த ஏதாவது ஒரு மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற அவசியத்தை ரைன்ஷன் ஷா உணர்ந்தார். இந்து மதத்தின் எந்தவொரு சாதி பிரிவும் தன்னை ஏற்றுக்கொள்ளாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே அவரால் இந்து மதத்தை தேர்ந்தெடுக்க இயலவில்லை. ஒருநாள் புல்புல்ஷா அதிகாலையில் தொழுவதை கண்டார். அந்த வழிபாட்டு முறை அவரைக் கவர்ந்ததால் ரைன்ஷன் ஷா இஸ்லாத்தைத் தழுவினார்''

(ஆதாரம்: valley of Kashmir, Lawrence, pege 190 as quoted in Sisit Gupta's Kashmir, A Study of India - Pakistan Relations)

கி.பி 1346ல் சத்ருத்தீனின் மரணத்திற்கு பிறகு ஸ்வாத்தைச் சேர்ந்த ஷாமீர் ஷம்சுத்தீன் என்ற பெயரில் காஷ்மீரின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். 1586ல் அக்பரின் ஆட்சியின்போது முகலாயப் பேரரசின் கீழ் காஷ்மீர் வரும்வரை ஷம்சுத்தீனின் பரம்பரையினரே காஷ்மீரின் கீழ் ஆட்சியாளராக வந்தனர்.

சுமார் இரண்டு நூற்றாண்டு காலம் நீடித்த முகலாய ஆட்சி காஷ்மீருக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் அளித்தது என்றும் முகலாய நிர்வாக முறை கிராமங்கள் வரை அமல்படுத்தப்பட்டது. என்றும் வரலாற்று ஆசிரியர் லாரன்ஸ் குறிப்பிடுகிறார்.

கி.பி 1757ல் காஷ்மீர் ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது அஹ்மது ஷா துரானி காஷ்மீர் ஆட்சியாளர் ஆனார். 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லாகூரை தலைமையகமாகக் கொண்டு சீக்கியர்களின் சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது. கி.பி 1819ல் ரஞ்சித் சிங் என்று சீக்கிய ஆட்சியாளர் காஷ்மீரை ஆக்கிரமித்தார். இதன் பிறகு காஷ்மீர் வரலாற்றின் நான்காம் காலக்கட்டம் தொடங்கியது.

சுபராவின் யுத்தத்தில் ஆங்கிலேயர்களிடம் சீக்கியப்படைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாப், காஷ்மீர் உட்பட சீக்கியர்களின் ஆளுகையின்படி இருந்த அனைத்துப் பகுதிகளும் ஆங்கிலேயர் வசமானது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் சிங்கின் அமைச்சரவையில் இடம் பெற்று பின்பு ஜம்முவின் ஆளுனராகவும் இருந்த குலாப் சிங்கிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே அமிர்தரஸில், 15.03.1846ல் ஒரு உடன்பாடு கையொப்பமானது. இதன்படி குலாப்சிங்கிடம் ரூபாய், 75 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு காஷ்மீரை அவருக்கு ஆங்கிலேயர் விற்றனர்.

இதன் விளைவாக காஷ்மீரின் சுயேட்சையான மகாராஜாவாக குலாப்சிங் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டார். குலாப்சிங் 1857ல் மரணமடைந்தார். இதன் பிறகு இவரது மகன் ரன்பீர்சிங் (1857 - 1885) ஆட்சிக் கட்டில் ஏறினார். 1885ல் இவரது மகன் பிரதாப்சிங் வசம் ஆட்சி சென்றது. 1925ல் பிரதாப்சிங்கின் மரணத்திற்கு பிறகு அவரது உறவினர் ஹரிசிங் மகாராஜாவாகப் பொறுப்பேற்றார். இந்தியா விடுதலை அடைந்த பிறகும் இவர் காஷ்மீரின் மன்னராக 1948 வரை நீடித்தார். குலாப்சிங் முதல் ஹரிசிங் வரை காஷ்மீரை ஆண்ட குடும்பத்தினரின் ஆட்சி டோக்ரா பரம்பரை ஆட்சி என்று அழைக்கப்படுகிறது.

குலாப்சிங்கும் அவரைத் தொடர்ந்து வந்த டோக்ரா ஆட்சியாளர்களும் காஷ்மீரை சர்வாதிகார முறையில் கொடுங்கோன்மையாக ஆட்சி செய்து வந்தனர். காஷ்மீரில் நிலவிய இந்த மன்னர் ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்களில் 80 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். இவர்கள் ஹரிசிங்கின் கொடுங்கோன்மையான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிகள் செய்து வந்தனர். 1931ல் நடைபெற்ற பெரும் மக்கள் கிளர்ச்சியை ஹரிசிங் இரும்புக்கரம் கொண்டு நசுக்கினார். 1932ல் முதன் முதலாக காஷ்மீரில் ஒரு அரசியல் கட்சி ஷேக் அப்துல்லாஹ்வால் உருவாக்கப்பட்டது. இந்த கட்சிக்கு அப்போது ''அனைத்து ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி'' என்று பெயரிடப்பட்டது. பிறகு 1939ல் ''தேசிய மாநாடு கட்சி'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மக்கள் கிளர்ச்சி பெருகிடவே ஹரிசிங் 1934ல் சட்டப்பேரவை அமைக்க ஒப்புக் கொண்டார். ஆனால் முழுமையான ஜனநாயக நெறிமுறைப்படி இந்த சட்டப்பேரவை அமைக்கப்படவில்லை. 75 பேர் கொண்ட இந்த சட்டப்பேரவையில் 35 பேர் நியமன உறுப்பினர்கள் ஆவர். மக்களில் 6 சதவிகிதத்தினர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கும், சொத்துரிமையுள்ளவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இவ்வாறு அமைக்கப்பட்ட சட்டப்பேரவைக்கு ஆலோசனைகள் கூறும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டது.

1939ல் மேலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அமைச்சரவை ஏற்படுத்தவும், நீதித்துறை உருவாக்கவும் வழிவகை செய்யப்பட்டது. ஆனால் முடிவெடுக்கும் அதிகாரத்தின் பெரும்பகுதி மகாராஜா வசமே இருந்தது. இருப்பினும், காஷ்மீரில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் மகாராஜா ஹரிசிங் மீது அதிருப்தியுடன் தான் வாழ்ந்து வந்தனர். இச்சூழலில் தான் இந்தியாவிற்கு விடுதலையளிக்கவும், விடுதலைப் பெற்ற இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரிக்கவும் ஆங்கிலேய அரசு முடிவு செய்தது.

நன்றி: ஒற்றுமை ஆகஸ்ட் 01-15,2001 இதழ்

14 comments:

Voice on Wings said...

//சுமார் இரண்டு நூற்றாண்டு காலம் நீடித்த முகலாய ஆட்சி காஷ்மீருக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் அளித்தது என்றும் முகலாய நிர்வாக முறை கிராமங்கள் வரை அமல்படுத்தப்பட்டது. என்றும் வரலாற்று ஆசிரியர் லாரன்ஸ் குறிப்பிடுகிறார்.//

//குலாப்சிங்கும் அவரைத் தொடர்ந்து வந்த டோக்ரா ஆட்சியாளர்களும் காஷ்மீரை சர்வாதிகார முறையில் கொடுங்கோன்மையாக ஆட்சி செய்து வந்தனர்.//

அருமை :)

அபூ முஹை said...

திரு, வாய்ஸ் ஆன் விங்க்ஸ் அவர்களே, நீங்கள் நகைக்கும் அளவிற்கு அநாகரீமாக எழுதியிருந்தால் தெரியப்படுத்துங்களேன்.

Abu Umar said...

அபூ முஹை,

காஷ்மீர் பிரச்னைப்பற்றி ஒரு சசி (காஷ்மீரின் விடுதலை)எழுதினால் வரவேற்பதும், ஒரு அபூ எழுதினால் தேசவிரோதம் என்பதும்தான் இவர்களின் தேசபக்திக்கு அளவுகோல். கட்டுரையை இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளீர்கள். அதற்குள் தேசபக்தி வசனம் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

தேவையான கட்டுரை. தொடர்ந்து பதியுங்கள்.

Anonymous said...

//இந்தியனாக இருந்து கொண்டு பிரிவினைக்கு ஊக்கமளிக்கும் வகையில் இப்படி இந்திய திருநாட்டிற்கு எதிராக எழுதுவது எந்த விதத்தில் சரி?இப்படி காஷ்மீர் தீவிரவாத பிரச்சனையை இந்து முஸ்லிம் போராட்டம் என்று எழுதிகொண்டிருந்தீர்கள் என்றால் நீங்கள் சார்ந்த சமுதாயம் பற்றி மக்கள் மத்தியில் கெட்ட பெயர் தான் உண்டாகும்.
இந்தியனாக இருந்து முதலில் இந்தியாவுக்கு ஆதரவாக இருங்கள்.தாய்நாட்டிற்கு விரோதமாக எழுதாதீர்கள்//

இப்படிக் கூறி தானே இவ்வளவு நாளும் உண்மையை மூடி மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

என் தாய் அடுத்த வீட்டு காரர்களுக்கு என்ன அநியாயம் செய்தாலும் அது என் தாய் என்பதால் என் தாய்க்கு ஆதரவாக செயல் பட வேண்டுமா? இது எங்கே உள்ள நியாயம்.

காஷ்மீரின் தற்போதைய நிலைக்கு யார் காரணம் என்பதை விளங்க இந்தியா பிளவுபடுவதற்கு முந்தைய காஷ்மீரின் நிலையிலிருந்து ஆராய்ந்தாலே சரியாக உணர முடியும்.

இதனைக் குறித்து கடந்த காலங்களில் யாரையும் பேச விடுவதில்லை. அப்படி யாராவது அதனைக் குறித்து நடுநிலையாக பேச ஆரம்பித்தால் உடன் அவருக்கு தேச விரோதி(அவர் முஸ்லிம் எனில் மட்டும்) பட்டம் சூட்டப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டது தான் வரலாறாக இருந்தது.

எல்லா விஷயத்திலும் முன்னேறிய காலம் என்று கூறுபவர்கள் இவ்விஷயத்திலும் நடுநிலையை கடைப்பிடிக்கலாமே.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சுதேச சமஸ்தானமாக இருந்த காஷ்மீரை அப்பொழுது அதனை ஆண்டு கொண்டிருந்த இந்து ராஜாவும் நேருவும் சேர்ந்து எப்படி காஷ்மீர் மக்களை ஏமாற்றினார்கள் என்பதையும், அந்த தருணத்தைப் பயன்படுத்தி நயவஞ்சகமாக பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டது எப்படி என்பதையும் காஷ்மீர் இந்தியாவிற்குரியது என்று வாதிடும் நம்மில் எத்தனை அறிவோம்.

இன்னும் இந்திராகாந்தியிலிருந்து இன்றைய அரசியல்வாதிகள் வரை காஷ்மீரின் உண்மையான நிலையை, புதைக்கப் பட்ட காஷ்மீர் மக்களின்(அது முஸ்லிமாக இருந்தாலும் சரி, பண்டிட்களாக இருந்தாலும் சரி) கண்ணீர் சுவடுகளை எப்படி மறைத்து அதில் குளிர் காய்கிறார்கள் என்பதை இந்தியர்களாகிய நாம் அறிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லையே!

தவறான தகவல்களை இக்கட்டுரையாளர் தருகிறார் எனில் சுட்டிக் காட்டுங்கள். அதை விடுத்து பழைய பூச்சாண்டிகளான "தேசவிரோதி", "தீவிரவாதி" போன்ற அநியாய காறித் துப்பல்களை கையில் கொண்டு திரியாதீர்கள்.

இவ்வார்த்தைகளைக் கண்டு பயந்து நியாயங்களை கூறாமல், நியாயத்திற்கு துணை நிற்காமல் அடங்கி ஒதுங்கி இருந்த காலம் மலையேறி விட்டது.

Amar said...

Let me warn the author that he is prone to stereotyping all Kashmiris as a single homogenous groups while the truth is very far from that.

Besides, the pro-moghul bias is evidently present as voice on wings showed although a source was provided.

Let me also point out that India simply cannot move so much as an inch out of Kashmir because Genocide will be the outcome of it.The perpetuators are going to be Pakistanis and Pakistani backed organisations.

Therefore withdrawal from Kashmir is a dream.

While I have many a times suggested to write about a certain Moslem PVC recieptent Jawan, the author of this blog does not seem to care.

PS :
Sasi's blog had a lot of BULLSHIT in it.Like our forces forcing people to switch off lights by 10:00 PM and all that.The usual stupid things the media uses.Nothing new in there.

Rgds
Samudra

Amar said...

India can generously withdraw, but what will Pakistan do ?

Can i request the author to write about the sectarian violence perpetuated by Pakistan in Gilgit and Northern Areas.

The author will do a great disservice if he does not mention the genocide of Kashmiris in Pakistan occupied Kashmir.

He could also write about how the Pakistani army cared so little of its men in the NLI - consisting of Kashmiris.2000 of them died and no bloody paki cared for them!

The author is more than welcome to contact me for more pointers on the subject.

Amar said...

Puli,

I believe that a platform such as this can be used for though provoking discussions and not for flame baiting racism and hate-mongering - which is something you seem to excel in.

If you can contest/agree with my viewpoints, do so.Otherwise you can always shouting, I'm not going to care about it.

Amar said...

The author of this blog however seems to be very reluctant to acknowledge some facts I have pointed out.

Why ?

Vaa.Manikandan said...

ஒற்றுமை ஆகஸ்ட் 01௧5,2001 இதழ்

இது என்ன ஐ.நா சபையின் குறிப்பேடா?

Abu Umar said...

இப்பதிவில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்று யாராவது சொன்னார்களா? ஏன்தான் இந்த கோயபல்ஸ் பாட்டு பாடுகிறீர்களோ தெரியவில்லை.

வாசகன் said...

தேவையில்லாத விஷயங்களில் எல்லாம் மேதாவியாக கேட்பவர்களை இங்கு காணாவிட்டாலும் அவர்கள் சார்பாக கேட்டுவிடுகிறேன்:
WHY CANT WE LEAVE THEM (KASHMIRIS) TO DECIDE?

Amar said...

Kandasami,
True.Why cant we allow them to decide ?

Well, here is a surprise for you.
We are doing it once in every five years!!!

With a polling average of 50% that is at par with the national average I dont think we are yet to do anything to help them decide or anything like that.

Whereas on the Pakistani side,the Pakistani army controls everything despite an election taking place.

Here is a fact : The President of 'Azad Kashmir' cannot make a press statement without prior approval from the Pakistani Army.

Voice on Wings said...

பிரதிவாதி பயங்கரம், உங்கள் கருத்தும் பயங்கரமாகத்தான் உள்ளது. அம்பேத்கர் ஒரு சட்டம் இயற்றினார் என்பதற்காக அதை மறு பேச்சில்லாமல் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பது ஒரு அதிகப்படியான எதிர்பார்ப்பாகத் தெரியவில்லையா? நாளை அமெரிக்கா ஒரு சாசனம் இயற்றி இராக்கை அதன் ஒரு பகுதியாக அறிவித்து விட்டால், இராக்கியர்களின் கதியும் அதோ கதிதானா? அவர்களும் காஷ்மீரிகளைப் போல் தங்கள் சுதந்திரத்திற்காகப் போராடும் உரிமையை இழந்தவர்களாகி விடுவார்களா? இந்தத் தர்க்கத்தின் படி திபெத், தைவான் (சீனா இதனை தனது பிரிக்க முடியாத பகுதியாகக்
கருதுகிறது என்பது தெரிந்திருக்கலாம்), பாலஸ்தீனம், ஈழம் ஆகியவற்றின் நிலையென்ன? ஆக்கிரமிப்பு சக்திகளின் கட்டுப்பாட்டில் தொடர்வதுதான் அவர்களுக்கிருக்கும் ஒரே வழியா? அல்லது சரித்திரத்தில் ஒரு அறுபது ஆண்டுகள் பின்னே செல்வோம். இந்தியா உட்பட பல உலக நாடுகளும் ஏகாதிபத்திய நாடுகளின் பிரிக்க முடியாத பகுதிகளாக(அவர்களது சாசனத்தின் படி) இருந்த காலமது. உங்களது தர்க்கத்தின் படி, இந்நாடுகள் சுதந்திரமே அடைந்திருக்கக் கூடாதா?

அபு முஹை, இக்கட்டுரை முகலாயர்களைப் போற்றியும் டோக்ராக்களைச் சாடியும் இருந்த விதம் நகைப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சர்ச்சைகளைப் பற்றி விவாதிக்கும் போது மத ரீதியான சாய்வுகளுக்கு இடமளிக்காமல் நடுநிலையுடன் தகவல்களை வழங்கினால் சிறப்பாக இருக்குமென்று நம்புகிறேன்.

அபூ முஹை said...

//அபு முஹை, இக்கட்டுரை முகலாயர்களைப் போற்றியும் டோக்ராக்களைச் சாடியும் இருந்த விதம் நகைப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சர்ச்சைகளைப் பற்றி விவாதிக்கும் போது மத ரீதியான சாய்வுகளுக்கு இடமளிக்காமல் நடுநிலையுடன் தகவல்களை வழங்கினால் சிறப்பாக இருக்குமென்று நம்புகிறேன்.//

வாய்ஸ் ஆன் விங்க்ஸ் அவர்களே நன்றி!

ஓரச்சார்பாகத் தெரியும் தகவல்களின் தவறை தக்கக் காரணத்துடன் சுட்டிக்காட்டி திருத்தலாம், வேண்டுமானால் கண்டிக்கவும் செய்யலாம். தவிர நகைத்துக் கொண்டிருந்தால் இன்னும் நாம் வளரவில்லை, சிறுபிள்ளையாகவே இருக்கிறோம்.

நாட்டாமை அவர்களே!
உங்களின் முழுமையானப் பின்னூட்டத்திற்கும் விளக்கமளிக்கிறேன். அதற்கு முன் - //காரணம் நில ஆக்ரமிப்பை தங்கள் கொள்கையாகக் கொண்ட இந்திய - பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறைதான்// - இந்த தகவல் தவறானதா? என்பதை உறுதிப்படுத்துங்கள்.

வா மணிகண்டன் அவர்களே!
//ஒற்றுமை ஆகஸ்ட் 01௧5,2001 இதழ் இது என்ன ஐ.நா சபையின் குறிப்பேடா?// - இல்லை! நேர்மையான வரலாற்றுக் குறிப்புகளை வழங்கும் தரமான பத்திரிகை ஒவ்வொன்றும், ஐ.நா சபைக் குறிப்பேட்டிற்கும் மேல் என்றும் சொல்லலாம். ஐ.நா சபைக் குறிப்பேட்டில் நடைமுறை சாத்தியமற்ற குறிப்புகளும் உள்ளன. 60 ஆண்டு காலமாக நிறைவேறாத தீர்மானங்களும் உள்ளது. (பார்க்க: காஷ்மீர் ஓர் பார்வை-2) அதனால் வரலாற்றுக் குறிப்பையும், ஐ.நா. சபைத் தீர்மானங்கள் குறிப்பையும் ஒன்றாக்கிக் கொள்ள வேண்டாம்.

commoner அவர்களே!
//பாகிஸ்தானிடம் சேர்தல் தற்கொலைக்கு சமாணம்.// - பாகிஸ்தானுடன் சேர்த்தல் கொலைக்கு சமம் என்பதே என்னுடைய கருத்தும். மற்ற உங்களின் கருத்துக்களுக்கான விளக்கங்களைத் தனிப்பதிவில் எழுதுகிறேன். நன்றி!

பிரதிவாதி பயங்கரம் அவர்களே!
//காஷ்மீர் பற்றி முடிவு செய்யவேண்டியது காஷ்மிரிகளல்ல.இந்தியர்கள்.// அதுதான் எப்போது..? எப்படி..?

(இந்தியர்களின் கருத்தையறிய - மத்திய, மாநிலத் தேர்தல் ஏதாவதொன்றில் வாக்களிப்பு சீட்டுடன் - காஷ்மீர் பற்றியக் கருத்துக் கணிப்புச் சீட்டையும் சேர்த்துக் கொள்ளலாமா..?)

இன்னும் பின்னூட்டிய அபூ உமர், இறை நேசன், தஞ்சை கண்ணன், ஆதவன் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்!

பொதுவாக!
வலைப்பதிவு கட்டுரையிலிடும் பின்னூட்டங்களை நாம் அனுமதித்தால் மட்டுமே பதியும்படி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் வசதியாகவேயுள்ளது. விரும்பிய நேரத்திலெல்லாம் ஆன்லைன் செல்லும் வாய்ப்பை நான் பெற்றிருக்கவில்லை, அதனால் உடனடியாக பதில் கொடுப்பதென்பது - சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை உடனடியாக நீக்குவதென்பதும் இயலாது. சில பின்னூட்டங்களால் திசைத் திருப்பப்பட்டு மேலும் பல திசைகளில் சென்று விடாமல் தவிர்க்கவும் இந்தப் பின்னூட்டக் கட்டுப்பாடு மிக வசதியாக இருக்கிறது. நன்றி பிளாக்கருக்கு.

அன்புடன்,
அபூ முஹை